"மிசோ மொழி தெரியாத தலைமை செயலரை மாத்துங்க" - அமித் ஷாவுக்கு அழுத்தம் தரும் மாநில முதல்வர்

பட மூலாதாரம், MIZORAM GOVT
மிசோரம் மாநில அரசின் புதிய தலைமை செயலாளராக மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ரேணு சர்மா என்ற உயரதிகாரியை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியிருக்கிறார் அந்த மாநில முதல்வர் பூ ஸோரம்தாங்கா.
அந்த மாநில தலைமைச் செயலாளராக இருந்த குஜராத் மாநில பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான லால்நன்மாவியா சுவாகோவ ஓய்வு பெற்ற பிறகு புதிய தலைமைச் செயலாளராக மணிப்பூர் பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜே.சி. ராம்தாங்காவை நியமிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிசோரம் மாநில முதல்வர் பூ ஸொரம்தாங்கா கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், ரேணு சர்மா என்ற குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியை மாநில தலைமைச் செயலாளராக மத்திய உள்துறை நியமித்து அதற்கான உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது. அந்த உத்தரவு கடிதத்தில் அக்டோபர் 28ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. அதில், நவம்பர் 1ஆம் தேதி மிசோரம் மாநில தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ரேணு சர்மா கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
இதேவேளை, மத்திய உள்துறை குறிப்பிட்டிருந்த அதே நவம்பர் 1ஆம் தேதி தமது மாநில பிரிவு அதிகாரியான ஜே.சி. ராம்தாங்காவை மாநில தலைமைச் செயலாளர் பொறுப்பேற்குமாறு மாநில அரசு உத்தரவிட்டது.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும் மத்திய உள்துறைக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ள ஐஏஎஸ் பெண் உயரதிகாரியான ரேணு சர்மா, 1988ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர். ஏஜிஎம்யுடி எனப்படும் அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம், யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் சேர்ந்தவர். அரசுத்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான பணி அனுபவத்தை பெற்ற அவர், மிசோரம் மாநிலத்தில் இதற்கு முன்பு பணியாற்றியதில்லை.
இருந்தபோதும், மத்திய உள்துறை உத்தரவின்படி ரேணு சர்மா, மிசோரம் மாநில தலைமைச் செயலாளர் பொறுப்பை கடந்த வாரம் ஏற்றுக் கொண்டு பணியாற்றத் தொடங்கி விட்டார்.

பட மூலாதாரம், MIZORAM GOVERNMENT
இந்த நிலையில், மத்திய உள்துறைக்கு மாநில முதல்வர் அனுப்பிய கடிதத்தில், "உங்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு மிசோ மொழி பற்றியோ அதன் மக்கள் பற்றியோ தெரியாது. அந்த அதிகாரிக்கு தெரிந்த இந்தி மொழி, எங்களுடைய துறை அமைச்சர்களுக்கு தெரியாது. ஒரு சிலருக்கு ஆங்கில மொழிப் புலமையும் இல்லை," என்று கூறியுள்ளார்.
இத்தகைய சூழலில் மிசோ மொழியில் பேசி செயலாற்றும் அதிகாரியாக இல்லாவிட்டால் இங்கு திறம்பட பணியாற்றுவது கடினம் என்று மிசோரம் முதல்வர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் மிசோ மொழி தெரியாத ஒரு அதிகாரியை தலைமை செயலாளராக மத்திய அரசு நியமித்தது கிடையாது என்றும் தமது கடிதத்தில் மாநில முதல்வர் நினைவூட்டியிருக்கிறார்.
இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட, சம்பந்தப்பட்ட மாநில மொழி அறியாத ஒருவர் மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டது கிடையாது என்றும் மாநில முதல்வர் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் மிசோரம் முதல்வருக்கு வராத நிலையில், புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ரேணு சர்மாவை திருப்பி அனுப்ப வேண்டும் என்பதில் முதல்வர் உறுதி காட்டி வருகிறார்.
இந்த களேபரத்துக்கு மத்தியில் மிசோரம் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அரசுத்துறை உயரதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பதவிகள் இடம்பெறும் பட்டியலில் ரேணு சர்மாவின் பெயர் தலைமை செயலாளர் பதவிக்கு நேராகவும், அவருக்கு அடுத்த நிலையில், ஜே.சி. ராம்தாங்காவின் பெயர் கூடுதல் தலைமை செயலாளர் பதவிக்கு நேராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், MIZORAM GOVT
இந்த விவகாரத்தில் தமது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமது தலைமையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எள்ளி நகையாடும் என்ற தமது கவலையையும் மாநில முதல்வர் பூ ஸொரம்தாங்கா தமது கடிதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
11 மாவட்டங்களைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி தலைவர் பூ ஸோரம்தாங்கா தலைமையிலான அரசு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இங்கு இந்த கூட்டணி ஆட்சி உள்ளது. இங்கு கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களில் மிசோ தேசிய முன்னணியும் பாஜக ஒரு இடத்திலும் வென்றன. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத மற்றும் மிசோ தேசிய முன்னணி அல்லாத ஏழு கட்சிகளைக் கொண்ட ஸோரம் மக்கள் இயக்கம் எட்டு இடங்களிலும், காங்கிரஸ் ஐந்து இடங்களிலும் வென்றன.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அரசு, பிராந்திய மொழி சார்ந்த மாநிலங்களில் இந்தி மொழி திணிப்பில் ஈடுபட முயல்வதாக அவ்வப்போது மாநில கட்சிகள் பல குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மாநில மொழி பற்றி அறியாத ஒருவரை மாநில தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமித்திருக்கும் மத்திய அரசின் செயல்பாடு, அரசியல் ரீதியிலான கவனத்தை பரவலாக ஈர்த்துள்ளது.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் குழுவை ஒடுக்க திணறும் தாலிபன் - கள நிலவரம்
- பருவநிலை மாற்றத்தால் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
- 'மருத்துவமனை செய்த தவறால் இன்னொருவரின் கருவைச் சுமந்தேன்'
- உணர்ச்சிப் பிணைப்புக்குப் பிறகே பாலுறவு ஆர்வம் உங்களுக்கு ஏற்படுகிறதா?
- சீன பாலைவனத்தில் அமெரிக்க போர் கப்பல் மாதிரிகள் - சீனாவின் திட்டம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












