கட்சிரோலி போலீஸ் என்கவுன்டரில் 26 மாவோயிஸ்டுகள் பலி: முக்கிய தலைவர் மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டார்

மாவோயிஸ்டு தேடுதல்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாவோயிஸ்ட் தேடுதல். கோப்புப் படம்.
    • எழுதியவர், சல்மான் ரவி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் தனோரா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், மகாராஷ்டிர போலீசின் சி-60 சிறப்புப் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களில் முக்கிய மாவோயிஸ்ட் கமாண்டரான மிலிந்த் டெல்டும்டேவும் அடக்கம் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.

கொல்லப்பட்ட 26 மாவோயிஸ்டுகளின் பெயர்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் போலீசாரால் தலைக்கு ரூ.50 லட்சம் விலை அறிவிக்கப்பட்ட மிலிந்த் டெல்டும்டே பெயரும் இருந்தது.

இது தவிர, ஆறு பெண் மாவோயிஸ்ட்டுகள் பெயரும் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தது. இந்த சண்டையில், சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த போலீசார் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சண்டை சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மண இருட்டும் வரை நடந்ததாக பிபிசி இந்தி சேவையிடம் கூறினார் காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல்.

இறந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் சிலவற்றை மற்ற மாவோயிஸ்டுகள் தூக்கிக்கொண்டு தப்பிவிட்டார்களா என்றுகூட நாங்கள் ஆராய்ந்தோம்.

காட்டில் நீண்ட தூரத்துக்கு ரத்த தடயங்கள் இருந்தன. எனவே, ஒன்று இறந்த அல்லது, காயமடைந்த தங்கள் போராளிகளை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது என்றார் அவர்.

மிலிந்த் டெல்டும்டே - கோப்புப் படம்.

பட மூலாதாரம், Maharashtra police

படக்குறிப்பு, மிலிந்த் டெல்டும்டே - கோப்புப் படம்.

அப்படி தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருவதாகவும் அவர் கூறினார். காயமடைந்த போலீஸ்காரர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அவர்கள் நிலை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

70க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்டுகள் கட்சிரோலி பகுதியில் நுழைந்திருப்பதாக போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த மாவோயிஸ்ட்டுகள் கோட்கல், கியாரபட்டி காடுகளில் நுழைந்ததாகவும் தகவல்கள் வந்தன. இதையடுத்து சிறப்பு பயிற்சி பெற்ற சி60 போலீஸ் படை அந்தப் பகுதியை சுற்றி வளைத்தது.

ஒரு நாள் முழுவதும் இந்த சண்டை நடந்ததாகவும், இப்போது உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களை எச்சரிக்கையாக இருக்கும்படி மகாராஷ்டிர போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். சத்தீஸ்கர் தரப்பிலிருந்தும் தீவிர நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல், போலீசார், செய்தியாளர் சந்திப்பு நடத்தி விரிவான விவரங்களைப் பகிர்வார்கள் என்று தெரிகிறது.

கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் மிலிந்த் டெல்டும்டே, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில பழங்குடி பகுதிகளில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு அங்கே தீபக் என்றொரு பெயரும் உண்டு. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் அவர் சஹ்யாந்திரி என்ற பெயரால் அறியப்படுகிறார். அவருக்கு வேறு பல பகுதிகளில் ஜோதிராவ், சீனிவாஸ் என்று பல பெயர்கள் உண்டு என்கிறார்கள் போலீசார்.

கட்சிரோலியில் 2019ல் நடந்த ஒரு மாவோயிஸ்ட் தாக்குதல்.
படக்குறிப்பு, கட்சிரோலியில் 2019ல் நடந்த ஒரு மாவோயிஸ்ட் தாக்குதல்.

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவின் தம்பிதான் மிலிந்த் டெல்டும்டே. மிலிந்தின் மனைவி அங்கேலா சோன்தகே மீதும் போலீசாரை கொன்றது உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் இப்போது பிணையில் வெளியில் இருக்கிறார்.

மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள மகாராஷ்டிர மாநில போலீசார் அமைத்துள்ள சிறப்பு போலீஸ் படைகளில் 60 பழங்குடிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

உள்ளூர் நிலவரம், நில அமைப்பு, பண்பாடு ஆகியவை தொடர்பாக அந்த பழங்குடிகளுக்கு உள்ள அறிவு காரணமாக, சிறப்புப் போலீஸ் படை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக காலப்போக்கில் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது.

2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகளில் இந்த சி60 சிறப்புப் போலீஸ் படையினர் பல மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் வெற்றி பெற்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :