அசாம் - மிசோரம் மாநில எல்லை மோதலில் 5 போலீசார் பலி: பின்னணி என்ன?

மிசோரம் முதலமைச்சர் ஜொரோம்தங்கா, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மிசோரம் முதலமைச்சர் ஜொராம்தங்கா, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
    • எழுதியவர், பிரதீப்குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

26 ஜூலை 2021, திங்கட்கிழமை, இந்திய வரலாற்றில் மிக அரிதான ஒரு நிகழ்வு நாள். அன்று, இரு அண்டை மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரம் முதல்வர்கள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர்.

சற்று நேரத்தில் சமூக ஊடகங்களில் விவரங்கள் வெளியாகத் தொடங்கின. இரு மாநில காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அசாம் காவல் துறையின் ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். இது இந்திய வரலாற்றில் முதல் முறை கேள்விப்படும் ஒரு சம்பவம்.

முன்னதாக, இரு மாநில முதல்வர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அமித் ஷா, ஏழு வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். இந்த மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனைகள் இந்தக் கூட்டத்தில் இடம் பெற்றதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

மாநில அரசுகளின் வாதங்கள்

மிசோரம் முதல்வர், தனது அறிக்கையில், இந்தச் சம்பவம் குறித்துக் கவலையுடன் விவரித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு கச்சார் மாவட்டத்தில் உள்ள வைரங்கதே ஆட்டோ ரிக்‌ஷா ஸ்டாண்ட் அருகே சிஆர்பிஎஃப் புறக்காவல் நிலையத்தில், அசாம் காவல் துறையினர் 200 க்கும் மேற்பட்டோர் நுழைந்து மிசோரம் காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.

காவல்துறையினர் தாக்குதலைக்கண்டு, அங்கு கூடிய உள்ளூர்வாசிகளை அகற்ற காவல் துறையினர் தடியடியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதில் பலர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

கோலாசிப் காவல் துறைக் கண்காணிப்பாளர் அவர்களைச் சந்தித்து, சமாதானப்படுத்த முயன்றார். அசாம் போலீசார் கையெறி குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, மிசோரம் போலீசார் மாலை 4.50 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். மிசோரம் முதலமைச்சர் ஜொராம்தங்கா தனது அறிக்கையில், கோலாசிப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசாம் காவல்துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது மிசோரம் காவல்துறை அசாம் காவல்துறைக்குப் பதிலடி கொடுத்ததாகக் கூறுகிறார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் மிசோரம் முதல்வர் ஜொராம்தங்கா.

பட மூலாதாரம், TWITTER/ZORAMTHANGA

படக்குறிப்பு, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டிய கூட்டத்தில் மிசோரம் முதல்வர் ஜொராம்தங்கா.

அசாம் முதல்வர் வெளியிட்ட அறிக்கையும் இதையே கூறுகிறது. மிசோரம் அரசாங்கம், அத்து மீறி, எல்லை தாண்டி, லைலாப்பூர் மாவட்டத்தில், அதாவது அசாம் பகுதியில் சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதால் தான் இந்தப் பிரச்சனை தொடங்கியது என்று அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகிறார். இதுதொடர்பாக, ஜூலை 26 ம் தேதி, ஐ.ஜி., டி.ஐ.ஜி மற்றும் அசாம் காவல்துறை கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகள் அங்கு சென்று நிலைமையை விளக்க முயன்றனர்.

அசாம் காவல் துறையினர் மீது மிசோரம் பொது மக்கள், மிசோரம் காவல் துறை ஆதரவுடன் கல்லெறி தாக்குதல் நடத்தியதாக அசாம் முதல்வரின் அறிக்கை தெரிவிக்கிறது.

கோலாசிப் காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்று ஒப்புக்கொண்டு அசாம் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, மிசோரம் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் ஆறு அசாம் காவல்துறை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கச்சார் மாவட்டக் கண்காணிப்பாளர் உட்பட ஐம்பது பேர் காயமடைந்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

மிசோரமில் முன்னாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையாளர் ஆடம் ஹாலிடே பிபிசி இந்தியிடம், "இரு மாநிலங்களுக்கிடையில் ஒரு எல்லை தகராறு ஏற்பட்டுள்ளது, ஆனால் இரு மாநிலங்களின் காவல்துறையினரும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் நின்று துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது இதுவே முதல் முறை. இந்நிலை எப்படி உருவானது என்பது விசாரணைக்குரிய விஷயம். காவல் துறை ஏன் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது என்பதுதான் கேள்வி. இது காவல்துறை அதிகாரிகளின் பணி நடத்தை பற்றிய கேள்வியையும் எழுப்பியுள்ளது" என்று கூறினார்.

பி.டி.ஐ. செய்தி முகமையின் குவாகாத்தி பிரிவு தலைவர் துர்வா கோஷ் கூறுகையில், "இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லை தகராறு மிகவும் பழமையானது. வெவ்வேறு இடங்களில் மோதல்கள் குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆனால், காவல் துறையினரே உயிரிழக்கும் அளவுக்கு பெரிய சர்ச்சையாக இது மாறும், என்று யாரும் நினைத்திருக்க முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அன்றுதான் ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்." என்று கூறுகிறார்.

அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
படக்குறிப்பு, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.

இந்தச் சம்பவம் குறித்து அசாம் பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஜாய்தீப் பிஸ்வாஸ் கூறுகையில், "உள்துறை அமைச்சரின் வருகைக்குப் பிறகு உடனடியாக இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இருப்பினும், இந்த சர்ச்சை நீண்ட காலமாக நடந்து வருகிறது என்பதையும் இதைத் தீர்க்க தீவிர முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம்." என்று கூறுகிறார்.

பழமையான சர்ச்சை

அசாமில் பிபிசி இந்தியின் இணை பத்திரிகையாளர் திலீப் குமார் சர்மா கூறுகையில், 'அசாமுக்கும் மிசோரமுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. மிசோரம் 1972 வரை அசாமின் ஒரு பகுதியாக இருந்தது. இது அசாம் மாவட்டமாக லுஷாய் ஹில்ஸ் என்ற பெயரில் இருந்தது, அதன் தலைமையகம் ஐஸ்வால். அசாம்-மிசோரம் தகராறு, லுஷாய் மலைகளை கச்சார் சமவெளியில் இருந்து பிரித்ததாகக் கூறப்படும் 1875 அறிவிப்பிலிருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது.' என்றார்.

ஆடம் ஹாலிடே, "மிசோரம் அசாமுடன்தான் இருந்தது, ஆனால் மிசோ மக்கள்தொகை மற்றும் லுஷாய் மலைகளின் பரப்பளவு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதி 1875இல் குறிக்கப்பட்டது. மிசோரம் மாநில அரசு அதன் எல்லையை அதற்கேற்ப உரிமை கோருகிறது, ஆனால் அசாம் அரசு அதை ஏற்கவில்லை. 1933 இல் குறிக்கப்பட்ட எல்லைக்கு ஏற்ப அசாம் அரசாங்கம் தனது கோரிக்கையை முன்வைக்கிறது. இந்த இரண்டு அளவீடுகளுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது, எனவே சர்ச்சையின் உண்மையான வேர் இரு மாநிலங்களுக்கும் பொதுவான இடமாக இருக்கிறது. யாரும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை" என்று விளக்குகிறார்.

1875 ஆம் ஆண்டின் அறிவிப்பு, வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைச் (BEFR) சட்டம், 1873 இன் கீழ் வந்தது. அதே நேரத்தில் 1933 இல் வந்த அறிவிப்பின் போது மிசோ சமூகம் கலந்தாலோசிக்கப்படவில்லை, எனவே அச்சமூகம் இந்த அறிவிப்பை எதிர்த்தது.

மிசோரம் அசாமுடன் சுமார் 165 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது, இதில் மிசோரமின் ஐஸ்வால், கோலாசிப் மற்றும் மமித் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கும். அசாமின் கச்சார், கரிம்கஞ்ச் மற்றும் ஹைலாகாந்தி மாவட்டங்கள் இந்த எல்லையில் வருகின்றன.

