தமிழக மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை: இந்த வண்ணங்கள் எப்படி வேலை செய்யும்?

சென்னை மழை

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தின் வட பகுதிகளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்குவதால் டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நவம்பர் 10,11 ஆகிய நாட்களில் தாழ்வான பகுதிகளிலும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அது 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்த மழை காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களுக்கு முன்பு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. தற்போது கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்குப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து மக்கள் அறிய வேண்டியது என்ன? ஒவ்வொரு முறை கன மழை வரும் போதெல்லாம் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ஏன் விடுக்கிறது? இந்த நிறங்கள் எதை குறிக்கின்றன என்பது பற்றிய தகவலை இங்கே தொகுத்துள்ளோம்.

வண்ணங்கள் மூலம் எச்சரிக்கை - யாருக்கு?

சென்னை மழை

பட மூலாதாரம், Getty Images

வானிலையின் தீவிரத்தன்மை தொடர்பான முன் கணிப்புகளை அறிந்து அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடனேயே வண்ணங்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுபோன்ற எச்சரிக்கை, பொதுவாக அரசு அதிகாரிகளின் தேவைக்காகவே விடுக்கப்படுகிறது. பேரிடர் ஆபத்து அளவை ஊகித்து அதற்கேற்ப செயலாற்ற இந்த வண்ணங்கள் அதிகாரிகளுக்கு உதவும்.

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களில்தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதில் சிவப்பு நிறம் - உடனடியாக செயலாற்ற வேண்டிய நடவடிக்கையை உணர்த்துகிறது. ஆரஞ்சு நிறம் - தயார்நிலையில் இருக்க வேண்டியதை உணர்த்துகிறது. மஞ்சள் நிறம் - விழிப்புடன் நிலைமையை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இவை தவிர்த்து பச்சை நிற குறியீடு, எச்சரிக்கை ஏதுமில்லாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என்பது குறிக்கிறது.

இதில், தேசிய வானிலை எச்சரிக்கைகளில் ஒரு மாநிலத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டால், அந்த மாநிலம் முழுவதும் பாதிக்கப்படுவதாக அர்த்தம் இல்லை. அந்த மாநிலத்தில் குறிப்பாக எந்த இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்பதை அறிய வேண்டும். அந்த விவரம், மண்டல மற்றும் மாநில வானிலை ஆய்வக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த எச்சரிக்கை நிறம், மழை, புயல், பனிப்பொழிவு, புழுதிப்புயல் போன்றவற்றுக்கும் பொருந்தும். ஆனால், விடுக்கப்படும் எச்சரிக்கை, ஒவ்வொரு சீற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்கும்.

வண்ணங்கள் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

ஒரு இடத்தின் வானிலையை கணிக்க ஐந்து நாள் முன்கணிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. அது நிகழ்வு நடக்கும் தன்மை மற்றும் அது ஏற்படுத்தவுள்ள தாக்கத்தின் கணிப்பு அடிப்படையில் இருக்கும்.

கன மழை ஏற்படும் நாட்களில் 24 மணி நேரத்தில் 204.5 மில்லி மீட்டருக்கோ அதற்கு அதிகமாகவோ மழை பொழிவு தொடர்ச்சியாக பதிவானால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும். இது 'அசாதாரணமான மிக கன' மழையாக வகைப்படுத்தப்படும்.

அதுவே 24 மணி நேரத்தில் 115.6 முதல் 204.4 மில்லி மீட்டருக்கும் இடையே தொடர்ச்சியாக மழை பதிவானால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படும். இது 'மிக அதிக' மழையாக வகைப்படுத்தப்படும்.

இந்த மழை அளவு 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் இடையே பதிவானால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படும். இது 'அதிக' மழையாக வகைப்படுத்தப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :