விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் தரும் விளக்கம் என்ன?

பட மூலாதாரம், S.A. CHANDRASEKAR
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது இந்த முடிவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் சில விளக்கங்களையும் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர்கள் பலருக்கும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படுவதும் அதன் வாயிலாக மக்களுக்கு உதவுவது, கதாநாயகர்களின் படங்கள் வரும்போது கொண்டாட்டம் என பல விஷயங்களை ரசிகர்கள் முன்னெடுத்து வருவது வாடிக்கையான ஒன்று. அப்படி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஜய்க்கு 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் ரசிகர் மன்றம் இருக்கிறது.
ரசிகர் மன்றமாக செயல்பட்டு வந்த இதை நடிகர் விஜய் கடந்த 2009-ம் வருடம் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற அமைப்பாக அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கத்திற்கென தனி கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசியல் களத்தில் விஜய்?
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை விஜய் ரசிகர்களிடையே பல காலமாக இருந்து வருகிறது. அதற்கேற்றாற் போல, விழா மேடைகளில் அரசியல் பேசுவது, தனது சமீப கால படங்களில் மக்கள் பிரச்னைகளை எடுத்து பேசுவது, அரசியல் வசனங்கள் என நடிகர் விஜய் தனது படங்களில் அரசியல் ஆசையை வெளிப்படுத்த தவறவில்லை. இதனால், 'தலைவா' உள்ளிட்ட சில படங்கள் அந்த சமயத்தில் வெளி வர முடியாமல் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் கூட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிடவும், தனது பெயர் மற்றும் அமைப்பு கொடியை பயன்படுத்தி கொள்ளவும் நடிகர் விஜய் அனுமதி கொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், @actorvijay
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வருடம் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதன் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக நடிகர் விஜய்யின் தாய் ஷோபா ஆகியோர் இருப்பதாக எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவித்தார்.
இது குறித்த அறிவிப்பு வந்த போதே அதற்கு எதிர்வினையாற்றிய நடிகர் விஜய், தனக்கும் தன் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தனது பெயரையும் புகைப்படத்தையும் அரசியல் அமைப்புக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அறிவித்து விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சிலரை நீக்கியதும் அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், VIJAY
தந்தை மீது தொடர்ந்த வழக்கு
மேலும், அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்த கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இயக்குநர் எஸ்.ஏ.சி, தாய் ஷோபா மற்றும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகள் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்த போது எதிர்தரப்பில் யாரும் ஆஜராகாததால், இந்த மாதம் 27ம் தேதி அதாவது நேற்று ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.
கலைக்கப்பட்ட விஜய் மக்கள் இயக்கம்
இந்த நிலையில், நேற்று நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராஜிநாமா கடிதத்தை கொடுத்து விட்டதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பதாக அந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய சூழலில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும் அதில் தெரிவித்தார். இந்த பதில் மனுவுக்கு விஜய் தரப்பு விளக்கம் அளிக்க அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 29-ம் தேதிக்கும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் ரசிகர்கள்
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கமா அல்லது எஸ்.ஏ.சி. ஆரம்பித்த அரசியல் கட்சி கலைக்கப்பட்டதா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்தது.
எஸ்.ஏ. சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தான் கலைக்கப்பட்டது. விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என நடிகர் விஜய் தரப்பில் குழப்பத்தை நீக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் விஜய் அன்பனிடம் பிபிசி தமிழுக்காக பேசியபோது, "பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எஸ்.ஏ.சியால் முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. மேலும் அந்த நிர்வாகிகளும் அப்போதே ராஜிநாமா செய்து விஜய் ரசிகர்களாக தொடர்வார்கள் என முடிவு எடுத்தார்கள். அதைதான் தற்போது பதில் மனுவில் தெரிவித்து இருக்கிறார்கள். மற்றபடி இந்த வழக்குக்கும் உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம். களத்தில் ரசிகர்கள் உற்சாகமாகவே உள்ளனர்," என தெரிவித்தார்.
என்ன சொல்கிறார் சந்திரசேகர்?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"எனது மகன் விஜய்யுடன் பிரச்னை இருப்பது உண்மைதான். அதை தான் மறுக்கவில்லை," என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேசமயம், தனது மனைவி ஷோபா மற்றும் நடிகர் விஜய்க்கும் இடையில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை எனவும் அவர்கள் வழக்கம் போலவே அன்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர் எனவும் அந்த வீடியோவில் சந்திரசேகர் பேசியுள்ளார்
மேலும், அரசியல் கட்சி ஆரம்பித்து அது தற்போது கலைக்கப்பட்டுவிட்டது என அறிவித்தது ஏன் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டபோது, "அரசியல் களத்தில் விஜய்க்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என நினைத்துதான் கட்சியாக ஆரம்பித்தேன். ஆனால், அது அவருக்கு பிடிக்கவில்லை என தெரிந்த பிறகு அதை தொடருவதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவேதான் அதை கலைக்க தீர்மானித்தோம்," என அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












