ரயான் க்ளார்க்: மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்

32 வயதான ரயான் க்ளார்க்

பட மூலாதாரம், FAMILY HANDOUT

படக்குறிப்பு, 32 வயதான ரயான் க்ளார்க்

ஆட்டிசம் குறைபாடுள்ள ஒருவரை, பல ஆண்டுகளாக மனநல மருத்துவமனையில் அடைத்து வைத்திருந்தனர். அவரது தாய் நீண்ட போராட்டம் நடத்தி அவரை மனநல மருத்துவமனையிலிருந்து மீட்டுள்ளார்.

32 வயதான ரயான் க்ளார்க் கடந்த 2006ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் அடைக்கப்பட்டார்.

ரயான் க்ளார்க் 15 ஆண்டு கழித்து வீடு திரும்ப உள்ளதால், அவர் மெத்த மகிழ்ச்சி அடைந்ததாக டான்கோஸ்டர் நகரத்தைச் சேர்ந்த அவரது தாய் ஷரோன் கூறினார்.

இங்கிலாந்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மனநல மருத்துவமனைகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது ஒரு தேசிய அளவிலான முறைகேடு என்று கடந்த ஜூலை மாதம் நேஷனல் ஆட்டிஸ்டிக் சொசைட்டி கூறியது.

ரயான் க்ளார்க் தன்னைத் தானே தாக்கிக் கொள்வாரோ என்கிற அக்கறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் ஸ்கீசோஃப்ரீனியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக முதலில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவரது 28ஆவது வயதில் அவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதாக மீண்டும் கண்டறியப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை வரை, அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளை தடயவியல் மனநல பிரிவில் அவர் கழித்தார். இந்த பிரிவில் கிரிமினல் குற்றம் செய்தவர்கள் கூட கவனித்துக் கொள்ளப்படுவர்.

தன் மகன் மனநல மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதால் மகிழ்ச்சியாக உள்ளார் எனவும், இனி அவர் தனக்கான வீட்டில் தனியாக, தனக்கென ஒரு பராமரிப்பாளரோடு வாழ்வார் என்று கூறினார் ஷரோன்.

"அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார், அவருக்கு அது பிடித்துள்ளது" என்று கூறினார்.

ஆட்டிசம் என்பது வாழ்நாள் முழுக்க இருக்கும் ஒருவித குறைபாடு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களோடு கருத்தை பரிமாறிக் கொள்வதிலும், தொடர்பு கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வர்.

ஷரோன் க்ளார்க் மற்றும் அவர் கணவர் பீட்டர்
படக்குறிப்பு, ஷரோன் க்ளார்க் மற்றும் அவர் கணவர் பீட்டர்

பராமரிப்பு செலவுகளை சமாளிக்க முடியாமல், குறைபாடு உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதுண்டு.

இங்கிலாந்தில் உள்ள ஹல் நகரத்தைச் சேர்ந்த ஷரோன் க்ளார்க்கின், தற்போது டான்காஸ்டரில் வாழ்ந்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் மிக கடுமையான போராட்டத்தை நடத்தியதாக கூறினார்.

"அவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர், அவர் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் சொல்கிறார், அவர் மருத்துவமனையில் இருக்கும் போது தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள இப்படி செய்துள்ளார் என நான் கருதுகிறேன். அது இனி நின்றுவிடும் எனவும் நான் கருதுகிறேன். அது இல்லாத அளவுக்கு காணாமல் போகும்.

"அவருக்கு மோசமான நாட்கள் இருக்கும், ஆனால் அதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்"

ரயான் (பீட்டரின் வளர்ப்பு மகன்) ஒரு சாதாராண வாழ்கை வாழ்வதை அவர் மகிழ்வதாகக் கூறினார் ஷரோன் க்ளார்க்கின் கணவர் பீட்டர்.

"ரயான் இதை மிகப்பெரிதாக எடுத்துக் கொள்வார் என்று கருதினோம், ஆனால் தன் போக்கில் அதை மிகவும் சகஜமாக எடுத்துக் கொண்டார், அவர் மிகவும் உற்சாகமடைந்தார், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்கவும், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்யவும் விரும்பினார்" என்று கூறினார் பீட்டர்.

"அவர் மகிழ்ச்சியாக சிரித்தார், நடனமாடினார்"

2015 முதல் 2021 வரையான காலகட்டத்தில் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்கள் மன நல மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருப்பது 1,105-ல் இருந்து 1,215ஆக உயர்ந்துள்ளது என தேசிய சுகாதார சேவை தரவுகள் கூறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :