ஸ்ரீரங்கம் கோயிலில் மோதியின் உரை: திமுக, பாஜக மோதலின் உண்மை பின்னணி என்ன?

பட மூலாதாரம், @annamalai_k
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பிரதமர் மோதியின் உரை திரையிடப்பட்ட சம்பவம், விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ` கோயில் மண்டபத்தில் அனைவரும் கூடும் இடத்தில் எல்.இ.டி திரையை வைத்து பிரதமரின் உரையை பாஜகவினர் பார்த்துள்ளனர். இதில் பிரச்னை என்னவென்றால், வைணவ தலத்துக்குள் சைவம் தொடர்பான நிகழ்ச்சியை நடத்தியதுதான்' என்கின்றனர் திருக்கோயில்-திருமடங்கள் அமைப்பினர். என்ன நடந்தது?
காவல்நிலையத்தில் புகார்
உத்தரகாண்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கேதார்நாத்தில் உள்ள ஆதிசங்கரரின் சமாதி சிதிலமடைந்தது. புனரமைப்பு செய்யப்பட்ட அந்த சமாதியை கடந்த 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதற்காக ஆதிசங்கரர் வழிபட்டதாகச் சொல்லப்படும் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்பட 16 கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இது தொடர்பாக, கடந்த 11ஆம் தேதி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், `ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள தாயார் சன்னதியின் முன் உள்ள கருத்துரை மண்டபத்தில் கோயிலின் இணை ஆணையர் மாரிமுத்துவின் உதவியுடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பெரிய எல்.இ.டி திரை அமைத்து பிரதமரின் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பியுள்ளனர். அது தவறு என்று சுட்டிக் காட்டியதால் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இதைத்தொடர்ந்து, ரங்கராஜன் நரசிம்மன் வெளியிட்ட வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவில், `ஒரு தனிமனிதனை மிரட்டுவது சட்டப்படி குற்றம். இதற்கான முழுப் பொறுப்பையும் அண்ணாமலை ஏற்க வேண்டும். என் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அதற்கு முழுக் காரணமும் அவர்தான். இதை எனது வாக்குமூலமாகவே எடுத்துக் கொள்ளலாம்' என்கிறார்.
கோயில் நுழைவுச் சட்டம் சொல்வது என்ன?
மேலும், `வழிபாட்டுத் தலங்களைக் காப்பதற்காக 1988 ஆம் ஆண்டு சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதில் பிரிவு 3ஏ சொல்வது என்னவென்றால், எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் அரசியல் கட்சியின் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. அப்படி ஒருவர் பயன்படுத்தினால் அனைவருக்கும் அதிகப்பட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாயை அபராதம் விதிக்கலாம் எனச் சொல்கிறது. அதேபோல் கோயில் நுழைவுச் சட்டம் விதி 8ன்படி, `கோயில் வழிபாட்டுக்கு பழக்கவழக்கத்தில் இல்லாத காரியங்களை நடத்தக் கூடாது' என்கிறது. இந்த இரண்டையும் அண்ணாமலை மீறியிருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.
ரங்கராஜன் நரசிம்மனின் புகாரையடுத்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
அதில், `அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் பிரதமரின் உரையைக் கேட்க எல்.இ.டி திரை, ஸ்பீக்கர் வைத்து பா.ஜ.கவினர் கேட்டுள்ளனர். இன்னும் பல இடங்களில் இதேபோன்ற செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு சான்றாக அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் ட்வீட்டுகள் உள்ளன.
கோயில்களைக் கைப்பற்றித் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் நெடுநாளைய கோரிக்கை. அதனை மறைமுகமாக நிறைவேற்றி வருகிறார்கள். கோயில் மண்டபம் அல்லது வளாகத்துக்குள் இவ்வாறு திரையிட்டு குறிப்பிட்ட கட்சியினர் பார்ப்பதற்கு அனுமதி உண்டா? அனுமதி அளித்தது யார் என்பதைக் கவனிப்பது அவசியம். இதேபோல் தொடர்ந்தால் கோயில்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்ஸின் பரப்புரை தளங்களாக மாறிவிடும் அபாயம் உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசே செய்த ஏற்பாடா?

