தூத்துக்குடியில் இரவு நேரங்களில் காரில் சென்று ஆடு திருடி வந்த கும்பல் சிக்கியது எப்படி?

ஆடுகள்

தூத்துக்குடி மாவட்ட சுற்றுவட்டார கிராமங்களில் பல லட்சம் மதிப்புள்ள ஆடுகளை திருடி வந்த இருவர் விளாத்திகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இரவு நேரங்களில் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விளாத்திகுளம், எட்டயபுரம், சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போவதாக ஆடுகளின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.

தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆடுகள் திருடும் கும்பலை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து ஆடு திருடும் கும்பலை தேடி வந்தனர். போலீசார் ஆடுகள் திருடு போன பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே வேம்பார் சோதனை சாவடி பகுதியில் போலீசார் புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுடிட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் காரைக்குடி கண்டனூர் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் முன்னுக்கு பின் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வாகனத்தை சோதனை செய்ததில் இருவரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடுகளை சொகுசு கார்களில் திருடி சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் செல்வராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்படும் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 3 கார்களும் பறிமுதல் செய்த போலீசார் சூரங்குடி காவல் நிலையத்தில் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது அராபத் மற்றும் ஆசிக் ஆகிய இருவரும் காரைக்குடி என்.ஜி.ஓ காலனி பகுதியில் ஆடுகள் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர்.

அந்த கடைக்கு ஆடுகளை திருடி கொடுப்பதற்காக முகம்மது அராபத்தின் நண்பர்களான பாண்டிச்செல்வம், பாலமுருகன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகிய 4 பேரும், அதேபோன்று ஆசிக் நண்பர்களான செல்வராஜ், ஆறுமுகம் மற்றும் ஆசிக்ராஜா ஆகிய 4 பேரும் என மொத்தம் 8 பேரும் சேர்ந்து சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளை திருடி வந்துள்ளது தெரியவந்தது.

மேலும் இந்த கும்பல் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 20 இடங்களில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 101 ஆடுகள் திருடியதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து காரில் சென்று ஆடுகள் திருடுவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் ஆடுகளை திருடிய உடன் ஆடுகள் கத்தாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பினை கொண்டு ஆடுகளின் வாயில் ஓட்டி வந்துள்ளனர்.

திருடப் பயன்படுத்தப்பட்ட வந்த கார்கள்
படக்குறிப்பு, திருடப் பயன்படுத்தப்பட்ட வந்த கார்கள்

முகம்மது அராபத், பாண்டிச்செல்வம் மற்றும் பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர்.

ஆடுகள் திருடிய நபர்களை கைது செய்து திருடு போன ஆடுகளை மீட்ட விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

இது குறித்து பிபிசி தமிழ் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரம் ஆடுகள் திருட்டு போவதாக ஆட்டின் உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதனால் தனிப்படை அமைக்கப்பட்டு ஆடு திருடர்களை தேடி வந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட விளாத்திகுளம் சரக காவலர்கள் ஆடு திருடர்கள் இருவரை பிடித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஆடுகள் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட 14 ஆடுகள் ஆட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த குற்ற சம்பவத்தில் 8 பேருக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதில் மூவர் சிறையிலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய உள்ள மூன்று பேரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் பிடிபடுவார்கள் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :