தாஹில் ரமானி: இடமாற்றத்தை எதிர்த்து பதவி விலகினார் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

பட மூலாதாரம், Facebook
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமானி தனது பதவி விலகல் கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக அலுவல்பூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி விலகல் கடிதத்தின் நகல் ஒன்றை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் அவர் அனுப்பியுள்ளார் என்கிறது அந்தச் செய்தி.
அவரது இடமாற்றத்தை மாரு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மறுத்துள்ள பின்னணியில் இந்த பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தாஹில் ரமானி, மேகாலயா உயர்நீதின்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யவும், மேகாலயாவின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் ஆகஸ்ட் 28 அன்று பரிந்துரைத்தது.
நாட்டின் மிகப் பழமையான உயர் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம் 75 நீதிபதிகளைக் கொண்டது. 2013ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மேகாலயா உயர் நீதிமன்றம் 3 நீதிபதிகளை மட்டுமே கொண்டது. தற்போது தலைமை நீதிபதி உள்பட இரண்டு நீதிபதிகளுடன் செயல்பட்டு வருகிறது. மேகாலயா உயர் நீதிமன்றம் இந்தியாவின் மிகச் சிறிய உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றம் போன்ற பெரிய உயர் நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் பொதுவாக, மிகச் சிறிய நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்யப்படுவதில்லை என்பதால், தாஹில் ரமானியின் இடமாற்றம் பலரது புருவங்களை உயர்த்தியது.
தனது பணியிட மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு, வி.கே. தாஹில் ரமானி கொலீஜியத்தை கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவரது கோரிக்கையை கொலீஜியம் மிகவும் கவனமாக ஆராய்ந்தாலும் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொண்டு தாஹில் ரமானியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றும் முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் கொலீஜியம் செப்டம்பர் 3-ஆம் தேதி கூறியது.
தாஹில் ரமானியை மாற்றக் கோரும் பரிந்துரையை வழங்கிய கொலீஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமானி, 2015லிருந்து 2017ஆம் ஆண்டு வரை வெவ்வேறு காலகட்டங்களில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.
பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது குஜராத் கலவரத்தின்போது நடந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தார் ரமானி.
முன்னதாக அந்த வழக்கை குஜராத்தில் இருந்து மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