பட மூலாதாரம், @annamalai_k
தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, இதற்குப் பதில் அளித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, `பிரதமர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் 16 கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறைதான் ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீரங்கம் கோயிலிலும் இந்து சமய அறநிலையத்துறைதான் ஏற்பாடு செய்திருந்தது. நான் ஒரு சாதாரண மனிதனாக கலந்து கொண்டேன். இதில் எந்தவிதத் தவறும் இல்லை. என் மீது புகார் சொல்லும் தனி நபர்களை மதித்து பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இதேபோன்ற நிகழ்ச்சிகளை மேலும் நடத்துவோம். யாரையும் நான் மிரட்டவில்லை," என்றார்.
`பிரதமரின் உரையை இந்து சமய அறநிலையத்துறைதான் ஏற்பாடு செய்திருந்தது' என்ற அண்ணாமலையின் பேச்சுக்கு, இதுவரையில் அரசுத் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வரவில்லை. அதேநேரம், துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

``பிரதமரின் உரையை கோயிலில் ஒளிபரப்பியது தவறு. கோயில் சம்பந்தப்பட்ட பணிகள் குறித்தோ, இந்து அறநிலையத்துறை தொடர்பான புதிய விவரங்கள் இருந்தாலோ அதனை கோயிலில் ஒளிபரப்பலாம். பிரதமரின் உரையை ஒளிபரப்பிய விவகாரத்தில் அதிகாரிகள் தவறு செய்திருந்தால், எந்த விதியின்கீழ் பிரதமரின் உரையை அனுமதித்தார்கள் என்பது தொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்படலாம்" என்கிறார், தி.மு.கவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி.
``முறையான அனுமதியை வாங்கிவிட்டுத்தான் 16 கோயில்களில் ஒளிபரப்பியதாக சொல்கிறார்களே?" என்றோம். ``ஆதி சங்கரர் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகிறார் என்றால் அதனை முன்கூட்டியே அனுமதிப்பது என்பது வேறு. அப்படி அதனை எடுத்துக் கொண்டாலும் பா.ஜ.கவின் பிரசார மேடையாக மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. அன்று கோயிலுக்குள் ஒரு சாதாரண மனிதனாக அண்ணாமலை பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக, அரசுக்கு முன்கூட்டியே தெரியும் அல்லது தெரியாது என்பதல்ல பிரச்னை. தி.மு.க என்பது மதசார்பற்ற அரசு. பிரதமரின் நிகழ்ச்சி மதரீதியானதாக இருந்ததால் அதனை கோயிலில் ஒளிபரப்புவதற்கு அனுமதி கேட்டிருப்பார்கள். பிற்காலத்தில் இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கும் வகையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார்.
தி.மு.க செய்யும் சதி - பா.ஜ.க புகார்
அண்ணாமலை மிரட்டுவதாக ரங்கராஜன் நரசிம்மன் தெரிவிக்கும் புகார் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ``இந்த விவகாரத்தில் முழுத் தகவலும் தெரியாமல் ரங்கராஜன் பேசுவதாகவே பார்க்கிறோம். இதில் ஆளும்கட்சியின் தூண்டுதல் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். காரணம், அவர் கொடுத்த புகார் உடனடியாக காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிராக செயல்படும் திராவிடர் கழகத்துக்கு தற்போது கோயிலின் மீது ஏன் பாசம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை," என்கிறார்.

மேலும், ``பிராமணர்கள் என்றைக்குமே தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்தது இல்லை. அதனை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் சதிவேலை நடக்கிறதோ என அச்சப்பட வேண்டியுள்ளது. தற்போது தமிழ்நாட்டின் அரசியல் என்பது பா.ஜ.கவை சுற்றி வருகிறது. எனவே, இந்தச் சம்பவத்தை அண்ணாமலைக்கு எதிராக தி.மு.க பயன்படுத்துகிறது," என்கிறார்.
``பிரதமரின் உரையை ஒளிபரப்புவதற்கு இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறப்பட்டதை இன்று வரையில் அரசோ, அமைச்சரோ ஏன் மறுக்கவில்லை?" என குறிப்பிடும் எஸ்.ஆர்.சேகர், ``கட்சி நிகழ்ச்சி அல்லாத, பிரதமர் பங்கேற்ற மத்திய அரசின் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதையும் அதில் பங்கு கொண்டதையும் அரசியல் என தி.மு.கவினர் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதால் கோயில்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு நபரின் வாயிலாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதுபடுத்தப்படும். கடவுள், கோயில், இந்துமதம் ஆகியவற்றையும் பா.ஜ.கவையும் பிரிக்க முடியாது. முறையான அனுமதியோடுதான் கோயிலுக்குள் சென்றோம். இதனை விவாதமாக மாற்றுகிறவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை," என்கிறார்.
பிரதமரின் உரையும் அண்ணா நினைவுநாளும்
``கோயிலில் அன்னதானம் போடுவது, திருமணத்தை நடத்துவது எனப் பல காரியங்கள் நடைபெறுகின்றன. தேசிய ஒருமைப்பாட்டுத் தினத்தில்தான் பிரதமரின் உரையை ஒளிபரப்பியுள்ளனர். அதுவும் கோயிலின் பாரம்பரியத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பொதுமக்கள் கூடுகின்ற இடத்தில்தான் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் ரங்கராஜன் நரசிம்மன் செயல்பட்டு வருகிறார். அண்ணா நினைவுநாளில் கோயிலில் அன்னதானம் செய்கின்றனர். இதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார்? நாட்டின் பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசியல் எங்கே வந்தது?" என கேள்வியெழுப்புகிறார், பக்சி சிவராஜன். இவர் திருக்கோயில் திருமடங்கள் அமைப்பின் மாநில பொறுப்பாளராக இருக்கிறார்.

``இந்தியாவில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பூஜை செய்யச் சொல்லிவிட்டு, இமயம் முதல் குமரி வரையில் அனைவரும் ஒன்று என்பதை வலியுறுத்தும் வகையில்தான் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதில் கட்சி சார்பு என்று எதுவும் இல்லை. பிரதமர் கூறிவிட்டதால்தான் கோயில்களில் பா.ஜ.கவினர் அதிகளவில் பங்கேற்றனர். இதனால் தேவஸ்தானத்துக்கோ வழிபாட்டுக்கோ எந்தவித பாதிப்பும் வராது.
கோயிலின் கொடி மரத்துக்குள் எந்தவித நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. அனைவரும் கூடும் இடத்தில் எல்.இ.டி திரையை வைத்துப் பார்த்துள்ளனர். இதில் பிரச்னை என்னவென்றால், வைணவ தலத்துக்குள் சைவம் தொடர்பான நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்பதுதான். இவ்வாறு பிரித்துப் பார்ப்பவர்கள்தான் பிரச்னை செய்கின்றனர். இதனால் ஸ்ரீரங்கத்தின் புனிதத்துக்கு எந்தவித பிரச்னைகளும் வரப் போவதில்லை," என்கிறார் பக்சி சிவராஜன்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமரின் உரை எழுப்பிய சர்ச்சை தொடர்பாக, காவல்நிலையத்தில் புகார் அளித்த ரங்கராஜன் நரசிம்மனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``நேரலையாக ஒளிபரப்புவதாக இருந்தால் மட்டுமே ஊடகங்களிடம் பேசுவேன். கோயில்கள் தொடர்பாக எத்தனையோ வழக்குகளைப் போட்டுள்ளேன். அதைப் பற்றியெல்லாம் யாரும் எழுதுவது இல்லை. இப்போது நான் வேறு வேலையாக நீதிமன்றத்தில் இருப்பதால் பேசுவதற்கு வாய்ப்பில்லை," என்றார்.
அடுத்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறையின் இணை இயக்குநர் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்பதற்காக பிபிசி தமிழ் சார்பில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை.
பிற செய்திகள்:
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்








