3 மாதத்தில் 64 கலவரங்கள்: இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தீயில் பீகார் - BBC EXCLUSIVE

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

பட மூலாதாரம், SAJJAD HUSSAIN/AFP

    • எழுதியவர், பங்கஜ் பிரியதர்ஷி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின்போது, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமியன்று, துர்கை சிலை பீகாரின் சீதாமடி நகரத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதி பதற்றமான பகுதி என அடையாளம் காணப்பட்டிருந்ததால், அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை.

சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது கல் எறியப்பட்டதால், மாற்றுப் பாதையில் ஊர்வலம் சென்றது. ஆனால், இந்தத் தகவல் பரவியதும், மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி அந்த பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினரும் கல்லெறிய, போலீஸ் நிலைமையை சமாளிக்கத் திணறினாலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. விரைவிலேயே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இதனிடையில் 80 வயது முதியவர் ஜைனுல் அன்சாரி என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையை மறைப்பதற்காக சடலத்தை எரிக்கும் முயற்சியும் நடந்தது.

பாதி எரிந்த நிலையில் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக "இதுவரை 38 பேரை கைது செய்திருக்கிறோம், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன" என்று சீதாமடியின் காவல்துறை உயரதிகாரி விகாஸ் வர்மன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

பட மூலாதாரம், HAMENDRA KUMAR SINGH/BBC

இது இன்றைய பீகார் மாநிலத்தின் நிலை என்றால், 1989இல் பாகல்பூரில் நடந்த இனக்கலவரத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு, ஆங்காங்கே சிறிய அளவிலான மோதல்களைத் தவிர பெரிய அளவிலான இனவாத வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை.

மாற்றத்திற்கான காரணம் என்ன?

நிதிஷ் குமார் பா.ஜ.கவுடன் இணைந்து 2017ஆம் ஆண்டு கூட்டணி அரசு அமைத்த பிறகு மாநிலத்தில் நிலைமைகள் மாறிவிட்டன. இந்த ஆண்டு ராமநவமி கொண்டாட்டங்களின்போது, ஒளரங்காபாத், நவாதா, பாகல்புர், முங்கேர், சிவான், ரோஸ்டா மற்றும் கயா போன்ற பல நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

Presentational grey line
Presentational grey line

ஒளரங்காபாதில் நவாடிஹ் என்ற பகுதியில் வசிக்கும் நயீம் முகம்மது என்பவரின் வீட்டிற்கு சென்றோம். மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த வீட்டில் படுக்கையில் அமர்ந்திருக்கும் நயீம் மெதுவான குரலில் பேசினார். பேசும்போதே உடைந்து போய் அழுத அவர், உணவுக்காகவும், சிகிச்சைக்காகவும் பிச்சை எடுக்க வேண்டியிருக்கிறது என்று சொல்லி வருந்தினார். இந்த ஆண்டு ராமநவமி கொண்டாட்டங்களின்போது நடந்த வன்முறைகளைப் போன்று இதுவரை தாங்கள் பார்த்ததில்லை என்றும் அவர் சொன்னார்.

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு மக்களை தாக்கிய கூட்டம் வெறியுடனும், கோபத்துடனும், கைகளில் வாளுடனும் இருந்தது. தனியார் ஆம்புலன்ஸ் வண்டி ஓட்டும் நயீம் முகமது, மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது, அவரை துப்பாக்கி குண்டு தாக்கியது.

சாதாரணமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த நயீம், இன்று நடக்க முடியாமல் முடங்கிவிட்டார். "நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் துப்பாக்கியால் சுட்டார்கள்? என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்? எஞ்சிய வாழ்க்கையை எப்படி கழிப்பேன்?" என்று அவர் வேதனையுடன் அடுக்கடுக்காய் கேள்வி கேட்டு அவற்றுக்கு பதில் தேடுகிறார்.

மார்ச் மாதம் ராமநவமி கொண்டாட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை.

முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு, அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களுடன் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன, அதில் கற்கள் வீசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இவ்வாறு பல மாவட்டங்களில் வகுப்புவாத வன்முறைகள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது இதுவரை பீகார் கண்டிராத ஒன்று.

பல்வேறு நகரங்களில் ஒரே மாதிரியான வன்முறை

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

பட மூலாதாரம், Getty Images

ஔரங்காபாத்தின் இஸ்லாமிய இடுகாடுகளில், ரோஸ்டாவின் மூன்று மசூதிகளில் பஜ்ரங் தள் அமைப்பின் கொடிகள் ஏற்றப்பட்டன. மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் முழக்கங்கள் எழுப்பட்டதுடன், கைகளில் வாள் ஏந்திய பலர் சாலைகளில் சென்றதை பார்க்க முடிந்தது. முஸ்லிம்களின் கடைகள் குறி வைத்து தாக்கப்பட்டன.

நவாதாவில் சிலை உடைத்தது, சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது தொடர்பாக பிரச்சனை வெடித்தது. முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஊர்வலம் சென்றபோது, துர்கை சிலையின் மீது ஒரு வீட்டில் இருந்து செருப்பு வீசப்பட்டதாக கூறி கல் வீச்சு மற்றும் மோதல் சம்பவங்கள் அரங்கேறின.

பாகல்பூரில் இந்துக்களின் புத்தாண்டை முன்னிட்டு இதுவரை எவ்விதமான ஊர்வலங்களும் நடத்தப்பட்டதில்லை. இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட இந்துக்களின் புத்தாண்டு ஊர்வலத்தின்போது, வெறுப்பூட்டும் முழக்கங்களை எழுப்பியவாறு, கைகளில் வாளேந்தி அணிவகுத்து சென்றார்கள். கற்கள் வீசப்பட்டு, கடைகளும் சூறையாடப்பட்டு, தீ வைக்கபப்ட்டன.

Presentational grey line
Presentational grey line

எல்லா இடங்களிலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்றுபோல் இருப்பதோடு, பிரச்சனை தொடங்கியதில் இருந்து முடியும் வரை நடைபெற்ற தொடர் நிகழ்வுகளும் ஒன்றையொன்று ஒத்திருப்பதையும் காண முடிந்தது.

இந்த ஊர்வலங்களை ஏற்பாடு செய்திருந்தது பல்வேறு அமைப்புகள் என்றாலும், அவற்றின் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையவையே.

ஒளரங்கபாத் மற்றும் ரோஸ்டாவில் நடைபெற்ற ஊர்வலங்களில் பா.ஜ.க மற்றும் பஜ்ரங் தள் தலைவர்கள் நேரடியாகவே பங்கேற்றனர். இந்து இளைஞர் அமைப்பின் நிர்வாகி அனில் சிங் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த பிறகு, மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நவாதா நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கிரிரஜ் சிங் செளகான் மீதும் இந்த சம்பவங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும், அவற்றை அவர் மறுக்கிறார்.

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

பட மூலாதாரம், Getty Images

ஆனால் வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கைது செய்யப்பட்டதும், அவர்களை பார்ப்பதற்காக கிரிராஜ் சிங் சிறைக்கு சென்றதும் விவாதப் பொருளானது.

இந்து புத்தாண்டை முன்னிட்டு மத்திய அமைச்சர் அஸ்வினி செளபேவின் மகன் அர்ஜித் செளபே, பாகல்பூரில் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த ஊர்வலம் அனுமதி பெறாமல் முஸ்லிம் பகுதிகள் வழியாக சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது, அர்ஜித் செளபே சிறைக்கும் சென்றார்.

