இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையின் பலம் என்ன? எங்கெல்லாம் தாக்க முடியும்?

அக்னி

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், நேயாஸ் ஃபாருக்கி
    • பதவி, பி பி சி உருது செய்தியாளர்

ஐயாயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய அக்னி-5 என்ற ஏவுகணையை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்தியா புதன்கிழமை மாலை வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

'நைட் ஆபரேஷன் மோட்' முறையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது செலுத்தப்பட்ட போது, ஏவுகணையின் திசை மற்றும் வேகம் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருந்ததால் பதினைந்து நிமிடங்களில் இலக்கைத் தாக்கியது.

குறைந்தது 5500 கி மீ தூரம் வரை செல்லக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைக்கு இணையானது இது.

இந்த வெற்றிகரமான சோதனையானது இப்போது இந்த ஏவுகணை முற்றிலும் பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளது என்பதையும் குறிக்கிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஏவுகணைச் சோதனை ஒரு முக்கியமான நிகழ்வாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

அக்னி-5 ஏவுகணை என்பது என்ன?

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக நீண்ட தூரம் சென்று வெற்றிகரமாகத் தாக்கக்கூடிய ஏவுகணை இது.

அதாவது, கிட்டத்தட்ட முழு சீனா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் இந்த ஏவுகணை வரம்பில் வரும்.

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஐம்பதாயிரம் கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை 1500 கிலோ எடையுள்ள ஆயுதத்தைச் சுமந்து செல்லக்கூடியது.

அதாவது இந்தியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.

எளிதாக ஏவலாம்

இந்த ஏவுகணை கேனிஸ்டரைஸ்(பெட்டியில் அடைக்கப்பட்டது) செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. அதாவது இது சாலை மற்றும் ரயில் இரண்டிலிருந்தும் ஏவப்படலாம்.

இதைக் குறைந்த கால அளவில் எளிதாக ஏவமுடியும் என்பது இந்த ஏவுகணையின் மற்றொரு சிறப்பம்சமாகும். அனைத்து வானிலைச் சூழலிலும் பாதுகாக்கப்படவும் ஏவப்படவும் இந்த கேனிஸ்டரைசேஷன் உதவுகிறது.

அக்னி-5 முதன்முதலில் 2012ஆம் ஆண்டு சோதனை செய்யப்பட்டது. இது வரை இந்த ஏவுகணை ஐந்தாறு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

அக்னி

பட மூலாதாரம், Reuters

இந்திய அரசின் 'ஸ்ட்ரேடஜிகல் ஃபோர்சஸ் கமான்ட்' என்ற துறையால், எந்த வெளியுதவியுமின்றி நடத்தப்பட்டதால், இந்தச் சமீபத்திய சோதனை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துறை இந்தியாவின் அணு ஆயுதங்களுக்குப் பொறுப்பான துறையாகும்.

இந்தியா 1989 ஆம் ஆண்டு அக்னி-1 ஏவுகணை மூலம் அக்னி தொடர் ஏவுகணைகளைச் சோதிக்கத் தொடங்கியது. அக்னி-1 1000 கி மீ செல்லக்கூடிய நடுத்தர தூர ஏவுகணையாகும்.

அப்போது அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்தன.

இதுவரை இந்தியப் பாதுகாப்புப் படைகளிடம் தற்போது வரை, 700 கி.மீ., துாரம் தாக்கும் அக்னி-1 ஏவுகணைகளும், 2000 கி.மீ., துாரம் தாக்கும் அக்னி-2 ஏவுகணைகளும், 2500 கி.மீ., வரை சென்று தாக்கும் அக்னி-3 ஏவுகணைகளும், 3500 கி.மீ வரை சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணைகளும் உள்ளன.

அக்னி-5-ன் நீண்ட தூரம் மற்றும் அணுசக்தி திறன் காரணமாக, சீனாவை மனதில் வைத்து இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதே நேரத்தில், பாகிஸ்தான் போன்ற நெருங்கிய இலக்குகளுக்கு பழைய அக்னி ஏவுகணைகள் போதுமானது என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவிலும் சுற்றியுள்ள பிராந்தியத்திலும் இதன் தாக்கம்

அக்னி-5 இன் வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் கொள்கையான 'க்ரிடிகல் மினிமம் டிடரன்ஸ்' அதாவது, 'நம்பகமான குறைந்தபட்சத் தடுப்பு' மற்றும் முதலில் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கைக்கு இணங்கவே அமைந்திருப்பதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தற்காப்புத் தன்மை கொண்டவை என்றும் அது 'முதல் தாக்குதலுக்கு' அல்ல என்றும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.

இந்தியாவின் வெற்றிகரமான ஏவுகணைச் சோதனைக்கு சீனா இன்னும் எதிர்வினையாற்றவில்லை. ஆனால் செப்டம்பரில் அக்னி-5 ஏவப்படும் என்ற ஊடக அறிக்கைகள் குறித்துக் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சியாவோ லிஜியன், அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவது அனைவருக்கும் நலம் பயக்கும் என்று கூறியிருந்தார். இதற்கு அனைத்துத் தரப்பினரும் சாதகமான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என நம்புகிறோம் என அவர் தெரிவித்திருந்தார்.

அக்னி

பட மூலாதாரம், JUNG YEON-JE

இந்த ஏவுகணைச் சோதனை, இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் சில பாதுகாப்பு வல்லுநர்கள் இதை மிகவும் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர்.

விமர்சகர்கள் கருத்து

பாதுகாப்புத் துறை விமர்சகரும் 'டோர்ஸ்டெப்: மேனேஜிங் சைனா த்ரூ மிலிட்டரி பவர்' நூலின் ஆசிரியருமான பிரவின் சாவ்னி கூறுகையில், "அக்னி-5-ன் இந்த வெற்றிகரமான சோதனை முக்கியமானது, ஏனெனில் இந்த ஏவுகணை இப்போது ராணுவ பயன்பாட்டிற்கு வரும். ஆனால் சீனாவை எதிர்ப்பது தான் இதன் நோக்கம் என்றால், இந்தியா அதில் வெற்றி பெற்றுள்ளதா என்பது தான் இப்போது எழும் கேள்வி. மே 2020 இல், சீன இராணுவம் வந்து இந்திய நிலத்தை ஆக்கிரமித்ததைப் பார்த்ததால் நான் அப்படிக் கருதவில்லை. " என்கிறார்.

அக்னி-5 இந்தியாவிற்கு செகன்ட் ஸ்ட்ரைக் அதாவது பதிலடி கொடுக்கும் திறனை வழங்குகிறது.

ஆனால் சாஹ்னி, "தடுப்புப் பணியை இது செய்யவில்லை. இந்தியாவை விட சீனா அதிக அணுசக்தி திறன் கொண்டது என்ற எளிய காரணத்தினால் பதிலடி கொடுக்கவும் இது உதவாது. இப்போது இந்த ஏவுகணை, சேவைக்கு வருவதைப்பற்றி மகிழ்ச்சியே. ஆனால் இந்தியா அதன் பயன்பாட்டு முறை மற்றும் அதன் அணுசக்தி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :