அசாம் துப்பாக்கிச் சூடு: 'என் மகன் நெஞ்சை துளைத்த தோட்டா' - கண்ணீரில் குடும்பங்கள்

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, மொய்னுலின் தாய் மொய்மோனா பேகம்
    • எழுதியவர், திலீப் குமார் சர்மா
    • பதவி, அசாமிலிருந்து, பிபிசி ஹிந்திக்காக

அசாமின் தர்ரங் மாவட்டத்தின் தௌல்பூர்-3 கிராமத்தில் உள்ள பிரம்மபுத்திராவின் துணை நதியான சுதாவின் கரையில் உள்ள ஒரு தற்காலிக தங்குமிடத்திலிருந்து சிறு குழந்தைகள் மற்றும் பெண்களின் அழுகைச் சத்தம் அவ்வப்போது கேட்டது.

சில நாட்களுக்கு முன்பு, இந்த கிராம மக்களின் வாழ்க்கை சாதாரணமாகத் தான் இருந்தது. ஆனால் செப்டம்பர் 23ஆம் தேதி, அசாம் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் 'சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு' எதிரான காவல் துறையின் நடவடிக்கை மற்றும் கிராம மக்களுடனான வன்முறை மோதல்கள் இந்த கிராமத்தைச் சீரழித்து விட்டது.

கடந்த வியாழக்கிழமை நடந்த வன்முறை மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது போலீசார் மற்றும் ஏழு கிராமவாசிகள் காயமடைந்தனர். காயமடைந்த கிராம மக்கள் அனைவரும் குவாஹாட்டி (கெளஹாத்தி) மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தர்ரங் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.

ஆனால், தௌல்பூர்-3 கிராமத்தில் நுழைந்து பார்த்தால், வன்முறை மோதலால் ஏற்பட்ட சேதம், நிர்வாகம் கூறுவதை விட மிக அதிகமாகத் தோன்றுகிறது.

சிபாஜார் நகரத்திலிருந்து சுமார் 14 கிமீ உள்ளே வரும்போது 'நோ நதி' காணப்படுகிறது. இதிலிருந்து ஆற்றைக் கடக்க ஒரே வழி நாட்டுப் படகுதான்.

ஆற்றின் அக்கரையில், தௌல்பூர் கிராமம் உள்ளது. அங்கு உள்ளே செல்லும்போது, ​​ இடிக்கப்பட்ட மற்றும் எரிந்த வீடுகள் கிராமம் முழுவதும் தென்பட்டன. சுதா நதியிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவு வரை இப்படிப்பட்ட காட்சிகள் தொடர்ந்தன.

ஆங்காங்கே எரிந்த பைக்குகள் மற்றும் சைக்கிள்கள் சிதறிக்கிடந்தன. இடிந்த வீடுகளுக்கு வெளியே பாத்திரங்ளும் மேஜை, நாற்காலிகளும் உடைந்து கிடந்தன. தங்களின் இடிந்த வீடுகளுக்கு வெளியே, சில பெண்கள் மிச்சம் மீதி பொருட்களைத் தேடிக்கொண்டிருந்தனர்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, மொய்னுல் ஹக்கின் குடும்பம் கூடாரங்களில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் துக்கம்

கிராம மக்கள் சிலர் தங்கள் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களுடன் சுதா ஆற்றின் கரையில் அலுமினிய தடுப்புகளால் செய்யப்பட்ட தற்காலிகக் கூரையின் கீழ் முகாமிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வீட்டின் வெளியே அழுவதை கேட்க முடிந்தது. இது வியாழக்கிழமை போலீசாரால் கொல்லப்பட்ட மொய்னுல் ஹக்கின் குடும்பம்.

28 வயதான மொய்னுல் ஹக் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ மற்றும் போலீஸ்காரருடன் வந்த அரசாங்க கேமராமேன் அவரைத் தாக்கி அவர் மீது பாய்ந்த வீடியோ வைரலானது. அதன் பிறகு மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அந்த அரசாங்க கேமராமேன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மொய்னுலின் வயதான தாய் மொய்மோனா பேகம் அழுதழுது களைத்திருந்தார். தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் அவர் கூறும் ஒரே ஒரு வார்த்தை, 'என் மகனை என்னிடம் கொண்டு வாருங்கள்,' என்பதுதான்.

