அஸ்ஸாம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற முடியாத தமிழர்கள்
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
அஸ்ஸாமில் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பதிப்பு கடந்த திங்கள்கிழமை வெளியானது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்ஸாமில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் வங்கதேசக் குடியேறிகளை, சட்டபூர்வமான இந்தியக் குடிமக்களில் இருந்து பிரித்தறிவதற்காக இந்த பதிவேடு உருவாக்கப்படுகிறது.
எனவே, அஸ்ஸாமில் உள்ள இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மொத்தம் 3.29 கோடி பேர் இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பித்திருந்தனர். ஆனால், திங்கள்கிழமை வெளியான வரைவுப் பதிவேட்டில் 2.89 கோடி பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மீதம், சுமார் 40 லட்சம் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் இந்தப் பதிவேட்டில் இடம் பெறவில்லை.
இந்தப் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பிப்பவர்கள் 1971-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்தியாவில் குடியிருப்பதற்கான ஆவணங்களை அல்லது அதற்கு முன்பிருந்தே இங்கே குடியிருப்பவர்களின் வாரிசு என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
வங்கதேசக் குடியேறிகளைக் கண்டறிந்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான மத்திய அரசின் முயற்சியே இது என்று மனித உரிமையாளர்கள் ஒரு புறம் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், மத்திய அரசோ, இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்று குறிப்பிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், வங்கதேசக் குடியேறிகளை அடையாளம் காண்பதற்காக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்காணா, போன்ற இந்திய மாநிலங்களைப் பூர்வீகமாக கொண்ட அஸ்ஸாம்வாசிகள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் வழி தெரியாது சிக்கிக்கொண்டுள்ளனர்.
அவர்களில் பலரது பெயர்கள் திங்கள்கிழமை வெளியான வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறவில்லை.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார், குவஹாத்தி தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாண்டித்துரை.
ஆந்திர மாநில துப்புரவுத் தொழிலாளர்கள்
"தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் 1986ல் இருந்து அசாமில் இருக்கிறேன். 1994ல் இருந்து என் குடும்பத்தினரும் இங்கே வந்துவிட்டனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற விண்ணப்பத்தில் ஏராளமான விவரம் கேட்டிருந்தனர். எனக்கு ஆவணங்கள் உள்ளன. என் மனைவிக்கு ஆவணங்கள் இல்லை. ஆனாலும், விண்ணப்பத்தை ஏற்கமாட்டார்கள் என்று கருதி நானும் விண்ணப்பிக்கவில்லை. என் மனைவியும் விண்ணப்பிக்கவில்லை.
இங்குள்ள பல தமிழ் அதிகாரிகளும் விண்ணப்பிக்கவில்லை. குவஹாத்தி மாநகராட்சி துப்புரவு ஊழியர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, தெலங்காணா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இப்படி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் பலருக்கு தங்கள் சொந்த ஊரில் சொத்துகளோ, ஆவணங்களோ இல்லாமல் இருக்கிறது. அவர்கள் எப்படி தங்கள் குடியுரிமையை நிரூபிப்பது என்று தெரியவில்லை," என்றார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்
குவஹாத்தி தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளர் ஆர்.என்.பிரசாத் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, தற்போது வந்திருப்பது வரைவுப் பட்டியல்தான் என்றும், கூடுதல் பட்டியல் வெளியாகும் வரை இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்து பார்க்க விரும்புவதாகவும் கூறிய அவர், பிற மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாத பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டினார்.
குரல் எழுப்பிய எம்.பி.
தமிழ்நாட்டில் இருந்து அஸ்ஸாம் சென்ற ஓர் ஆணின் பெயர் குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும்போது, தமிழ்நாட்டில் இருந்து வந்த அவரது மனைவி பெயர் இப்பதிவேட்டில் இடம் பெறாமல் போயிருப்பது குறித்து அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் சில தினங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
சொந்த நாட்டில் அகதிகளாய்...
பட்டியலில் இடம் பெற முடியாமல் போவதால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பாண்டிதுரையிடம் கேட்டபோது, "பிரச்சனை என்று இப்போது ஏதுமில்லை. ஆனால், வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியாமல் போகும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. எதிர்காலத்தில் குடிமக்களுக்கே உரிய நல உதவிகளைப் பெற முடியாமல் போகும். எல்லாவற்றுக்கும் மேல், சொந்த நாட்டில் அகதிகளைப் போல இருக்க வேண்டியிருக்கும். இதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என்றார்.
சொந்த மாநிலத்தில் ஆவணங்கள் இல்லாதவர்கள் நிலையைப் பற்றியும் பலர் பேசுகின்றனர்.

"பூர்வீக மாநிலத்தில் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் எல்லோருக்கும் இருப்பதில்லை. ஓரளவு படிப்பறிவு உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் நிலையே இது என்றால், பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவணங்களை எப்படி ஏற்பாடு செய்வார்கள்?
உண்மையில் வெளிநாட்டில் இருந்து வந்த பலர் தேவையான ஆவணங்களை தயார் செய்துவிடுகிறார்கள். இந்திய மாநிலங்களில் இருந்து வந்த பல அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பண நீக்க நடவடிக்கையின்போது சாமானிய மக்கள் ஏடிஎம் வாசலில் நின்றபோது கருப்புப் பணம் வைத்திருந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்ததே அது போலத்தான் இருக்கிறது இதுவும். விண்ணப்பித்தவர்களில் 40 லட்சம் பேர் பட்டியலில் இடம் பெறவில்லை. விண்ணப்பிக்காதவர்கள் பலர்" என்று கூறினார் பாண்டிதுரை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













