தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: டி.டி.வி.தினகரனின் வியூகம் என்ன? அ.ம.மு.கவில் என்ன நடக்கிறது?

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், TTV DHINAKARAN FACEBOOK PAGE

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறு அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சித் தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அ.தி.மு.க நிர்வாகிகளோடு சசிகலா தொடர்ந்து பேசி வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தினகரன் களமிறங்குவதில் இருக்கும் உத்தி என்ன?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு தொகுதியில்கூட வெல்லவில்லை. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து கோவில்பட்டியில் போட்டியிட்ட தினகரனும் தோல்வியைத் தழுவினார்.

இதன்பிறகு புதுச்சேரி பண்ணை வீட்டில் இருந்துகொண்டு அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு வந்தார் தினகரன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலாவையோ அ.ம.மு.க நிர்வாகிகளையோ அவர் சந்திக்கவில்லை.

இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அ.ம.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் தி.மு.கவில் இணைந்துவிட்டார்.

தினகரன் மௌனம் காத்தாலும், அ.தி.மு.க தொண்டர்களுடன் சசிகலா தொடர்ந்து பேசி வருவது அ.தி.மு.க தரப்பில் புயலைக் கிளப்பியது. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய நிர்வாகிகள் பலரும் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர். அதேநேரம், சசிகலா குறித்து பன்னீர்செல்வம் தரப்பினர் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காமல் இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்தும் முடிவில் தி.மு.க உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தினகரன் எழுதியுள்ள கடிதம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

9 மாவட்டங்கள் இலக்கு

டிடிவி தினகரன்

அ.ம.மு.க தொண்டர்களுக்கு கடந்த 9 ஆம் தேதி தினகரன் எழுதியுள்ள கடிதத்தில், 'அ.ம.மு.க வெற்றி தள்ளிப் போடப்பட்டுள்ளது. யாராலும் அதனை மொத்தமாகத் தடுத்துவிட முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, ` பொறுப்புள்ள அரசியல் இயக்கமாக பேரிடர்கால அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றியதால் நாம் அமைதிகாத்த சூழல் இப்போது மாறியுள்ளது. இதையடுத்து, மாவட்டம்தோறும் நீங்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருவது மகிழ்ச்சியை தருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும் தொடர்ந்து இயங்குவது நம்முடைய இயல்பு.

தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது உலகின் எல்லா இயக்கங்களுக்கும் தலைவர்களுக்கும் பொதுவானதுதான். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் மிகப் பெரிய தோல்விகளை சந்தித்து மீண்டெழுந்து சாதனை படைத்தவர்கள்தான். இந்தப் பின்னடைவு தற்காலிகமானதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் கணிசமான வெற்றியை ஈட்டினோம். அந்த உத்வேகத்தோடு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் முழுவீச்சில் தேர்தலுக்குத் தயாராவோம்.

இதுதவிர, அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தலும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கும் நாம் தயாராக வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டம் போட்டவர்கள் அடுத்து என்னாகுமோ, எங்கே போகப் போகிறோமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பது கண்கூடாகவே தெரிகிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினகரனின் கணக்கு என்ன?

டிடிவி தினகரன்

பட மூலாதாரம், TTV DINAKARAN TWITTER PAGE

படக்குறிப்பு, உள்ளாட்சித் தேர்தலுக்கு என்ன வியூகம்?

தினகரனின் உள்ளாட்சி வியூகம் என்ன? என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். "உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகளின் சின்னத்துக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கால் நல்லபடியாக வாக்குகளைப் பெற முடியும் என தினகரன் நம்புகிறார்.

ஆளும்கட்சியாக இல்லாததும் இரட்டைத் தலைமைக்கான குழப்பமும் அ.தி.மு.கவில் இருப்பதால் அதிகப்படியான இடங்களை வெல்ல முடியும் எனவும் அவர் கணக்கு போடுகிறார்" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், `` 2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலா பிரசாரம் செய்திருந்தால் அ.ம.மு.கவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கும். தேர்தல் வியூகம் வகுக்காமல் அமைதி காத்ததால் சசிகலா பூஜ்ஜியமாகிவிட்டார்.

அதனால் இந்தத் தேர்தலில் பலத்தைக் காட்டி தன்னை நிரூபிக்க வேண்டும் என தினகரன் நினைக்கிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றால், பிற சாதி வாக்குகளைப் பெற முடியும் என்றும், பல மாவட்டங்களில் அ.தி.மு.கவை மிஞ்சி வெற்றி பெற முடியும் என்றும் நம்புவதால் இப்படியொரு கடிதத்தை எழுதியுள்ளார் அவர். இந்தத் தேர்தலில் தினகரனை சசிகலா ஆதரிப்பாரா என்பதும் மிக முக்கியமான கேள்வி.

அ.தி.மு.கவுக்கு இருமுனை நெருக்கடி!

அதிமுக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிமுகவின் இரட்டைத் தலைமை அதற்குப் பலவீனமா?

தற்போது அ.தி.மு.க என்பது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கட்சியாக உள்ளது. அந்தக் கட்சிக்கு உரிமை கோரும் சசிகலாவின் முயற்சி பலிக்கப் போவதில்லை. சசிகலாவை உள்ளே நுழையவே அவர்கள் அனுமதிக்கவில்லை.

இரட்டை இலைச் சின்னம் என்பது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கைகளில் உள்ளது. அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டால் மட்டுமே அ.தி.மு.க பிளவுபடும். அப்போது யாராவது ஒருவர் சசிகலா பின்னால் நிற்கலாம்.

ஆனால், அதற்கான வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில், அ.தி.மு.கவை எதிர்த்தால் மட்டுமே வளர முடியும் என்பது தினகரனின் பார்வையாக உள்ளது" என்கிறார்.

``யாராக இருந்தாலும் ஒரு கட்சியாக தங்கள் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் செயல்பாட்டில் வைத்திருக்க உதவுவது தேர்தல்கள்தான். உள்ளாட்சித் தேர்தலை அதற்கான கருவியாக தினகரன் பயன்படுத்தப் பார்க்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றிகளைப் பெற்றுவிட்டது அ.தி.மு.க. சசிகலா சிறைமீண்ட பின் எந்த மாறுதலும் நிகழவில்லை.

தொலைபேசி உரையாடல்கள் மூலம் அவரது அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.கவை திரும்பக் கைப்பற்றும் அவரது முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தம்மைவிட்டு நழுவிச் செல்லும் கட்சிக்காரர்களை தக்க வைக்க இதுபோன்ற செயல்பாடுகள் அவசியம் என்பதை தினகரன் அறிவார்.

ஒருபக்கம் சசிகலா, இன்னொரு பக்கம் அ.ம.மு.க என இருமுனைகளில் அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி தரப்படுகிறது. சூழல்களின் மாறுதலுக்காக தினகரன் காத்திருக்கிறார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.அசோகன்.

சசிகலா ஆதரவு கிடைக்குமா?

சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சலசலப்பை உண்டாக்கிய தொலைபேசி உரையாடல்கள்.

தினகரனை சசிகலா ஆதரிப்பாரா? என அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சசிகலாவை பொறுத்தவரையில் அவரது நோக்கம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பதுதான். அதனை கைப்பற்றுவது எனக் கூற முடியாது என்றார்.

`பழையபடி அ.தி.மு.கவை மாற்ற வேண்டும்' என அவர் நினைக்கிறார். தற்போது அ.தி.மு.க. சாதி அரசியல், பாகுபாடு என தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக, `தினகரனுக்கும் சசிகலாவுக்கும் மோதல், கட்சியை கலைக்கச் சொன்னார்' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகின்றன.

ஆனால், 15 நாட்களுக்கு முன் ஒரு அ.தி.மு.க தொண்டரிடம் பேசும்போது, 'அ.தி.மு.கவும் அ.ம.மு.கவும் இணைந்திருந்தால் நாம் ஆட்சிக்கு வந்திருப்போம்' என்றார் சசிகலா . அதேபோல், பதவியை இழந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரிடம் இதையே அவர் பேசியுள்ளார்" என்கிறார் சரஸ்வதி.

மேலும், `` பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்தபோது, நான், வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் அ.ம.மு.க கொடியை அவரிடம் காட்டுவதற்காக சென்றிருந்தோம். அ.ம.மு.க பெயர், கட்சிக்கொடி ஆகியவற்றுக்கு அவர்தான் சம்மதம் தெரிவித்தார்.

அவருக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. அவரது ஒப்புதலோடுதான் அனைத்தும் நடந்தது. அதனால்தான், `அ.ம.மு.கவோடு அ.தி.மு.க இணைந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்'. இப்போது அ.ம.மு.க தன்னுடைய வழியில் சென்று கொண்டிருக்கிறது" என்றார் சரஸ்வதி.

உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.கவுக்கு சசிகலா ஆதரவு தெரிவிப்பாரா? என்று கேட்டோம். ``அவர் வெளியில் வந்து பேசிய பிறகுதான் தெரியும். கடந்த 5 ஆம் தேதி ஊரடங்கு முடிந்ததும் அவர் வருவதாக இருந்தது. விரைவில் அனைத்து விவரங்களையும் அவர் தெரிவிப்பார்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :