செனட்டில் பெற்றது வரலாறு காணாத வெற்றி- டிரம்ப் பெருமிதம்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப்

அதிபர் ஒருவரின் கட்சி முதல் இடைக்காலத் தேர்தலில் செனட்டில் இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது 1962ல் கென்னடியின் காலத்துக்குப் பிறகு இதுவே முதல் முறை என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கும்போது தெரிவித்துள்ளார் டிரம்ப்.

வெள்ளை மாளிகையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்துவரும் டிரம்ப், எந்தெந்த வேட்பாளருக்கு தம்மால் பிரசாரம் செய்ய முடிந்தது, எவருக்கு செய்ய முடியவில்லை என்று கூறும்போது, சில வேட்பாளர்கள் தன்னிடம் இருந்து தள்ளி நின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

லவ்வை காட்டாத மியா லவ்

மியா லவ் என்ற வேட்பாளர் தோற்றதைப் பற்றி வேடிக்கையாக குறிப்பிட்ட டிரம்ப் மியா லவ் என்னிடம் (லவ்) அன்பு காட்டவில்லை. அவர் தோற்றார் என்று கூறினார் டிரம்ப்.

ஒபாமா தமது முதல் இடைக்காலத் தேர்தலில் ஆறு செனட் இடங்களை இழந்தது பற்றி குறிப்பிட்ட டிரம்ப், எதிர்த் தரப்புக்கு பணக்கார நன்கொடையாளர்கள், சிறப்பு ஆர்வங்கள், பகைமையோடு நடந்துகொண்ட ஊடகங்கள் இவற்றையெல்லாம் மீறி வெற்றி சாத்தியமானது என்று கூறினார்.

தாம் தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்த 11 வேட்பாளர்கலில் 9 பேர் வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், நமக்கு சுத்தமான நீர், அழகான, சுத்தமான காற்று வேண்டும். அதே நேரம், விதிகளை மதிக்காத பிற நாடுகளோடு ஒப்பிடும்போது பாதக நிலையில் அமெரிக்கா இருக்கக்கூடாது. வேலைவாய்ப்புகளை அமெரிக்கா இழக்கக்கூடாது. தொழிற்சாலைகளை பாதிக்கக்கூடாது. போட்டியிடும் திறனோடு அமெரிக்கா இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

மெக்சிகோ சுவர்

பத்திரிகையாளர்களிடம் இருந்து கேள்விகளை எதிர்கொண்ட டிரம்ப், மெக்சிகோ எல்லையில் தாம் கட்ட விரும்பும் சுவர் குறித்து தம்மோடு உரையாடும் ஜனநாயகக் கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அரைகுறையாக அல்லாமல் முழு சுவற்றையும் கட்டுவதற்கு நிதி தேவை என்றும் குறிப்பிட்டார் டிரம்ப்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: