பருவநிலை மாற்றம்: சராசரி மனிதருக்கு உரியதை போல 30 மடங்கு கார்பன் உமிழும் 1%பணக்காரர்கள் - ஆய்வில் அம்பலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஸ்டெஃபானி ஹெகார்ட்டி
- பதவி, மக்கள் தொகை செய்தியாளர்
உலகின் வசதியான 1 சதவீதம் பேர் வெளியிடும் கார்பன் அளவு, புவி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்ஷியசுக்கு மேல் அதிகம் உயராமல் பார்த்துக்கொள்வதற்கு தேவையானதைவிட 30 மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது ஓர் ஆய்வு.
ஆனால், உலகின் மிக ஏழையான 50 சதவீதம் பேர் வெளியிடும் கார்பன் அளவு இந்த பருவநிலை இலக்குகள் நிர்ணயித்த வரம்பைவிட குறைவாகவே உள்ளன.
இரண்டு ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாடு நடந்து வரும் நிலையில் வந்துள்ளது.
"மிகச்சிறிய மேட்டுக்குடியினர் இந்த உலகை மாசுபடுத்தும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டுள்ளனர்," என்கிறார் ஆக்ஸ்ஃபாமை சேர்ந்த நஃப்டோகே டாபி.
ஐரோப்பிய சுற்றுச்சூழல் கொள்கைக்காக இந்த ஆய்வை நடத்தும்படி ஸ்டாக்ஹோம் என்விரோன்மென்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பை கேட்டுக்கொண்டது ஆக்ஸ்ஃபாம் அறக்கட்டளை.
"பணக்காரர்களின் மிதமிஞ்சிய உமிழ்வுகள்தான் உலகம் முழுவவதும் தீவிர வானிலை நிகழ்வுகளை தூண்டி, புவி வெப்பநிலையை கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளை பாதிக்கின்றன," என்கிறார் அவர்.
தொழில் புரட்சி காலத்துக்கு முந்திய காலத்தை ஒப்பிடும்போது புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற பருவ நிலை இலக்கை காப்பாற்றவேண்டுமானால், புவியில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கான பசுமை இல்ல வாயுக்களை மட்டுமே நம்மால் உமிழ முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
புவி பத்திரமாக இருக்கவேண்டுமானால், 2030 வாக்கில் புவி எவ்வளவு கார்பனை உறிஞ்சுகிறதோ அந்த அளவு மட்டுமே நாம் கார்பனை வெளியிடும் நிலையை அடைந்துவிடவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
நாம் வெளியிடத் தகுந்த கார்பன் அளவை புவியில் உள்ள எல்லா வயது வந்தோருக்கும் சராசரியாக பகுத்தால், 2030 வாக்கில் நாம் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 2.3 டன் கார்பனை மட்டுமே வெளியிடலாம் சராசரியாக.


பல வீடுகள், தனி ஜெட் விமானங்கள், சொகுசு யாக்ட் கப்பல்கள் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் இந்த சராசரி அளவைவிட பல மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள்.
சில பிரபலங்கள் மேற்கொண்ட விமானப் பயணங்களை அவர்களது சமூக ஊடகங்கள் மூலம் பரிசீலித்த ஓர் சமீபத்திய ஆய்வு அவர்கள் ஆண்டுக்கு 1000 டன்னுக்கு மேல் கார்பனை வெளியிடுவதாக கூறுகிறது.
ஆனால், அந்த 1 சதவீதம் பணக்காரர்கள் என்பவர்கள் பில்லியனர்கள் மட்டுமல்ல, மில்லியனர்கள்கூட அந்தப் பட்டியலிலில்தான் வருகிறார்கள். ஆண்டுக்கு 1.72,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கிற எவரும் அந்தப் பட்டியலில்தான் வருவார்கள்.
ஆண்டுக்கு 55 ஆயிரம் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கும் உலகின் 10 சதவீதப் பணக்காரர்கள் பட்டியலையும் இந்த ஆராய்ச்சி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அவர்களுக்கு உரிய பங்கைவிட 9 மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள்.

பட மூலாதாரம், Traci Curth
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள டோலெடோ பகுதியில் வசிக்கும் ட்ராசி கர்த் இந்த 10 சதவீதப் பணக்காரர்களுக்கான ஓர் எடுத்துக்காட்டு. அவர், அவரது கணவர், பதின் பருவ மகள் மூவரும் ஆளுக்கு ஒரு கார் வைத்திருக்கிறார்கள்.
தாங்கள் வசிக்கும் பகுதியில் எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.
அவர் வீட்டில் எப்போதும் ஏர்கண்டிஷனரோ, ஹீட்டரோ ஓடிக்கொண்டே இருக்கும். ஃப்ரீசர் பெட்டியில் எப்போதும் சிக்கனும், மாட்டுக்கறியும் இருக்கும். வாரம் நான்கு ஐந்து முறை அவர்கள் இறைச்சி சாப்பிடுகிறார்கள்.
இதெல்லாம் பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்களில் சாதாரணம் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Togonin Severin Togo
மாலியில் உள்ள ஆங்கில ஆசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டோகோனின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர் கார் வைத்திருக்கவில்லை. மொபெட்டில்தான் வேலைக்குப் போகிறார்.
உலகில் உள்ள 80 சதவீத மக்களைப் போலவே அவரிடம் கார் இல்லை. கார் எல்லாம் பணக்காரர்களுக்கு என்று அவர் நினைக்கிறார்.
சமீபத்தில் அவர் இறைச்சி சாப்பிடுவதை விட்டுவிட்டார். முன்பு வாரம் இரண்டு மூன்று முறை இறைச்சி சாப்பிடுவார். உலகின் 90 சதவீத மக்களைப் போல அவரும் ஏரோப்பிளேனில் போனதில்லை.
கழிவுகளை எரிப்பதால் உண்டாகும் மாசு குறித்து, அடுப்பு போன்றவற்றால் ஏற்படும் மாசு குறித்து அவர் கவலைப்படுகிறார்.


நடுத்தரத்தில் உள்ள 40 சதவீதம் பேர்தான் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த ஆனதை செய்கிறார்கள் என்று ஆக்ஸ்ஃபாமின் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
1990ல் இருந்து 2015 வரை கிடுகிடுவென உயர்ந்துவந்த கார்பன் உமிழ்வு 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் விளைவாக குறையத் தொடங்க உள்ளது. ஆற்றல், போக்குவரத்து போன்ற துறைகளில் செய்யப்படும் மாற்றங்களால் இது சாத்தியமாகும்.
பெரிய மாளிகைகள், ஆடம்பர கார்கள், விண்வெளி சுற்றுலா போன்ற கார்பன் அதிகம் உமிழும் ஆடம்பர சேவைகள், பொருள்கள் மீது அதிக வரி விதித்து, அல்லது அவற்றை தடை செய்து பருவநிலை மாற்றத்தை தடுக்க அரசுகள் உதவ வேண்டும் என்கிறார் ஆக்ஸ்ஃபாமே சேர்ந்த நஃப்டோகே டாபி.
பணக்காரர்கள் செய்யும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் பாதிப்பை சந்திக்கப் போவது ஏழைகள்தான் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- ஜெய் பீம் திரைப்படத்துக்குப் பின்னால் நடந்த உண்மைக் கதை என்ன? நிஜ நாயகர்கள் யார்?
- குடிசையிலிருந்து ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளைஞர்
- தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு
- ஐந்து மாநிலங்களின் தேர்தல் காரணமாகதான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டதா?
- “அரிசிக்கு தட்டுப்பாடு; மரவள்ளி கிழங்கை உண்ணுங்கள்” – இலங்கை அமைச்சரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












