பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா செய்ய வேண்டிய கடமை என்ன? அதற்கு முன் உள்ள சவால் என்ன?

பருவநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களால் இந்தியாவுக்கு கடந்த ஓராண்டில் 8700 கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான தொகை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலை உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 23,800 கோடி டாலர் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ள சீனா மட்டுமே இந்தியாவை விட அதிக இழப்பை சந்தித்த நாடு. நிபுணர்கள் இந்த இழப்பை, பருவநிலை மாற்றத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்.

இந்தியா உட்பட உலகின் சுமார் 120 நாடுகள் பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் கூடி, பருவநிலை மாற்றம் மற்றும் அதன் அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்பதுபற்றி விவாதிக்க உள்ளன.

டெல்லி, உத்தராகண்ட் முதல் கேரளா வரை, குஜராத் முதல் மேற்கு வங்கம் மற்றும் அசாம் வரையிலான மக்கள், வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்களை மிக நெருக்கமாக உணர்ந்துள்ளனர்.

இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோதியின் கிளாஸ்கோ பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு உலகின் எல்லா பெரிய நாடுகளும் மாறிவரும் வெப்பநிலை குறித்து விவாதிக்க உள்ளன.

பருவநிலை தொடர்பான மாநாடு

பட மூலாதாரம், Getty Images

கிளாஸ்கோவில் என்ன நடக்கும்?

கிளாஸ்கோவில் COP26 மாநாடு அக்டோபர் 31 முதல் 13 நாள்கள் நடைபெற உள்ளது.

இந்த முறை இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள இருக்கிறார். இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் இருப்பார். கூடவே பிரதமர் நரேந்திர மோதியும் இதில் பங்கேற்க உள்ளார்.

இதன் காரணமாக இந்தியாவை பொருத்தவரை இந்த மாநாடு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கிளாஸ்கோவின் நிகழ்ச்சி நிரல் மிகப்பெரியது. ஆனால் அவற்றில் மிக முக்கியமானது, பாரிஸ் உடன்படிக்கையின் விதிகளை இறுதி செய்வதாகும்.

2015 ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. கரியமில வாயு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் உலகெங்கிலும் வெப்பநிலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது இதன் நோக்கமாகும். வெப்ப நிலையை, 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கவிடாமல் செய்வதும் இதில் அடங்கும். இதற்குப் பிறகு, உலக நாடுகள் தானாக முன்வந்து தங்களுக்கான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டன.

மோடி

பட மூலாதாரம், Getty Images

தற்போது பல்வேறு நாடுகள் நிர்ணயித்துள்ள இலக்குகளின் அடிப்படையில், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் வெப்பநிலை 2.7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மதிப்பீடு தெரிவிக்கிறது.

அதாவது தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்ததைவிட உலகின் சராசரி வெப்ப நிலை 2.7 டிகிரி செல்சியஸ் உயரும் என்பது இதன் பொருள்.

அதனால்தான் பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை சமாளிப்பது மிகவும் முக்கியமாகிறது.

அதே விஷயம் கிளாஸ்கோவில் விவாதிக்கப்படும். தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிட உலகின் வெப்பநிலை 2 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்கவேண்டும் என்ற உறுதிமொழி இப்போது போதுமானதல்ல என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதற்குப் பதிலாக வெப்பநிலை 1.5 டிகிரிக்கு மேல் உயராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று உலக நாடுகள் உறுதி ஏற்கவேண்டும்.

நிகர உமிழ்வை பூஜ்ஜியம் ஆக்குவது என்றால் என்ன?

இதற்கு அனைத்து நாடுகளும் தங்கள் நிகர உமிழ்வை பூஜ்ஜியமாக்குவதற்கான காலக்கெடுவைக் குறிப்பிடுவது அவசியம். நிகர உமிழ்வை பூஜ்ஜியமாக்குவது என்றால் என்ன? ஒரு நாட்டில் இருந்து உமிழப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவும், அந்த நாட்டின் காடுகள் உள்ளிட்ட இயற்கை பரப்புகள் உறிஞ்சிக்கொள்கிற பசுமை இல்ல வாயுக்களின் அளவும் சமமாக இருந்தால் அது நிகர உமிழ்வு பூஜ்ஜியம் ஆவது என்று பொருள்.

இந்த நிலையை எப்போது தங்கள் நாடு அடையும் என்பதற்கு ஒவ்வொரு நாடும் ஒரு காலக்கெடுவை வாக்குறுதியாக அளிக்கவேண்டும்.

உலகிலேயே அதிக கார்பனை வெளியேற்றும் நாடாக சீனா உள்ளது. 2060-ம் ஆண்டுக்குள் நிகர கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியமாக்கப் போவதாக சீனா ஏற்கனவே அறிவித்துள்ளது. 2030-ம் ஆண்டுக்கு முன் தனது உமிழ்வு உச்சத்தை எட்டும் என்றும் சீனா கூறியுள்ளது.

இரண்டாவது பெரிய கார்பன் உமிழ்வு நாடான அமெரிக்கா, 2050-க்குள் நிகர-பூஜ்ஜியத்தை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. 2035 ஆம் ஆண்டிற்குள் தனது மின் துறையை கார்பன் அற்றதாக ஆக்கப்போவதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால் இந்தியா இதற்கான காலக்கெடுவை இன்னும் அளிக்கவில்லை.

நிலக்கரியை சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருதல்

உலகில் எங்கெல்லாம் நிலக்கரி மூலமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் நிலக்கரியைச் சார்ந்திருப்பதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்தும் கிளாஸ்கோ மாநாட்டில், விவாதிக்கப்படும்.

நிலக்கரியைப் பயன்படுத்துவதாலேயே கார்பன் வெளியேற்றம் அதிகமாக உள்ளது. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்காக, அதன் பயன்பாட்டையும் புறந்தள்ள முடியாது. சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த மூன்று நாடுகளும் நிலக்கரி மீதான சார்பை முடிவுக்குக் கொண்டுவர எந்த காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை.

உலகத்தின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் கட்டுப்படுத்த, 2050ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மீதான சார்பை உலகநாடுகள் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று ஐநாவின் பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) கூறுகிறது.

இதைப் பற்றிய விவாதத்தின் போது, வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான சண்டை தொடரக்கூடும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற இயற்கை எரிவாயுவை சார்ந்துள்ள நாடுகள், நிலக்கரி மீதான சார்பை முடிவுக்கு கொண்டுவருமாறு வளரும்நாடுகள் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன. இதைச்செய்ய வளரும் நாடுகளுக்கு நிதி உதவி தேவைப்படும்.

பணம் எங்கிருந்து வரும்?

இந்த நிதி உதவியின் அவசியத்தை மனதில் கொண்டு, வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள், பருவநிலை நிதி உதவியின் கீழ் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் வழங்கவும் பாரிஸ் உடன்படிக்கையில் முடிவு செய்யப்பட்டது.

வளர்ந்த நாடுகளால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

பருவநிலை நிதியத்திற்கான 100 பில்லியன் டாலர் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கப்படவேண்டும் என்றும் வளரும் நாடுகள் விரும்புகின்றன. இதுவும் COP26ல் விவாதிக்கப்படும்.

"கிளாஸ்கோவின் நிகழ்ச்சி நிரல் மிகப் பெரியது. பாரிஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இறுதிசெய்வதே இதில் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே தற்போது உடைபட்டுள்ள நம்பிக்கையை, மீட்டெடுக்கவேண்டும்,"என்று இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஐஃபாரெஸ்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்திர பூஷண் கூறுகிறார்.

இழப்பு மற்றும் சேதம்

"இந்தியாவைப் பொருத்தவரை கிளாஸ்கோவில் ஒரு முக்கியமான விவாத விஷயம், இழப்பு மற்றும் சேதம் பற்றியதாகும். பாரிஸ் ஒப்பந்தத்தில் இது குறித்து மிகவும் உறுதியாக எதுவும் கூறப்படவில்லை,"என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் (சிஎஸ்இ) இயக்குநர் சுனிதா நாராயண் தெரிவிக்கிறார்.

1970 மற்றும் 2019 க்கு இடையில், பருவநிலை மாற்றம் தொடர்பான 11,000 இயற்கை பேரிடர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இருபது லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, கிளாஸ்கோவில் ஒரு உடன்பாட்டை எட்ட, ' இழப்பு மற்றும் சேதம்' , இழப்பீடுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம்," என்கிறார் அவர்.

எனவே இதற்கு யார் அதிக பொறுப்போ அந்த நாடுகள் அது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த சூழலில் அவர் சீனாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டார்.

பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவின் வாக்குறுதி எவ்வளவு நிறைவேறியுள்ளது?

பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்தியாவும் தனது பங்கிற்கு பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பல வாக்குறுதிகளை அளித்தது, அதில் மூன்று முக்கிய விஷயங்கள் இருந்தன.

முதலாவதாக, 2005 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2030 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை 33 முதல் 35 சதவிகிதம் குறைப்பதான இலக்கு மிக முக்கியமானது.

பருவநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

28 சதவிகித குறைப்பு இலக்கு 2021ல் எட்டப்பட்டுள்ளதாக இந்திய அரசு கூறுகிறது.

ஆனால், உலகிலேயே அதிக கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. உலகில் நிலக்கரியைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் நாட்டின் 70%க்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

வளரும் நாடாக இருப்பதால், நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்த சில தசாப்தங்களுக்கு மின்சார உற்பத்தியின் முக்கிய ஆதாரமாக நிலக்கரி இருக்கும். இது மறுக்கமுடியாத ஒரு விஷயம் என்பதால் இந்தியா இன்னும் நிகர பூஜ்ஜிய இலக்கை அறிவிக்கவில்லை.

2030-க்குள் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் மற்றும் அணுசக்தியில் இருந்து 40 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்பது பாரீஸ் உடன்படிக்கைக்குப் பிறகு இந்தியா அளித்த இரண்டாவது பெரிய வாக்குறுதியாகும்.

2030 ஆம் ஆண்டுக்குள் இலக்கு விஞ்சப்படும் (சுமார் 48 சதவிகிதம்) என்று இந்திய அரசு கூறுகிறது.

பாரீஸ் உடன்படிக்கையில் மூன்றாவது பெரிய வாக்குறுதி மரங்களை நடுவது. வளிமண்டலத்தில் இருந்து கூடுதலாக 2.5 முதல் 3 பில்லியன் டன் கரியமில வாயுவை உறிஞ்சக்கூடிய அளவிற்கு மரங்களை, 2030 ஆம் ஆண்டிற்குள் நடுவதே இந்திய அரசின் குறிக்கோளாக இருந்தது.

மத்திய அரசின் தரவுகளின்படி, 2001 மற்றும் 2019 க்கு இடையில் இந்தியாவின் வனப்பகுதி 5.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் என்ற சர்வதேச அமைப்பின் தரவுகளுடன் பொருந்தவில்லை. குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் அறிக்கையின்படி, இந்தியாவில் காடுகளின் பரப்பளவு குறைந்துள்ளது.

புள்ளிவிவரங்களில் உள்ள வேறுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம் 'வனப்பகுதி' என்பதன் வரையறையில் உள்ள வேறுபாடாகும்.

கிளாஸ்கோவில் இந்தியா என்ன செய்ய முடியும்?

இந்தியா தனது இலக்குகளை மாற்றியமைக்க அறிவிப்புகளை செய்ய முடியும் என்று கிளாஸ்கோவில் உள்ள வல்லுநர்கள், நம்புகிறார்கள். முன்னதாக, இந்திய அரசு 'நெட்-ஜீரோ' மீது அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை.

"இந்த மாநாட்டிற்கு இந்தியா ஒரு தலைவராக செல்ல வேண்டும். பின்பற்றுபவராக அல்ல" என்கிறார் சந்திர பூஷண்.

"நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. 2050 மற்றும் 2060 க்கு இடையில் இந்தியா இதை அடைய முடியும். உலகின் வெப்பநிலை 1.5 ° C க்கு மேல் அதிகரிக்கவில்லை என்றால், இதன் மிகப்பெரிய பயனாளியாக இந்தியா இருக்கும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

விரைவில் இந்தியாவின் மக்கள் தொகை 150 கோடியை எட்டப் போகிறது. அதே விகிதத்தில், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அவர்கள் எண்ணிக்கை ஏற்கனவே இங்கு அதிகம். வறுமை நேரடியாக பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடையது. ஏழைகளிடம் வாழ்வதற்கு உறுதியான வீடுகள் இல்லையென்றால், பருவநிலை மாற்றம் அவர்களை அதிகம் பாதிக்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் இது பாதிக்கிறது. இந்தியாவில் பருவமழை மீதான சார்பு மிக அதிகம்.

"நெட் ஜீரோ குறித்து இந்திய அரசு என்ன சொல்கிறது என்பதைப் பார்க்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். நிகர பூஜ்ஜியத்திற்கு முன்பாக 2030-ஆம் ஆண்டின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று இந்திய அரசு சொல்லும் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் சிஎஸ்இ இயக்குநர் சுனிதா நாராயண்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :