சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: அவர்கள் தப்பிப் பிழைப்பார்களா? அரசு அழித்தொழிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி தெலுங்கு சேவை
- பதவி, .
சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் எதைக் குறிக்கிறது? இந்த தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் மீண்டும் பலம் பெறுவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ள முடியுமா? மாவோயிஸ்டுகள் தங்கள் ஆதிக்கப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக நடத்திய கடைசிகட்ட முயற்சியாக இந்தத்தாக்குதலைப் பார்க்க முடியுமா? உண்மை என்ன?
இந்த பிரச்சனையை ஆழமாகப் புரிந்து கொள்ள பிபிசி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் காவல்துறை அதிகாரிகள், மாவோயிச இயக்கத்தின் நீண்டகால பார்வையாளர்கள், முன்னாள் மாவோயிஸ்டுகள், மாவோயிஸ்ட் பகுதிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன் பேசியது. தங்கள் அடையாளம் வெளிடப்படக்கூடாது என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
'ஆபரேஷன் ஹிட்மா' உண்மையில் நடந்தது என்ன?
தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலையை அறிந்த பல்வேறு அதிகாரிகளின் கூற்றுப்படி, மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஹிட்மா மாட்வி, ஜொனகுடா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு, சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களில் இருந்து எட்டு போலீஸ் குழுக்கள், இந்தப்பகுதியை நோக்கி கால்நடையாக புறப்பட்டுச்சென்றன. 8 அணிகளிலும் மொத்தமாக 2000 போலீஸார் இருந்தனர். இருப்பினும், குறிப்பிட்ட இடத்தை அவர்கள் அடைந்தபோது, அங்கு மாவோயிஸ்டுகள் இல்லை. எனவே அனைத்து அணிகளும் தங்கள் முகாம்களுக்கு திரும்பிச் சென்றன.
திரும்பிச்சென்றுகொண்டிருந்தபோது வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த 400 பேர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் தொடுத்தனர். அருகிலுள்ள குன்றின் உச்சியிலிருந்து இருந்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்.
'மாவோயிஸ்டுகள் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் செலுத்துகருவிகளை எங்கள் படைகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தினர். இதன் காரணமாக பலர் காயமடைந்தனர். அதன்பிறகு, துப்பாக்கி குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை அணிந்த மாவோயிஸ்டுகள், எங்கள் படையினரைத் தாக்கி, காயமடைந்தவர்கள் மீது பலத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். எங்கள் படையினரும் பதிலடி கொடுத்தனர். எனவே, இருதரப்பிலும் பலர் உயிரிழந்தனர் ,"என்று பிபிசியிடம் பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு வகையில் மாவோயிஸ்டுகள் விரித்த வலையில் போலீசார் சிக்கிக்கொண்டதாக நாம் கூறலாம் என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால், அது உளவுத் தகவல் தோல்வி அல்ல என்றார் அவர்.
"எங்களிடம் தகவல் இருந்ததால் துல்லியமாக ஹிட்மாவைத் தாக்கும் குறிக்கோளுடன் நாங்கள் சென்றோம். ஆனால், திரும்பும் போது படைகள் போதிய எச்சரிக்கையுடன் இல்லை. எனவே, இந்த இழப்பு ', என்றார் அதிகாரி.
'ஹிட்மாவின் கிராமம் புவ்வர்த்தி, தாக்குதல் நடந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் அவருக்கு அத்துப்படி. அதற்கு மேல் அவருக்கு உள்ளூர் மக்களின் ஆதரவும் உள்ளது. எனவே, அவர்கள் போலீஸாரின் நடமாட்டத்தை கூர்மையாக கவனித்தபிறகு, தெளிவாக திட்டமிட்டு அவர்கள் காவல்துறையைத் தாக்கினர் 'என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறினார்.
ஆந்திரா மாடல்…
கடந்த காலங்களில் பிரிக்கப்படாத ஆந்திரப்பிரதேசத்தில் மிகவும் தீவிரமாக இருந்த மாவோயிஸ்ட் இயக்கம் இன்று கணிசமாக பலவீனமடைந்துள்ளது. முக்கியமாக, தெலுங்கானாவில் இயக்கத்தை வழிநடத்திய பல முக்கிய தலைவர்கள், என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர். ஆந்திர போலீஸ் குறிப்பாக 'கிரே ஹவுண்ட்ஸ் படைகள்', மாவோயிஸ்ட் இயக்கத்தை அடக்குவதில் முக்கிய பங்கு வகித்தன. இந்த அணுகுமுறை 'ஆந்திர மாடல்' என்று அழைக்கப்படுகிறது.
கிரே ஹவுண்ட்ஸ் ஒரு மாநிலப் படை என்றாலும் ஒடிஷா, சத்தீஸ்கரில் மாநில எல்லைகளைத் தாண்டி தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஹைதராபாத்தில் உள்ள கிரே ஹவுண்ட்ஸ் மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறப்புப் படைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது . 1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கிரே ஹவுண்ட்ஸ், மாவோயிஸ்ட்களின் கைகளில் ஒருபோதும் பெரும் இழப்பை சந்தித்ததில்லை என்றே சொல்லலாம்.
தெலுங்கானாவில் ஒரு மூத்த காவல்துறை அதிகாரியிடம் பேசியபோது, ஜொனகுடா சம்பவத்தை குறிப்பிட்ட அவர், 'எப்போதும், எங்கும், உளவுத்துறை தகவல்தான் முக்கியம்' என்று கூறினார். 'நாங்கள் உளவுத்துறை தகவல்களைப் பெறும்போது அதை பல்வேறு மட்டங்களில் பகுப்பாய்வு செய்கிறோம்' என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
மற்ற மாநிலங்களின் போலீஸ் படைகள் கிரே ஹவுண்டுகளைப் போல வெற்றிகரமாக இல்லை என்பதற்கு ஒரு காரணம், அவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் என்று அவர் குறிப்பிட்டார்.. 'ஹிட்மாவும் அவரைப் பின்பற்றுபவர்களும் அந்த பகுதியில் தாக்குதலைத் திட்டமிடுவதாக எங்களுக்கு முன்கூட்டியே தகவல் இருந்தது. தாக்குதல் குறித்து சத்தீஸ்கர் போலீசாரையும் நாங்கள் எச்சரித்தோம் 'என்று பிபிசியிடம் பேசிய அதிகாரி கூறினார்.
சமீப நாட்களில் மாவோயிஸ்டுகள் ஏன் தொடர்ந்து தாக்குகிறார்கள் என்று கேட்கப்பட்டபோது 'அவர்களின் TCOC இன் ஒரு பகுதி இது' என்று அவர் பதிலளித்தார்.
TCOC என்றால் என்ன?
மாவோ எழுதிய 'ஆன் கொரில்லா வார்ஃபேர்' புத்தகத்தில், டி.சி.ஓ.சி (Tactical Counter Offensive Campaign) ஒரு முக்கியமான அங்கம். 'எதிரியின் வலிமை அதிகமாகவும், உங்களுடையது குறைவாகவும் இருக்கும்போது, உங்கள் எல்லா சக்தியையும் ஒன்று குவித்து எதிரியின் சிறிய அணிகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தி வெற்றி அடையுங்கள்' என்பது அந்தப் புத்தகத்தில் மாவோ முன்வைத்த தந்திரங்களில் ஒன்று.
"நாங்கள் ஆழமாக ஊடுருவி, எங்கள் முகாம்களை நிறுவுகையில், மாவோயிஸ்டுகளும் உஷாராகிவிடுகிறார்கள், " என்று அதே அதிகாரி கூறினார். தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் 4 முகாம்கள் /தாரெம், பெகாடுப்பள்ளி, சர்கெகுடா, பசகுடா நிலையங்கள் உள்ளன . இவை அனைத்தும் ஜொனகுடாவில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 4-5 கி.மீ. தூரத்தில் உள்ளன. வரவிருக்கும் நாட்களில் அதிகமான முகாம்களை நிறுவுவதற்கான திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதால், இந்த திட்டங்களைத் தடுக்க மாவோயிஸ்டுகள் இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்று சில அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல் ஆகியோரின் அறிக்கைகளிலும் இது பிரதிபலித்தது. மாவோயிஸ்டுகளின் வலுவான கோட்டையாக இருக்கும் பகுதிகளில் போலீஸ் படைகள் ஆழமாக ஊடுருவி முகாம்களை நிறுவி, தாக்குதல்களை நடத்துவதால் மாவோயிஸ்டுகள் பதிலடி கொடுப்பதாக அவர்கள் இருவரும் தெளிவாகக் கூறியுள்ளனர். பின்வாங்குவதற்கான எந்த திட்டமும் தங்களுக்கு இல்லை என்றும் பிரச்சனையை முற்றிலுமாக தீர்க்கும் பொருட்டு தாக்குதல்களின் தீவிரம் அதிகரிக்கப்படும் என்றும் அவர்கள் தெளிவுபடத்தெரிவித்தனர்.
மாவோயிஸ்டுகளின் வலுவான கோட்டைகள் எவை? அவர்களின் உண்மையான வலிமை என்ன?
இந்த கேள்விகளுக்கு விடை பெற பிபிசி , மாவோயிஸ்ட் அனுதாபிகளிடமும், நீண்ட காலமாக இந்த இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் கல்வியாளர்களிடமும் பேசியது. இந்தியாவின் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் , 2006 ஏப்ரலில் 'நக்சலிசம் மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல்' என்று அறிவித்த நேரத்தில், மாவோயிஸ்ட் அமைப்பு நாடு முழுவதும் பல மாநிலங்களில் காலூன்றியிருந்தது. தாங்கள் 14 மாநிலங்களில் விரிவடைந்திருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறினர். 2007 இல் நடைபெற்ற சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் 7 வது மாநாட்டின் போது, பீகார்-ஜார்கண்டின் தண்டகாரண்யாவை, 'விடுவிக்கப்பட்ட' மண்டலங்களாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதனுடன், கர்நாடகா- கேரளா-தமிழ்நாடு முத்தரப்பு எல்லைபகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் ஆந்திரா-ஒடிஷா எல்லைப் பகுதியில், கொரில்லாப் போர் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பிரிக்கப்படாத ஆந்திராவில், இயக்கத்தை மீண்டும் வலுப்பெறச்செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
இருப்பினும், விரைவில் மத்திய, மாநில அரசுகள், பஸ்தரில் ஆபரேஷன் சல்வா ஜுடும், நாடு முழுவதும் ஆபரேஷன் கிரீன் ஹன்ட், அதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சமாதான் மற்றும் ஆபரேஷன் பிரஹார் ஆகியவற்றைத் தொடங்கின. இவை அனைத்தும் பல்முனைத்தாக்குதல்கள். இதன் விளைவாக மாவோயிஸ்டுகள் தங்கள் கோட்டைகளில் சிலவற்றை இழந்தனர் . எண்ணிக்கையாகவும் அவர்கள் வலு குறைந்தது. சில தலைவர்களும் தொண்டர்களும் சரணடைந்தனர். புதிய ஆட்சேர்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. உண்மையில், நகர்ப்புற மற்றும் மாணவர் பிரிவுகளிலிருந்து ஆட்சேர்ப்பு முற்றிலும் வறண்டுவிட்டது. இதன் விளைவாக புதிய தலைமை உருவாகவில்லை.

பட மூலாதாரம், Getty Images
"மாவோயிஸ்டுகளுக்கு பஸ்தரில் இரண்டு வலுவான இடங்கள் உள்ளன. ஒன்று அபுஜ்மத். இது 4,000 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இடம். இந்த இடம் இன்று வரை அரசின் கணக்கெடுக்கப்பின் கீழ் வரவில்லை என்று கூறப்படுகிறது. நான் அரசு என்று கூறும்போது , தற்போதைய அரசை மட்டும் குறிக்கவில்லை. பிரிட்டிஷ் கூட இந்த பகுதிக்குள் நுழையவில்லை என்று கூறப்படுகிறது. இந்தப் பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது மற்றும் குறைவான மக்கள் தொகை கொண்டது," என்று நீண்ட காலமாக பஸ்தரில் இருந்து பணியாற்றிவரும் ஒரு பத்திரிகையாளர் கூறுகிறார்.
அவர்களின் மற்றொரு கோட்டை, சிந்தல்நார். இந்த பிராந்தியத்தின் பரப்பளவு அபுஜ்மத் போலவே உள்ளது. இருப்பினும், இந்த பகுதி அடர்த்தியான காடுகளால் சூழப்படவில்லை . சுற்றி பெரிய மலைகளும் இல்லை. மக்கள் தொகையும் இங்கு அதிகமாக உள்ளது. ஆனால், அரசுப் படைகள் குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் பெரும் இழப்பை சந்தித்த பகுதி இது.
2010 ஆம் ஆண்டில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்த தாடிமெட்லா அல்லது 2020 ஆம் ஆண்டில் பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் 17 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த மின்சா ஆகிய இரண்டு கிராமங்களுமே இந்த பிராந்தியத்தின் கீழ்தான் வருகின்றன. மறுபுறம், 2012 ல் சர்ச்சைக்குரிய "என்கவுண்டரில்" 6 சிறுமிகள் உட்பட 17 பேர், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட சர்கெகுடா கிராமமும் இந்த பிராந்தியத்தில்தான் உள்ளது. இந்த 17 பேரும் கிராமவாசிகள் என்றும் ஒரு உள்ளூர் திருவிழாவைப் பற்றி விவாதிக்க அங்கே கூடியிருந்தனர் என்றும் மனித உரிமை அமைப்புகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றன. " கொல்லப்பட்ட மக்கள் மாவோயிஸ்டுகள் என்று சொல்வதற்கு திருப்திகரமான சான்றுகள் எதுவும் இல்லை, " என்று மாநில சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நீதிபதி அகர்வால் தலைமையிலான நீதி ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.
'கடந்த இரண்டு ஆண்டுகளில் அபுஜ்மத் பகுதியில் (நாராயன்பூர் மாவட்டம்) புதிய முகாம்களை போலீசார் நிறுவியுள்ளனர். எனவே, அந்த பிராந்தியத்திலும் தாக்குதல்கள் நடக்கின்றன. தெற்கு பஸ்தரிலும் இதேதான் நடக்கிறது. அங்கு தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, 'என்கிறார் முன்னாள் பெண் மாவோயிஸ்ட் ஒருவர்.
மாவோயிஸ்ட் கோட்டைகளாக உள்ள பகுதிகளில் ஊடுருவ முயற்சிக்கும் போலீசுக்கும், தங்கள் கோட்டைகளைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் மாவோயிஸ்ட் கெரில்லாக்களுக்கும் இடையிலான போராட்டமாக இதை நாம் காணலாம் என்று அவர் மேலும் கூறினார்.
"சுரங்கங்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதே அரசின் முயற்சி"
இந்த பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய கனிம வளங்கள் தொடர்பானதே இந்தப்போர் என்று மாவோயிஸ்ட் அனுதாபிகள் கூறுகின்றனர்.
'சுரங்க நிறுவனங்களிடம் இந்த பகுதிகளை ஒப்படைக்க அரசு முயற்சிக்கிறது. ஆனால் மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் ஆதிவாசிகள் இதை எதிர்க்கின்றனர். மாவோயிஸ்டுகளையும், ஆதிவாசிகளையும் அங்கிருந்து அகற்றி காடுகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதே அரசின் திட்டம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேச்சுவார்த்தை நிலைமை என்ன?
சிபிஐ தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு (மாவோயிஸ்ட்) தங்கள் நிபந்தனைகளுக்கு அரசு ஒப்புக்கொண்டால் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. ஆனால் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பேச்சுவார்த்தை நடக்கவேண்டுமென்றால் மாவோயிஸ்டுகள் தங்கள் ஆயுதங்களை விட்டொழித்து, ஆயுதப் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை அவசியம் என்று சொல்பவர்களும், பேச்சுக்கள் வீண் என்று சொல்லும் மக்களும் இரு தரப்பிலும் உள்ளனர். இதற்கு வரலாற்று முன் மாதிரியும் உள்ளது. பிரிக்கப்படாத ஆந்திராவில் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியின் பதவிக்காலத்தின் போது நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளால் தங்களுக்கு இழப்புதான் ஏற்பட்டதாக மாவோயிஸ்ட் தலைவர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசு அதிகாரத்தை கையகப்படுத்தும் குறிக்கோளைக் கொண்ட ஒரு கட்சியுடனான பேச்சுவார்த்தைகளால் பெரிதாக எதையும் அடைய முடியாது என்று சில மூத்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தடைகள் எதுவாக இருந்தாலும் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் தொடர்கின்றன. பொது அமைப்புகளைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட குடிமக்கள், அறிவுஜீவிகள், சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஏதேனும் ஒரு வடிவத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடக்க முயற்சி செய்து வருகின்றன.
வரலாற்றில் கிடைத்த பாடங்கள்

பட மூலாதாரம், ANI
90 களுக்குப் பிறகு உலகம் வேகமாக மாறிவிட்டது. சீனாவின் மாவோயிஸ்ட் இயக்கத்திற்குப் பிறகு, பெரு, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் மாவோயிச இயக்கங்கள் தோன்றின. இன்று இந்த நாடுகளில் எந்தவொரு வலுவான இயக்கமும் இல்லை. இலங்கைத் தமிழர்கள், ஐரிஷ், குர்திஷ் மக்களின் தேசியவாதப் போராட்டங்கள் முற்றிலுமாக மறைந்துவிட்டன அல்லது ஒடுக்கப்பட்டன. 1992 இல் பெருவில் 'ஷைனிங் பாத்' தலைவர் கோன்சலோ கைது செய்யப்பட்டதன் மூலம் பெரு நாட்டில் மாவோயிச இயக்கம் படிப்படியாக மங்கியது. இதேபோல், பிலிப்பைன்ஸில் மாவோயிச இயக்கம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இடத்திலேயே இருந்தது. துருக்கியில் மாவோயிஸ்ட் இயக்கம், அரசு அடக்குமுறை காரணமாக பெரும் இழப்பை சந்தித்தது. மெக்சிகோவில் உள்ள ஜபாடிஸ்டா இயக்கம் கூட உலகெங்கிலும் உள்ள இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்தது. போராட்ட முறைகளை மாற்றியது.
மறுபுறம், உள்துறை அமைச்சரின் கூற்றுப்படி, கடைசி போர் மூலம் மாவோயிஸ்டுகளை அகற்றுவதற்கான இலக்கு எப்போது எட்டப்படும்? இதை ஒரு மனித உரிமை ஆர்வலரிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: 'மாவோயிச இயக்கத்தை முற்றிலுமாக அகற்றுவது ஒருபோதும் சாத்தியமில்லை. சமுதாயத்தில் அநீதி மற்றும் சமத்துவமின்மை இருக்கும் வரை இயக்கம் ஏதோ ஒரு அளவில், ஏதோ ஒரு வடிவில் தொடரும். இந்த இயக்கத்தின் சமூக-பொருளாதார வேர்களை எதிர்கொள்ளாமல், இந்த இயக்கத்தை சமாளிக்க போலீஸ் நடவடிக்கை போதுமானதாக இருக்கும் என்று கருதுவது தவறு".
மேலே குறிப்பிட்டுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியும் , இந்த இயக்கத்தின் பின்னணியில் உள்ள சமூக-பொருளாதார காரணங்களை சரி செய்வது அவசியம் என்று கூறினார். 'மாவோயிஸ்ட் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். அது மட்டும் அல்ல. அவர்கள் தீவிரவாதப்பாதையில் செல்வதை தடுக்கவும் இது உதவும்.
மாவோயிஸ்டுகள் , பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்களில் அவ்வப்போது தந்திரமான வெற்றிகளை பெறமுடியும். ஆயினும் இது போன்ற ஒரு பெரிய நாட்டில் , அவர்களின் இருப்பு சிறிய பகுதிகளில் மட்டுமே இருக்கும் நிலையில், மாவோயிஸ்டுகள் ராணுவ நடவடிக்கைகளால் மட்டுமே தங்கள் இயக்கத்தை எவ்வாறு முன்னெடுத்துச்செல்ல முடியும்?
பிற செய்திகள்:
- 10.5 % வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு, அரசுக்கு நோட்டீஸ்
- புலிகள் சீருடை சர்ச்சை: யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது
- சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்
- எடப்பாடி Vs ஸ்டாலின்: சென்னை கோட்டையை பிடிப்பது யார்?
- மாஸ்க் அணியாத எளியவரை சாலையில் போட்டு அடிக்கும் போலீஸ்: மனம் கலங்க வைக்கும் வீடியோ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












