'சைல்டு ஒன்லி செக்ஸ்' வாட்ஸ் ஆப் குழுவில் ஆபாச காணொளி: தமிழகத்தில் 6 பேர் உள்பட 31 பேர் மீது சிபிஐ வழக்கு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்ந்தது, மறைத்து வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்பேரில் தமிழ்நாட்டில் ஆறு பேர் உள்பட 23 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ.
சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் பகிரப்படும் இந்த இத்தகைய ஆபாச காணொளி விவகாரங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இன்டர்போல் மற்றும் சிபிஐ ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அந்த துறையில் பிரத்யேகமாக சிறார் துஷ்பிரயாகம் மற்றும் சுரண்டலைத் தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த குழுவினர் சிறார் ஆபாச சுரண்டல் காணொளிகளை (சிஎஸ்இஎம்) வைத்திருப்பவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அவற்றை பரப்புவோர் மற்றும் பதிவேற்றுவோரின் செயல்பாடுகளை சமீப காலமாக கண்காணித்து வந்துள்ளது.
14 மாநிலங்களில் 77 இடங்களில் சோதனை

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், இன்று இந்தியா முழுவதும் 77 இடங்களில் சிபிஐ தனிப்படை சோதனை நடத்தியது. ஆந்திர பிரதேசத்தில் திருப்பதி, கனேகல், டெல்லி, சந்தெளலி, வாரணாசி, நொய்டா, காஜியாபாத், பிகாரில் பாட்னா, சிவான், தமிழ்நாட்டில் திருவள்ளூர், கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, ராஜஸ்தானில் அஜ்மீர், ஜெய்பூர், மத்திய பிரதேசத்தில் குவாலியர், மகாராஷ்டிராவில் ஜல்கான், சால்வத் என 14 மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித்துறை அதிகாரி கெளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த சோதனையில் பல மின்னணு சாதனங்கள்/மொபைல்கள்/மடிக்கணினிகள் போன்றவை இதுவரை தேடுதலின் போது மீட்கப்பட்டுள்ளன. CSEM பொருள் வர்த்தகத்தில் சிலர் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
5,000க்கும் அதிகமானோருக்கு தொடர்பு
சிபிஐ விசாரணையில், சேகரிக்கப்பட்ட முதல் கட்ட தகவல்களின்படி, 50க்கும் மேற்பட்ட குழுக்கள் 5,000க்கும் மேற்பட்ட நபர்கள், குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் தகவல்களை பகிர்ந்து கொள்வது தெரிய வந்துள்ளது.

இந்த குழுக்களில் பல வெளிநாட்டினரும் ஈடுபட்டிருப்பதாக புலனாய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. பல்வேறு கண்டங்களில் பரவியுள்ள சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த ஆபாச காணொளி விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முதல் தகவல் அறிக்கையில், சேலம், நாமக்கல், திருவள்ளூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
இது தவிர சிலர் ஒரு குழுவாக மிகப்பெரிய அளவில் வாட்ஸ்ஆப் செயலில் ஒன்லி சைல்ட் செக்ஸ் விடியோ என்ற பெயரில் குழு அமைத்து அதில் சிறார் ஆபாச படங்கள், தகவல்கள், காணொளிகளை பகிர்ந்து வந்துள்ளதாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67பி, இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி-இன் கீழ் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்புக் குற்றப்பிரிவால் பதிவு செய்யப்பட்டுள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் கைது செய்யப்படலாம் என்றும் விரைவில் அவர்கள் தங்களுக்கு எதிரான வழக்கை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்? - 'ஜெய் பீம்' மணிகண்டன் பேட்டி
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் திடீர் இடமாற்றம் - வலுக்கும் எதிர்ப்புக்கு என்ன காரணம்?
- இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
- சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பது எப்படி? சூழலியல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?
- 'கடன் பொறியில் சிக்கிய' இலங்கைக்கு 'நச்சு' உரத்தை அனுப்பிய சீனா - பின்னணி என்ன?
- ரூ.300 கோடி அறிவிப்பு: இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்வினை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













