தமிழ்நாட்டில் மழை, வெள்ளம்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் என்ன நிலவரம்?

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கள நிலவரம் என்ன?
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ''மழையால் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் பாதிப்பை சந்தித்தாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இதுவரை மாவட்டங்களில் பெரியளவில் பாதிப்புகள் இல்லை'' என்கின்றனர் அப்பகுதி மக்கள். என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. இதையடுத்து, ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வாரியிறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பணிக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் இலவசமாக உணவளிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

8 நாள்களில் 346.1 மி.மீ மழை

சென்னையில் கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்களும் அதிகாரிகளும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களுக்கு உதவுமாறு தங்கள் கட்சிகளின் நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், கனமழை பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ''கடந்த 24 மணிநேரத்தில் 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. நமது மாநிலத்தின் மொத்த சராசரி மழை அளவு என்பது 14.2 மி.மீட்டர். ஆனால், சென்னையில் அதிகபட்சமாக 67.08 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த நவம்பர் 1 முதல் 8 ஆம் தேதி வரையில் 346.1 மி.மீ மழை பெய்துள்ளது" என்றார்.

நிலவரம் சரியாகும்வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
படக்குறிப்பு, நிலவரம் சரியாகும்வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, ``மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தொடர்ந்து 169 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 48 முகாம்களில் 1,107 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை நீர் தேங்கியுள்ள 290 பகுதிகளில் 59 பக்திகளில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றப்பட்டுவிட்டது. மற்ற 231 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சாலைகளில் விழுந்த 75 மரங்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மழை காரணமாக சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 4 பேர் இறந்துள்ளனர். மழை காரணமாக அடுத்த 3 நாள்களுக்கு எச்சரிக்கை தேவை" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிரம்பி வழியும் 404 ஏரிகள்

சென்னை மாவட்டத்தில் மழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் நீட்சியாக, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஓரளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அங்கும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 404 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், சென்னை புறநகரில் தாம்பரம் தாலுகாவில் உள்ள செம்பாக்கம், நன்மங்கலம், வேங்கைவாசல், சேலையூர், கடப்பேரி, பெரும்பாக்கம், தாம்பரம் பெரிய ஏரி ஆகியவை நிரம்பிவிட்டன. பல்லாவரத்தில் உள்ள திருநீர்மலை, கீழ்க்கட்டளை, பல்லாவரம் ஏரிகளும் நிரம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, நீர் செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ள பல கட்டடங்கள் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

புறநகர்ப் பகுதிகளில் பாதிப்பு ஏன்?

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் தி.க.சரவணனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரிதளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரம், சென்னையின் புறநகர் பகுதிகளான படப்பை, வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள தாழம்பூரில் 3,000 வீடுகள் உள்ளன. படப்பை, சேலையூரில் இருந்து தண்ணீர் வந்து முட்டுக்காடு முகத்துவாரம் வழியாக செல்லும். தண்ணீர் தேங்கும் இடமாக தாழம்பூர் இருப்பதால் அங்கு அதிகாரிகள் கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கின்றனர்" என்கிறார்.

தாழம்பூர்
படக்குறிப்பு, தாழம்பூர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர்

தொடர்ந்து பேசுகையில், `` காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியால் என்றைக்குமே பாதிப்பு வந்ததில்லை. அந்தளவுக்கு பாசன வாய்க்கால், நீர் பிடிப்புப் பகுதிகள் போன்றவை இயல்பாக உள்ளன. பழைய மாமல்லபுரம் சாலையைப் பொறுத்தவரையில் கொண்டங்கி, தையூர் ஆகியவை பெரிய ஏரிகளாக உள்ளன. இவை இரண்டும் 16 அடி கொள்ளளவை கொண்டவை. மதுராந்தகம் ஏரியானது 23 அடி கொள்ளளவைக் கொண்டதாக உள்ளது. பொன்விளைந்த களத்தூர் ஏரியின் கொள்ளளவு 21 அடியாக உள்ளது. ஓ.எம்.ஆர் சாலையின் மறுபக்கம் பங்கிம்ஹாம் கால்வாய் உள்ளது.

தாம்பரம், வண்டலூர் வழியாக வரக் கூடிய நீர் என்பது ஓ.எம்.ஆர் வழியாக வந்து பங்கிம்ஹாம் கால்வாய் மூலம் கோவளம், மாமல்லபுரம் ஆகிய முகத்துவாரங்களில் சென்று கடலில் கலக்கின்றன. தாம்பரம், சேலையூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் நபர்களின் ஆக்ரமிப்புகளால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை" என்கிறார்.

செம்மஞ்சேரியில் என்ன சிக்கல்?

`` கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் முடிச்சூரில் பத்தாயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. அப்போது யாரும் எதிர்பார்க்காத மழையாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் காஞ்சிபுரத்தில் கடும் மழை பெய்ததால் பாலாறு, அடையாறில் தண்ணீர் வந்து முகத்துவாரம் வழியாக நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அப்படிப்பட்ட நிலை இல்லை" என்கிறார் சரவணன்.

`` மதுராந்தம் ஏரி நிரம்பியதால், கரை உடைந்துவிடக் கூடாது என்பதால் மதகுகளைத் திறந்துள்ளனர். சென்னையை ஒப்பிடும்போது இங்கு பாதிப்புகள் குறைவுதான். தையூரில் உள்ள கிராமங்கள் கடல்மட்டத்துக்குக்கீழ் உள்ளதால் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, தையூர் முதல் நாவலூர் வரையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆனாலும், பாதிப்புகள் பெரிதாக இல்லை. செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள புதிய குடியிருப்புகளை தாழ்வான பகுதியில் கட்டியதால் அங்கு தீவு போல தண்ணீர் சூழ்ந்துள்ளது" என்கிறார், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சமரன்.

பிளாட்டாக மாறிய விளைநிலங்கள்

தண்டரை கிராமத்தில் வயல்வெளியில் தேங்கியுள்ள மழைநீர்
படக்குறிப்பு, தண்டரை கிராமத்தில் வயல்வெளியில் தேங்கியுள்ள மழைநீர்

`` இங்குள்ள பல கிராமங்களில் லேஅவுட் என்ற பெயரில் விளைநிலங்களில் பிளாட் போட்டனர். பொதுவாக, ஏரியில் இருந்து தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தாழ்வான பகுதிகளில்தான் விளைநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் பிளாட் போட்டு உருவாக்கப்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. அதேநேரம், கிராமம், நகரம் சூழ்ந்த பகுதிகளாக உள்ளதால் காலம்காலமாக இங்கு வசிக்கும் மக்கள், தற்சார்பு வாழ்வியலை வாழ்கின்றனர். அங்குள்ள தோட்டங்களில் விளையும் காய்கறிகள், அரிசி என உணவுக்குப் பிரச்னையில்லை. அதேநேரம், அதீத மழை பொழிவால் பயிர்கள் நாசம் அடைந்தால் மட்டுமே அவர்களின் வாழ்வாரத்தில் சிக்கல் ஏற்படும். தற்போது வரையில் அப்படிப்பட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை" என்கிறார் சமரன்.

`` திருக்கழுகுன்றத்தில் உள்ள தண்டரை கிராமத்தில் உள்ள நான்கு ஏரிகளும் இரும்பேடு, முள்ளிப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 4 ஏரிகளிலும் ஒரு சில ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. இந்தப் பகுதிகளில் பெரிதாக பாதிப்பு வரவில்லை. வரும் நாள்களில் பெய்யக் கூடிய மழையின் அளவைப் பொறுத்து பாதிப்பு தெரிய வரலாம்" என்கிறார், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தண்டரை ஊராட்சி மன்றத் தலைவியான ஜெயலட்சுமி அறிவழகன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :