உத்தராகண்டில் கிராமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காலியாவது ஏன்?

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
- எழுதியவர், வர்ஷா சிங்
- பதவி, பிபிசி இந்திக்காக
உத்தராகண்டின், பெளரியின் சௌபட்டாகால் தாலுகாவில் உள்ள கிம்கிடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வயல்களில் உளுந்து மற்றும் பிற பயறு வகைகளை அறுவடை செய்து வருகின்றனர்.
அக்டோபர் 17, 18, 19 தேதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி அறுவடைக்காக காத்து நிற்கும் பருப்பு வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
"மழை தேவைப்படும்போது பெய்வதில்லை. தற்போது காலம் தவறிய மழை விடாமல் பெய்து வருகிறது. உளுத்தம் பருப்பு அழுகி விட்டது. பிற பருப்புகளும் நாசமாகிவிட்டன. கால்நடை தீவனத்திற்காக வெட்டிய புல்லும் அழுகிவிட்டது," என்கிறார் வயதான விவசாயி லீலாதேவி.
மே மாதத்தில் விதைப்பு நேரத்தில் கூட தொடர்ந்து பருவமழை பெய்ததாக அவர் கூறுகிறார். இது தாவரங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது அறுவடையின் போதும் மழை இதையே தான் செய்துள்ளது.
தனது வயல்களில் காட்டுப்பன்றிகளின் கூட்டம் சேதம் விளைவித்த பகுதியையும் லீலா தேவி காட்டுகிறார்.
சில சமயங்களில் பருவநிலை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. சில நேரம் விலங்குகள் தின்றுவிடுகின்றன. என் வீட்டை நடத்துவதே சிரமமாக உள்ளது" என்கிறார் அவர்.
"முன்பெல்லாம் எங்கள் வயல் பரந்து விரிந்து இருந்தது. நாங்கள் முழு நிலத்திலும் விவசாயம் செய்தோம். ஆனால் இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டோம். வயல்கள் தரிசாகிவிட்டது. வேறு ஏதாவது வேலை செய்வோமே தவிர, கைகளில் அரிவாளை பிடிக்கமாட்டோம் என்று எங்கள் மகள், மருமகள்கள் சொல்கிறார்கள். இந்த விவசாயத்தில் இருந்துதான் எங்கள் குழந்தைகளை நாங்கள் வளர்த்தோம்.. பசு, எருமை மாடுகளை வளர்த்தோம்.. அனைவருக்கும் நல்லது செய்தோம்," என லீலா தேவி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
"இதைவிட வேலை செய்வதே நல்லது"
லீலா தேவி தனது குடும்பத்தின் கடைசி விவசாயியாக இருந்து வருகிறார். அவரது மகன்களில் ஒருவர் டேராடூனிலும், மற்றொருவர் ஜோஷிமட்டிலும் பணிபுரிகின்றனர்.
"வேலையில் பலனில்லை என்று உணரும்போது, அவர்கள் நிச்சயமாக ஒரு நாள் இங்கு திரும்பி வந்து மண்வெட்டியை கையில் எடுத்து, ஏர் பூட்டி உழுவார்கள்," என்று கொரோனா மற்றும் பொதுமுடக்க அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறுகிறார்.
பூனம் பிஷ்ட், இந்த வயல்களில் உளுந்து, பயறு, சோயாபீன் ஆகியவற்றை அறுவடை செய்து வருகிறார். இவர் சௌபட்டாகால் கல்லூரியில் பி.எஸ்சி படித்துள்ளார்.
"வயல்களில் வேலை செய்வதால் எந்தப் பலனும் இல்லை. இதைவிட ஒரு வேலையை தேடிக்கொள்வதே நல்லது" என்கிறார் அவர்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, மக்கள் விவசாயத்தை விட்டுவிட்டு, வேலைக்காக சமவெளி பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர்.
எரியாற்றல் மற்றும் வளங்கள் கழகம் (The Energy and Resources Institute) மற்றும் பாட்ஸ்டாம் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி கழகம் (Potsdam Institute for Climate Impact Research) இந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, வரும் ஆண்டுகளில் இது மேலும் வேகமெடுக்கும்.
மாநிலத்தில் விவசாய நிலங்கள் தரிசாதல் மற்றும் இடப்பெயர்வுக்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம் என்று உத்தராகண்ட் ஊரக வளர்ச்சி மற்றும் இடப்பெயர்வு ஆணையம், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தின் மக்கள்தொகையில் 66% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் மலை மாவட்டங்களில் உள்ளனர் என்று இடப்பெயர்வு ஆணையத்தின் 2019 ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.
மலைகளில் விவசாயிகளின் நிலங்கள் மிகவும் சிறியதாகவும், இங்கும் அங்குமாக உள்ளன. இங்கு 10% வயல்களில் மட்டுமே பாசன வசதி உள்ளது. மீதமுள்ள வயல்கள், மழையை நம்பி உள்ளன.
2001 மற்றும் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை தரவுகளின்படி, மாநிலத்தின் பெரும்பாலான மலை மாவட்டங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. அல்மோரா மற்றும் பெளரி மாவட்டங்களின் மக்கள் தொகையில், 17,868 பேர் நேரடியாகக் குறைந்துள்ளனர்.
ஒரே குடும்பம் எஞ்சியிருக்கும் கிராமம்

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
சௌபட்டாகால் தாலுகாவின் மஜ்காவ் கிராம சபையின் பரத்பூர் கிராமத்தில் வசிக்கும் கடைசி குடும்பம், இந்த அறிக்கைகள் உண்மை என்பதை நிரூபித்தது. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் சிதிலமடைந்துள்ளன. சில வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. சில கதவுகள் உடைந்திருந்தன. அவற்றின் உள்ளே புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.
கிராமத்தில் வயல்வெளிகள் புதர்களுக்குள் மறைந்துள்ளன. யசோதா தேவி தனது கணவர், மருமகள் மற்றும் தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இரண்டு மகன்கள் டெல்லி மற்றும் குருக்கிராமில் வேலை செய்கிறார்கள். கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமலானபோது, மருமகள் தனது குழந்தைகளுடன் இங்கு திரும்பியுள்ளார்.
"கிராமத்தில் இப்போது எங்கள் ஒரே குடும்பம் மட்டுமே உள்ளது. சில சமயங்களில் திருமணம் அல்லது பூஜைக்காக மக்கள் இரண்டு நாட்களுக்கு வருவார்கள். பலர் நிந்ரமாக கிராமத்தை விட்டு சென்றுவிட்டார்கள்," என யசோதா தேவி குறிப்பிட்டார்.
யசோதா தேவி தனது வீட்டைச் சுற்றி பல மின்சார பல்புகளை பொருத்தியுள்ளார். இரவில் சிறுத்தைகள் வீட்டின் அருகே வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு.
"மூன்று அல்லது நான்கு சிறுத்தைகள் எங்கள் வீட்டை சுற்றிக் கொண்டிருக்கின்றன. நான்கு நாட்களுக்கு முன்பு அவை எங்கள் கன்றுக்குட்டியைக் கொன்றுவிட்டன. எங்கள் குழந்தைகளுக்காக நாங்கள் மிகவும் பயப்படுகிறோம். வனத்துறையினரிடம் சொன்னால் உங்கள் வீட்டைச் சுற்றி இருக்கும் புதர்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள். நாங்கள் எத்தனை புதர்களை வெட்டுவோம் என்று சொல்கிறார்கள்," என அவர் கூறினார்.
"பயிர்களை, காட்டுப்பன்றிகள் சாப்பிட்டு விடுகின்றன. மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. மின்சாரம் இல்லை. பன்றிகள் கூட்டம் வயல்களுக்குள் புகுந்துவிட்டது. இரவில் அதை விரட்ட யார் போகமுடியும். இப்போதெல்லாம் மழை பெய்தால் பெய்துகொண்டே இருக்கிறது அல்லது மழை வருவதே இல்லை," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கிராமமும் காலியாகிவிடும்

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
நவுலு கிராமமும் பரத்பூர் கிராமத்தைப்போலவே குடிபெயர்வின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது. பெரும்பாலான கிராமக் குடும்பங்கள் இப்போது நகரங்களுக்கு குடியேறிவிட்டன.
"இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் எங்கள் கிராமமும் சூனியமாகிவிடும். சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக வெளியேறுகின்றன. சில குடும்பங்கள் நலிவடையும் விவசாயம் மற்றும் வன விலங்குகளின் அச்சுறுத்தலால் குடிபெயர்கின்றன," என்கிறார் இங்குள்ள விவசாயி சர்வேஷ்வர் பிரசாத் தெளண்டியால்.
"ஒரு காலத்தில் எங்கள் பண்ணைகளில் பூண்டு, வெங்காயம், மிளகாய் நிரம்பியிருக்கும், விற்பனை செய்வதே கடினமாக இருக்கும். வயல்கள் நிரம்பியிருக்கும். நாங்கள் நெல், வரகு, சிறுதானியங்கள், கோதுமை, பருப்பு போன்றவற்றை பயிரிட்டோம். எங்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் அவர்களுக்கு பருப்பு-தானியம் போன்றவற்றை நாங்கள் கொடுப்போம். இப்போது எதுவும் இல்லை. கிராமத்தின் நீர் ஆதாரங்களில் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டது, இதனால் வயல்களில் நீர்ப்பாசனம் கடினமாக உள்ளது. சிறிய அளவில் விவசாயம் செய்தாலும் விலங்குகள் அதை விட்டுவைப்பதில்லை," என்று அவர் கூறினார்.
சர்வேஷ்வர் தனது வீட்டு மாடியில் காய்ந்த உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை காட்டுகிறார். " காட்டு விலங்குகள் சாப்பிட்டதால், குடும்பத்திற்கு தேவையான அளவுகூட கிடைக்கவில்லை. முன்பு எல்லோரும் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள். ஆகவே விலங்குகளால் ஏற்படும் நஷ்டம் எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக இருந்தது. இப்போது சில வயல்வெளிகளே மிச்சமிருப்பதால் பறவைகளும் அங்கு வருகின்றன, மிருகங்களும் வரும், மனிதர்களும் இதைக்கொண்டுதான் வாழ வேண்டும். இங்குள்ள எங்கள் குழந்தைகளுக்கு அரசு, வேலை வாய்ப்பு அளித்திருந்தால், அவர்கள் புலம் பெயர்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மருமகள்கள் வீடுகளில் தங்கியிருந்தால் வயல்களும் பசுமையாக இருந்திருக்கும். இது எங்கள் தேவபூமி. நாங்கள் ஏன் இந்த மண்ணை விட்டுச் சென்றிருக்கப் போகிறோம்," என வினவுகிறார் சர்வேஷ்வர்.

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
ஹரியாணாவில் வளர்ந்த நிர்மலா செளந்தர்யால், 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்திற்குப் பிறகு பெளரியின் குயி கிராமத்தில் வசிக்க வந்தார். அப்போது இவரது கிராமத்தில் 80 குடும்பங்கள் இருந்தன. இப்போது 30 குடும்பங்கள் எஞ்சியுள்ளன.
"கிராமத்தில் மக்கள் அதிகமாக இருந்தபோது, வயல்வெளிகள் பசுமையாக இருந்தன. புதர்கள் இல்லை. காட்டு விலங்குகளின் பிரச்சனை இல்லை. இப்போது ஆட்கள் குறைவாக இருப்பதால், அவர்கள் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன. விவசாயம் செய்த மலைகளில் ஊசியிலை காடுகள் வளர்ந்துள்ளன. கோடை காலத்தில் இந்த காடுகளில் தீப்பிடித்தாலும், எங்கள் கிராமங்களை நோக்கி விலங்குகள் வரும். காட்டில் அவற்றுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்காததால், எங்கள் கால்நடைகளை அடித்துச்சாப்பிடும்," என்று அடுப்பில் சமையல் செய்துகொண்டே நிர்மலா கூறுகிறார்.
விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றம்
"தற்போது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் விவசாயத்தில் தெளிவாகத் தெரியும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். புவி வெப்பமடைதல் ஏற்பட்டால், வளரும் பயிர்கள் உயரமான இடங்களுக்கு மாறும் என்று முன்பு கூறப்பட்டது. வெப்பநிலை அதிகரிப்போடு கூடவே மழை மற்றும் பனிப்பொழிவு முறையும் மாறிவிட்டது என்பதை வானிலை நமக்கு காட்டுகிறது," என்று ஜிபி பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் தேஜ் பிரதாப் தெரிவித்தார்.
"இந்த ஆண்டு மே மாதத்தில் கோடையில் அதிக மழை பெய்தது. ஆனால் அடுத்த ஆண்டும் இதுபோன்ற மழை பெய்யும் என்றும் சொல்லமுடியாது. வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் எதிர்பாராதவை. இதனால் விதைகளை எப்போது விதைப்பது என விவசாயிகளுக்குத் தெரியாது. விதைகளை விதைத்து, அதன் பின் அதிக மழை பெய்தால், பயிர்கள் கெட்டுவிடும். விதைக்கும் நேரத்தில் போதிய மழை இல்லாவிட்டாலும், பயிர் சேதமடையும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"கடந்த 10-15 ஆண்டுகளாக விதைப்பு நேரம் மற்றும் மழைப்பொழிவு முறை ஆகியவற்றில் இந்த மாற்றங்களை நாங்கள் கவனிக்கிறோம். அறுவடைக்கான நேரம் இது. அக்டோபர் மாதத்தில் எதிர்பாராத மழை பெய்ததால் விவசாயிகளின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது," என்கிறார் அவர்.
"பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், வரும் காலங்களில் கடுமையான வானிலை நிகழ்வுகள் அதிகரித்து, நீண்ட வறட்சி ஏற்படும் என்பது உறுதி. விவசாயம் சார்ந்த சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்," என டாக்டர் தேஜ் பிரதாப் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் 2019 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் அறிக்கையின்படி பருவநிலை மாற்றம் காரணமாக விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மழை, தாமதமான பருவமழை, நீர்ப்பாசன ஆதாரங்கள் வறண்டு போவது போன்ற காரணங்களால் மாநிலத்தில் விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது.
பருவநிலை மாற்றம், மனித-வனவிலங்கு மோதலை அதிகரிக்கிறதா?

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
"பருவநிலை மாற்றத்தையும், மனித - வனவிலங்கு மோதலையும் நேரடியாக இணைக்க முடியாது. ஆனால் புவி வெப்பமடைதல் அதிகரிப்பதால், காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது தெளிவாகிறது," என்று வனவிலங்குகளுக்காகப் பணிபுரியும் WWF இந்தியா அமைப்பின் வனவிலங்கு மற்றும் வாழ்விட திட்டத்தின் இயக்குநர் டாக்டர். தீபாங்கர் கோஷ் கூறுகிறார்.
"இது காடுகளின் தரத்தை பாதிக்கிறது. மரம் செடிகள் தீயில் அழிந்தால், அவற்றின் காய், பழங்களை உணவுக்காக நம்பியிருக்கும் வனவிலங்குகளுக்கு உணவுப் பிரச்சனை ஏற்படும். இருப்பினும், இது குறித்து மிகக் குறைந்த ஆய்வுகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன."என்று அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் பிவாஷ் பாண்டவ் குறிப்பிடுகிறார். உயரமான இமயமலைப் பகுதிகளில் கரடிகளுடன் மோதல் அதிகரித்து வருவதற்கான உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
"கரடிகள் முன்பு 4-5 மாதங்களுக்கு முழுமையான உறக்கநிலையில் (Hybernation) இருக்கும். ஆனால் பனிப்பொழிவு குறைவாக இருப்பதால் அவற்றின் உறக்கநிலை நேரம் குறைந்து வருகிறது. லடாக்கின் த்ராஸ் மற்றும் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில், கரடிகள் ஒரு மாதம் கூட உறக்க நிலைக்குச் செல்வதில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், பௌரி உள்ளிட்ட மத்திய இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் மனித - வனவிலங்கு மோதல் சம்பவங்களை சமூகப் பிரச்சனையாக அவர் கருதுகிறார்.
"இடப்பெயர்வு, வயல்கள் தரிசாதல், வயல்களை பராமரிக்க போதிய ஆட்கள் இல்லாததால் மலைப்பகுதியில் மனித-வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வருகின்றன. காட்டுப்பன்றி கூட்டம் முதலில் 100 ஏக்கரில் விவசாயத்தை சேதப்படுத்தியது என்று வைத்துக்கொள்வோம். இப்போது 40 ஏக்கர் மட்டுமே பயிரிடப்படுவதால், சேதத்தின் தீவிரத்தை நாம் அதிகம் உணர்கிறோம். வயல்கள் தரிசாக மாறுவதால் புதர்களும் அதிகரித்துள்ளது. சிறுத்தை போன்ற விலங்குகள் அவற்றுக்குப் பின்னால் எளிதில் மறைந்துகொண்டு கிராமத்தை நெருங்கி வருகின்றன," என்று கூறினார் டாக்டர் பிவாஷ் பாண்டவ்.
எதிர்மறை சூழ்நிலையிலும் திரும்பி வரும் மக்கள்

பட மூலாதாரம், VARSHA SINGH/BBC
குட்டு தேவ்ராஜ் மலையின் தரிசாகிப்போன சரிவை சீர் செய்வதில் மும்முரமாக இருக்கிறார். 2020ம் ஆண்டில் கொரோனா காலத்தில் அவர் பெளரியின் பொக்காரா தொகுதியில் உள்ள தனது கிராமமான கடோலிக்கு திரும்பினார்.
"டெல்லியில் சுமார் 35 ஆண்டுகள் இருந்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பியபோது எங்கள் முன்னோர்களின் நிலம் தரிசாக இருப்பதைப் பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது. நகரத்திலிருந்து கிராமத்திற்குத் திரும்பிய சுமார் 15 பேர் தங்கள் தரிசான வயல்களை மீட்டெடுக்க முடிவு செய்தனர்," என்று அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு ஜூன் மாதம் வேலையைத் தொடங்கினோம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் வரை 5 - 6 பேர் மட்டுமே எஞ்சியுள்ளோம். மற்ற அனைவரும் மீண்டும் நகரத்திற்கு சென்றுவிட்டனர். இந்த ஒன்றரை ஆண்டுகளில், எங்கள் வயல்களில் சுமார் 200 கிலோ தக்காளி, 200 கிலோ பூண்டு என நல்ல விளைச்சலை விளைவித்துள்ளோம்," என்றார் அவர்.
இந்த 35 ஆண்டுகளில் கிராமத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரிடம் கேட்டபொது, "ஒரு காலத்தில் ஹிசார், கிம்கோரா, செமல் உள்ளிட்ட காட்டுப் பழங்கள் இங்கு இருந்தன. ஆனால் வெய்யில் - மழை காலம் மாறிவிட்டது. ஒருவேளை அதனால்தான் அவற்றை இப்போது பார்க்கமுடிவதில்லை போல," என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
பிற செய்திகள்:
- “கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள்
- பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா செய்ய வேண்டிய கடமை என்ன? அதற்கு முன் உள்ள சவால் என்ன?
- ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை
- “முகமது ஷமியை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள்”: விராட் கோலி
- முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?
- ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுதலை: போதை வழக்கில் கைதானவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