"எனக்கு என் மகன் வேண்டும். என் மகனை வயிற்றில் சுட்ட பிறகு, அவர்கள் அவனை உதைக்கவும் செய்தனர். அவருடைய மார்பில் ஏறி குதித்தனர். ஒரு தாய் தன் மகனை இந்த நிலையிலா பார்க்க முடியுமா? நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் கிராம மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவனைக் கொன்ற பிறகு, அவர்கள் அவனை இழுத்துச் சென்றனர்." என்று கூறி அழுகிறார் அந்தத் தாய்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, மக்கள் தற்காலிக கூடாரங்கள் செய்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்

மொய்னுலின் மூன்று சிறு குழந்தைகளைக் காண்பித்து, 66 வயதான மொய்மோனா கூறுகிறார், "மொய்னுல் தினக் கூலி செய்து எங்கள் அனைவரையும் கவனித்து வந்தான். அவனுக்கு மூன்று சிறிய குழந்தைகள் உள்ளனர். இப்போது யார் அவர்களை கவனித்துக்கொள்வார்கள்? இப்போது எங்கள் குடும்பம் எப்படிப் பிழைக்கும்? மொய்னுல் போனதிலிருந்து யாரும் சாப்பிடவில்லை. அவர்கள் எங்கள் வீட்டையும் உடைத்து மகனையும் கொன்று விட்டனர். நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். இது எங்கள் நிலம் மற்றும் வீடு. எனக்கு வேறு எங்கும் வீடு இல்லை. எல்லாம் இங்கேதான் உள்ளது. பிறகு ஏன் எங்களுக்கு இந்தக் கொடுமை?"

மொய்னுலின் மனைவி மம்தா பேகம் அடிக்கடி நினைவிழந்து போகிறார். அவரும் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. அவர் தாழ்ந்த குரலில், "எங்கள் வீடு இடிக்கப்பட்டது. அதன் பிறகு மொய்னுல் வயல் வேலைக்குச் சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து இந்தச் சம்பவம் நடந்தது. என் கணவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். மக்கள் இப்போது அவரது மரணத்தை மொபைலில் பார்க்கிறார்கள் . எங்களுக்கு மூன்று சிறிய குழந்தைகள் உள்ளனர். இப்போது நாங்கள் என்ன செய்வோம்? வீடும் இடிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இப்போது குழந்தைகளுடன் எங்கு செல்வோம்? " என்று கேட்கிறார்.

மொய்னுலின் இந்த வீடியோ வைரலாகி வருவதால், கிராம மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் பரவியது. இந்த கிராமத்தின் 18 வயது மாணவரான குர்பான் அலி தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த வைரல் வீடியோவைப் பற்றி அவர் கூறுகையில், "இந்த வீடியோவை நான் பார்த்ததிலிருந்து, எனக்கு துக்கம் தாங்கவில்லை. இறந்த நபர் மீது எப்படி ஒருவர் குதிக்க முடியும்? இது எவ்வளவு கொடுமையானது." என்று வேதனை தெரிவிக்கிறார்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, ஹனிஃப் முகமது

வன்முறைக்குப் பிறகு நடவடிக்கை ஒரு நாள் நிறுத்தம்

கடந்த வியாழக்கிழமை நடந்த வன்முறை மோதல்களுக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வெளியேற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. அதனால் தான் பலர் எஞ்சியிருக்கும் தங்கள் உடைமைகளுடன் சுதா ஆற்றின் அக்கரைக்குச் சென்று கொண்டிருந்தனர். சுதா ஆற்றின் அக்கரையில் உள்ள நிலத்தில் அரசாங்கம் இன்னும் வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

உண்மையில், சுதா ஆற்றின் அக்கரைப் பகுதி, பிரம்மபுத்திராவுக்கு மிக அருகில் உள்ளது, அங்கு ஒவ்வோர் ஆண்டும் கடுமையான வெள்ளம் வருகிறது. குர்பான் அலியின் குடும்பம், வீடி இடிக்கப்பட்டதையடுத்து சுதா ஆற்றின் அக்கரையில் தஞ்சம் புகுந்துள்ளது. ஆனால், வெள்ளம் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்பதால், சில மாதங்கள் மட்டுமே அங்கு தங்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

மாற்று ஏற்பாடு செய்யத் தவறிய நிர்வாகம்

தௌல்பூர்-3 கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடவடிக்கைக்குப் பிறகு வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்யவில்லை. கிராமத்தில் மூன்று அல்லது நான்கு இடங்களில் குடிநீர் குழாய்க் கிணறுகள் காணப்பட்டன. ஆனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உணவு மற்றும் நீருக்காக எந்த ஏற்பாடும் இல்லை, எந்தவித அத்தியாவசிய சேவைக்கும் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

வெளியேற்றும் நடவடிக்கையின் போது மாவட்ட நிர்வாகம் மூன்று மசூதிகளையும் ஒரு மதரஸாவையும் அழித்ததாக கிராமத்தின் சிலர் குற்றம்சாட்டுகின்றனர், இதன் காரணமாக பலர் வெளியிலேயே வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த வேண்டியிருந்தது.

தௌல்பூர்-3 கிராமத்தில் வசிக்கும் அமர் அலி, இடிக்கப்பட்ட தனது வீட்டுக்கு முன்னால் ஒரு மசூதியின் இடிபாடுகளைச் சுட்டிக்காட்டி, "இது ஒரு சுன்னி மசூதி. கிராம மக்கள் இங்கு பிரார்த்தனை செய்வார்கள், ஆனால் அது இடிக்கப்பட்டது. அரசுப் பள்ளிக்கு அருகிலுள்ள மசூதியும் இடிக்கப்பட்டது. ஆனால் பள்ளியைத் தொடவில்லை. அவர்கள் கிராமத்தில் மூன்று மசூதிகளையும் மதரஸாவையும் உடைத்துவிட்டனர். என் தந்தை இந்த மசூதியில் ஐந்து முறை தொழுகை செய்து வந்தார். ஆனால் இப்போது வீடு, மசூதி இரண்டும் இடிக்கப்பட்டுவிட்டன. அதனால்தான் நாங்கள் இன்று வெளியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தினோம்," என்று கூறினார்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

பாஜகாவின் இரண்டாவது ஆட்சிக்காலம்

அசாமில் பாஜகவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா முதல்வராகப் பதவியேற்று நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், 'சட்டவிரோத அத்துமீறலுக்கு' எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் விதம், நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது.

அசாம் அரசாங்கம் கடந்த நான்கு மாதங்களில் 'சட்டவிரோத ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொண்டதால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்கள் வங்கமொழி பேசும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 20 அன்று, தரங்க் மாவட்டத்தின் சிபாஜார் காவல் நிலையப் பகுதியில் தௌல்பூர்- 1 மற்றும் தௌல்பூர்- 2 இல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதில், 4,500 பீகா நிலங்கள் காலிசெய்யப்பட்டன. இதன் காரணமாக குறைந்தது 800 குடும்பங்கள் வீடிழந்தன. ஆனால் செப்டம்பர் 23 அன்று நிர்வாகத்துக்கும் பொது மக்களுக்கும் இடையே நடந்த இந்த வன்முறை மோதல் காரணமாக, மாநில அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

மனித உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகளும் எதிர்க் கட்சிகளும் அரசின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கின்றன, இது குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும் என்று அவை கூறுகின்றன.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

காங்கிரஸ் கண்டனம்

அசாம் பிரதேச காங்கிரஸ் தலைவர் பூபென் போரா, ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று விவரித்துள்ளார்.

தௌல்பூர்-3 கிராமத்தில் காங்கிரஸ் எம்பி மற்றும் சட்டமன்றக் கட்சியுடன் வெள்ளிக்கிழமை இருந்த போரா, உள்ளூர் மக்களிடம், "அசாமின் அப்பாவி மக்களைக் கொல்ல இந்த அரசாங்கத்திற்கு எங்களால் உரிமம் கொடுக்க முடியாது. அஸ்ஸாம் முதல்வர் காவல்துறையை மீண்டும் மீண்டும் தூண்டி அச்சத்தை ஏற்படுத்துவதை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்," என்றார்.

மேலும் அவர், "குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி இந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்திடம் எங்கள் கோரிக்கை. இந்தச் சம்பவத்திற்காக தரங்க் மாவட்டத்தின் துணை ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை அரசு உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அரசு நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற வேண்டும். அரசாங்கம் வேறு சில ஏற்பாடுகளைச் செய்யும் வரை, இந்த நடவடிக்கை தொடர்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றும் கூறினார்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஹிமந்தா பிஸ்வா சர்மா

நடவடிக்கை தொடரும்: முதல்வர்

வெளியேற்ற நடவடிக்கை தொடர்பாக எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்வினைக்கு பதிலளிக்கும் விதமாக, முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா உள்ளூர் ஊடகங்களிடம் பேசும்போது, "அரசு நிலத்தைக் கையகப்படுத்தும் விஷயத்தில் நாங்கள் தொய்வு காட்ட முடியாது. சிவன் கோயில் நிலத்தை யாராவது ஆக்கிரமிக்கிறார்களா? நாளை யாராவது காமாக்யா கோயிலைக் கைப்பற்றினால், எதுவும் செய்யாமல் இருக்க முடியுமா? அது எனக்கு ஏற்புடையது கிடையாது," என்றார்.

"நாங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஏழைகள் மற்றும் வாழ்வதற்கு நிலம் இல்லாதவர்கள், அரசின் நிலக் கொள்கையின் கீழ் அவர்களுக்கு ஆறு பீகா நிலம் கிடைக்கும். நான் இதைக் கடந்த இரண்டு மாதங்களாகக் கூறி வருகிறேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரை சஸ்பென்ட் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்கள் என் உத்தரவின் பேரில்தான் வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்." என்று கூறினார்.

மேலும் அவர், "எங்கள் காவல்துறையை பத்தாயிரம் பேர் தடிகள் மற்றும் ஈட்டிகளால் தாக்கினர். கேமராமேன் செய்ததை நானும் கண்டிக்கிறேன். ஆனால் மூன்று நிமிட வீடியோவை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது. அதற்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றின் வீடியோவும் காட்டப்பட வேண்டும். அரசாங்கம் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கையை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை," என்று உறுதியாகத் தெரிவித்தார்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, ஆக்கிரமிப்பு இயக்கத்தை நடத்தினாலும், குடியிருப்பதற்கு இடம் வழங்கப்படாததால் கிராம மக்கள் விரக்தியிலும் வருத்தத்திலும் உள்ளனர்.

மக்கள் குற்றச்சாட்டு

காவல்துறையினருக்கும் மக்களுக்குமான வன்முறை மோதலன்று அங்கு இருந்த எண் 1 கிராமத்தைச் சேர்ந்த முகமது தாயேத் அலி, "வியாழக்கிழமை, கிராம மக்கள் அமைதியாகத் தங்கள் போராட்டத்தை நடத்தினர். போலீசார் வீட்டை இடிக்க வந்தபோது, மக்கள் அவர்களிடம், முதலில் வாழ ஓர் இடத்தைச் சொல்லுங்கள், பிறகு வீட்டை இடியுங்கள் என்று சொன்னார்கள். இந்த விஷயத்தில் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் திடீரென்று என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஆனால் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. நான் இந்தப் பக்கம் வந்தபோது காயமடைந்த ஒருவர் தரையில் கிடப்பதை நான் பார்த்தேன் " என்று சம்பவத்தை விவரிக்கிறார்.

முகமது தாயேத் மேலும் கூறுகிறார், "இது அரசாங்கத்தின் நிலம். ஆனால் மக்கள் 60-70 வருடங்களாக இங்கு வசிக்கின்றனர். அரசாங்கம் இத்தனை நாட்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் இப்போது அரசுக்கு இந்த நிலம் தேவைப்பட்டால் நாங்கள் தருகிறோம். "நாங்கள் அசாமில் வசிப்பவர்கள். நாங்கள் குடிமக்களா அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களா என்று அரசாங்கம் விசாரணை செய்யட்டும்."

அவர் மேலும் கூறுகையில், "எங்கள் குடியுரிமை தொடர்பான ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், எங்களை இங்கிருந்து வெளியேற்றட்டும். நாங்கள் உள்ளூர்வாசிகள் என்றால், எங்களுக்கு வாழ ஒரு நிலம் தரட்டும். நாங்களும் மனிதர்கள்தான். இதுபோன்ற கொடூரங்கள் ஏன் செய்யப்படுகின்றன? எங்கள் மக்கள் ஜனநாயக வழியில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள், ஆனால் நாங்கள் சுடப்பட்டோம்," என்று தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC

படக்குறிப்பு, மொய்னுலின் மனைவி மம்தா பேகம் மற்றும் அவர்களின் மகள்

அதே நேரத்தில், அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகர் ஐனுதீன் அகமது, "நிர்வாகத்தின் இந்த வெளியேற்ற நடவடிக்கைக்கு எங்கள் மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். வீடுகள் இடிக்கப்படுவோருக்குத் தங்குவதற்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்திருந்தது. வியாழக்கிழமை நிர்வாகத்தினர் ஜேசிபி எடுத்துவந்த போது மக்கள், முதலில் எங்களுக்கு ஒரு நிலம் சொல்லுங்கள், நாங்கள் அங்கு சென்று விடுகிறோம் என்று தான் சொன்னார்கள்" என்கிறார்.

மேலும் அவர், "அந்த நேரத்தில் கிராமத்தின் சுமார் நான்கைந்தாயிரம் பேர் நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்தனர். ஆனால் வீட்டை இடிக்க வந்த காவல்துறை நிர்வாகத்தினர், கிராம மக்கள் சொல்வதைக் கேட்கவில்லை. அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது. " என்றும் கூறினார்.

வியாழக்கிழமை அன்று நடந்த வெளியேற்ற நடவடிக்கையில், மோய்னுல் தவிர, 13 வயதுச் சிறுவனான ஷேக் ஃபரித்தும் உயிரிழந்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் ஃபரித், பிற்பகலில் ஆதார் அட்டை எடுக்க தபால் அலுவலகத்திற்குச் சென்றிருந்தான். ஆனால் சிறிது நேரத்தில், குடும்பத்தினருக்கு அவர்களின் மகன் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது.

ஃபரித்தின் தந்தை கலீக் அலி, "ஆதார் அட்டை எடுக்க ஃபரித் வெளியே சென்றான். அதன் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்கு இன்னும் சரியான தகவல் தெரியாது. கிராமத்தில் இருந்து ஒருவர் எனக்கு ரத்தம் படிந்த ஃபரித்தின் புகைப்படத்தை காட்டினார்," என்று கூறுகிறார்.

இந்த இரண்டு பேரின் இறப்பை தர்ரங்க் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது. ஆனால் சம்பவம் பற்றி அதிகம் சொல்லவில்லை.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, துணை ஆணையர் பிரபாத்தி தெளசன்

நிர்வாகம் விளக்கம்

தர்ரங் மாவட்டத்தின் துணை ஆணையர் (மாவட்ட ஆட்சியர்) பிரபாதி தாவுசேன் பிபிசியிடம் பேசுகையில், "செப்டம்பர் 20 அன்று, சுமார் 4,500 பீகா ( அசாமில் 1 பீகா = 1600 சதுர கஜம்) அரசு நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம். அந்த நேரத்தில் கிராம மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். பிறகு குடிநீருக்காக நாங்கள் குழாய்கிணறுகளையும் கழிப்பறைகளையும் அமைத்தோம். இது தவிர, அங்கு இரண்டு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டன. அந்த வெளியேற்ற நடவடிக்கையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதுதான் உண்மை" என்று தெரிவித்தார்.

மாவட்ட துணை ஆணையர் மேலும் கூறுகையில், "நிர்வாகம் வியாழக்கிழமை வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடங்கியபோது, ​​ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திக் கற்களை வீசத் தொடங்கினர். அதன் பிறகு இந்தச் சம்பவம் நடந்தது. தற்போது, ​​உள்துறை நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சம்பவம் பற்றிய உண்மையைக் கண்டறிய நாங்கள் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணையை அமைத்துள்ளோம," என்று தெரிவித்தார்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடரும் என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டு மே மாதம் இரண்டாவது முறையாக அசாமில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பாஜக தனது அரசாங்கம் அமைக்கப்பட்டால், அரசு நிலம் "ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து" விடுவிக்கப்படும் என்று உறுதியளித்தது. காலி நிலத்தை மாநிலத்தின் நிலமற்ற மக்களுக்கு ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

காலி செய்யப்பட்ட நிலத்தில் 'ப்ராஜக்ட் கோருகுடி'

முதல்வர் பிஸ்வாஸ் சர்மாவின் தனிப்பட்ட முன்முயற்சியின் பேரில், கோருகுடி திட்டம் குறிப்பாக மேய்ச்சல் நிலங்களின் (நதிக்கரை நிலம்) அரசு நிலத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம், மாநிலத்தின் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வாழ்வாதாரமாக விவசாயப் பணிகளில் அமர்த்துவதாகும்.

தர்ரங் மாவட்டத்தில் காலி செய்யப்பட்ட அரசு நிலத்தில் இந்தத் திட்டத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் சுமார் 77 ஆயிரம் பீகா நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தரங்க் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது, ஆனால் இந்த நிலம், இரண்டு ஆறுகளும் நடுவில் இருப்பதால் வெள்ளத்தின் போது இந்த நிலம் அதிகரித்தும் குறைந்தும் வருகிறது.

அசாம் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC

படக்குறிப்பு, அகமது அலி

"நாங்கள் இந்திய குடிமக்களே"

பாதிக்கப்பட்ட கிராமத்தில் நாங்கள் சந்தித்துப் பேசிய அனைவரும் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்றும் சட்டப்பூர்வமாகவும் தாங்கள் இந்திய குடிமக்களாக கருதப்படுவதாகவும் தான் கூறுகிறார்கள்.

தர்ரங் மாவட்டத்தில் உள்ள தௌல்பூர் கிராமத்தில் வசிப்பவர் அகமது அலி. 63 வயதான அவர், "முன்பு எங்கள் குடும்பம் முழுவதும் சிபாஜார் தாசிலின் கிராகாரா கிராமத்தில் வாழ்ந்தது, ஆனால் வெள்ளம் மற்றும் மண் அரிப்பு காரணமாக, எங்கள் நிலம் ஆற்றோடு சென்றுவிட்டது. நாங்கள் தௌல்பூரில் மூன்று கட்டா நிலம் வாங்கி வீடு கட்டி, பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன். நான் 1983 முதல் இங்கு வாக்களித்து வருகிறேன். என்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன, என்ஆர்சியிலும் நாங்கள் இந்திய குடிமக்களாக கருதப்படுகிறோம்." என்கிறார்.

இந்தப் பகுதி மக்களின் குடியுரிமை குறித்து மாவட்டத் துணை ஆணையரிடம் கேட்டபோது, ​​இப்பொழுது இந்தப் பிரச்னை அரசு நிலத்தில் உள்ள 'சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பானது,' என்றார்.

இதற்கிடையில், மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை மாலை மோய்னுலின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தது. மதியம் 1 மணியளவில் தொழுகை நடைபெற்றது. ஆனால், வீடு இல்லாமல் போன மொய்னுலின் குடும்பம், இனி எங்கு வசிப்பது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :