தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்க களம் இறங்கியுள்ள ராமநாதபுரம் சிறார்கள்

பெண்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் கலையை மீட்டெடுக்கும் வகையில் ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் துவங்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மல்லர் கம்பம் என்றால் என்ன ?

பாரம்பரிய சிலம்பத்தில் கம்பை மனிதர்கள் சுற்றுவார்கள். ஆனால் மல்லர் கம்பத்தில் மனிதர்கள் உடலை வளைத்து சுழல்வதே மல்லர் கம்பம் கலையாகும். பண்டைய காலத்தில் தமிழக போர் வீரர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் உடல் வலிமை பெற இந்த மல்லர் கம்ப விளையாட்டை விளையாடி உடலை வலுவடையச் செய்து உள்ளனர்.

சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றிப் பாதுகாத்து வந்ததால் அவர்களின் அரசவையில் தலைசிறந்த மல்லர்கள் இருந்து வந்துள்ளனர். முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் மல்லர் விளையாட்டில் தலைசிறந்து விளங்கியதால் மாமல்லர் என அழைக்கப்பட்டதாக வரலாற்றில் கூறப்படுகிறது.

வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலைகளை போல மல்லர் கம்பம் தன்னிகரற்ற உடல் வலு விளையாட்டாகும். மல்லர் கம்பம் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்றளவும் பிரபலமாக உள்ளது. பல மாநிலங்கள் மல்லர் கம்பம் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கினாலும் இறை வணக்கத்திற்கு பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறும்.

தமிழகத்தில் அழிந்து வரும் இந்த மல்லர் கம்பம் விளையாட்டை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மல்லர் கம்பம் கற்க ஆர்வம் காட்டும் ராமநாதபுரம் சிறார்கள்

மாணவர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தேசிய பயிற்சியாளர் சபரீசனால் வீரர், வீராங்கனைகள் என இதுவரை 60 பேருக்கு மல்லர் கம்பம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மரத்தில் கயிறு கட்டி மல்லர் கயிறு பயிற்சியும் 20 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலையை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் துவங்கப்பட்டு இந்த பயிற்சியை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று அவர்களுக்கு இந்த மல்லர் கம்ப கலையை கற்று கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளான அரண்மனை, கேணிக்கரை, பாரதிநகர், ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் காலை 5 மணி முதலே கேணிக்கரையில் அமைந்துள்ள டிடி விநாயகர் தொடக்கப் பள்ளி வளாகத்திற்கு வர தொடங்கி விடுகின்றனர்.

மல்லர் கம்பம் கற்று கொள்ள வருபவர்களுக்கு முதலில் உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர் சிலம்பம், வாள் வீச்சு, குத்துவரிசை, அடிமுறை உள்ளிட்டவைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், மரக்காலாட்டம் உள்ளிட்ட 16 கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

மல்லர் கம்பத்தை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க பெற்றோர் கோரிக்கை

மாணவர்கள்

மல்லர் கம்பம் கற்கும் சிறுமியின் தாய் நந்தினி, பிபிசி தமிழிடம் பேசுகையில், சிறுவர், சிறுமியர்களுக்கு மல்லர் கம்பமும், பெண்களுக்கு மல்லர் கயிறு பயிற்சியும் இங்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இங்கு பயிற்சிக்கு வரும் தனது மகள் பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதால் அவளுக்கு தன்னம்பிக்கை திறன் அதிகரித்துள்ளதுடன் பெண் குழந்தைகள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் மன தைரியம் அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஆன்லைன் விளையாட்டு என செல்போன்களில் மூழ்கி கிடந்த குழந்தைகளை, மல்லர் கம்பம் மற்றும் மல்லர் கயிறு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளின் மூலமாக மீட்டெடுத்ததாக தாய் நந்தினி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு இந்தாண்டு பள்ளி பாடத்திட்டத்தில் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை சேர்க்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல் தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பத்தை பள்ளி பாடத்திட்டதில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைப்பதாக நந்தினி கூறினார்.

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் மல்லர் கம்பம்

மாணவர்கள்

பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் விளையாடுவதால் குழந்தைகளின் மன வலிமை எப்படி உள்ளது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் அரசு மன நல மருத்துவர் பெரியார் லெனின், குழந்தைகள் நேரடியாக இவ்வாறான பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடுவதால் மனதளவில் மிகவும் ஆரோக்கியம் அடைகிறார்கள்.

செல்போன் மூலமாக ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதால் ஒரு குழந்தைக்கு நேரடியாக வெற்றி தோல்வி என்பது அனுபவிக்க முடியாமல் சமூகத்தை எதிர் கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இவ்வாறான சூழலில் பாரம்பரிய விளையாட்டுகள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டு வாழ்கையை வாழ்வதற்கு இந்த கலை மிகவும் உபயோகமாக இருக்கும் என்கிறார் மன நல மருத்துவர் பெரியார் லெனின்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :