கோவா: மமதா பானர்ஜி பாஜகவின் கோட்டைக்கு குறிவைப்பது ஏன்?

- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
- பதவி, பிபிசி மராத்தி
மகாராஷ்டிராவில் இந்த நாட்களில், அரசியல் விவகாரங்கள் தவிர, ஆர்யன் கான், சமீர் வான்கடே, நவாப் மாலிக் காரணமாக அதிக பரபரப்பு நிலவுகிறது. மாறாக, மகாராஷ்டிராவின் அண்டை மாநிலமான கோவாவில் பல அரசியல் சலசலப்புகள் காணப்படுகின்றன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி இரண்டரை நாள் சுற்றுப்பயணமாக கோவா சென்றிருந்தார். அவரது பயணம் பாஜக ஆளும் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் எதிர்கால அரசியலையும் பாதிக்கும் என நம்பப்படுகிறது.
நாட்டின் மிக முக்கிய மாநிலமான உத்தரபிரதேசம் உட்பட இன்னும் பல மாநிலங்களில் வரும் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் இனி படிப்படியாக தேர்தல் களங்களில் நிலைகொள்ளும்.
அடுத்த ஆண்டு கோவாவிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்துதேசிய கட்சி என்று கூறிக் கொள்ளும் வெளி மாநில கட்சிகளும் இங்கு அரசியல் களத்தில் குதித்துள்ளன.
அவற்றில் அதிகமாக விவாதிக்கப்படும் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ். உண்மையில் திரிணாமுல் காங்கிரசுக்கு மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் மட்டுமே செல்வாக்கு உள்ளது. இந்தக் கட்சிக்கு கோவாவுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.
கோவாவுக்கு குறிவைப்பது ஏன் ?

பட மூலாதாரம், FACEBOOK
2012-ல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சில வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அந்தக் காலத்து விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
2022 ல், கோவா மாநிலத்தில் கட்சி முதல்முறையாக போட்டியிடும் என்று அது கூறுகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான ஒடிஷா மற்றும் ஜார்கண்டிற்குப் பிறகு சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவை விட்டுவிட்டு, இந்தக் கட்சி ஏன் கிழக்குக் கடற்கரையிலிருந்து நேரடியாக மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கோவாவுக்கு வருகிறது என்பதே இப்போதைய கேள்வி.
சமீபத்தில் நடந்த மேற்கு வங்க தேர்தலில் நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவின் பாஜகவை தோற்கடித்து மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக அம்மாநில முதல்வராக பதவியேற்றார். இப்போது 2024 க்கு முன்பு அவர் தனது தேசிய அரசியல் லட்சியங்கள் மீது கவனம் செலுத்துகிறார் என்று நம்பப்படுகிறது. அப்படியானால், அவர் மேற்கு வங்கத்தை விட்டு வெளியேறத் தயாரா என்பதுதான் கேள்வி. இதற்காகதான் அவர் கோவாவிலிருந்து ஆரம்பிக்கிறாரா?
கோவா ஒப்பீட்டளவில் சிறிய மாநிலம். கொல்கத்தா போன்ற பெருநகரத்தின் அளவிற்குக்கூட கோவா முக்கியமில்லை. இப்படிப்பட்ட நிலையில், மமதா பானர்ஜிக்கு கோவா எளிமையான சவாலாக அமையுமா?
கோவா எப்போதுமே பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு அக்கட்சிக்கு சவால் விடுக்கப்பட்டால் அது நாடு முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கோவாவில் காங்கிரஸ் நீண்ட காலமாக ஆட்சி செய்திருந்தாலும் கூட தற்போது அந்த மாநிலத்தில் அக்கட்சி அவ்வளவு வலுவாக இல்லை. இது தவிர, சிறிய பகுதிகளில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் உள்ளூர் கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில், கோவா அரசியலில் காலி இடம் இருப்பதால், மம்தா அங்கு வந்துள்ளாரா?
தேர்தல் செயல்திட்டங்களை வகுக்கும் பிரசாந்த் கிஷோர், மேற்குவங்கத்தைப் போலவே கோவாவிலும் மம்தாவுக்கு உதவி வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர் கோவாவில் இருக்கிறார். கோபத்தில் இருக்கும் தலைவர்களை திரிணாமுல் கட்சியுடன் இணைத்துவிடலாம் என்பதற்காக அவர் இங்குள்ள தேசிய மற்றும் உள்ளூர் கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறார். அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி என்னவென்றால், வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை பிடிக்கும் பயணத்தை முடித்துவிட்டது, ஆனால் கோவா போன்ற புதிய மாநிலத்தில், முதல் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அக்கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியுமா?
இது கோவாவா அல்லது கொல்கத்தாவா?

மமதா பானர்ஜியின் கோவா சுற்றுப்பயணத்தின் போது, நகரின் பல பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் மமதா பானர்ஜியின் பெரிய பேனர்கள் காணப்பட்டன. இது பனாஜியா அல்லது கொல்கத்தாவா என்று கூட நினைக்கத் தோன்றியது. ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சதுக்கத்திலும் மம்தா பானர்ஜியின் போஸ்டர் பேனர்கள் தென்பட்டன.
இந்த சுவரொட்டிகள் மூலம் தேர்தலுக்கு முன்பாகவே மாநிலத்தில் கட்சி ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டதென செய்தியை தெரிவிக்க அக்கட்சி முயற்சி செய்தது.
மமதா பானர்ஜியின் இந்த உத்தியானது, பா.ஜ.க- திரிணாமுல் இடையே கடும் போட்டியை ஏற்படுத்தியது. இந்த சுவரொட்டிகளுக்கு பதிலடியாக பாஜக, மாநில முதல்வர் பிரமோத் சாவந்தின் போஸ்டர்கள் மற்றும் விளம்பரப்பலகைகளை வைத்தது.
கோவா அரசின் பணிகள் குறித்த தகவல்களுடன், முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்தின் படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மமதாவுக்குப் கடும் போட்டியை அளித்து வருகின்றன.
இந்த இரு கட்சிகளின் போட்டியை முக்கோணப்போட்டியாக மாற்ற 'ஆம் ஆத்மி' கட்சி முயற்சி செய்துவருகிறது. ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் அரவிந்த் கேஜ்ரிவாலின் பேனர்களை வைத்துள்ளது. ஆனால் சுவரொட்டிகளை பொருத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ், இந்த இரு கட்சிகளை விடவும் மிகவும் முன்னிலையில் இருந்தது.
இந்த போஸ்டர்கள் குறித்தும் சர்ச்சை நடந்து வருகிறது. இங்கு மம்தாவால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என பாஜக தலைவர்கள் கூறிவரும்போதிலும், அவர்களிடையே சிறிது பதற்றம் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் மம்தா பானர்ஜியின் போஸ்டரை சேதப்படுத்தி, கருப்பு வண்ணம் பூசும் செய்தியும் வெளியாகி வருகிறது.
பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பயந்து போய்த்தான் இதைச் செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அமித் ஷாவின் சமீபத்திய வருகைக்குப் பிறகுதான் திரிணாமுல் இந்தப் விளம்பரப்பலகைகளை வைக்கத் தொடங்கியது.
கோவாவில் திரிணாமுலுக்கு அடித்தளம் உள்ளதா?

மமதா பானர்ஜியின் வருகையின் முக்கிய குறிக்கோள் கோவாவில் தனது அரசியல் அடித்தளத்தைக் கண்டறிய வழி தேடுவதாகும். இந்த திசையில், சில உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அல்லது அவற்றை திரிணாமுல் கட்சியுடன் இணைக்கும் முயற்சியும் நடந்தது.
மூன்று எம்எல்ஏக்களுடன் விஜய் சர்தேசாயின் கோவா பார்வர்ட் கட்சி, மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு திரிணாமுல் கட்சியும் முயற்சித்தது. ஆனால் அது நடக்கவில்லை. செய்தியாளர்களிடம் பேசிய சர்தேசாய் , இந்த செய்தியை மறுத்தார்.