திலீப் ஷர்மா, 'கடந்த ஆண்டு அக்டோபரில், அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாப்பூர் கிராமத்து மக்களுக்கும், மிசோரமின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரங்கதே உள்ளூர்வாசிகளுக்கும் இடையே ஒரு வன்முறை மோதல் ஏற்பட்டது, இதில் குறைந்தது 8 பேர் காயமடைந்தனர்.' என்று கூறுகிறார்.

இரு மாநிலங்களுக்கிடையேயான இந்த மோதல்களுக்கான காரணங்கள் குறித்து, துர்வா கோஷ், "அடிப்படையில் இந்த சண்டை நில உரிமை தொடர்பானதுதான். பெருகி வரும் மக்கள் தொகையின் அழுத்தம் நிலத்தின் மீது விழுகிறது. மக்களுக்கு வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டும். இதற்காக, நிலம் தேவை. இரு மாநிலங்களும் பரஸ்பரம் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சாட்டுகின்றன. இரு மாநிலங்களும் தங்களது சொந்த உரிமைகோரல்களை முன்வைக்கின்றன. யார் உண்மையைச் சொல்கிறார்கள், யார் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். " என்று விவரிக்கிறார்.

சாலையில் செல்லும் ஒரு பெண்.

பட மூலாதாரம், ANUWAR HAZARIKA/NURPHOTO VIA GETTY IMAGES

இருப்பினும், அசாம் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஜாய்தீப் பிஸ்வாஸ் கூறுகையில், "இந்த சர்ச்சை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் காணப்படுகிறது. இதுபோன்ற பதற்றம் எல்லா பகுதிகளிலும் இல்லை." என்று தெரிவிக்கிறார்.

ஆடம் ஹாலிடேயின் கூற்றுப்படி, "முதலில் இந்தப் பகுதி காடுகள் நிறைந்ததாக இருந்தது, அது நோ மேன்ஸ் லேண்ட் என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது இது அப்படி இல்லை, எனவே மோதல் அதிகரித்துள்ளது."

எல்லை குறித்த அசாமின் சர்ச்சை மிசோரமுடன் மட்டுமன்று. "அசாமுக்கு மிசோரமுடன் மட்டும் மோதல்கள் இல்லை. அசாமுக்கு மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுடனும் எல்லை மோதல்களும் உள்ளன." என்று துர்வா கோஷ் கூறுகிறார்.

மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுடனான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்றும் ஆனால் மிசோரமுடனான இந்த சர்ச்சைக்கு தீர்வு காண்பது கடினம் என்றும் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஜாய்தீப் பிஸ்வாஸ், "அசாம் முதல்வரின் அறிக்கையிலிருந்து நிலைமையின் தீவிரம் உங்களுக்கு விளங்கும். ஒருவேளை அவர் இச்சிக்கல் தீர்வுக்கு அப்பாற்பட்டுச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தக் கூட அப்படிக் கூறியிருக்கலாம்," என்று கூறுகிறார்.

எல்லை நிர்ணயிக்க ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு இல்லை

அசாமுக்கும் மிசோரமுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் 1955 ஆம் ஆண்டு முதல் நடந்து வருவதாகக் கூறப்படுவது சுவாரஸ்யமானது என்றாலும், இந்த முயற்சிகள் குறித்துக் கேள்வி எழுப்பும் ஆடம் ஹேலி, "எந்தவொரு நிலம் அல்லது எல்லை குறித்த சர்ச்சை ஏற்பட்டாலும், முதல் முயற்சியாக இருதரப்பினரின் கண்காணிப்பில் ஒரு கணக்கெடுப்பு நடக்கும். சர்ச்சை மிகவும் பழையதாக இருக்கலாம், ஆனால் இன்றுவரை எந்தவொரு மட்டத்திலும் ஒரு கூட்டு கணக்கெடுப்புக்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்த திசையில் அதிக விவாதங்களும் இல்லை" என்கிறார்.

எல்லைத் தகராறு ஏற்கனவே இருந்ததாக துர்வா கோஷ் கூறினாலும், கடந்த ஒரு வருடத்தில் நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதற்கான காரணமாக, எல்லைப் பகுதியில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், எனவே மக்களுக்கு இடையிலான மோதலும் அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

போலீஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மாநில எல்லை மோதலில் போலீசார் பலி.

இந்த மோதல்களைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று துர்வா கோஷ் விரும்புகிறார். ஏனெனில் மோதல்கள் குறித்த செய்தி மத்திய அரசை சென்றடைகிறது, ஆனால் சர்ச்சையின் தீர்வு காணப்படவில்லை. அதே சமயம், இதுபோன்ற வழக்குகளைக் கையாள, அரசாங்கத்துடன் சேர்ந்து, காவல்துறை அல்லது நிர்வாகமும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ஜாய்தீப் பிஸ்வாஸ் நம்புகிறார்.

ஆடம் ஹேலி கூறுகையில், "முன்னதாக இங்குகூட இந்த அளவுக்குச் சர்ச்சை வெடிக்கவில்லை. இப்போது, இந்தச் சர்ச்சைகள் அரசியல் ஆக்கப்படுவதால் பெரிய வடிவிலான சர்ச்சைகள் வெளிவருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், அரசியல் ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டிய அவசியம் உள்ளது." என்கிறார்.

ஜாய்தீப் பிஸ்வாஸ், "இந்த மோதல்கள் அரசியல்மயமாக்கலின் விளைவுதான். ஒவ்வொரு சர்ச்சையின் பின்னரும் பிராந்திய அடையாளத்தின் பேச்சு உரக்கக் கேட்கத் தொடங்குகிறது, மக்கள் தேசிய உணர்வை விட்டுவிட்டு பிராந்திய அடையாளத்தைப் பற்றி பேசத் தொடங்குகிறார்கள்." என்று கவலை தெரிவிக்கிறார்.

அசாம் மற்றும் மிசோரம் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை மோதல்களுக்குப் பின்னர் இப்பகுதியில் பதற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் பத்திரிகையாளர் சந்திராணி சின்ஹா,"அசாம் அரசு திங்கள்கிழமை முதல் எல்லைப் பகுதிகளில் அதிக காவல் போட்டுள்ளது, இந்த அச்சத்தையே உருவாக்குகிறது." என்கிறார்.

மேகாலயாவைத் தொற்றும் பதற்றம்

இந்தப் பதற்றமான சூழலின் தாக்கம், அசாம் மற்றும் மேகாலயாவின் எல்லையில் திங்கட்கிழமை இரவு முதல் தலைகாட்டத் தொடங்கியது.

மேகாலயா.

பட மூலாதாரம், DEBALIN ROY

படக்குறிப்பு, மேகாலயா.

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஜோ திங்கிஹு, "மேகாலயா மற்றும் அசாமின் எல்லையில் பதற்றம் நிலவும் சூழல் உள்ளது. சமீபத்தில், மேகாலயா மின்சாரத் துறை, எல்லைப் பகுதிகளில் மின் கம்பங்களை நிறுவியது. அடுத்த நாள், அசாம் காவல்துறையினர் வந்து அவற்றை அகற்றினர். அந்தக் குறிப்பிட்ட நிலப்பகுதியை இரு மாநிலங்களும் சொந்தம் கொண்டாடுகின்றன," என்று கூறுகிறார்.

அசாம் மற்றும் மேகாலயாவின் எல்லையின் நான்கு மாவட்டங்களில் எல்லைத் தகராறு கடந்த பல தசாப்தங்களாக நடந்து வருவதாகவும், எல்லையை வரையறுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படாததால் சர்ச்சை தொடர்வதாகவும் ஜோ திங்கிஹு கூறுகிறார்.

இருப்பினும், சில ஆய்வாளர்கள் மிசோரமுக்கும் அசாமுக்கும் இடையிலான தற்போதைய மோதலை எதிர்வரும் நாட்களின் அரசியலுடன் இணைத்துப் பார்க்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து ஒரு மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவிக்கையில், "அசாம் தற்போது பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் கீழ் உள்ளது, சோராம்தங்காவின் மிசோ தேசிய முன்னணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிசோரமில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன, ஆனால் அதுவரை சோரம்தங்கா பாஜக கூட்டணியில் தொடருவாரா என்பதில் சந்தேகம் உள்ளது. மத்திய மற்றும் அசாம் அரசுகளுடன் ஒத்துப் போகவில்லையென்றால், கூட்டணி முறியலாம்." என்று அவர் கணிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :