அசாம் - மிசோரம் எல்லையில் மோதல்: 6 அசாம் போலீசார் பலி
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, ஒலிம்பிக் உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம். நேரலையைத் தொகுத்து வழங்குவது செய்தியாளர் நந்தகுமார், மணிகண்டன்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நன்றி நேயர்களே!
இன்றைய நேரலையை நிறைவு செய்து உங்களிடம் இருந்து விடைபெறுவது பிபிசி தமிழின் அ.தா.பாலசுப்ரமணியன். நாளை காலை மீண்டும் வேறொரு நேரலைப் பக்கத்தில் சந்திப்போம். நீங்கள் எப்போதும் பிபிசி தமிழ் செய்திகளைப் படிக்க எங்கள் வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்துக்கு வாருங்கள். நன்றி.
இந்த இரவு இனியதாகட்டும்.
23 பேர் கொண்ட பிரசாந்த் கிஷோர் குழுவை ஓட்டலில் அடைத்த திரிபுரா போலீஸ்
பிரசாந்த் கிஷோரின் தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனமான ஐ-பேக்கை சேர்ந்த 23 பேரை திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் ஒரு ஹோட்டலில் அடைத்துவைத்துள்ளது அம்மாநில போலீஸ். அவர்களிடம் விசாரணை நடத்தியபின், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையம் செல்வதற்கு அல்லாமல் வேறு எதற்காகவும் ஹோட்டலை விட்டு வெளியே வரக்கூடாது என்று தெரிவித்தது போலீஸ் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. திரிபுரா ஒரு பாஜக ஆளும் ்மாநிலம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
அசாம் - மிசோரம் எல்லையில் சண்டை, 6 அசாம் போலீசார் பலி
அசாம் -மிசோரம் மாநிலங்களுக்கிடையிலான எல்லையில் ஏற்பட்ட சண்டையில் 6 அசாம் போலீசார் கொல்லப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எல்லையில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டரீதியான தங்கள் எல்லையை பாதுகாக்கும்போது இந்த போலீசார் தங்கள் உயிர்களை தியாகம் செய்ததாக ஹிமாந்த பிஸ்வா சர்மா தனது ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.
சர்மாவும், மிசோரம் முதல்வர் ஜொராம் தங்காவும் பரஸ்பரம் டிவிட்டரில் குற்றம் சாட்டிக்கொண்டனர். பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
விஜய் மல்லையா திவாலானவர் என அறிவித்தது லண்டன் உயர் நீதிமன்றம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விஜய் மல்லையா
இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை "திவாலானவர்" என்று அறிவித்துள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்.
இது தொடர்பாக அவர் கடன் பெற்றிருந்த வங்கிகள் குழுவுக்கு தலைமை தாங்கும் இந்திய ஸ்டேட் வங்கி 2018இல் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், "விஜய் மல்லையா திவாலனவர். அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம்," என்று கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு இந்திய வங்கிகள் குழுவுக்கு வெற்றியாக கருதப்பட்டாலும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான உரிமை விஜய் மல்லையாவுக்கு உள்ளது.
முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக எஸ்பிஐ தலைமையில் பரோடா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஃபெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஜேஎம் ஃபைனான்ஷியல் அசெட் ரீகன்ஸ்டிரக்ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் சேந்து ஒரு குழுவாக எஸ்பிஐ தலைமையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி முதல் கணக்கிட்டு, ஆண்டுக்கு 11.5 சதவீத வட்டியுடன் கூடிய கடன் தொகையை விஜய் மல்லையா செலுத்த வேண்டும் என்று அந்த வங்கிகள் கோரின.
ஆனால், இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த விஜய் மல்லையா, வட்டித் தொகையுடன் கூட்டு வட்டி விதிக்கப்படுவதை எதிர்த்தார். இந்த வகையில், விஜய் மல்லையா பிரிட்டன் பண மதிப்பில் 1 பில்லியன் பவுண்டுகள் வரை வங்கிகளுக்கு அவர் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அந்த பணத்தை விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து ஈடு செய்ய இதுவரை நிலவி வந்த சட்ட தடங்கல்கள் நீங்கியுள்ளன.
இருப்பினும், மேல்முறையீட்டிலும் இந்த வங்கிகள் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய வங்கிகளால் விஜய் மல்லையாவின் சொத்துகளை ஜப்தி செய்து விற்க முடியும்.
"ஜெயலலிதா பெயர்தான் உறுத்தல் என்றால் அம்பேத்கர் பெயரை பல்கலைக்கழகத்திற்கு வையுங்கள்", நடராஜன் சுந்தர், புதுச்சேரி
படக்குறிப்பு, ழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கண்டித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், "கல்வியில் மிகவும் பின் தங்கிய விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாணவர்களின் நலன் கருதி கடந்த கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநரின் ஒப்புதல் பெற்று,பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அரசாணை பிப்ரவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் நியமிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அன்று மாலையே சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த காரணத்தால் அரசு எந்த பணியும் செய்ய முடியாமல் போனது. இதுதான் உண்மை நிலை. ஆனால் இதை திசை திருப்பி இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு எந்த பணியும் செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்யாமல் கிடப்பில் போடப்பட்டது போன்ற மாயையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் அனைத்து தொகுதிகளிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என திமுிக கூறியுள்ளது. ஆனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தை திறன் இல்லாதது போல காட்ட முயன்றால் அளித்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்கள்?," என்று சண்முகம் கேள்வி எழுப்பினார்.
"ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி செலவழிக்க நிதி இல்லை என்று சொல்லும் திமுக அரசு, மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு மட்டும் ரூ.200 கோடியை எப்படி ஒதுக்கியது? யார் துவங்கினாலும் நூலகம் வரவேற்கப்பட வேண்டியது, வரவேற்கிறோம். நிதி இல்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்த பல்கலைக்கழகத்தை மூடுகிறோம் என்றும்.அதை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கிறோம் என்றும் ஆளும் அரசு கூறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் தன்னால் பல்கலைக்கழகம் கொண்டு வர முடியாத நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அந்த பல்கலைக்கழகத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாததால்தான் தமிழக அமைச்சர் பொன்முடி, அந்த நடவடிக்கையை எதிர்க்கிறார்.
உண்மையில் அவருக்கு ஜெயலலிதா பெயரில் இந்த பல்கலைக்கழகம் இருப்பதுதான் பிடிக்கவில்லை. ஜெயலலிதாவின் பெயர்தான் உறுத்துகிறது என்றால், கஷ்டமாக இருக்கிறது என்றால், யார் பெயரை வேண்டுமானாலும் பல்கலைக்கழகத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் பொதுவானவரான அம்பேத்கரின் பெயரை கூட வைத்து விடுங்கள். எங்களது தேவை விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமே. இதில் அரசியல் இருக்க வேண்டாம்.
எந்த சூழலிலும் உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் கனவு பாதிக்கப்படக் கூடாது. எனவே. ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார் சிவி.சண்முகம்.
குமரியில் வரவேற்பு பெறும் பிளாஸ்டிக் பாட்டில் அலங்கார திண்ணை, பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அலங்கார திண்ணை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாட்டிற்காக எக்கோ பிரிக்ஸ் தொழில்நுட்பத்தில் 441 பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு மரங்களுக்கு அலங்கார திண்ணை அமைக்கபட்டுள்ளது.
இது பூங்காவுக்கு வரும் பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் நகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
மாநகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிகாக பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்ப முறைகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் பேருந்து நிலையம், குடியிருப்புகள், சாலை ஓரங்கள், காய்கறி சந்தை உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை, என இரு வகையாக பிரிக்கப்பட்டு, அதில் மக்காத குப்பைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை நுண்ணுயிரியல் செயலாக்க மையத்திற்கு ஊழியர்கள் எடுத்து செல்கின்றனர்.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் பல வண்ணங்களான பிளாஸ்டிக் கவர்கள் கொண்டு அடைக்கப்படுகிறது.
பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாநகர பூங்காவில் உள்ள இரு மரங்களுக்கு செங்கலுக்கு பதிலாக இந்த பிளாஸ்டிக் கவர்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி மரங்களை சுற்றி கண்ணைக் கவரும் வகையில் வட்ட வடிவத்தில் அலங்கார திண்னை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை நாகர்கோவில் மாநகரை பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் ஆஷா அஜித் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் துப்புரவு பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை எக்கோ முறையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாநகராட்சி பூங்காவில் மரங்களை சுற்றி பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் செங்கலுக்கு பதிலாக புதிய திண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
110 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கவர்கள் அடைக்கபட்ட 411 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு 2அடி உயரத்தில் 7 அடி விட்டத்தில் திண்ணை அமைக்கபட்டடுள்ளது. இது அங்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதன் மூலம் மரங்கள் பாதுகாக்கப்படும். பிளாஸ்டிக்கிற்கு அழிவு இல்லை என்பதால் பல ஆண்டுகள் வரை நீடித்து இருக்கும் என நம்பப்படுகிறது. அடுத்த கட்டமாக மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் இத்திட்டதை செயல்படுத்த உள்ளதாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தெரிவித்தார்.
'ஐ ஆம் சாரி': பவானி தேவி உருக்கம்
பட மூலாதாரம், FABRICE COFFRINI/AFP via Getty Images
வாள்வீச்சு போட்டியில் தோல்வியடைந்த பவானி தேவி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தோல்வி குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
என்னால் முடிந்த அளவுக்கு ஆடினேன். ஆனால் வெற்றிபெற இயலவில்லை. மன்னித்து விடுங்கள் என அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒவ்வொரு முடிவும் ஒரு தொடக்கத்தை கொண்டிருக்கும். அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கத்தை பெறும் வகையில் கடுமையாகப் பயிற்சி செய்வேன்.
நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் என தனது ட்விட்டர் பதிவில் பவானி தேவி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு பவானி தேவி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற நபர் என்ற பெருமையைப் பெற்ற பவானி தேவி, முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றுப் போட்டியில் உலகின் மூன்றாவது நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
ஒலிம்பிக் இந்திய பளு தூக்கும் வீராங்கனைக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு
பட மூலாதாரம், @mirabai_chanu
படக்குறிப்பு, மீரா பாய் சானு
ஒலிம்பிக் இந்திய பளு தூக்கும் வீராங்கனை மீரா பாய்க்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு. அவர் எதிர்கொண்ட போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை ஸீ ஹூ ஊக்க மருந்து உட்கொண்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அதில் முடிவுகள் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் பெற்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டு அடுத்த நிலையில் உள்ள மீரா பாய் சானுவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
டேபிள் டென்னிஸ்: ஒற்றையர் போட்டியில் வெளியேறினார் மணிகா
பட மூலாதாரம், Getty Images
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மணிகா பத்ரா தோல்வியடைந்தார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரியாவின் பொல்கனோவா 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
ஏற்கெனவே கலப்பு இரட்டையர் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருக்கிறார்.
இதேபோல பேட்மிண்டன் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனீசிய இணையிடம் தோல்வியடைந்தது.
பிரதமரை சந்தித்தது ஏன்? டெல்லியில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
பட மூலாதாரம், PMO
படக்குறிப்பு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பல்வேறு தமிழக நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறியிருக்கிறார் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
பிரதமர் நரேந்திர மோதியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து விட்டு தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லம் திரும்பிய எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியது:
தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்த பிரதமர் நரேந்திர மோதியை நானும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசியை தேவையான அளவுக்கு மாநிலத்துக்கு வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், நான் முதல்வர் வகித்தபோது, கர்நாடகாவில் அந்த அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்தால் தமிழ்நாட்டுக்கு நீர் வரத்து பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி வந்தோம்.
இதே விவகாரத்தில் அரசு எவ்வித அனுமதியையும் கொடுக்கக் கூடாது என்று பிரதமரிடம் இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்தினோம்.
கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சியின்போது வலியுறுத்தினோம். அந்த திட்டத்தை விரைவுபடுத்தவும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தோம்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைய பல்வேறு திட்டங்களுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை அனுமதி கொடுத்துள்ளது. அவற்றை விரைந்து செயல்படுத்தவும் பிரதமரை கேட்டுக் கொண்டோம்.
சர்வதேச கடல் பகுதியில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பையினர் தாக்கும் நடவடிக்கை தொடருகிறது.அத்தகைய செயல்பாடுகளை தடுக்க இலங்கை அரசிடம் பேசுமாறு பிரதமரை கேட்டுக் கொண்டோம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் மட்டுமே ஆகின்றன. அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியை செய்யும். அந்த அடிப்படையில் எங்களுடைய பணிகளை செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் திமுக அரசு லாட்டரி சீட்டு அறிமுகம் செய்யும் என்று எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அறிக்கை வெளியிட்டேன். அவர்கள் அந்த திட்டத்தை கொண்டு வராவிட்டால் நல்லதுதான்.
மத்திய உள்துறை அமைச்சரை பார்க்கும் திட்டம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வரும் சசிகலாவின் செயல்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பியபோது, அவற்றுக்கு பதில் அளிப்பதை எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வும் தவிர்த்தனர்.
பட மூலாதாரம், PMO
பட மூலாதாரம், PMO
படக்குறிப்பு, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்த பிறகு அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரதமருடன் படம் எடுத்துக் கொண்டனர்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலக அறையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினார்கள்.
சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பிரதமரை சந்திக்க டெல்லி வந்த எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். ஆனால், பிரதமரை சந்தித்தபோது அவரது அறைக்குள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மட்டுமே இருந்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதமரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் டெல்லி சாகேத்தில் அரசு ஒதுக்கிய நிலத்தில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடச் சென்றனர்.
அவர்கள் எந்த கோரிக்கையுடன் பிரதமரை சந்தித்தனர் என்ற விவரம் இன்னும் அலுவல்பூர்வமாக வெளியாகவில்லை.
கர்நாடகா முதல்வர் பதவியில் இன்று மாலை விலகுகிறார் எடியூரப்பா
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விலகப்போவதாக பி.எஸ். எடியூரப்பா அறிவித்துள்ளார். அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாடப்படட்ட நிகழ்வில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பெங்களூருவில் உள்ள விதான் செளதா சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய எடியூரப்பா, "முதல்வர் பதவியில் நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன்," என்றார்.
"மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் விருப்பம் மற்றும் பிறரின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்," என்று எடியூரப்பா உணர்ச்சிபொங்க பேசினார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் அவர் தமது முதல்வர் பதவியில் இருந்து முறைப்படி விலகுவார் என்று கர்நாடகா பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மாநிலத்தில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக தமது மகன் விஜயேந்திராவை துணை முதல்வராக்க எடியூரப்பா முயல்வதாகவும் மாநிலத்தில் அவரது குடும்பம் அரசு விவகாரங்களில் தலையிடுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்தன.
வந்துகொண்டிருக்கும் செய்தி, ஒலிம்பிக் டென்னிஸ்: சுமித் நாகல் தோல்வி
ஒலிம்பிக் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.
உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்தேவை நாகல் எதிர்கொண்டார். அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3, 6-1 என நேர் செட்களில் வெற்றிபெற்றார்.
முதல் சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை வென்று இரண்டாவது சுற்றுக்கு நாகல் முன்னேறியிருந்தார்.
விவசாயிகள் போராட்டம்: நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிய ராகுல் காந்தி
பட மூலாதாரம், AICC
படக்குறிப்பு, நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டிச் செல்லும் ராகுல் காந்தி
இந்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, நாடாளுமன்றம் நோக்கி இன்று டிராக்டர் ஓட்டிச்சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து உள்ளிட்ட அம்மாநில எம்.பி.க்கள் சிலருடன் இன்று காலை தமது வீட்டில் இருந்து ராகுல் காந்தி டிராக்டரில் நாடாளுமன்றம் நோக்கிப் புறப்பட்டார். இதனால், அவர் செல்லும் வழிநெடுகிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக போராடும் விவசாயிகள், அரசைப் பொருத்தவரை தீவிரவாதிகள். ஆனால், உண்மையில் இந்த சட்டங்கள் ஒன்று இரண்டு கார்பரேட் முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவே உள்ளன," என்று தெரிவித்தார்.
"வீதியில் இறங்கி மாதக்கணக்கில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவே தமது வீட்டில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் ஓட்டி வந்தேன்," என்று ராகுல் காந்தி கூறினார்.
இதற்கிடையே, கட்டுப்பாட்டு விதிகளை மீறி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இருந்த பகுதி நோக்கி டிராக்டரில் வந்த ஆதரவாளர்கள் செல்ல காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சூர்ஜிவாலா முயன்றார்.
அவரை நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தலைமையகம் அருகே வழிமறித்த காவல்துறையினர் அவரையும் சில காங்கிரஸ் பிரமுகர்களையும் கைது செய்து மந்திர் மார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பட மூலாதாரம், AICC
படக்குறிப்பு, நாடாளுமன்றம் புறவாயில் பகுதி சாலை அருகே செய்தியாளர்களிடம் பேசும் ராகுல் காந்தி
வந்துகொண்டிருக்கும் செய்தி, டோக்யோ ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய ஆண்கள் அணி தோல்வி
டோக்யோ ஒலிம்பிக் வில்வித்தை குழுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி உலகின் முதல்நிலை அணியான தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.
அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, இன்று நடந்த போட்டியில் கஜகஸ்தான் நாட்டு அணியை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது.
அதன் பிறகு நடந்த காலிறுதிப் போட்டியில் தென் கொரிய அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் தொடக்கம் முதலே தென் கொரிய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது.
டேபிள் டென்னிஸ்: சுதிர்தா முகர்ஜி தோல்வி
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி தோல்வியடைந்தார். 23 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தப் போட்டியில் போர்சுகல் நாட்டின் ஃபூ 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றுப் போட்டியில் சிறப்பாக ஆடிய சுதிர்தா இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தடுமாறினார்.
டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சரத் கமல் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சரத் கமல் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாம் சுற்றில், போர்ச்சுக்கல் வீரர் தியாகோ அப்போலினியாவை 4-2 என்ற கணக்கில் சரத் கமல் வீழ்த்தினார்.
இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தோல்வி
டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி,தோல்வியைச் சந்தித்துள்ளார். இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றில், இந்தியாவைச் சேர்ந்த பவானி தேவி 15-3 என்ற புள்ளிகள் கணக்கில் துனிசிய வீராங்கனை நாடியா பென் அஸிஸியை வீழ்த்தினார்.
ஆனால் இரண்டாம் சுற்றில்,பிரான்ஸைச் சேர்ந்த ப்ரூனெட்டிடம், 7-15 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்
பட மூலாதாரம், FABRICE COFFRINI/AFP via Getty Images
வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!
இன்றைய நேரலையைப் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, ஒலிம்பிக் உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொடர்ந்து நேரலையாக வழங்குகிறோம்.
நேரலையைத் தொகுத்து வழங்குவது செய்தியாளர் நந்தகுமார்