பாலியல் வன்முறை செய்ய வந்தவரை கொலை செய்த பெண் விடுவிக்கப்பட்டாரா? உண்மை என்ன?

பட மூலாதாரம், markgoddard/Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற நபரை அடித்துக் கொன்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை காவல்துறை கண்காணிப்பாளர் ஐ.பி.சி. 100ன் கீழ் விடுதலை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல்கள் உண்மையா?
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வழுதிகை மேடு என்ற ஏரிக் கரையில் மீன் பண்ணையில் தங்கி பூங்காவனம் என்பவரும் அவருடைய 21 வயது மனைவியும் வேலை பார்த்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பாக, அந்தப் பெண் தன் வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்தபோது யாரென்று தெரியாத முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றார். இதையடுத்து அந்தப் பெண்ணும் அவரது கணவரும் அந்த நபரைத் தடுக்க முயன்றனர். இந்நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாயின.
இதையடுத்து மீஞ்சூர் காவல்துறையினர் அந்த நபரின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.
ஊடகங்கள் சொல்வது என்ன?
இதற்குப் பிறகு பூங்காவனம் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்தப் பெண் தற்காப்பிற்காகவே தாக்கியதாகச் சொன்னதால், அந்தப் பெண்ணை இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 100ன் கீழ் காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் விடுவித்துவிட்டதாகவும் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாரின் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இருந்தபோதும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடந்தது என்ன? போலீஸ் என்ன சொல்கிறது?
அந்த அறிக்கையின்படி, இறந்துபோன நபர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றபோது பூங்காவனமும் அவரது மனைவியும் அடித்துத் துரத்திவிட்டனர். அவர் ஓடும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அவரது உடலில் சில காயங்களும் இருந்துள்ளன.
இதே நபரை சில நாட்களுக்கு முன்பாக, மீஞ்சூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஒரு நாள் இரவு பார்த்தபோது அழைத்து விசாரித்துள்ளதாகவும் ஆனால், அந்த நபர் பேசிய மொழி புரியவில்லையென்றும் அப்போதும் அந்த நபர் உடலில் காயங்கள் இருந்ததாகவும் காவல்துறை கூறுகிறது.
பெண் அளித்த புகார்

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞருடன் வந்து காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்து பாலியல் பலாத்கார முயற்சி குறித்து புகார் அளித்தார். அந்தப் பெண் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல, இறந்த நபரின் மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 174 (இயற்கைக்கு மாறான மரணம்-த்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளுமே விசாரணையில்தான் உள்ளன என்றும், இந்த இரு வழக்குகளிலுமே யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவிக்கிறது.
ஐபிசி பிரிவு 100ன் கீழ் விடுவிக்கப்பட்டது உண்மையா?
இந்த வழக்குகள் தொடர்பாக அரசு வழக்கறிஞரின் அறிவுரை மற்றும் கருத்துருக்களைப் பெற்று, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக காவல்துறை தரப்பு கூறுகிறது.
ஆகவே, சம்பந்தப்பட்ட பெண் கைதுசெய்யப்பட்டு ஐ.பி.சி. 100ன் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுவது தவறான செய்தி என்கிறது காவல்துறை.
முந்தைய சம்பவங்கள்
ஆனால், பாலியல் ரீதியில் துன்புறுத்த முயன்ற நபரை தற்காப்பிற்காகத் தாக்கியதில் அந்த நபர் இறந்துபோனதும், சம்பந்தப்பட்ட பெண்களை விடுதலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக பல முறை நடந்திருக்கின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதத் துவக்கத்தில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லையில் வசித்துவந்த 19 வயது இளம் பெண்ணை அவருடைய பெரியம்மாவின் மகன் அஜீத் என்பவர் கத்தி முனையில் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்தப் பெண் அஜீத்தைக் கீழே தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த அஜீத்திடமிருந்த கத்தி சற்று தூரத்தில் போய் விழுந்தது. அதை எடுத்து அஜீத்தை அந்தப் பெண் தாக்கியதில், அவர் உயிரிழந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அந்தத் தருணத்தில் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன் ஐ.பி.சி. பிரிவு 100ன் கீழ் அந்தப் பெண்ணை விடுவித்தார்.
கிரிக்கெட் மட்டையால் கணவரைத் தாக்கி...
இதே போல், கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் கணவரைப் பிரிந்து வசித்துவந்த உஷா ராணி என்ற பெண், ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவரது கணவர் ஜோதிபாசு, தங்கள் மகளையே வன்புணர்வு செய்ய முயற்சித்ததைப் பார்த்தார் என்று கூறப்பட்டது.
கையில் கிடைத்த கிரிக்கெட் பேட்டை எடுத்து அந்தப் பெண் தனது கணவரைத் தாக்கியதில், அவர் உயிரிழந்தார். அதற்குப் பிறகு அவரே ஆம்புலன்ஸை அழைத்து கணவரின் உடலை மார்ச்சுவரிக்கு அனுப்பிவிட்டு, காவல்துறையில் சரணடைந்தார்.
இந்த விவகாரத்தை விசாரித்த அப்போதைய மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் உஷா ராணியை ஐ.பி.சி. 100ன் கீழ் விடுதலை செய்தார். ஆனால், இறந்துபோன ஜோதிபாசுவின் குடும்பத்தினர் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தனர். இருந்தபோதும் நீதிமன்றமும் அந்தப் பெண்ணை காவல்துறை ஐ.பி.சி. 100ன் கீழ் விடுவித்தது சரி என்றே தீர்ப்பளித்தது.
இதற்குப் பிறகு அந்தப் பெண் பட்ட மேற்படிப்பு முடித்து, பல்கலைக்கழகம் ஒன்றிலும் பணியில் சேர்த்தார். தனது நான்கு குழந்தைகளையும் நன்றாகப் படிக்கவும் வைத்தார்.
பிற செய்திகள்:
- பழிக்குப் பழி: கணவரைக் கொன்றவரை திருமணம் செய்தபின் சுட்டுக் கொன்ற பெண்
- சீக்கியர்கள் ஏன் உலகெங்கும் அன்பைக் கொண்டாடுகிறார்கள்?
- டேனிஷ் சித்திகி: ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் - என்ன நடந்தது?
- ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள்
- செல்போன் இல்லாமலே பிறருக்கு வாட்சாப் செய்தி அனுப்பும் வசதி பரிசோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












