புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம மக்களே களமிறங்கி தூர் வாரிய கால்வாய்: 25 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஓடும் கால்வாய்

பட மூலாதாரம், Vedimuthu Chinnakkalai
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் தூர்ந்து போன ஏரிக் கால்வாயை பொதுமக்களே இறங்கி தூர்வாரிய நிகழ்வு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் ஆவூர் அருகே செங்களாக்குடி கிராமத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது.
தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவின் கண்காணிப்பில் உள்ள இந்த பெரிய குளத்துக்கு நீர்பழனி, ஒளவையார்பட்டி கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீரை திருப்பி விடுவதற்காக ஒரண்டக்குடி அருகே காமராஜர் முதலமைச்சராக இருந்த போது "செங்களாக்குடி அணைக்கட்டு" கட்டப்பட்டது.
மேலும் இங்கிருந்து பெரிய குளத்துக்கு நீரை கொண்டு செல்வதற்காக சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கால்வாயும் வெட்டப்பட்டது. இதன்மூலம் பெரிய குளம் நிரம்பினால் செங்களாக்குடி, மேலப்பட்டி, சீத்தப்பட்டி, மேலக்காடு, புதுநகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். காலப்போக்கில் இந்த கால்வாய் பராமரிப்பின்றி ஆங்காங்கே தூர்ந்து போனது.
அணைக்கட்டில் இருந்து பெரிய குளத்துக்கான நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் செங்களாக்குடி பெரிய குளம் வறண்டதுடன், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து. இதையடுத்து கிணற்றுப் பாசனமும் பொய்த்துப் போனது. பெரிய குளத்துக்கான வரத்து வாரிகள், அணைக்கட்டு வாய்க்காலை தூர்வார வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவு, நீர்வளத் துறையினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இப்பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு ₹ 12.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் கன மழையால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால் செங்களாக்குடி பெரியகுளம் மட்டும் பாதி கூட நிரம்பவில்லை. அணைக்கட்டு கால்வாயில் இருந்து இங்கு வர வேண்டிய நீர், அணைக்கட்டு கலிங்கு வழியாக காட்டாற்றுக்கு சென்று, பின்னர் கோரையாற்றில் கலந்து வீணானது.

பட மூலாதாரம், Vedimuthu Chinnakkalai
பக்கத்து ஊர் குளங்களெல்லாம் நிரம்பி வழிந்த நிலையில், தங்கள் ஊர்க் குளம் மட்டும் இப்படி கிடக்கிறதே எனவும் வேதனைப்பட்ட செங்களாக்குடி கிராம மக்கள் உடனடியாக ஊர்க் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். கிராம மிராசுதார் மு.வேலுச்சாமி, பட்டையதாரர் பொ.பாலுச்சாமி, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் அ.சேகர், அண்ணா மன்ற தலைவர் ச.சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், குளத்து பாசனதாரர்கள், பொதுமக்களிடமிருந்து குடி வரி வசூலித்து , அதன் மூலம் தாங்களே கால்வாயை தூர் வாரி, அணைக்கட்டு நீரை குளத்துக்கு கொண்டு வர முடிவு செய்தனர். இதன்படி சுமார் ₹ 2 லட்சம் திரட்டினர். கடந்த 8, 9, 10-ம் தேதிகளில் பணிகளை மேற்கொண்டனர். இதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு அணைக்கட்டு ஷட்டர்களில் இருந்து தண்ணீர் வெளியேறியது. சீரமைத்த கால்வாய் வழியாக பெரிய குளத்துக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது.
பெரிய குளமும் வேகமாக நிரம்பி வருவகிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர்.
இதையறிந்த முன்னாள் அமைச்சரும், அத்தொகுதி எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் அங்கு சென்று, சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம மக்களைப் பாராட்டினார். தனது பங்களிப்பாக ரூ.5 ஆயிரம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி) வே.பாலகிருஷ்ணன் நேற்று மாலை, அந்த கிராமத்துக்குச் சென்று கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்கள், கிராம மக்களைச் சந்தித்தார்.

பட மூலாதாரம், Vedimuthu Chinnakkalai
அப்போது "எந்த ஒரு செயலுக்கும் அரசை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தங்கள் ஊருக்காக, தாங்களே முன்னின்று நற்பணி செய்யும் கிராம மக்களை, இந்த காலத்திலும் காண்பது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால், உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே திருச்சியிலிருந்து இங்கு வந்தேன். இக்கிராமத்தின் மேம்பாட்டுக்காக காவல்துறை சார்பில் முடிந்த உதவிகளை செய்கிறோம்" என்றார்.
இதையடுத்து "தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டு கால்வாயின் பக்கவாட்டு கரைகளை வலுப்படுத்தி, நிரந்தரமாக சரிசெய்து கொடுக்க உதவ வேண்டும்" என ஐ.ஜி.யிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க உதவியாக இருப்பதாக ஐ.ஜி பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.
மேலும், அணைக்கட்டு நீர் வராத நிலையிலும், கன மழை காரணமாக கடந்த 2005-ம் ஆண்டு இந்த குளம் கடைசியாக நிரம்பியது. அதற்குப்பின் தற்போதுதான் முழு கொள்ளளவை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.இது குறித்து நீர்வளத்துறை பொறியாளர்களிடம் கேட்டதற்கு, பெரிய குளத்திற்கான வரத்து வாய்க்காலை சீரமைத்து, தூர் வார திட்டமிட்டு, கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழைத் தண்ணீரை வீணடிக்க கூடாது என்று தற்போது மக்களே சீரமைத்துள்ளனர். இது தற்காலிகம்தான். அடுத்த கட்டமாக கால்வாயை மேலும் வலுப்படுத்தி சீரமைக்க உள்ளோம் என்கின்றனர்.
பிற செய்திகள்:
- வெள்ளத்தை உறிஞ்சும் சீனாவின் 'ஸ்பாஞ்ச் நகரம்' கட்டமைக்கப்படுவது எப்படி?
- பாகிஸ்தானின் கோப்பை கனவு ஆஸ்திரேலியாவின் சிக்ஸர்களால் சுக்குநூறானது எப்படி?
- கரையைக் கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை ஆய்வு மையம்
- மழையில் உயிருக்கு போராடிய இளைஞரை தோளில் தூக்கிவந்து காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
- ஜெய்பீம் சர்ச்சையில் அன்புமணிக்கு சூர்யா பதில்: "பெயர் அரசியலில் படத்தை சுருக்க வேண்டாம்"
- அரைகிலோ எடையுடன் பிறந்த குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













