மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர் மர்ம சாவு - என்ன நடந்தது?

இளைஞர்
படக்குறிப்பு, சுரேஷ் குமார்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மாற்று ஜாதி பெண்ணை காதலித்ததால் பெண்ணின் உறவினர்கள் இளைஞரை கடத்தி கொலை செய்திருக்கக் கூடும் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அந்த இளைஞரின் மரணம் குறித்து நாகர்கோவில் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு வயது 27. இவர் பெயின்டிங் தொழில் செய்து வருகிறார். சுரேஷ்குமார் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

ஆரல்வாய்மொழி அருகே உள்ள கலைக்கல்லூரியில் சுரேஷ்குமார் படிக்கும் போது உடன் படித்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் (வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்) காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர, வேறு சாதி இளைஞர் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து சுரேஷ்குமாருடனான உறவை அந்த பெண் முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தன்னையே திருமணம் செய்து கொள்ளுமாறு சுரேஷ் வற்புறுத்திய நிலையில், அந்த பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், திருமணம் நிச்சயமிக்கப்பட்ட நபரிடம் தானும் அந்த பெண்ணும் சேர்ந்து எடுத்த படங்களை காட்டி அவரை திருமணம் செய்ய வேண்டாம் என சுரேஷ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணப்பெண்ணின் உறவினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் மீது புகார் அளித்தனர்.

அதன் மீதான விசாரணைக்கு சுரேஷ் குமாரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்று விட்டு வருவதாகக் கூறி தனது இரு சக்கர வாகனத்தில் சுரேஷ் சென்றுள்ளார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சுரேஷ்குமார் உயிரிழந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து பிபிசி தமிழுக்காக, உயிரிழந்த சுரேஷ்குமாரின் சித்தி ராதிகாவிடம் பேசியபோது அவர் நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.

இளைஞர் சாவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்திரிப்புப்படம்

"எனது அக்கா மகனும் அவருடன் பழகிய பெண்ணும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்தனர். இது எனக்கு ஒரு வருடத்திற்கு முன் தெரியவந்தது, என்னிடம் போனில் தான் அந்த பெண் அவ்வப்போது பேசுவார். இரு வேறு ஜாதியினர் என்பதால் பெண்ணின் வீட்டில் சுரேஷ்குமாரை திருமணம் செய்து வைக்க சமதிக்கமாட்டார்கள் எனவே தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு என்னிடம் கூறினார்."

"இதனை அறிந்த பெண்ணின் அம்மா எங்களது வீட்டிற்கு வந்து வெவ்வேறு சாதி என்பதால் என் மகளை விட்டு விடுங்கள் என கேட்டார். அதற்கு நாங்களும் சுரேஷ்குமாரிடம் இனிமேல் அந்த பெண்ணுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என கூறி விட்டதாக கூறினோம். திடீரென இரண்டு நாட்களுக்கு முன் காதலிக்கும் போது இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படகளை காட்டி சுரேஷ் மிரட்டுவதாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது."

"எங்கள் வீட்டுக்கு வந்த போலீசார் விசாரணைக்காக எனது மகனை காவல் நிலையம் அழைத்தனர். அப்போது என் மகனிடம் இருந்த அந்த பெண்ணின் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக் கொண்டு அவனுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றான்."

"வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சுரேஷின் அண்ணன்மார்கள் இருவரும் அவனை தேடினர் ஆனால் கிடைக்கவில்லை பின் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சென்று விசாரித்தனர் அவன் அங்கும் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்," என்றார்.

இதையடுத்து சுற்றுவட்டார பகுதியில் தேடியபோது ஒரு தென்னந்தோப்புக்கு வெளியே சுரேஷின் இரு சக்கர வாகனம் நின்றுள்ளது. தோப்புக்குள் சென்று பார்க்கும் போது சுரேஷ் உயிர் பிரிந்திருந்ததை உறவினர்கள் பார்த்துள்ளனர்.

அவரது உடலை ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சுரேஷின் முன்னாள் காதலி வீட்டுக்கு சென்றபோது அந்த பெண் மற்றும் அவரது பெற்றோர் வெளியூருக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்ததாக சுரேஷின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆணவ கொலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்திரிப்புப்படம்

இதனால் சந்தேகம் அடைந்த தங்களை ஜாதியின் பெயரை சொல்லி இழிவாக பேசி பெண்ணின் குடும்பத்தினர் தாக்க முற்பட்டதால் அவர்கள் பற்றி தோவாளை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக சுரேஷின் உறவினர்கள் கூறினர்.

இதற்கிடையே, மாற்று ஜாதி பெண்ணை காதலித்ததால் சுரேஷை ஆணவ கொலை செய்து விட்டதாக ஒரு தகவல் பரவியது.

இது குறித்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் வை.தினகரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சுரேஷ்குமாரை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் நடத்தி வரும் விசாரணையை பார்க்கும் போது தலித் சமுகத்திற்கு எதிராக போலீசார் செயல்பட்டு வருவதாக தோன்றுகிறது," என்றார்.

"உயிரிழந்த சுரேஷ்குமாரின் வழக்கை போலீசார் நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என நாங்கள் புகார் மனு அளித்தும் இதுவரை காவல்துறையினர் வழக்கை மாற்றி பதிவு செய்யவில்லை," என்று தினகரன் கூறினார்.

"சுரேஷ்குமார் பட்டதாரி இளைஞர் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றால் தற்காலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்து இருக்கலாம். ஆனால் அவர் இறந்து கிடந்த இடத்தில் அப்படி ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை.

சுரேஷ்குமார் உயிரிழந்த இடம் அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகே என்பதால் எங்களுக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே சுரேஷ்குமாரின் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு நடத்தி உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று தினகரன் கோரினார்.

சுரேஷ்குமார் கொலை வழக்கு குறித்து நாகர்கோவில் மாவட்ட காவல் உயர் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "உயிரிழந்த சுரேஷ்குமார் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதில் சுரேஷ்குமார் வயிற்றில் விஷம் இருந்துள்ளது. அதை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகே முழுமையான தகவல் தெரியவரும்," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :