COP26 காலநிலை மாநாடு: 'பூமியின் வெப்பநிலை உயர்வு 2.4 டிகிரி செல்சியஸை நோக்கிச் செல்கிறது'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட்
- பதவி, பிபிசி நியூஸ்
காலநிலை மாநாட்டில் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வரும்போதும், புவியின் வெப்ப நிலை உயர்வைக் கட்டுப்படுத்தும் இலக்குக்கு அருகில் கூட உலகம் இல்லை என புதிய பகுப்பாய்வு ஒன்று கூறுகிறது.
பூமியின் வெப்பநிலை உயர்வு, தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய சராசரி வெப்பநிலையைவிட கூடுதலாக 2.4 டிகிரி செல்சியஸை நோக்கிச் செல்கிறது; அது உலக நாடுகள் நிர்ணயித்த 1.5 டிகிரி செல்சியஸை விட மிக அதிகமென அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
COP26 காலநிலை மாநாட்டில் விவாதிக்கப்படும் பேசுபொருட்களின் நம்பகத்தன்மை, அவற்றை அமலாக்குதல், வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆகிய விவகாரங்களில் இடைவெளி உள்ளது என க்ளைமேட் ஆக்ஷன் டிராக்கர் என்கிற அமைப்பு கூறுகிறது. அதாவது சொல்லுக்கும் செயலுக்கும் பெரிய இடைவெளி உள்ளது என்கிறது அந்த அமைப்பு.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த கிளாஸ்கோவில் நடக்கும் COP26 உச்சிமாநாடு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை கூட்டத்தில் காடழிப்பைக் கட்டுப்படுத்துதல் உட்பட பல பெரிய அறிவிப்புகள் வெளியாயின, அம்மாநாட்டில் காணப்படும் நேர்மறை எண்ணங்களுக்கு எதிராக எதார்த்த கணிப்புகள் உள்ளன.
காலநிலை மாநாடு இந்த வாரத்தோடு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்புரட்சிக்குப் முந்தைய காலத்தை விட 2.0 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பமடைந்தால், 100 கோடி பேர் கடும் வெப்பத்தாலும், ஈரப்பதம் சார் பிரச்னைகளாலும் பாதிக்கப்படுவர் என எச்சரித்துள்ளது பிரிட்டனின் வானிலை அலுவலகம்.
க்ளைமேட் ஆக்ஷன் டிராக்கர் அமைப்பு, அரசாங்கங்கள் காலநிலை மாநாட்டுக்கு முன்பும், அம்மாநாட்டிலும் கொடுத்த வாக்குறுதிகளை பார்வையிட்டது. 2030ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலையை உயர்த்தும் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு இரு மடங்காக அதிகரிக்கும் என அவ்வமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.
புவியின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்தினால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பல்வேறு மோசமான விளைவுகளை தவிர்க்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2015ம் ஆண்டு பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதில் பூமியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதும் அடக்கம்.

உலக நாடுகளின் வாக்குறுதிகளை விடுத்து, கொள்கைகளை ஆராய்ந்தால், 2100ம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை உயர்வு 2.7 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என மதிப்பிட்டுள்ளது க்ளைமேட் ஆக்ஷன் டிராக்கர். இவ்வமைப்பை பாட்ஸ்டம் இன்ஸ்டிட்டியூட் ஃபார் கிளைமேட் இம்பேக்ட் ரிசர்ச் என்கிற ஜெர்மனியைச் சேர்ந்த நிறுவனம் உட்பட பல அமைப்புகளும் ஆதரிக்கின்றன.
இந்தப் புதிய கணக்கீடு புவி மீது இலக்கு வைத்து வரும் எரிகல் போன்றது. இது ஒரு பேரழிவு தரும் அறிக்கை, கிளாஸ்கோவில் கூடியுள்ள அரசாங்கங்கள் உடனடியாக தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உலகின் பொதுவான எதிர்காலத்தைக் காப்பாற்றும் ஒப்பந்தத்தில் சமரசமின்றி தீவிரமாக செயல்பட வேண்டும் என கிரீன்பீஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெனிபர் மார்கன் கூறினார்.
2015ம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உச்சிமாநாட்டிலிருந்து உலகின் பார்வை சற்றே மேம்பட்டுள்ளது, கிளைமேட் ஆக்ஷன் டிராக்கர் அமைப்பு அப்போது அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, புவி 3.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமடையச் செய்யும் என்றே மதிப்பிட்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயு உமிழ்வைக் குறைப்பதில் பெரிய முன்னேற்றம் இல்லாததற்கு அரசாங்கங்கள் வேகம் காட்டாததை க்ளைமேட் ஆக்ஷன் டிராக்கர் குற்றம்சாட்டுகிறது.
கார்பன் உமிழ்வு அளவில் நிகர பூஜ்ஜிய நிலையை அடைய அமெரிக்கா மற்றும் சீனாவின் புதிய வாக்குறுதிகள், வெப்பநிலை உயர்வு குறித்த தனது மதிப்பீடுகளை சற்று மேம்படுத்தியுள்ளன என்று கூறுகிறது அவ்வமைப்பு. ஆனால் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான அரசாங்கங்கள் தீட்டியுள்ள திட்டங்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிகர பூஜ்ஜிய நிலையை அடைவதென்பது பசுமை இல்ல வாயு உமிழ்வை முடிந்தவரை குறைப்பது, பின்னர் மீத உமிழ்வுகளை சமன் செய்வது, உதாரணமாக மரங்களை நடுவதைக் கூறலாம். இது வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை நீக்குகிறது.
உலக அளவில் 140 க்கும் மேற்பட்ட நாடுகள் நிகர பூஜ்ஜிய நிலையை அடைவதாக உறுதியளித்துள்ளன, இது உலகின் மொத்த உமிழ்வுகளில் 90 சதவீதத்தை உள்ளடக்கியது.
ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே அவ்விலக்கை அடைவதற்கான திட்டங்கள் இருப்பதாக க்ளைமேட் ஆக்ஷன் டிராக்கர் கூறுகிறது. அவ்வமைப்பு 40 நாடுகளின் கொள்கைகளை ஆய்வு செய்தது. அதில் சிறு எண்ணிக்கையிலான கொள்கைகளே ஏற்றுக்கொள்ளத்தக்கது என மதிப்பிட்டுள்ளது.
காலநிலை மாற்றம் அது தொடர்பான வாக்குறுதிகள் மற்றும் கணிப்புகளுக்கு மத்தியிலான இடைவெளியை அதிகரிக்கும் முக்கிய விஷயமாக நிலக்கரி மற்றும் எரிவாயு உற்பத்தி இருக்கின்றன என அவ்வமைப்பு கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












