COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு: `பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்`

ஷி

பட மூலாதாரம், Reuters

அடுத்த பத்து வருடங்களுக்கு பருவநிலை மாற்ற பிரச்னை தொடர்பான தீர்வு நடவடிக்கைகளில் சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 பருவநிலை மாநாட்டில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

சமீப காலமாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே பதற்ற நிலை நிலவி வந்த சூழலில் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

இருநாடும் இணைந்து ஒரு அரிய உறுதிப்பாட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பாரிஸ் ஒப்பந்தத்தில் 1.5செல்சியஸ் வெப்பநிலை என்ற இலக்கை நோக்கி இருநாடும் இணைந்து செயல்படும் என்று வழங்கிய உறுதிப்பாட்டை மீண்டும் நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளன.

அதேபோன்று இந்த இலக்கை அடைய இருநாட்டிற்கு இடையே இருக்கும் இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருநாடும் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பருவநிலை பிரச்னைகளை தவிர்க்க, தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக உலக வெப்பநிலை 1.5 செல்சியஸிற்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு பாரிஸில், உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸிலிருந்து 2 செல்சியஸ் வரை அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என உலக தலைவர்கள் உறுதியளித்தனர்.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

சீனாவின் முக்கிய பருவநிலை தூதர் ஷி ஷென்ஷுவா, "பருவநிலை மாற்றம் தொடர்பாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வேற்றுமைகளை காட்டிலும் அதிக ஒப்பந்தங்களே உள்ளன." என்று தெரிவித்தார்.

ஜான் கெர்ரி

பட மூலாதாரம், Reuters

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறுதிப்பாட்டில், மீத்தேன் உமிழ்வு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது, மற்றும் கார்பன் அற்ற சூழல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான நடவடிக்கைகள் குறித்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால் ஆபத்தான பசுமைக் குடில் வாயுவான மீத்தேனை குறைக்கும் ஒப்பந்தத்தில் சேர இந்த வாரத் தொட்டக்கத்தில் மறுத்துவந்தது சீனா.

இந்த ஒப்பந்தம் 100 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. இதற்கு மாறாக மீத்தேன் பிரச்னையை கையாளுவதற்கான தேசிய திட்டம் ஒன்றை வகுப்பதாக சீனா தெரிவித்திருந்தது. ஷியை தொடர்ந்து பேசிய அமெரிக்காவின் பருவநிலை மாற்ற தூதுவர் ஜான் ஜெர்ரி, பருவநிலை மாற்ற பிரச்னையை கையாள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதே ஒரே தீர்வு என்று தெரிவித்தார்.

"தற்போது ஒவ்வொரு அடியும் முக்கியம். இருநாடுகளும் இணைந்து நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது." என்றார் அவர்.

பருவநிலை குறித்த பிரசார அமைப்பான க்ரீஸ்பீஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெனிஃபர் மார்கன் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார். இருப்பினும் பருவநிலை மாற்ற பிரச்னைக்கான தீர்வை அடைவதில் இருநாடுகளும் மேலும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுமே 1.5 செல்சியஸ் என்ற இடைவெளியை அடைக்க ஒவ்வொரு வருடமும் அதுகுறித்த பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட கூடிய நாடுகள், தெரிவித்திருந்தது ஆனால் தற்போதைய ஒப்பந்தத்தில் அது குறித்து குறிப்பிடவில்லை என ஜெனிஃபர் தெரிவிக்கிறார்.

புகை

பட மூலாதாரம், Getty Images

"சீனா மற்றும் அமரிக்கா இணைவது பணிபுரிவதை பார்க்க ஆக்கப்பூர்வமாக உள்ளது," என ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை கொள்கை தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மான்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், "பருவநிலை மாற்ற சிக்கல் பிற பிரச்னைகளிலிருந்து வேறுபட்டது என்பதை சீனாவும் அமெரிக்காவும் தெரிந்து வைத்திருப்பதை இது காட்டுகிறது." என்றார்.

ஐநாவின் பொதுச் செயலர் ஆண்டானியோ குட்டரஸ், "சீனா மற்றும் அமெரிக்காவின் ஒப்பந்தம் சரியான பாதையில் துவங்கப்படும் முக்கிய நடவடிக்கை" என்றார்.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்கு பிறகு க்ளாஸ்கோவில் நடைபெற்று வரும் COP26 மாநாடு பருவநிலை பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு முக்கிய மாநாடு. இந்த மாநாட்டில் உலக வெப்பமயமாதலுக்கு காரணமான பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைக்க சுமார் 200 நாடுகள் தங்களின் திட்டங்களை வழங்க வேண்டும்.

COP26 மாநாடு எவ்வாறு உங்களை பாதிக்கும்?

COP26 மாநாட்டில் நாடுகள் ஒப்புக் கொள்ளும் விஷயங்கள் அன்றாட வாழ்வுடன் தொடர்புடையவையாக இருக்கும்.

உதாரணமாக நீங்கள் பெட்ரோல் கார் ஓட்டுகிறீர்களா மின்சார கார் போடுகிறீர்களா, உங்கள் வீட்டு பாய்லருக்கு கிடைக்கும் எரிபொருள் எதிலிருந்து கிடைக்கிறது அல்லது ஆண்டுக்கு நீங்கள் எத்தனை முறை விமானத்தில் பறக்கிறீர்கள் என்பன உள்ளிட்டவை இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் தாக்கத்துக்கு உள்ளாக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :