ஜெய்பீம் சர்ச்சையில் அன்புமணிக்கு சூர்யா பதில்: "பெயர் அரசியலில் படத்தை சுருக்க வேண்டாம்"

ஜெய் பீம்

பட மூலாதாரம், @2D_ENTPVTLTD

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என நடிகர் சூர்யா பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்த சில விஷயங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே சூர்யா தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் கடந்த வாரம் (நவம்பர் 2) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

பழங்குடி மக்கள் மீது அதிகாரம் எப்படி தன் ஒடுக்குமுறையை செலுத்துகிறது அதை அவர்கள் சட்டப் போராட்டத்தின் மூலம் எப்படி எதிர்கொள்கிறார்கள் என ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் 'ஜெய்பீம்'.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின.

என்ன சர்ச்சை?

படத்தில் வரும் ஐஜி பெருமாள்சாமி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பார். இதில் வட இந்திய கதாபாத்திரம் ஒன்றிடம் விசாரிக்கும்போது அதில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் இந்தியில் பேசுவார்.

பிரகாஷ்ராஜ் அவரை கன்னத்தில் அறைந்து தமிழில் பேச சொல்லுவார். இந்த காட்சிக்கு இந்தி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.

கதாபாத்திரத்தின் தன்மை, அவர் வழக்கை திசை திருப்பும் நோக்கில் பேசியதற்காக மட்டுமே அப்படி காட்சிப்படுத்தி இருந்தோமே தவிர இந்தி ஆதரவாளர்களை கோபப்படுத்தும் நோக்கில் இல்லை என இந்த காட்சியின் நோக்கம் குறித்து சமீபத்தில் இயக்குநர் ஞானவேல் பிபிசி தமிழுக்கு அளித்திருந்த நேர்காணலில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த படத்தின் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர்.

உண்மைக் கதையில் அவரது பெயர் அந்தோணி சாமி. இப்படி பெயரை மாற்றியது மட்டுமல்லாமல் அந்த வில்லன் வீட்டில் குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும் காலண்டர் இருப்பதாகக் காட்டியதும் சர்ச்சையானது.

இதனை அடுத்து படத்தில் அந்த 'காலண்டர் காட்சி'யில் திருத்தம் செய்யப்பட்டது.

நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி எழுப்பிய கேள்விகள்

இந்த விவகாரம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படைப்பு சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி நடிகர் சூர்யாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மேலும் அந்த கடிதத்தில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிராக தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அன்புமணி இதற்கு பதிலளிக்காமல் சூர்யா அமைதியாக இருப்பது அறமற்றது என்பதாலேயே இந்த கடிதம் எழுதியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

JaiBhimOnPrime,

பட மூலாதாரம், @2D_ENTPVTLTD

படம் குறித்தும், சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்தும் சில கேள்விகளை எழுப்பும் அவர், சூர்யாவை புனிதராக்கும் நோக்கத்துடன் 'ஜெய்பீம்' திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், தவறுகளை சுட்டிக்காட்டியும் திருத்தாமல் படக்குழு இருப்பதாகவும் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வேதனை எனவும் சொல்லும் அவர் சூர்யாவின் அடுத்தப் படம் வெளியாகும்போது ரசிகர்கள் தங்களது கோபத்தை காட்டக்கூடும் எனவும் அதில் சொல்லியிருக்கிறார்.

அன்புமணிக்கு சூர்யாவின் பதில்

இதை அடுத்து, நடிகர் சூர்யா அன்புமணிக்கு பதிலளிக்கும் விதமாகவும் இந்த சர்சைக்களுக்கு விளக்கமாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்றும், சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்

பட மூலாதாரம், Getty Images

மேலும், படைப்புச்சுதந்திரம் யாரையும் இழிவுபடுத்தும் உரிமையை வழங்கவில்லை என்ற அன்புமணியின் கருத்தை ஏற்பதாக கூறும் நடிகர் சூர்யா படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.

பெயர் அரசியல் வேண்டாம்

மேலும் நடிகர் சூர்யா அந்த அறிக்கையில், 'ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. கதை, உண்மை சம்பவத்தின் புனைவு என்றும், அது யாரையும் குறிப்பிட்டு எடுக்கப்பட்டது அல்ல என்பதை படத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம்' என்றும் கூறுகிறார் சூர்யா.

அவமதிக்கும் எண்ணம் இல்லை

எதிர்மறை கதாப்பாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் மறைமுகமாக யாரையாவது குறிப்பிடுவதாக கருதப்பட்டால் அதற்கு முடிவே இல்லை எனவும் படத்தின் கரு இதுபோன்ற சர்ச்சைகளால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்து போவதாகவும் சூர்யா அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்கும் எண்ணமும் நோக்கமும் தனக்கில்லை என்றும் அதில் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :