பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி?

பட மூலாதாரம், SOPA Images
நாளைக்கே நாம் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தினாலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது நமக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரணப் பொருள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரிய தடையாக இருக்கும். அதுதான் பனை எண்ணெய் அல்லது பாமாயில்.
செப்டம்பர் 2015ல் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மாதங்கள் முன்பாக, போர்னியொ மற்றும் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் மிக அதிகமான எண்ணிக்கையில் காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவின் வானத்தையே இருளடையச் செய்த இந்த நிகழ்வுகள், லட்சக்கணக்கானோரின் உடல் நலனுக்கும் அச்சுறுத்தலாக மாறின.
அக்டோபர் மாதம் தீ குறைவதற்குள் 2.6 மில்லியன் ஹெக்டேர் அளவிலான காட்டுப்பகுதிகள் எரிந்து சேதமாயின. அந்த ஆண்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்ட மொத்த பசுமைக்குடில் வாயுக்களின் அளவுக்கு நிகரான வாயுக்கள் இந்த காட்டுத்தீ நிகழ்வுகளால் வெளியிடப்பட்டன. அழிந்துவரும் உராங்குட்டான் போன்ற உயிரினங்களுக்குப் புகலிடமான வெப்பமண்டலக் காடுகளில் ஏற்பட்ட இந்தப் பெரும் அழிவு, உயிரிப் பல்வகைமைக்குப் பெரிய அடியாக இருந்தது. ஆனால் காடுகளின் பரப்புக்குக் கீழே இருந்த மட்கரி (peat), காலநிலை மாற்றத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சதுப்பு நிலங்களைப் போன்ற பகுதிகளில் நிலத்தின் மேற்பரப்பில், மட்கிப்போகும் இலை தழைகளால் உருவாகும் அடர்த்தியான மண்போன்ற பொருள் மட்கரி என்று அழைக்கப்படுகிறது. வெப்பமண்டலங்களில் இது கார்பனை சேகரித்துவைக்கும் ஒரு இடமாக இருக்கிறது. உலக அளவில், மட்கரியில் மட்டும் 550 கிகாடன் கார்பன் சேமிக்கப்படுகிறது. உலகின் பரப்பளவில் 5% மட்டுமே இருக்கும் மட்கரி, மண்ணில் சேகரிக்கப்படும் மொத்த கார்பனில் 42% கார்பனை தனக்குள் சேமித்துவ் வைத்திருக்கிறது. உலகிலேயே அளவில் பெரிய, அதிக கார்பன் கொண்ட மட்கரி நிலப்பகுதிகள் இந்தோனீசியாவில் தான் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசியாவின் காடுகள் உலக அளவில் பெரிய பரப்புள்ள காடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வனப்பகுதிகள் மட்கரி நிலத்தில்தான் காணப்படுகின்றன. இங்கு உள்ள மண்ணுக்கு இயற்கையாகவே ஈரப்பதம் உண்டு என்பதால் இந்த மட்கரி முழுவதும் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் காடுகள் எண்ணெய்ப் பனைத் தோப்புகளாக மாற்றப்படும்போது மட்கரி வறண்டு போகிறது, அதில் சேமிக்கப்பட்டிருந்த கார்பன் வெளியேறி காற்றில் கலக்கிறது. உலக அளவில் காணப்படும் எல்லா எண்ணெய்ப் பனைத் தோப்புகளும் முன்னொரு காலத்தில் ஈரப்பதமிக்க வெப்பமண்டலக் காடுகளாக இருந்த நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன.
புதைபடிவ எரிபொருட்களை விட்டு விலகுவது, சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்தால் மட்டுமே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்திவிட முடியாது என்பதற்கு இந்தோனீசிய காட்டுத்தீயின் பிரம்மாண்டம் ஒரு மிகச்சிறப்பான உதாரணம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் நிலமும் முக்கியமானது. விவசாயம், காடு அழிப்பு, மட்கரி நிலங்களின் சீர்குலைவு ஆகியவற்றால் ஏற்படும் உமிழ்வுகள், மொத்த உமிழ்வுகளில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காக இருக்கின்றன என்று காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
நிலத்தால் ஏற்படும் உமிழ்வுகளுக்கு இந்தோனீசியா ஒரு மையப்புள்ளி. அந்தந்த ஆண்டுகளின் காட்டுத்தீ நிகழ்வுகளின் அளவைப் பொறுத்து அந்நாட்டின் மொத்த உமிழ்வுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நிலத்தால் ஏற்படுகின்றன. 2015ல் ஏற்பட்ட காட்டுத்தீ நிகழ்வுகளால் அந்த ஆண்டு உலக உமிழ்வுப் பட்டியலில் சீனா, அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து இந்தோனீசியா நான்காவது இடத்தைப் பிடித்தது.
குளிர்மண்டலக் காடுகளைப் போலல்லாமல், வெப்பமண்டலக் காடுகளில் இயற்கையாகவே நடக்கும் காட்டுத்தீ நிகழ்வுகள் மிகவும் குறைவு. அதிக மழைப்பொழிவு நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகப்படுத்துவதால் காட்டுத்தீ தடுக்கப்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் உருவான எண்ணெய் பனை, வறண்ட நிலப்பகுதிகளை விரும்பும் ஒரு பணப்பயிர்.
1990களில் ரியாவ், வடக்கு சுமத்ரா, மத்திய கலிமந்தன் ஆகிய இடங்களில் எண்ணெய்ப் பனை சாகுபடி அதிகரித்ததால் நிலத்தில் இருக்கும் நீரை வடிக்க கால்வாய்கள் வெட்டப்பட்டன. நிலத்தடி நீர் குறைந்ததில் மட்கரி பாதிக்கப்பட்டது.
"கார்பன் சேமிப்பு அதிகம் உள்ள மட்கரி நிலங்களிலும் வெப்பமண்டலக் காடுகளிலும் வேறு எந்தப் பயிரையும் விட எண்ணெய்ப் பனையே அதிகமாக வளர்க்கப்படுகிறது, இது உலகளாவிய காலநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்கிறார் சுத்தமான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சிலில் எரிபொருள் திட்ட இயக்குநராக இருக்கும் ஸ்டெபனி சீயர்ல்.
1990க்குப் பிறகு, ஒரு தனித்துவமான பண்டமாக இருந்த பனை எண்ணெய் இந்தோனீசியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக மாறியது. இப்போது இந்த சாகுபடி 6.8 மில்லியன் ஹெக்டேர் அளவில் பரந்துவிரிந்திருக்கிறது. இது அயர்லாந்தின் நிலப்பரப்புக்கு ஒப்பானது. ஆண்டுக்கு இங்கு 43 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகளாவிய உற்பத்தியில் 58% ஆகும். உற்பத்தி செய்யப்படும் பனை எண்ணெய் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவுக்கு ஏற்றுமதியாகவும் அனுப்பப்படுகிறது.
"பனை எண்ணெய் என்பது காடு அழிப்புக்கான முக்கியமான காரணி. சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள போதாமையாலும் தகவல்கள் தெரியாததாலும் எங்கள் சூழல் சீர்குலைந்து மக்களும் பாதிக்கப்பட்டிடுள்ளனர்" என்கிறார் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனமான மைட்டி எர்த்தின் ஜகார்த்தா செயற்பாட்டாளர் அனிஸா ரஹ்மாவதி.

பட மூலாதாரம், Getty Images
இந்த காட்டுத்தீ நிகழ்வுகள் நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021ல் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது. இப்போதும் ஆண்டுதோறும் காட்டுத்தீ ஏற்படுகிறது என்றாலும், 2018 மற்றும் 2019ன் தீவிர நிகழ்வுகளைத் தவிர்த்து காட்டுத்தீயின் பரவல் குறைந்திருக்கிறது. 2016ல் உச்சத்தில் இருந்த காடு அழிப்பு 2020ல் 70% குறைந்திருக்கிறது என உலக காடு கண்காணிப்பு அறிக்கை கூறுகிறது. அரசின் மட்கரி மீட்டமைப்பு நிறுவனமும் வெட்லாண்ட் இண்டர்னேஷனல், போர்னியோ நேச்சர் ஃபவுண்டேஷன் போன்ற தொண்டு நிறுவனங்களும் பணியாற்றியதில் லட்சக்கணக்கான ஹெக்டேர் மட்கரி நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2018ல் புதிய எண்ணெய்ப் பனைத் தோப்புகளை அமைக்கக் கூடாது என இந்தோனீசிய அரசு தடைவிதித்தது.
சுற்றுச்சூழலை பாதிக்காத பனை எண்ணெய்க்கான வட்டமேசை அமைப்பு 2004ல் உருவாக்கப்பட்டது. பனை எண்ணெய்க்கும் காடு அழிப்புக்கும் இருக்கும் தொடர்பு பற்றி எதிர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்ததால், பனை எண்ணெய் உற்பத்தி பொறுப்புடன் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது. யுனிலீவர், லோரியல், பெப்சிக்கோ உள்ளிட்ட, முக்கிய பனை எண்ணெய் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிறுவனங்கள், காடு அழிப்பு இல்லாமல் பனை எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான உறுதிமொழியை ஏற்றுள்ளன.
ஆனால் இந்தத் தீர்வுகள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. பனை எண்ணெய் உற்பத்தித் துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், காடு அழிப்புக்கும் பனை எண்ணெய் உற்பத்திக்கும் உள்ள தொடர்பைக் குறைக்க முயற்சிகள் குறைவு என்றும் ரஹ்மாவதி தெரிவிக்கிறார். காடுகளை அழிக்காமல் பனை எண்ணெய் உற்பத்தி செய்வதாக சான்றளிக்கும் வட்டமேசை அமைப்பு நம்பிக்கைக்குரியது அல்ல என்றும், அதில் பசுமைக் கண்துடைப்பு நடக்கிறது என்றும் சுற்றுச்சூழல் புலானாய்வு அமைப்பு ஒன்று 2015ல் வெளியிட்ட ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது. அதில் கூறப்பட்ட பல பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்று 2019ல் கண்டுபிடிக்கப்பட்டது. "தொடர்ந்து செம்மைப்படுத்திக்கொள்வதற்காக உறுதியோடு உழைப்பதாக" வட்டமேசை அமைப்பு பதில் அளித்தது. அந்த அறிக்கைகள் தவறானவை என்றும், தங்களது புதிய மேம்பாடுகளை அறிக்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 2021ல் எண்ணெய்ப் பனைக்கான புதிய சலுகைகள் மீதான தடைக்காலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதன்பின் புதிய தடைகள் விதிக்கப்படவில்லை. கோவிட்-19க்குப் பின்வரும் காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அக்டோபர் 2020ல் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலக அளவில் பனை எண்ணெய்க்கான விலை பன்மடங்கு உயர்ந்திருக்கும் நிலையில் மீண்டும் காட்டுத்தீ நிகழ்வுகள் அதிகரிக்கவும் காடழிப்புக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சம் எழுந்துள்ளது.
2015ல் ஏற்பட்ட காட்டுத்தீ ஒரு மிக மோசமான சூழல், அந்த ஆண்டு எல்-நினோ விளைவும் தீவிரமாக இருந்ததில் இந்தோனீசியாவின் பெரும்பகுதிக்கு வறண்ட காலச்சூழல் ஏற்பட்டது. நிலத்துக்கு அடியில் உள்ள மட்கரியை தீ நெருங்கியதும் தீயை அணைப்பது கடினமானது. மழை வரும்வரை பல வாரங்கள் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த பிரம்மாண்ட நிகழ்வு இந்தோனீசியாவை உலுக்கி எழுப்பியது. 2015ல் நடந்த ஐ.நா காலநிலை மாநாட்டுக்கு முன்பாக காடுகளில் இருந்து வரும் உமிழ்வுகளை 2030ம் ஆண்டுக்குள் 66 முதல் 99 சதவீதமாகக் குறைப்பதாக இந்தோனீசியா உறுதியளித்தது. சர்வதேச உதவியைப் பொறுத்து இந்த சதவீதம் இருக்கும் என்றும் அறிவித்தது. இதற்கு ஆதரவு தருவதற்காக அதிபர் ஜொகோவி விடோடோ மட்கரி மீட்டுருவாக்க அமைப்பு ஒன்றை ஜனவரி 2016ல் நிறுவினார். பனை சாகுபடி உள்ள பகுதிகளில் 1.7 மில்லியன் ஹெக்டேர் மட்கரி நிலங்களையும், அதற்கு வெளியில் 9 லட்சம் ஹெக்டேர் மட்கரி நிலங்களையும் மீட்கவேண்டும் என்ற இலக்கையும் நிர்ணயித்தார். 2018ல் அமல்படுத்தப்பட்ட பனை எண்ணெய் சலுகைத் தடை இதற்குப் பெருமளவில் உதவியது. 2019ல் காடுகளை அழிப்பது நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மீட்டுருவாக்கம் செய்ய முன்வந்த தொண்டு நிறுவனங்களும் அரசு அமைப்பும் கடும் சவாலை சந்தித்தன. மட்கரி நிலங்கள் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை என்பதால் கார்பன் உமிழ்வைக் குறைக்கவேண்டுமானால் அவற்றை வேகமாக மீட்கவேண்டியிருந்தது.
"மட்கரி நில மீட்பில் காலம் தாழ்த்தினால் அது நடக்காது. மட்கரியில் உள்ள மட்கக்கூடிய இயற்கைப் பொருட்கள் அழிந்துவிட்டால் சூழல் மாறிவிடும், அதன்பிற்கு ஒன்றும் செய்ய முடியாது", என்கிறார் இந்தோனீசியாவின் வெட்லாண்ட் இண்டர்நேஷனலைச் சேர்ந்த மூத்த ஆலோசகர் ந்யோமன் சூர்யதிபுத்ர.
வெட்லாண்ட் இண்டர்நேஷனல் இந்தோனீசியா, 1990கள் முதலே இந்தத் தீவுக்கூட்டத்தில் பனை சாகுபடியால் மாறிப்போன நிலங்களில் மட்கரி மீட்பை செய்து வருகிறது. இதன் சமீபத்திய திட்டம் 2019ல் தொடங்கியது. வடக்கு சுமத்ராவில் 350 குடும்பங்களோடு இணைந்து அந்தந்த கிராமங்களில் உள்ள சிறு பனை சாகுபடி நிலங்களை மீட்கும் திட்டம் இது.
இது செயல்திறன் மிக்கதாகவும் நீண்டநாள் நிலைப்பதாகவும் இருக்கவேண்டும் என்பதால் அவர்கள் சமூகத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். "சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பசித்திருந்தால் மட்கரி மீட்க வாருங்கள் என்று நாம் அழைக்க முடியாது" என்கிறார் ந்யோமன். ஆகவே பனை எண்ணெய்க்கு பதிலாக வன வளங்களைச் சார்ந்த பொருட்கள், மீன் பண்ணை போன்ற வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மீட்டுருவாக்க செயல்பாடு பற்றி உள்ளூர் மக்களுக்குத் தெளிவாகப் புரியவைப்பதால் அவர்களும் அதைக் கண்காணிக்கிறார்கள்.
எண்ணெய்ப் பனை மட்டுமல்லாமல் நெல், சோளம், கிழங்குவகைகள் போன்றவற்றை சாகுபடி செய்யவும் மட்கரி நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் இந்தோனீசியாவின் போகோரில் உள்ள சர்வதேச வனவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளரும் மட்கரி மீட்பு ஆய்வாளருமான ஹெர்ரி புர்னோமோ. "மட்கரி நிலங்களை மீட்கும்போது சமூகம் சார்ந்த வணிகத் தீர்வுகளும் உருவாக்கப்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.
8,35,288 ஹெக்டேர் மட்கரி நிலங்களை மீட்டெடுத்து அரசு மீட்பு அமைப்பு தன் இலக்குகளில் ஒன்றை வெற்றிகரமாக எட்டியது. ஆனால் பனை சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் 3,90,000 ஹெக்டேர் மட்டுமே 2020க்குள் மீட்டெடுக்க முடிந்தது. 1.7 மில்லியன் ஹெக்டேர் என்ற இலக்கோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. பனை உரிமையாளர்களிடம் வலியுறுத்தி மட்கரியை மீட்பதற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் புர்னோமோ. "சாகுபடி நிலங்களுக்கு வெளியில் மட்கரி மீட்பது அரசின் கடமையாகிவிடுகிறது. ஆனால் நிலங்களுக்குள்ளே அது உரிமையாளர்களின் கடமை" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது இது அலையாத்திக் காடுகள் மற்றும் மட்கரி மீட்பு நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. 2024க்குள் கூடுதலாக 1.2 மில்லியன் ஹெக்டேர் மட்கரி நிலங்களையும் 6 லட்சம் ஹெக்டேர் அலையாத்திக் காடுகளையும் மீட்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"இந்த புதிய இலக்குகளை அவர்கள் அடைவார்கள் என்று நம்புகிறேன். போதுமான நிதி உதவி மற்றும் விதிமுறைகள் மூலம் அரசின் ஆதரவு கிடைத்தால் இலக்கை அடையமுடியும்" என்கிறார் இந்தோனீசியாவின் டபிள்யூ.ஆர்.ஐயில் மட்கரி மீட்பு கண்காணிப்பு அமைப்பின் தலைவரான ஃபாத்லி ஸாக்கி.
சரியான விதிமுறைகள் என்பது முக்கியமான அம்சமாக மாறியிருக்கிறது. வேலைவாய்ப்பு பற்றிய 2020ம் ஆண்டு சட்டம் பெருமளவில் அச்சத்தை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழல் விதிமுறைகளை இலகுவாக்குவதற்கும் பெருநிறுவனங்கள் நிலத்தை எளிதாக வாங்கவும் அது வழிவகை செய்திருந்தது. பனை எண்ணெய்க்கான புதிய சலுகைகளைத் தடை செய்யும் காலம் முடிவுக்கு வந்த நேரத்தில் இது வெளிவந்ததால் புதிய பனைத்தோப்புகள் காடுகளில் உருவாகலாம் என்ற அச்சம் எழுந்தது. இதுபற்றி அரசு கருத்து தெரிவிக்கவில்லை.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜூலியானா னோகோ-மெவானு, மேற்கு கலிமந்தனில் எண்ணெய்ப் பனை தோப்புகள் அதிகரித்திருப்பது பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். எண்ணெய்ப் பனை தொழில்களுக்கு விரைவாக உரிமம் வழங்கவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளில் அந்த குறிப்பிட்ட சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்களின் கருத்துக்கள் கவனிக்கப்படாமல் போகவும் வேலைவாய்ப்பு சட்டம் வழிவகை செய்யும் என்றும் கூறுகிறார்.
இந்த சட்டமும் பனை எண்ணெய்க்கான புதிய சலுகைகள் மீதான தடைக்காலத்தின் முடிவும் காடுகளின் அழிப்பு விகிதத்தை அதிகப்படுத்தலாம் என்கிறார் க்ரீன்பீஸ் இந்தோனீசியாவின் மூத்த வன செயற்பாட்டாளர் ஆக்ரியன் சூர்யதர்மா. "2030 இலக்குகளை எட்டும் அளவுக்கு இந்தோனேசியாவின் மட்கரி மற்றும் காடு அழிப்பு பற்றிய விதிமுறைகள் வலுவாக இல்லை" என்கிறார் அவர்.
மட்கரியைத் தொடர்ந்து மீட்கவேண்டுமானால் முக்கியமான, ஆனால் கவனிக்கப்படாத ஒரு அம்சத்தையும் விவாதிக்க வேண்டும். இப்போது இருக்கும் பனை சாகுபடி நிலங்களில் இருக்கும் மட்கரியும் மீட்டெடுக்கப்படவேண்டும். நிலத்தை மாற்றியமைக்கும் முயற்சிகள் பெரிய அளவில் உதவுவதில்லை. கால்வாய்களைத் தடுப்பதும் நிலத்தடி நீரை அதிகரிப்பதுமான முயற்சிகள் சாகுபடி நிலங்களில் மெதுவாகவே அமல்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இது எல்லாரையும் பாதிக்கிறது என்கிறார் நியோமன். "மட்கரி நிலங்கள் ஒன்றோடொன்று இணைந்தவை, துளைகள் கொண்டவை. ஒரு இடத்தில் சமூகத்தினர் மட்கரியை மீட்டாலும் அதைச் சுற்றியுள்ள தனியார் நிலத்தில் ஒன்றும் செய்யப்படவில்லை என்றால் சமூக நிலமும் பாதிக்கப்படும்" என்கிறார்.
2016 முதல் 2020 வரையிலான காடு அழிப்பு குறைந்ததற்கு தன்னுடைய முயற்சியே காரணம் என்று அரசு சொல்லிவந்தாலும், அதற்கு சந்தையே காரணம் என மற்றவர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் கச்சா பனை எண்ணெய்க்கான விலை குறைந்ததில் இந்தத் துறை விரிவடையவில்லை என்கிறார் டபிள்யூ.ஆர்.ஐ இந்தோனீசியாவின் காடுகள் மற்றும் பண்டங்களுக்கான மூத்த மேலாளர் அந்திகா புத்ரதித்தமா. சர்வதேச காய்கறி எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு பனை எண்ணெயின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. "இது காடு அழிப்பையும் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறதா என்று நாம் கவனமாகப் பார்க்கவேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
இந்த இரு விசைகளின் இழுபறிகளுக்கிடையே என்ன ஆகும் என்பதுதான் முடிவாக இருக்கும். "நமது 2030 இலக்கை எட்டவேண்டுமானால் நிறைய செய்யப்படவேண்டும். பலதரப்பட்ட திட்டங்களின் மூலம் காடு பாதுகாப்பு மானியத்தை அதிகரித்து காடழிப்பு மானியத்தைக் குறைத்து பொருளாதார ரீதியாக இந்தோனீசியா இதை செயல்படுத்த வேண்டும்" என்கிறார் க்ளைமேட் பாலிசி இனிஷியேட்டிவ் இந்தோனீசியாவின் ஆராய்ச்சியாளர் முகமது மெக்கா.
இது எப்படி நடக்கப்போகிறது என்பது உலகளாவிய காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகம், அரசு, உலக மக்கள் எல்லாருமாக சேர்ந்து பிரமாண்டமான முயற்சிகளை மேற்கொண்டால்தான் இந்தோனீசியாவின் முக்கியமான வெப்பமண்டலக் காடுகளையும் மட்கரி நிலங்களையும் பாதுகாக்க முடியும்.
பிற செய்திகள்:
- “பணக்கார நாடுகள் தங்களின் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” இந்தோனீசிய அதிபர்
- ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்
- பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?
- ’என்னங்க சார் உங்க சட்டம்’: சினிமா விமர்சனம்
- புனித் ராஜ்குமார் மரணம்: “உடற்பயிற்சி செய்வதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












