அசாமில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதல்; போலீசார் துப்பாக்கிச் சூடு – என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், திலீப் குமார் ஷர்மா
- பதவி, கெளஹாத்தியிலிருந்து பிபிசி இந்தி சேவைக்காக
அசாமில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற நிர்வாகத்துக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தர்ரங் மாவட்டத்தின் மூன்றாம் எண் தோல்பூர் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கெளஹாத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அசாம் அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. சம்பவம் ஏன் நிகழ்ந்தது என்று விசாரணையில் கண்டறியப்படும்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர், அரசு நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் முயற்சியில், வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இந்த வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் கற்களை வீசத் தொடங்கினர் என்று ஊடகங்களுக்கு தகவல் அளித்த தர்ரங் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மா, கூறினார். ஒன்பது காவல்துறையினர் மற்றும் பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
தர்ரங் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுஷாந்தா பிஸ்வா சர்மா, மாநில முதல்வர் ஹேமந்தா பிஸ்வா சர்மாவின் இளைய சகோதரர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது..
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ
தர்ரங் சம்பவம் தொடர்பானது என்று சொல்லப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. செய்தி நிறுவனமான பிடிஐ செய்திபடி உடலில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரை, கையில் கேமராவுடன் ஒருவர் அடிப்பது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பிஜய் சங்கர் பனியா என்ற இந்த தொழில்முறை புகைப்படக்காரர், நிலைமையை பதிவு செய்ய மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், DILIP SHARMA/BBC
இந்த சம்பவத்தில் 8 போலீசார் காயமடைந்தனர். உதவி சப் இன்ஸ்பெக்டர் மோனிருதீன் கெளஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் சதாம் உசேன் மற்றும் ஷேக் ஃபரீத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை நிறுத்தப்படாது என்று முதல்வர் ஹேமந்தா பிஸ்வா சர்மா கெளஹாத்தியில் தெரிவித்துள்ளார்.
மக்கள் என்ன சொல்கிறார்கள்?
"செப்டம்பர் 23 காலை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அரசால் மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கக் கூடினர்," என்று இந்த சம்பவம் குறித்து விவரங்கள் தெரிவித்த தர்ரங் மாவட்டத்தின், அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் சங்கத்தின் ஆலோசகர் ஐனுதீன் அகமது பிபிசியிடம் தெரிவித்தார்.
"மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஜேசிபி மூலம் மக்களின் வீடுகளை இடித்தனர். இதற்கிடையே இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்."என்று அவர் குறிப்பிட்டார்.
அரசின் தன்னிச்சையான செயல் இது என்கிறது காங்கிரஸ்
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில் காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்துள்ளார் அவர்.

பட மூலாதாரம், ANI
"அசாமில் அரசு ஆதரவுடன் இந்த தீ மூட்டப்பட்டுள்ளது. நான் மாநிலத்தில் உள்ள என் சகோதர சகோதரிகளுடன் நிற்கிறேன். இது இந்தியாவின் எந்த குழந்தைக்கும் நடக்கக்கூடாது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போன்று அசாமின் காங்கிரஸ் தலைவர் பூபென் போரா, ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று விவரித்துள்ளார்.
"கோவிட் தொற்றுநோயின் நெருக்கடியின் போது, கெளஹாத்தி உயர் நீதிமன்றம் , ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் முதல்வர் ஹேமந்தா பிஸ்வா சர்மாவின் தன்னிச்சையான செயல் காரணமாக, 1970 களில் இருந்து தோல்பூரில் குடியேறிய மக்களிடமிருந்து நிலம் திரும்பபெறப்படுகிறது. அதேசமயம், வெளியேற்றப்படுவதற்கு முன்பு, இந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்த அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்." என்று காங்கிரஸ் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அசாம் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, தர்ராங் மாவட்டத்தில் உள்ள சிபாஜாரில் செப்டம்பர் 20 ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்ட நிர்வாகம், சுமார் 800 குடும்பங்களை வெளியேற்றி 4,500 பிகாஹ்( ஒரு பிகாஹ்- 0.62 ஏக்கர்) நிலத்தை காலி செய்தது.
வியாழக்கிழமை காலை சுமார் இருநூறு குடும்பங்களுக்கு எதிராக மீண்டும் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது.
அசாம் அரசு 'சட்டவிரோத ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் வெளியேற்றும் இயக்கத்தை எந்த நூறுக்கணக்கான மக்களுக்கு எதிராக மேற்கொள்கிறதோ, அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். அரசு நிலத்தை காலி செய்த பிறகு நூற்றுக்கணக்கானவர்கள், ஆற்றின் கரையில் தஞ்சமடைந்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
- இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அதிர்ச்சி
- 'இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள்'- அதிமுகவுக்கு சிக்கலா?
- பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?
- தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு
- சீன செல்பேசிகளை வீசியெறியுங்கள்: நுகர்வோரை எச்சரிக்கும் லித்துவேனியா அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ்








