"ஜெயலலிதாவுக்குக் குழந்தைகள் கிடையாது": டி.டி.வி. தினகரன்

டிடிவி தினகரன்

அ.தி.மு.கவை மீட்கும் போராட்டத்தை தான் ஜனநாயக முறைப்படி நடத்துவதாகவும் சசிகலா சட்டமுறைப்படி நடத்துவதாகவும் அ.ம.மு.கவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

அ.ம.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் செயலாளர்களின் கூட்டம் இன்று சென்னையில் அக்கட்சியின் தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகராட்சி, மாநகராட்சி தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து:

கே. இந்தக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்பட்டதா?

ப. தேர்தல் தோல்விக்கான காரணம் எனக்கே தெரியும். ஆகவே, ஒரு சடங்கைப் போல அதனைச் செய்யவில்லை. நான் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்களுடன் பேசிவருகிறேன். தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி, அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும் உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்காகவும்தான் அ.ம.மு.க. உருவாக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி கிடைத்திருந்தாலும் நானோ, என்னுடன் இருப்பவர்களோ சோர்வடையவில்லை. தொண்டர்கள் இன்னும் உத்வேகமாக இருக்கிறார்கள். ஒரு சிலர் சுயநலத்தால் வேறு கட்சிக்குப் போயிருக்கலாம்.

கே. சசிகலா தொண்டர்களைச் சந்திக்கச் செல்லப்போவதாக அறிக்கை விடுத்திருக்கிறார். நீங்கள் இருவரும் இணைந்து அ.தி.மு.கவை மீட்பதற்கான போராட்டங்களைச் செய்வீர்களா அல்லது தனித்தனியாக செயல்படுவீர்களா?

ப. அவர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் என்ற வகையில் பொதுக் குழு செல்லாது என போராடிவருகிறார். என்னைப் பொறுத்தவரை, அ.ம.மு.க. என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக முறையில் போராடி வருகிறேன். நாங்கள் இணைந்து போராடவில்லையென நினைக்கிறீர்களா..?

கே. சசிகலா உங்களை ஆதரிக்கிறாரா?

ப. அவர் எங்களை ஆதரிக்கிறாரா என்ற கேள்வியே தவறு. அவர் எங்களோடு இருப்பவர்தானே. அவர் ஆதரவு எங்களுக்கு இருக்கிறதா என்பது உங்களுக்கே தெரியும். சசிகலா எனக்கு சித்தி. அந்த உறவு நன்றாகவே இருக்கிறது. நான் தனியாக கட்சி ஆரம்பித்ததால் அ.தி.மு.க. தொடர்பான வழக்குகளில் இருந்து விலகிக்கொண்டேன். எங்களுடைய இலக்கு ஒன்றுதான்.

கே. சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவிக்காமல் சசிகலா விலகியிருந்தாரே..

ப. ஆதரவு என்பது அவர் சொல்லிதான் தெரிய வேண்டுமென்பதில்லை. அவர் எங்களுக்குத்தான் ஆதரவு என்பது எல்லோருக்கும் தெரியுமே.. அறிக்கை கொடுத்து தெரிய வேண்டியதில்லை.

ஜெயலலிதா பிறந்தநாள்: பிறப்பு முதல் இறப்பு வரை

கே. அ.ம.மு.க. என்ற சொல்லையே அவர் சொன்னதில்லையே..

ப. அவர் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர். அவர் எப்படி அ.ம.மு.கவின் பெயரைச் சொல்ல முடியும்? எல்லாவற்றையும் மறைமுகமாகத்தான் சொல்ல முடியும். என்னுடைய சித்தி என்பதற்காக அ.ம.மு.க. கொடியைப் பிடியுங்கள் என சொல்ல முடியுமா? அல்லது அவர் என்னிடம் வந்து அ.தி.மு.க. கொடியை பிடிக்கும்படி சொல்ல முடியுமா? என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு. இலக்கு ஒன்றுதான்.

கே. பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் பன்னீர்செல்வம் உங்களை ஏற்கிறார். ஆனால், எடப்பாடி எதிர்க்கிறாரே?

ப. இதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் தவழ்ந்து, நான்கு கால் பிராணியைப் போல வந்ததை யாரும் மறுக்க முடியாது. இப்போது அப்படிப் பேசுகிறார் என்றால் யாரிடம் தவறு என தெரியும். ஏற்கனவே அவர் நொந்து போயிருக்கிறார். அவரைப் பற்றி ஏதும் பேச வேண்டாமென நினைக்கிறேன். அவர் ஆளுமையாக இருக்கிறாரா, இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும். அவர் பதவி வாங்கியது எப்படி என எல்லோருக்கும் தெரியும்.

கே. தி.மு.கவின் ஆட்சி எப்படியிருக்கிறது?

ப. ஆறு மாதம் போகட்டும், சொல்கிறேன். தவறு செய்யவிட்டுப் பிடித்தால்தான் நன்றாக இருக்கும்.

கே. ஓ.பி.எஸின் தம்பி ராஜா திருமண வரவேற்பில் வந்து பார்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே..

ப. என்ன சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது? அவரை நானே மேடையில்தான் பார்த்தேன். அவர் எனக்கு பழைய பழக்கம். என்னுடைய சம்பந்தி வாண்டையார் அவருக்கு பத்திரிகை கொடுத்திருக்கிறார். அதனால் வந்திருக்கிறார். நான் பத்திரிகை கொடுக்கவில்லை.

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

கே. அ.தி.மு.கவின் தோல்விக்கு என்ன காரணம்? பா.ஜ.க. கூட்டணிதான் காரணமா?

ப. நான்காண்டு ஆட்சியை சிலர் புகழ்நதார்கள். அவர்களது துரோகத்தையும் நன்றி மறந்த தன்மையையும் சிலர் ராஜதந்திரம் என்றார்கள். ஆட்சி அதிகாரம் போய்விட்டால், அவர் வீட்டில் உள்ள... அவர் வாார்த்தையில் சொல்வதானால், அதுகூட அவரைப் பார்த்து குலைக்கும். அவருடைய பலம் பதவியால் கிடைத்த பலம். அரசியல் ரீதியாக அவர் பலவீனமாகிவிட்டார். கோபமடைந்து பேசுகிறார். ஆட்சியதிகாரத்தை கொடுத்தவர்களைப் பார்த்தே, மோசமாக பேசுகிறார்.

கே. ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தி.மு.க. சொன்னது. நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். இப்போது அமைதியாக இருக்கிறார்கள்...

ப. இதிலெல்லாம் மக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது. அப்பல்லோ மருத்துவர்களும் சுகாதாரத் துறை செயலரும் உண்மையை சொல்லிவிட்டார்கள். இது தி.மு.க. பரப்பிவந்த பொய்ப் பிரச்சாரம். அதெல்லாம் பொய் என்பதை ஆர்.கே. நகர் மக்களே நிரூபித்தார்கள். ஆறுமுகசாமி கமிஷனில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள்.

கே. ஆறுமுகசாமி கமிஷனை வைக்க வேண்டுமென்பதே ஓ.பி.எஸ். விருப்பம்தானே.

ப. தி.மு.கதான் கிளப்பிவிட்டது. அதை ஓ.பி.எஸ். கையில் எடுத்துக்கொண்டார். அரசியல்ரீதியாக செய்தார். இப்போது உணர்ந்திருக்கலாம்.

கே. ஜெயலலிதாவின் குழந்தை என்று சொல்லி அவ்வப்போது சில பெண்கள் பேட்டி கொடுக்கிறார்கள். உண்மை என்ன? அவருக்கு குழந்தைகள் இருந்தார்களா?

ப. எனக்கு அம்மாவை 1983லிருந்து தெரியும். என் சித்தி அவருடனேயே இருந்திருக்கிறார். நான் அடிக்கடி போய்வருவேன். 1988லிருந்து 2011வரை அங்கேயே இருந்திருக்கிறேன். அவருக்கு குழந்தை ஏதும் கிடையாது. அப்படியிருந்தால் அதை அவர் வெளிப்படையாகச் சொல்லியிருப்பார். அவருக்கு குழந்தையே கிடையாது. இதெல்லாம் பொய்யான பிரச்சாரம்.

கே. கொடநாடு எஸ்டேட்டை மீட்க முயற்சிப்பீர்களா..

ப. அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. அங்கே நான் இரண்டு தடவைதான் போயிருக்கிறேன். அம்மாவின் சொத்துகளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? கொலை, கொள்ளைகளைப் பற்றி தற்போது காவல்துறை சரியாக விசாரிக்கிறது. உண்மை தெரியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :