“பணக்கார நாடுகள் தங்களின் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” இந்தோனீசிய அதிபர்

இந்தோனீசியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கரிஷ்மா வஸ்வானி
    • பதவி, ஆசிய செய்தியாளர்

பணக்கார நாடுகள் தங்களிடம் உள்ள உபரி தடுப்புமருந்துகளை, ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென என பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வலியுறுத்தியுள்ளார்.

''சில நாடுகளுக்கு மட்டும் மொத்த தடுப்புமருந்தும் கிடைப்பது, அதேவேளையில் வேறு சில நாடுகளுக்கு குறைந்த அளவே தடுப்புமருந்து கிடைப்பது என்ற நிலை இருக்கக்கூடாது'' என விடோடோ கூறினார்.

COP26 மற்றும் ஜி20 கூட்டங்களுக்கு செல்வதற்கு முன், அவர் இதனை தெரிவித்துள்ளார். இக்கூட்டங்களில் மற்ற உலகத்தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இந்தோனீசியா.

அதிபர் ஜோகோவி என்று பலராலும் அழைக்கப்படும் அவர், தடுப்புமருந்து பகிர்வு சம அளவில் இருக்கவேண்டும் என்றும், அப்போது தான் இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் பின்தங்காது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

''அனைவரும் இந்த முயற்சியில் உதவியுள்ளனர்; அதனால், எனது கருத்து மட்டும் போதுமானது அல்ல'' என்று ஜகார்த்தாவில் உள்ள இந்தோனீசிய அதிபர் மாளிகையிலிருந்து அளித்த மெய்நிகர் நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

''நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்க முன்னேறிய நாடுகள் மேலும் உதவ வேண்டும். அப்போது தான் ஒன்றிணைந்து இந்த பெருந்தொற்றை எதிர்கொள்ளமுடியும்'' என்றார் அவர்.

பெருந்தொற்றின் கடும் பாதிப்புகளிலிருந்து மீள இந்தோனீசியா முயன்றுவரும் சூழலில், விடோடோவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அந்நாட்டில் அதிகாரபூர்வ தினசரி தொற்று எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், உண்மையான தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் கூடுதலாக இருக்கக்கூடும். அரசு தரவுகளின்படி, இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் உள்ள தீவுகளில் ஆக்சிஜன் விநியோகம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தங்கள் வீடுகளிலேயே உயிரிழந்தனர். நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பியதால், பாதிக்கப்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் கல்லறைகளும் நிரம்பிய சூழல் ஏற்பட்டது.

செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்கள், அந்நாடு ''கொரோனா பேரழிவின் விளிம்பில் தத்தளிப்பதாக'' குறிப்பிட்டன.

தொடக்கத்தில் இந்த தொற்று குறித்த செய்திகளை விடோடோ நிர்வாகம் குறைத்து மதிப்பிட்டது. இந்தோனீசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சரான டேராவான் அகஸ் புட்ரான்டோ, பிராத்தனைகளால் நாட்டில் வைரஸ் பாதிப்பு இருக்காது என்று கூறியது அப்போது கவனம் பெற்றது.

ஓரு நேர்காணலில், கொரோனா பெருந்தொற்றை தனது நிர்வாகம் கையாண்டதில் உள்ள தவறுகளை ஒப்புக்கொண்ட விடோடோ, நாட்டில் சுகாதார கட்டமைப்பு சரியாக இல்லாதது இதற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

''எங்கள் மருத்துவமனைகள் மற்றும் கட்டமைப்புகளால் பாதிப்பு எண்ணிக்கையை, அதன் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை'' என்று கூறிய அவர், ''இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன'' என்றார்.

அதன் பிறகு, அரசு தரவுகளின்படி நாட்டில் கோவிட் மரணங்கள் மற்றும் தொற்று எண்ணிக்கை குறைந்தது, பாதிப்பு நிலைமை சீரடைந்துள்ளது.

தடுப்புமருந்து திட்டமும் வேகம் பெற்றுள்ளது. உலக வங்கியின் அண்மைய தரவின்படி, இந்தோனீசியாவுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டு, நாட்டில் முப்பது சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முழு தடுப்பூசி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஜகார்தா போன்ற நகர்ப்புற பகுதிகளில் தடுப்புமருந்து செலுத்தும் நடவடிக்கைகள் முழு வேகத்தில் உள்ள நிலையில், கிராமப்புற பகுதிகளில் போதுமான அளவு தடுப்புமருந்து கிடைக்கவில்லை.

கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொரோனா வைரஸ் - கோப்புப் படம்

''நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சுகாதார கட்டமைப்பு வசதிகளில் அதிக வேறுபாடு உள்ளது. இதனை நாங்கள் மாற்றவேண்டும்'' என்று தெரிவித்த விடோடோ, ''உதாரணத்துக்கு சில மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு வசதிகள் இல்லை. இதனை சரிசெய்து தேவையான கருவிகளை அங்கு வாங்கி, அந்த கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.

ஆனால், சுகாதார கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலீடு இல்லாதது மட்டுமல்ல, பெருந்தொற்றை எதிர்கொள்ள அரசு தயாராக இல்லாதது, நாட்டில் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதை தடுக்கமுடியாமல் போய்விட்டதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆரம்பத்தில் அங்கு சுகாதார ஊழியர்களுக்கு சீனாவின் சிநோவேக் தடுப்புமருந்து செலுத்தப்பட்டது.

பின்னர் மற்ற தடுப்புமருந்துகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தடுப்புமருந்துகளை வரவழைப்பதில் ஏற்பட்ட தாமதம் அந்நாட்டுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

இதனால் தான் தடுப்புமருந்தை தயாரிக்க தேவையான வசதிகள், வளர்ந்து வரும் நாடுகளில் அனுமதிக்கப்படவேண்டும் என்று விடோடோ வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பான முன்மொழிவை ஜி20 கூட்டத்திற்கு அவர் கொண்டு செல்கிறார். அங்கு மற்ற உலகத் தலைவர்களை சந்தித்து இது குறித்து பேச உள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் கசிவான ஆவணங்கள் சிலவற்றை பிபிசி பார்வையிட்ட நிலையில், அதில் காப்புரிமை பாதுகாப்பு மற்றும் புதிய தடுப்புமருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிக்கான நிதி போன்றவற்றை காரணம் காட்டி, தடுப்பு மருந்தை ஏழை நாடுகள் தயாரிக்கும் முயற்சிகளை பணக்கார நாடுகள் தடுப்பதாக கூறப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :