முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?

பசும்பொன்னில் நடந்தவரும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் வருடந்தோறும் பங்கேற்கும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை. என்ன காரணம்?
விடுதலைப் போராட்ட வீரரும் தொழிற்சங்கவாதியுமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜை விழா பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்துவருகிறது. இன்று காலை முதல் தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதற்குப் பிறகு, அ.தி.மு.கவின் சார்பில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, நத்தம் விசுவநாதன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஆனால், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்த அங்கு வராதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் குரு பூஜைக்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் வரத் தவறியதே கிடையாது. ஆனால், இந்த ஆண்டு திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார் போன்ற முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, முதல்முறையாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு நேற்றே அஞ்சலி செலுத்தியதோடு, பசும்பொன்னிற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், அ.தி.மு.கவின் ஆட்சிக் காலத்தில் மிக பிற்படுத்தப்பட்ட பிரிவில், வன்னியர்களுக்கென தனியாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளித்தது, அதே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள முக்குலத்தோரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது. இதன் காரணமாக, எடப்பாடி கே. பழனிசாமி பசும்பொன்னிற்கு வரவில்லையென பேச்சுகள் பரவின.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கேட்டபோது, "நீங்கள் சொல்லும் எந்தக் காரணமும் இல்லை. எடப்பாடி கே. பழனிசாமிக்கு உடல்நலம் சரியில்லை. ஏற்கனவே குடலிறக்க நோய்க்காக அறுவை சிகிச்சை செய்தவர். அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. எந்த நேரம் வேண்டுமானாலும் கூடுதல் சிகிச்சை அவருக்குத் தேவைப்படலாம். அதனால், அவர் வரவில்லை.
ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, அவரது மனைவி மறைந்து அறுபதாவது நாள் இன்று. இதனால் சில சடங்குகளை அவர் செய்ய வேண்டியுள்ளது. இன்று மாலை 7 மணிக்கு விளக்கேற்றிய பிறகே அவர் கோவில் போன்ற இடங்களுக்கு வர முடியும். அதனால்தான் அவர் தேவர் நினைவிடத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தேவரின் நினைவிடத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசனும் இதே கருத்தையே பிரதிபலித்தார். நவம்பர் ஒன்றாம் தேதி ஓ. பன்னீர்செல்வம் தேவரின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
இதற்கிடையில், எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், செய்தியாளர்களிடம் ஏதும் பேசாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஓ. பன்னீர்செல்வம் தேனியில் உள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.
"சசிகலாவுக்காக இவர்கள் வரவில்லையென்பது வீண் கற்பனை. யார் யாரோ வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள். அதையெல்லாம் பார்க்க முடியுமா?" என்கிறார் ஆர்.பி. உதயகுமார்.
அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்ற பிறகு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அ.தி.மு.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தனியாக வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்திவிட்டு வெளியல் வந்தவரிடம், நேற்று அ.தி.மு.க. கொடி மற்றும் தொண்டர்களுடன் வி.கே சசிகலா தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். "அ.தி.மு.க. கொடியை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம். எல்லாரும் இணைந்து செயல்படுவதையே தொண்டர்கள் விரும்புகின்றனர்" என்றார்.
இன்று பசும்பொன் கிராமத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் அதிகமானோர் அஞ்சலி செலுத்தி வருவதால் காவல்துறை ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. அன்பு தலைமையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 8500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிற செய்திகள்:
- “பணக்கார நாடுகள் தங்களின் தடுப்பூசி மருந்தை ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்” இந்தோனீசிய அதிபர்
- ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ரகசியப் போர் தொடுக்கும் தாலிபன்
- பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எவ்வாறு செயல்படுகிறது?
- ’என்னங்க சார் உங்க சட்டம்’: சினிமா விமர்சனம்
- புனித் ராஜ்குமார் மரணம்: “உடற்பயிற்சி செய்வதில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








