அமெரிக்காவில் அரை கிலோ எடையுடன் பிறந்த குழந்தை: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை

பட மூலாதாரம், UNIVERSITY OF ALABAMA AT BIRMINGHAM
அமெரிக்காவில் 21 வாரம் 1 நாள் கர்ப்பத்தில் பிறந்த அரை கிலோவுக்கு குறைவான எடை கொண்ட குழந்தை உலகிலேயே குறைவான கர்ப்ப காலத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கிற குழந்தை என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.
கர்டிஸ் மீன்ஸ் என்ற அந்தக் குழந்தையை அமெரிக்காவின் அலபாமா மாகணத்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் பிரசவித்தார் அவரது தாய் மிஷல் பட்லர்.
பிறக்கும்போது கர்டிசின் எடை வெறும் 420 கிராம்தான்.
தற்போது கர்டிசுக்கு ஒரு வயது 4 மாதம்.
பொதுவாக கர்ப்பக்காலம் என்பது 40 வாரங்கள். ஆனால் கர்டிஸ் 19 வாரங்கள் முன்னதாகவே பிறந்துவிட்டார்.
மிஷல் பட்லர் 2020 ஜூலை 4ஆம் தேதி பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால் வானில் வான வேடிக்கைகள் நிறைந்திருந்தன.

பட மூலாதாரம், UNIVERSITY OF ALABAMA AT BIRMINGHAM
அடுத்தநாள் பகலில் கர்டிஸ் மற்றும் ஆஸ்யா என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் மிஷல். ஆஸ்யா ஒரு நாளைக்குப் பிறகு இறந்துவிட்டார். இம்மாதிரியான நேரங்களில் மருத்துவமனை பெற்றோருக்கு பிரத்யேக கவனிப்பை வழங்குகிறது. முடிந்தவரை குழந்தையை அவர்களுடன் வைத்து கொள்ளலாம்.
ஆனால் பிழைப்பதற்கு ஒரே ஒரு சதவீத வாய்ப்பை மட்டுமே கொண்டிருந்த கர்டிஸ் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். 275 நாட்கள் மருத்துமனையில் இருந்தபிறகு இந்த வருடம் ஏப்ரல் மாதம் கர்டிஸ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.
இருப்பினும் மூச்சுவிடுவது எப்படி என்றும் வாயால் உண்பது எப்படி என்றும் அந்தக் குழந்தைக்கு மருத்துவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
கர்டிஸை வீட்டுக்கு அழைத்து வந்து அவனது சகோதரர்கள் மகிழ்ச்சியடைவதை பார்க்கும் தருணத்துக்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்ததாக தெரிவித்தார் மிஷல்.

பட மூலாதாரம், UNIVERSITY OF ALABAMA AT BIRMINGHAM
கர்டிசுக்கு மூன்று உடன் பிறந்தோர் உள்ளனர். மருத்துவர்கள், குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்தாலும், அவருக்கு கூடுதல் ஆக்சிஜன் மற்றும் உணவு ஊட்டும் குழாய் இப்போதும் தேவை.
பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தின் பச்சிளம் குழந்தை நிபுணரும் பட்லருக்கு பிரசவம் பார்த்த மருத்துவருமான பிரயன் சிம்ஸ், இந்த கின்னஸ் சாதனை குறித்து கூறுகையில், "நான் இந்த துறையில் 20 வருடமாக இருக்கிறேன். இந்த அளவில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையை நான் பார்த்தது இல்லை. கர்டிஸ் தனித்துவமானவன்" என்றார்.

பட மூலாதாரம், UNIVERSITY OF ALABAMA AT BIRMINGHAM
24 மணிநேரம் சீக்கிரமாகப் பிறந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளான் கர்டிஸ்.
இதற்கு முன்பு இந்த சாதனையை வைத்திருந்த குழந்தை ரிச்சர்ட் ஹச்சின்சன், 21 வாரங்கள் இரு நாட்களில் பிறந்தான். இந்த சாதனையை ரிச்சர்ட் ஹச்சிசன் 1 மாதம் முன்புதான் நிகழ்த்தியிருந்தான்.
ரிச்சர்டுக்கு முன்பாக இந்த சாதனை கடந்த 34 வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்தது. கனடாவின் ஓட்டாவா நகரத்தில் 21 வாரங்கள் ஐந்து நாட்களில் பிறந்தது அந்த குழந்தை.
பிற செய்திகள்:
- `பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்` - COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு
- 'அந்த 3 ஓவர்கள்' இங்கிலாந்தை நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
- முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?
- மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












