சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், `காலநிலை மாறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளுக்குள் அதீத கனமழையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதேபோன்ற துயரத்தைத்தான் நாம் சந்திக்க வேண்டி வரும்' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடக்கிறது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக, கடந்த சனிக்கிழமை இரவு முழுக்க கனமழை பெய்தது. குறிப்பாக, நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழையும் அடையாறு எம்.ஆர்.சி நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்தது.
அதிலும் பல பகுதிகளில் 10 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின. `வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வரும் 9 முதல் 11 ஆம் தேதி வரையில் கன மழை பெய்யலாம்' எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கணிக்க முடியாத அதீத கனமழை

பட மூலாதாரம், Getty Images
அதேநேரம், கனமழை தொடர்பாக வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு எதையும் கொடுக்காத சூழலில், அதீத கனமழை பெய்தது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ` காற்றின் போக்கை கணிக்கும்போது செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், 6ஆம் தேதி நள்ளிரவு மிகக் குறுகிய காலத்தில் இரவு 10 மணி வரையில் 3 செ.மீ மழையும் நள்ளிரவு 1 மணி முதல் 1.45 வரையில் 6 செ.மீ மழையும் 7ஆம் தேதி அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இதனை `மீசோஸ்கேல் ஃபினோமினா' (mesoscale phenomena) என்பார்கள். அந்தவகையில் இம்மாதிரியான மழையை முன்கூட்டியே கணிக்க முடியாது. உதாரணமாக, நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழையும் மீனம்பாக்கத்தில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சுமார் 20 கிலோமீட்டர் இடைவெளிக்குள் மழையின் அளவு வித்தியாசமாக இருப்பதை உணரலாம்" என்கிறார்.
``வானிலை ஆய்வு மையத்தால் கணிக்க முடியாத அளவுக்கு அதீத மழைப் பொழிந்ததற்கு என்ன காரணம்?" என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
``காலநிலை மாற்றம் காரணமாக குறைந்த கால அளவில் அதிதீவிர மழைப் பொழிவு ஏற்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் அரை மணிநேரத்தில் பத்து செ.மீ மழை பெய்தது. `மேக வெடிப்பு' என்று இதனைச் சொல்வார்கள்.
இதே அளவு மழை, நகரத்தில் பெய்திருந்தால் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும். மேலும், மழைப் பொழிவை நம்மால் கணிக்க முடியாமல் போகிறது. அதிக மழைக்குக் காரணம், கடலில் வெப்பம் அதிகரிக்கும்போது நிறைய தண்ணீர் ஆவியாகிறது. இதன் காரணமாக வளிமண்டலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். இதனால்தான் அதிகப்படியான மழையாக கொட்டித் தீர்க்கிறது" என்கிறார்.
ஒரே வாரத்தில் பெய்த மொத்த மழை
``மழையின் சராசரி அளவும் மாறுபட்டுள்ளதே?" என்றோம். ``ஆம். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் கடைசியோடு தென்மேற்கு பருவமழை நிறைவடையும். அக்டோபர் 20ம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும். கார்த்திகை தீபத்துக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும். நமது பண்டைய வாழ்வியல் முறையில் கார்த்திகை தீபம் என்பதே மழையை வழியனுப்புகிற விழாவாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் மொத்த மழையும் பெய்துவிட்டது. இனிமேல் ஆண்டு சராசரி மழை, மூன்று மாத சராசரி மழை என்பதெல்லாம் பார்க்கப்படாமல், 3 மணிநேரத்தில் எவ்வளவு தீவிர மழை பெய்யும் என்பதைப் பொறுத்துத்தான் நமது வடிகால் முறைகள், கட்டமைப்பு போன்றவற்றை உருவாக்க முடியும்."
"இரண்டு மாத காலம் மழை பெய்யும்போது அந்த நீர் நிலத்தடியில் சென்றும் நீர்நிலைகளில் சென்றும் சேமிக்கப்படும். இப்போது அதி கனமழையால் தண்ணீர் ஓடிப் போவதைப் பார்க்க முடிகிறது. சென்னை என்பது கடற்கரை நகரமாக உள்ளது. கடல்மட்டம் உயரும்போது கடலும் உள்புக ஆரம்பிக்கும். இதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் சென்னைக்குள்ளேயே சிறு சிறு தீவுகள் உருவாகக் கூடிய வாய்ப்புகள் உருவாகும் என்கின்றனர். கடலுக்குள் சென்னை செல்லலாம் என்பதற்கான அர்த்தம் இதுதான். சென்னை என்பது ஓர் அற்புதமான நகரம். நாம் அதனை வீணாக்கிவிட்டோம்," என்கிறார் சுந்தர்ராஜன்.
மூன்று மடங்கு அதிகமான தாங்கு திறன்

பட மூலாதாரம், ARUN SANKAR / getty images
"நான்கு நதிகள், 50 பெரிய கால்வாய்கள், 540 சிறிய ஓடைகள் என்பதுதான் சென்னைக்கான இயல்பான வரைபடமாக இருந்தது. இதனை அழித்ததன் விளைவாகத்தான் இவ்வளவு பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அவ்வாறு அழித்தாலும் அதற்கேற்ப மழைநீர் வடிகால் வாய்க்காலை வடிவமைத்தோமா என்றால் அதுவும் இல்லை. 12 மணிநேரத்தில் 22 செ.மீ மழை பெய்யும்போது நிற்கத்தான் செய்யும். அதனை குறைந்தபட்சம் வழிந்து போகும்படியாகவாவது செய்ய வேண்டும். தற்போது வரையில் தண்ணீர் தேங்கிக் கொண்டுதான் உள்ளது. இதனால் பொருளாதாரத்தில் பெரிய இழப்பு ஏற்படும். அடுத்த ஒரு வாரகாலத்துக்கு மக்கள் எந்த வேலையும் செய்யப் போவதில்லை. பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும்" என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
``இதனைத் தடுக்க வேண்டும் என்றால், சென்னை நகர விரிவாக்கத்தை அரசு கைவிட வேண்டும். அரக்கோணம் வரையில் சென்னை நகரை விரிவுபடுத்திக் கொண்டு செல்கிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகியவற்றை சேர்த்தால் நான்காயிரம் நீர்நிலைகள் இருக்க வேண்டும். நகரம் விரிவுடையும்போது நீர்நிலைகளையும் நீர் பிடிப்புப் பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமிப்பார்கள். நீர் நிலைகளை பாதுகாப்பதைப் போல நீர் பிடிப்புப் பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். சென்னை நகரை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையில்லை. காரணம், சென்னையின் தாங்கு திறனைவிட 2, 3 மடங்கு அதிகமான சூழலில்தான் தற்போது உள்ளது.
மேலும், ஒரே நாளில் 45 செ.மீ மழை என்பது 1930, 1970, 2015 ஆகிய காலகட்டங்களில் பெய்துள்ளது. முன்பெல்லாம் இவ்வாறு பெய்யும்போது அதற்கான கால அவகாசம் என்பது அதிகப்படியாக இருக்கும். இப்போது ஆறு ஆண்டு இடைவெளிக்குள் அதிக மழை பெய்துள்ளது. காலநிலை மாறுபாடு காரணமாக இந்த இடைவெளி சுருங்கிவிட்டது" என்கிறார் சுந்தர்ராஜன்.
இனி ஒவ்வோர் ஆண்டும் இப்படித்தான்
``கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் அதிக கனமழை பெய்துள்ளது என்பது அசாதாரணமான விஷயம் கிடையாது. இனிமேல் இது சாதாரணமாகவே நடக்கக் கூடிய நிகழ்வாகத்தான் இருக்கும். பத்து ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஐந்து ஆண்டில் பெய்கிறது. அடுத்த வருடமும் இதேபோல் பெய்தால் ஆச்சர்யமாக இருக்கும். வடகிழக்கு பருவமழை தற்போதுதான் தொடங்குகிறது. அதற்குள் ஏரிகள் நிரம்பிவிட்டன" என்கிறார், சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.
தொடர்ந்து மேலதிக தகவல்களைப் பட்டியலிட்டார். `` புவி வெப்பமயமாகும்போது அதில் இருந்து வரக் கூடிய நீராவி, வளிமண்டலத்தில் தங்கிவிடும். தற்போது அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அரபிக் கடலில் இதுபோல் நடப்பது என்பது அரிதான ஒன்று. இந்த ஆண்டு இரண்டு புயல்கள் வந்துவிட்டன. தற்போது மூன்றாவது புயல் வரவுள்ளது. சாதாரணமாக இவை வங்கக்கடலில் வர வேண்டியது. ஏரிகளைத் தூர்வாருவது மட்டும் தீர்வைத் தராது. பொருளாதாரக் கட்டமைப்பை எப்படி மாற்றுவது என யோசிக்க வேண்டும்.
உள்ளூர் அளவிலான தீர்வு

பட மூலாதாரம், Getty Images
காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னையாக இருந்தாலும் இதற்கான தீர்வுகள் உள்ளூர் அளவில் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள பகுதி ஆரோக்கியமாக இருந்தால்தான் வரக் கூடிய தலைமுறையை காப்பாற்ற முடியும். வேளச்சேரி பகுதியில் ஆண்டுதோறும் மழை வந்தால் நிற்கத்தான் செய்யும். அங்கு கால்வாய் கட்டப் போவதாகச் சொன்னார்கள். அது ஒப்பந்ததாரரை பணக்காரராக்கும் விஷயம். அந்த நீர் எங்காவது சென்று சேரத்தானே வேண்டும். அதனை பங்கிம்ஹாம் கால்வாய்க்குள் விட்டால் அது சரியானதாக இருக்காது. ஒரு பிரச்னையை தீர்க்காமல் அதனை வேறு இடத்துக்கு மாற்றுவதே பொறியியல் யோசனையாக உள்ளது" என்கிறார்.
``கோவளம், பள்ளிக்கரணை, எண்ணூர் என கடற்கரையோரம் உள்ள பகுதிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நகரத்துக்குள் மழைநீர் வடிகாலை பராமரிப்பது ஒருபுறம் இருந்தாலும் இவையெல்லாம் வரக்கூடிய மைய ரத்தக் குழாயாக இருக்கக் கூடியவைதான் கொசஸ்தலை, அடையாறு, கூவம், கோவளம் போன்றவை. இதனை ஒரு கால்வாயாக பார்க்காமல் சூழல்ரீதியாக எப்படி மேம்படுத்த முடியும் எனப் பார்க்க வேண்டும்.
அந்தப் பகுதிகளில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மக்கள் சொல்வதை அரசு கேட்க வேண்டும். ரியல் எஸ்டேட் லாபிகள் சொல்வதைக் கேட்கக் கூடாது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், `தண்ணீரை கொதிக்க வைத்துக் குடியுங்கள். அதில் சாக்கடை கலந்திருக்கும்' என ஓர் அரசு அதிகாரியே மக்களிடம் சொல்கிறார். இதனை அசாதாரண விஷயமாக யாரும் பார்க்கவில்லை என்பதுதான் வேதனையானது" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