"திரிணாமுல் உடன் எங்கள் கட்சி இணையாது. ஆனால் பாஜகவை எதிர்த்துப் போராடுவதில் தீவிரம் காட்டும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என சர்தேசாய் கூறினார்.
கோவாவின் உள்ளூர் கட்சிகள் தேர்தலுக்கு முன் தங்கள் அனைத்து வழிகளையும் திறந்து வைக்க முயற்சிக்கின்றன. தற்போது விஜய் சர்தேசாய் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அக்டோபர் 30ஆம் தேதி ராகுல் காந்தி கோவா சென்றபோது இந்த வதந்தி வலுப்பெற்றது.
கோவா அரசியலில் தலைமை, தேசிய கட்சிகளிடம் இருந்தாலும்கூட, இங்குள்ள அரசியலில் கிங் மேக்கர் என்பது உள்ளூர் கட்சிகள்தான் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
2017 தேர்தலுக்குப் பிறகு பாஜக, மாநிலத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. சர்தேசாய் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சி மற்றும் காங்கிரஸில் இருந்து பிரிந்த ஒரு குழுவை இணைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.
இதன் காரணமாகவே திரிணாமுல் காங்கிரஸ் தனது விரிவாக்கத்திற்கு சிறிய கட்சிகளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கிறது. மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியுடனும் திரிணாமுல் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது.
மீண்டும் முக்கிய பங்குவகிக்கும் பிரசாந்த் கிஷோர்

பட மூலாதாரம், ANI
கோவாவில் திரிணாமுலின் முழு வியூகத்தையும் பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். அவர் தனது ஐ-பேக் குழுவுடன் கடந்த சில மாதங்களாக இங்கு தங்கியுள்ளார். கடந்த சில நாட்களில் அவரது அணி எல்லா கட்சிகளின் மூத்த தலைவர்களையும் தொடர்பு கொண்டதாக நம்பப்படுகிறது.
கோவா ஃபார்வர்டு கட்சியும், மகாராஷ்டிரவாதி கோமாந்தக் கட்சியும் இதுவரை தங்களுடன் கைகோர்க்காததால் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவரும், கோவா முன்னாள் முதல்வருமான லூயிசின்ஹோ ஃப்ளெரோவை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார். ஆனால், ஃப்ளெரோவின் முதுமை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட செல்வாக்கைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கோவாவில் காலூன்ற இது திரிணாமுல் கட்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதுதான் கேள்வி.
உள்ளூர் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது மட்டுமின்றி, உள்ளூர் பிரச்சனைகளிலும் திரிணாமுல் ஆதரவு தேடுகிறது. கடந்த சில நாட்களாக மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், சுகாதா ராய், பாபுல் சுப்ரியோ போன்ற தலைவர்கள் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.
தினமும் கூட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் நடத்தி பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான குரலாக மேலெழும்ப இவர்கள் முயற்சிக்கின்றனர். இதன் மூலம் உள்ளூர் அளவில் செல்வாக்கு மிக்கவர்களை கட்சியுடன் இணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மல்லிக், பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில், முதல்வர் பிரமோத் சாவந்த் பதவி விலக வேண்டும் என்று இப்போது திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்காக ஆளுநரையும் கட்சி சந்தித்தது.
ஆனால் இந்த விவகாரங்களும், தலைவர்களும் இத்தனை குறைவான நேரத்தில் மக்களின் ஆதரவைப் பெறுவார்களா? சில நாட்கள் முன்னேற்பாடு, தேர்தல் வெற்றிக்கு வழிவகுக்குமா?
திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ பிரையன், இந்த விவகாரத்தை இரண்டாம் பட்சமாக கருதுகிறார். பிபிசி மராத்திக்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. தனது கேரியரில் முதல் போட்டியில் விளையாடும் ஒரு பேட்ஸ்மேன் சதம் அடிக்க முடியாது என்று சொல்ல முடியுமா? இங்கேயும் அப்படித்தான் நடக்கும். கோவா மக்களும் அப்படித்தான் செய்வார்கள், எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்,"என்று குறிப்பிட்டார்.
கோவா தேர்தலில் களமிறங்குவது மம்தா பானர்ஜியின் பிரதமர் பதவிக்கான லட்சியத்தின் வெளிப்பாடா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "பிரதமர் வேட்பாளர் யார் என்பதை கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் அதையே தான் இங்கும் செய்வார்கள். நாங்கள் இரண்டு மாதங்களுக்காக இங்கு வரவில்லை. கோவாவில் திரிணாமுல் ஒரு நாள் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்," என்றார்.
கோவா 2024க்கு தயாராகிறதா?

பட மூலாதாரம், FACEBOOK
தற்போதைய தேர்தல் மூலம் 2024 பொதுத் தேர்தலுக்கான செயல்திட்டத்தை அர்த்தமுள்ளதாக ஆக்கும் லட்சியத்துடன் திரிணாமுல் செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலில் கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் கட்சி போட்டியிடும் என்று டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கான ஆயத்தப் பணியாக திரிணாமுல் இந்த சட்டப்பேரவை தேர்தலை பார்க்கிறது.
" மமதா பிரதமராக விரும்புகிறார். பிரதமர் மோதிக்கு சவால் விடும் திறமையான தலைவராக தன்னை காட்டிக்கொள்ள விரும்புகிறார். அதற்காக அவர் கோவாவை தேர்வு செய்துள்ளார். கோவா சிறியது, அதை எளிதாக நிர்வகிக்க முடியும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல,"என்று கோவாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜு நாயக் தெரிவித்தார்.
"இன்று திரிணாமுல் கட்சியை பார்க்கும்போது, அவர்கள் சில வயதான தலைவர்களை சேர்த்து வைத்துள்ளனர். ஆனால் உண்மையான திரிணாமுல், கோவாவில் பணிபுரியும் பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது 200 பேர் கொண்ட குழுவினர்தான். அருகில் ஒரு வலுவான தலைவர் இருந்தால், வாக்காளர்களின் ஆதரவு இருக்கும் என்று கட்சி கருதுகிறது. ஆனால் இது நடப்பதாகத்தெரியவில்லை," என்கிறார் அவர்.
40 எம்எல்ஏக்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் காலமானபிறகு, ஒரே நேரத்தில் மாநில மற்றும் தேசிய அளவில் கோவாவை வழிநடத்தும் தலைவரின் இடம் காலியாக உள்ளது என்று சிலர் கருதுகிறார்கள்.
2017 தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி இங்கு இடம் பிடிக்க முயன்றது. ஆனால் அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சியால் டெல்லிக்கு சமமான வெற்றியை இங்கு பெற முடியவில்லை.
2022 தேர்தலுக்கு முன், மமதா பானர்ஜியும் அதே இலக்கை அடைய முயற்சிக்கிறார். இதில் அவர் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதை தேர்தல் முடிவுகளில் தான் சொல்லும்.
பிற செய்திகள்:
- உணவுக்காக குழந்தைகளை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள் - பிபிசியின் நேரடி ரிப்போர்ட்
- "மாத்துங்க தலைமை செயலரை" - அமித் ஷாவுக்கு அழுத்தம் கொடுக்கும் மிசோரம் முதல்வர்
- சிங்கப்பூரில் ஊசலாடும் மலேசிய தமிழரின் உயிர் - மரண தண்டனை மீண்டும் தள்ளிவைப்பு
- தமிழக மழை வெள்ளம்: இதுவரை ஐவர் பலி - என்ன நடந்தது இன்று?
- மாற்று ஜாதி பெண்ணை காதலித்த இளைஞர் மர்ம சாவு - என்ன நடந்தது?
- ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் குழுவை ஒடுக்க திணறும் தாலிபன் - கள நிலவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