பாகல்பூரில் வசிக்கும் சமூக சேவகர் உதய் இது பற்றிக் கூறும்போது, "எல்லா இடங்களில் நடைபெற்ற சம்பவங்களும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கின்றன. வாள்களை கையில் ஏந்தி செல்வது, வெறுப்புணர்வைத் தூண்டும் முழக்கங்களை எழுப்புவது, மதப் பாடல்களை ஒலிக்கவிடுவது, வேண்டுமென்றே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் அனுமதி இன்றி ஊர்வலத்தை கொண்டு செல்வது என பல உதாரணங்களைச் சொல்லலாம். ஊர்வலங்களில் ஒலிபெருக்கியில் போடப்படும் பாடல்கள் எல்லாம் திட்டமிட்டு முன்னரே உருவாக்கி, ஸ்டுடியோக்களில் பதிவு செய்யபப்ட்டவை. 'தொப்பி அணிந்தவர்களும் தலை வணங்கி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வார்கள்' என்பது போன்ற பொருள் கொண்ட பாடல்களை முஸ்லிம் பகுதிகளில் ஒலிக்க விடுவதற்கான காரணம் என்ன?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

"ராமநவமி சம்பவங்களின்போது பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டாலும், இதற்கான தயாரிப்புகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது" என்று உதய் கூறுகிறார்.

பீகாரில் ராமநவமியின்போது நடைபெற்ற வன்முறைகளுக்குப் பிறகு, சுயாதீனமான உண்மை கண்டறியும் குழு ஒன்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை மதிப்பிட்டது. பீகார் முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் ஒன்றுபோல உள்ளதாக அந்தக் குழு கூறுகிறது. வாள்கள் ஆன்லைனில் வாங்கப்பட்டதையும் அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில உள்துறை செயலர் கூறுகிறார்
படக்குறிப்பு, மாநிலத்தில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில உள்துறை செயலர் கூறுகிறார்

பீகார் மாநில உள்துறை செயலர் ஆமிர் சுப்ஹானியிடம் பேசினோம். "வாள்கள் ஆன்லைனில் வாங்கப்பட்டதா என்பது பற்றிய தகவல் இல்லை. சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆடல் பாடல்களோ, பிரசார பாடல்களோ ஒலிக்கக்கூடாது என்று கூறியிருந்தோம். நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிகாரில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற கேள்விக்கு, அது தொடர்பான தரவுகள் தன்னிடம் இல்லை என்றே அவர் பதிலளிக்கிறார். வேறு பல அதிகாரிகளிடமும் இந்த சம்பவங்கள் பற்றி பேசினால், விரிவாக எதையும் பேசாமல் நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது என்பதை மட்டுமே அனைவரும் ஒன்றுபோல் சொல்கின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரையில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து நிதீஷ்குமார் ஆட்சியமைத்தபிறகு, மாநிலத்தில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2012இல் 50 வன்முறை சம்பவங்கள் நடந்தன. 2017-ல் 270 இந்து-முஸ்லிம் மோதல்கள் நடந்தன என்கிறது அந்த கட்டுரை.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டுமே 64 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

குழப்பம், பதற்றம், பிரித்தாளும் சூழ்ச்சி

வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

2019 பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் ராமர் ஆலயம் என்ற முழக்கத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பல தரப்பினரும் அஞ்சும் வேளையில் அந்த அச்சத்தை அதிகரிப்பதுபோல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அறிக்கை வெளியிடுகிறார்.

"72 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு தேங்கிக் கிடக்கிறது. தசாப்தங்கள் பல கடந்தாலும் நீதிமன்றத்தால் எந்தவொரு முடிவுக்கும் வர முடியவில்லை. இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதால், அவர்களின் பொறுமையை சீண்டிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லை மீறினால் பொறுமையும் வெடித்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்" என்று அவர் சொல்கிறார்.

அலகாபாத் நகரின் பெயர் மாற்றப்பட்டதை அடுத்து, பிகாரில் உள்ள முகலாயப் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இதுமட்டுமல்ல, பாஜக தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகள், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது.

Presentational grey line
Presentational grey line

இந்துக்கள் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதாக கூறும் அவர்கள், இந்துக்களின் சீற்றத்தை சீண்டி பெரிதாக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் கைலாஷ் விஷ்வகர்மா மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஜிதேந்த்ர பிரதாப் ஜீதூவை சிறையில் சந்தித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்கு உள்ளானார். இருந்தபோதிலும், சிறையில் இருந்த இருவரும் பிணையில் வெளிவந்தார்கள்.

கிரிராஜ் சிங் தங்களை சந்திக்க சிறைக்கு வந்ததில் எந்தவித தவறும் இல்லை என்று கைலாஷ் விஷ்வகர்மா கூறுகிறார். ஆனால் மக்களின் பிரதிநிதி, பாதிக்கப்பட்ட முஸ்லிகளை ஏன் சென்று பார்க்கவில்லை? இந்தக் கேள்விக்கு அவரின் பதில் இதுதான். "முஸ்லிம்கள் தவறு செய்தவர்கள். தவறு செய்தவர்களை சென்று பார்ப்பதுதான் தவறு".

வன்முறை சம்பவங்களை தூண்டிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட ஜிதேந்திர ஜீதூ.
படக்குறிப்பு, வன்முறை சம்பவங்களை தூண்டிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட ஜிதேந்திர ஜீதூ.

தங்கள் அமைப்பில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை என்று அவர் தெளிவாக சொல்கிறார். "முஸ்லிம்கள் எண்ணப்போக்கும், எங்களுடைய சிந்தனையும் மாறுபட்டது என்பதால் அவர்களை அமைப்பில் சேர்த்துக் கொள்வதில்லை. நாங்கள் பசுவை பூஜிப்போம், அவர்கள் கொல்வார்கள்" என்கிறார் அவர்.

"எந்தவொரு மதமும் வன்முறையை ஆதரிப்பதில்லை. ஆனால் நாங்களோ, எங்கள் மதமோ அழுத்தப்படும்போது, அதை காப்பாற்ற எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது" என்கிறார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாவட்டத் தலைவராக இருக்கும் அர்தேந்து பப்பன்.

பட்னாவில் மாநில அமைச்சர் நந்தகுமாரை சந்தித்துப் பேசினோம். ஜனநாயகத்தைப் பற்றி கவலையுடன் பேசிய அவர், "இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால்தான் இங்கு ஜனநாயகம் இருக்கும். இங்கு வசிக்கும் முஸ்லிம்கள் உட்பட அனைவரும் இந்துக்களே. இந்தியாவின் அடையாளம் என்பது, ராமர், கங்கை, பகவத்கீதை போன்றவற்றுடன் தொடர்புடையது" என்றார்.

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

பட மூலாதாரம், Getty Images

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பீகார் ஒரு கோட்டை. இங்கு பாஜக தனது பலத்தில் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை.

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இந்து, முஸ்லிம்களின் சுடுகாடு - இடுகாடு பற்றி கேள்விகளை எழுப்பி, வாக்குகளை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

பட்னாவில் பிடிஐ முகமையின் தலைவர் நசிகேதா நாராயணிடம் பேசினோம். "பிகாரில் பாஜக இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிற மாநிலங்களைப் போலவே இங்கும் தனது கட்சியின் ஆட்சியோ அல்லது பெரிய கட்சியாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறது" என்று அவர் சொல்கிறார்.

1989-ல் பாகல்பூரிலும், தற்போது வன்முறை நடந்த பகுதிகளிலும் பணியாற்றியிருக்கும் சமூக சேவகர் உதய் இவ்வாறு கூறுகிறார்: "இதுபோன்ற சூழ்நிலைகளில் பாஜகவின் உயர்நிலைத் தலைவர்களும் திட்டமிடுகின்றனர். பிரச்சனையை எப்படி உருவாக்குவது, அதற்கு யாரை பயன்படுத்துவது, எப்படி நிறைவேற்றுவது என்பதும், பிரச்சனையின் கண்ணி, பசுவா, ராமர் ஆலயமா என்பதும் அங்கே முடிவு செய்யப்படுகிறது. ஒரு சம்பவம் பசுவை பற்றியதாக இருந்தால், அடுத்தது ராமர் ஆலயம் என்பதைப் பற்றி இருக்கும். ஒரு சமயம் ராம நவமி என்ற பெயரில் விஷயம் பூதாகரமாக்கப்பட்டால், இந்துக்களின் புத்தாண்டின்போது மற்றொரு விஷயம் கையில் எடுக்கப்படும். வன்முறை நடைபெற வேண்டிய நாளும், சம்பவமும், இடமும் கவனமாக திட்டமிடப்படுகிறது."

வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியாற்றும் சமூக சேவகர் உதய்
படக்குறிப்பு, வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களில் பணியாற்றும் சமூக சேவகர் உதய்

மத்திய அமைச்சர் அஸ்வினி செளபேவின் மகன் அர்ஜித் செளபேவிடம் பிபிசி பேசியது. இவர் பாகல்பூர் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர். "இந்தியத் தாய் வாழ்க என்ற முழக்கத்தை இந்திய நாட்டில் முழங்க யாருடைய அனுமதி வேண்டும்? நம் நாட்டில் வந்தேமாதரம் என்று முழங்கக்கூடாதா? ஜெய்ராம், ஜெய்கிருஷ்ணா என்பதை இந்தியாவில் சொல்லாமல் வேறு எங்கு சென்று சொல்வது? இந்தியாவின் கெளரவத்தை உலக அளவில் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் மற்றும் பாஜக தலைவர்களின் பொதுவான கருத்துப்படி, இந்துத்துவா என்பதன் பொருள், இந்து தேசத்தை உருவாக்குவது; இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் திருந்தவேண்டும் என்று அறிவுரை வழங்குவதே.

Presentational grey line
Presentational grey line

அர்ஜித் மேலும் கூறுகிறார், "இந்துத்துவா என்பது வாழ்க்கைமுறை. இந்து என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு அரசியல் சாயம் பூசுவது துரதிருஷ்டவசமானது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்துக்கள் தான். இந்தியத் தாயை வாழ்த்தும் பாடல்களைப் பாடுவது தவறு என்று எந்த முஸ்லிமால் கூறமுடியும்? வந்தேமாதரம், தேசியப் பாடல் என்பதோடு, அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது."

பாகல்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமை நிர்வாகியாக இருந்த சுபோத் விஷ்வர்கர்மா இவ்வாறு கூறுகிறார்: "இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை. இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருமே முன்னாள் இந்துக்கள். அவர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கவேண்டும். , 18 கோடி முஸ்லிம்களை கடலில் தள்ளிவிட முடியாது."

அஜீத் ஷர்மா, ஷாஸ்வத் செளபேவை சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்
படக்குறிப்பு, அஜீத் ஷர்மா, ஷாஸ்வத் செளபேவை சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்

பாகல்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., அஜித் ஷர்மா, சட்டப்பேரவை தேர்தல்களின்போது, செய்திகளில் முக்கிய இடம் பெற்றார். அவர் அர்ஜித் ஷாஸ்வத் செளபேவை தோற்கடித்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் அஜித் ஷர்மா, "பாரதிய ஜனதாவின் வாக்குகள் குறைந்து வருகின்றன, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிந்ததும், இரு மதத்தினருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறது அந்தக் கட்சி," என்றார்.

எதிர்வரும் நாட்களில் பீகாரில் இனவாத பிளவுகள் அதிகரிக்குமோ என்று சாதாரண மனிதர்களின் மனதில் அச்சமும் பீதியும் நிலவுகிறது.

நவாதாவில் நவராத்திரி உற்சவங்களின்போது, ஆலயங்களில் கூட்டம் அலைமோதியது. அந்த சமயத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இந்து ஆலயம் ஒன்றின் அருகில் வசிக்கிறார் ஃபக்ருதீன் அலி அகமது.

தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரிராஜ் சிங் மீதான கோபத்தை அவர் வெளிப்படுத்துகிறார். "அனைத்து மக்களின் பிரதிநிதியான நீங்கள், முஸ்லிம்களை விலக்கி வைக்கக்கூடாது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டியது உங்கள் கடமை. அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் அச்சப்படும் சூழ்நிலையை ஏற்படுத்துவது, வன்முறைகளை நிகழ்த்துவது என செயல்பட்டு, இந்து முஸ்லிம் சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்துவது சரியல்ல" என்கிறார் ஃபக்ருதீன் அலி அகமது.

ஒளரங்கபாதில் சந்தித்த முஸ்லிம் இளைஞர் காலித் சீற்றமாக பேசுகிறார். "இங்கு வசிப்பவர்கள் தவறு செய்யவில்லை. வெளியில் இருந்து வரும் ஆட்கள்தான் வன்முறைகளை செய்கின்றனர். இந்து முஸ்லிம்களிடையே மோதல் வரவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் செயல்படுவது வாக்கு வேட்டைக்காகவே" என்கிறார் காலித்.

பாகல்பூரைச் சேர்ந்த ஜோஹிந்தர் யாதவ், முஸ்லிம்களின் வயல்களில் பணிபுரிபவர். இதுபோன்ற மோதல்களும், வன்முறைகளும், தவறே செய்யாத சாதாரண பொதுமக்களைப் பாதிக்கிறது, எங்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப்போடுகிறது என்று வருந்துகிறார்.

நிதிஷ் குமாரை நோக்கி கேள்விகள்

பாஜகவின் தலைவர் சுஷில் குமார் மோதியுடன் முதலமைச்சர் நிதீஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜகவின் தலைவர் சுஷில் குமார் மோதியுடன் முதலமைச்சர் நிதீஷ் குமார்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமார் ஏன் இணைந்தார் என்பது பற்றியும் சர்ச்சைகள் தொடர்கின்றன. அதோடு, மாநிலத்தின் பல மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படும்போதும், முதலமைச்சர் ஏன் மெளனம் காக்கிறார் என்றும் கேள்விகள் எழுகின்றன.

நிதீஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் தேவை மற்றும் பிகாரில் அதிகரித்துவரும் பாஜக-வின் முக்கியத்துவத்துவம், இதற்கிடையில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் மாநிலத்தை எந்த நிலைமைக்கு கொண்டு செல்லும்?

பாஜக தலைவர் அமித் ஷாவுடன் நிதீஷ் குமார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜக தலைவர் அமித் ஷாவுடன் நிதீஷ் குமார்

தனது மதச்சார்பின்மை குறித்து நீட்டி முழக்குகிறார் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார். மாநிலத்தில், முஸ்லிம்களுக்கான பல பல நலத்திட்டங்களை அறிவித்தார். ஆனால் பாஜக தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிடும் வெறுப்புணர்வு நிறைந்த அறிக்கைகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றிய அவரது மெளனம் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

"நிதீஷ் குமார் முதல் முறையாக பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தபோது, நரேந்திர மோதி மற்றும் அமித் ஷா ஆகியோரின் வலிமையான தலைமை பாஜகவில் உருவாகிக்கொண்டிருந்தது. தற்போது, பா.ஜ.க. நிதீஷ் குமார் தலைமையில் கூட்டணியாக செயல்படுவதை விரும்பாது. மோதியும், அமித் ஷாவும் இந்துத்துவ செயல்திட்டத்தை பீகாரில் மேலும் வேகமாக முன்னெடுக்க முயற்சிப்பார்கள்" என்று சொல்கிறார் பாட்னாவில் பணியாற்றும் பி.டி.ஐ செய்தி முகமையின் தலைவர் நசிகேதா நாராயண்.

ஆனால் தனது மனசார்பின்மை என்ற தோற்றத்திற்கு பங்கம் ஏற்படுவதை நிதீஷ் குமார் விரும்பமாட்டார். அதோடு, அரசியல் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, பாஜக உறவை கைவிடும் நிலையிலும் அவர் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

எனவே, இந்த நிலையில் நிதீஷ் குமாருக்கு இருக்கும் ஒரே தெரிவு, பாஜகவுடனான கூட்டணியை தொடர வேண்டும் என்பதே. அதோடு, நிர்வாகம் மற்றும் அதிகாரத்தை கொண்டு வன்முறை சம்பவங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துவது ஒன்றுதான் நிதீஷ் குமாரால் செய்ய முடியும் " என்று நசிகேதா நாராயண் கூறுகிறார்.

நிர்வாகத்தின் மூலம் வன்முறையை கட்டுப்படுத்தும் முயற்சி

வகுப்புவாத வன்முறைகளில் போலிசாரின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வகுப்புவாத வன்முறைகளில் போலிசாரின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின.

பிகாரில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளில் பாஜக தலைவர்களோடு பெருமளவிலான இந்து அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், போலீஸ் மற்றும் நிர்வாகத்தினர் மீது இந்து அமைப்புகளுக்கு கோபம் இருக்கிறது.

நிதீஷ் குமார் வன்முறைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாரா என்ற கேள்விக்கு ஆம் என்றும் இல்லை என்றும் கலவையான பதில்கள் கிடைக்கின்றன.

நசிகேதா நாராயண் இதுபற்றி என்ன சொல்கிறார்? "பிகாரில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்ற இடங்களில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கவில்லை. அந்த சமயத்தில் நிர்வாகத்தின் கைகள் கட்டப்படவில்லை. அவருடைய இந்த அரசியல் சாணக்கியத்தனம் எதுவரை எடுபடும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" என்கிறார் நாராயண்.

இதனால்தான் நிதீஷ்குமார் இந்த சம்பவங்கள் பற்றி ஒருபோதும் வெளிப்படையாகப் பேசவில்லையோ என்னவோ? வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சென்று சந்தித்தபோது, நிதீஷ்குமார் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அஸ்வினி செளபேயின் மகன் போலீஸ் மற்றும் நிர்வாகத்தை சீண்டியபோது, நிதீஷ் குமாரின் குரல் மட்டுப்பட்டது.

பிடிஐ முகமையின் தலைவர் நசிகேதா நாராயண்
படக்குறிப்பு, பிடிஐ செய்தி முகமையின் நசிகேதா நாராயண்

ஆனால் வகுப்புவாத வன்முறை விஷயத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்று நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறுகிறது. கட்சியின் செய்தித்தொடர்பாளர் இதுபற்றிப் பேசியபோது "வகுப்புவாத மோதல்களை தூண்டும் முயற்சிகள் நடப்பதை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். எனவே இந்த முறை தசரா கொண்டாட்டங்களின்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தோம். நிலைமையை முதலமைச்சரே நேரடியாக கண்காணித்தார். நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை எழுப்புவதற்கு காரணம் பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருப்பதுதான். ஆனால் இந்து அமைப்புகளுக்கு எதிராக நாங்கள் செயல்படுவதாக அவையும் கூறுகின்றன. மாநிலத்திற்கு நன்மை அளிக்கும் செயல்களை மட்டுமே நிதீஷ் குமார் செய்கிறார்."

Presentational grey line
Presentational grey line

ஆனால் ரோஸ்டா மசூதியின் வெளியில் நாங்கள் சந்தித்த இர்ஷாத் ஆலம், நிதீஷ் குமாரின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்திருக்கிறார். "நிர்வாகம் சரியாக செயல்பட்டிருந்தால், வன்முறைச் சம்பவங்களே நடைபெற்றிருக்காது. நிதீஷ் குமார் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். ஆனால், அது அவர்களின் வாக்குகளை பெறுவதற்காகத்தான். மாநிலத்தில் 17-18 இடங்களில் வன்முறைகள் நடைபெற்றபோது முதலமைச்சர் ஏன் ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை? நடைபெற்றவை வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லையே?" என்று அவர் சீற்றத்தை வெளிப்படுத்துகிறார்.

வன்முறைகளால் அதிகரிக்கும் மன அழுத்தம்

நவாதாவில் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் கைலாஷ் விஷ்வகர்மா
படக்குறிப்பு, நவாதாவில் விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் கைலாஷ் விஷ்வகர்மா

பீகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்தாவிடம் பேசினோம். "மதமும் நம்பிக்கையும் தனிப்பட்ட விஷயங்கள், இவற்றை கட்சி அடிப்படையில் பார்க்கக்கூடாது. இந்த சம்பவங்களில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் யாரின் பங்கும் இல்லை. விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது, உண்மையும் பொய்யும் அங்கே தெரிந்துவிடும்" என்கிறார் அவர்.

மாறிவரும் சூழ்நிலைகளில், பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்கும் நிலையில், வெளிப்படையாக அவர்கள் எதுவும் செய்யாவிட்டாலும், அந்த வேலைகளை பஜ்ரங் தள், வி.எச்.பி போன்ற இந்து அமைப்புகளை கொண்டு நிறைவேற்றும் பாஜக என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் தலைவர் நித்யானந்த் ராய்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, பாஜகவின் தலைவர் நித்யானந்த் ராய்

தற்போதைய நிலையில் இந்தியாவில் வகுப்புவாத அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் அவர்கள் நின்றுவிடுவார்கள், அவற்றை பெரிய அளவிற்கு எடுத்துச் செல்லமாட்டார்கள். ஏனெனில் இப்போது அதற்கான அவசியம் இல்லை என்பதோடு, ஆட்சியில் அங்கம் வகிப்பதால் பெரிய அளவிலான வன்முறைகள் நடைபெற்றால் அது பரவலான கண்டனங்களையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தும்.

சமூக சேவகர் உதயும் இந்த கருத்தையே வழிமொழிகிறார். "இந்து அமைப்புகள் பெரிய அளவிலான வன்முறையை விரும்பவில்லை. சிறிய அளவிலான வன்முறைகளை நடத்தி பதற்றத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கும். இது மக்களிடையே அதிருப்தியையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தும்."

வன்முறைகளில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் இணைத்துக் கொள்கிறார்கள் என்பது மற்றொரு அதிர்ச்சியூட்டும் உண்மை. இது, பாகல்பூரில் கண்டறியப்பட்டது. இங்கு அவர்களில் பலர் கைது செய்யப்பட்டனர். உண்மையில், ஆர்.எஸ்.எஸ், தலித்துகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஒரு பெரிய பிரசாரத்தை நடத்துகிறது.

பாகல்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுபோத் விஷ்வர்கர்மா இப்படி சொல்கிறார்: "தலித்துகள் மத்தியில் கலாசாரத்தை எடுத்துச் சொல்கிறோம். பிராமணர்களை எதிர்க்கவேண்டாம், நீங்களும் பிராமணர்களாக மாறுங்கள் என்று சொல்கிறோம். பிகாரில் கலவரங்கள் நடக்கும்போதெல்லாம் பாதிக்கப்படுவது பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற இந்துக்கள்தான்."

இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தணலில் பீகார்: BBC EXCLUSIVE

பட மூலாதாரம், Getty Images

சமூக சேவகர் உதய் இதுபற்றி என்ன சொல்கிறார்? "தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகத்தில் தலைமை ஏற்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, வன்முறைகளை நடத்தும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. தலைமை இடத்துக்கு தாங்கள் நகர்த்தப்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். பாகல்பூரில் 1989லும் சரி, இந்த ஆண்டு ராமநவமி வன்முறைகளிலும் சரி இந்த சூத்திரமே பயன்படுத்தப்பட்டது" என்கிறார் அவர்.

பிகாரில் சில மாத இடைவெளிகளில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை சம்பவங்கள், இனிமேல் எந்தவொரு பண்டிகை வரும்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். மதவாத தீயை மூட்டி அதில் குளிர்காய நடைபெறும் முயற்சிகள் வெற்றி பெறாமல் இருந்தால் ஜனநாயகம் என்ற ஆகச் சிறந்த மாண்பு காப்பாற்றப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :