இந்திய மக்கள்தொகையில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்திருக்கிறதா?

Caption- 2011 ல், இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜம்மு காஷ்மீரில் தகவல்கள் சேகரிப்பு.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு, 2011 ல், இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜம்மு காஷ்மீரில் தகவல்கள் சேகரிப்பு.
    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து இந்திய அரசு நடத்திய மிக விரிவான கணக்கெடுப்பான தேசிய குடும்ப நல ஆய்வு (5)-இன் முடிவுகள் வெளியானபோது, ஒரு தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1,000 ஆண்களுடன் ஒப்பிடுகையில் 1,020 பெண்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1,000 ஆண்களுக்கு 943 பெண்கள் என கணக்கிடப்பட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தேசிய குடும்ப நல ஆய்வு என்பது ஒரு 'மாதிரி கணக்கெடுப்பு'.ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ' சரியான எண்ணிக்கை' ஆகும்.

தேசிய குடும்ப நலஆய்வு (5) ல், சுமார் ஆறு லட்சம் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அதே நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 125 கோடி மக்களையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பாகும்.

மும்பையில், உடல் ஆரோக்கியம் தொடர்பாக பணிபுரியும் 'செஹாட்' (CEHAT) என்ற அரசு சாரா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ரேகே, இந்த வாதத்தை ஏற்றுக்கொள்கிறார். கூடவே மற்றொரு காரணத்தின்பால் நம் கவனத்தை திருப்புகிறார்.

"தேசிய குடும்ப நல ஆய்வு தனது முடிவுகளில் இடப்பெயர்வுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. வீடுகளில் கணக்கெடுக்கும்போது, வேறொரு கிராமம் அல்லது நகரத்தில் பணிபுரியச்சென்றுள்ள ஆண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

கணக்கெடுப்பு தரவு தவறு என்பது இதன் அர்த்தமா?

அரசு சார்பில் 'இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாபுலேஷன் சயின்ஸ்' இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டது.

ஆண் மற்றும் பெண் பாலின விகிதத்தை அறிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் நம்பகமான முறையாகும் என்று இன்ஸ்டிட்யூட்டில் 'இடப்பெயர்வு மற்றும் நகரமயமாக்கல் ஆய்வுகள்' பேராசிரியர் ஆர்.பி.பகத் கூறுகிறார்.

" மாதிரி கணக்கெடுப்பில் பிழை ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் அது இல்லை. அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2011ஆம் ஆண்டைக்காட்டிலும் பாலின விகிதம் மேம்பட்டிருக்கும். ஆனால் இத்தனை அதிகரிப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

CBSE (2016) தேர்வு முடிவுகளில் மாணவர்களை ஒப்பிடுகையில் சிறப்பாக செயல்திறனை வெளிப்படுத்திய மாணவிகளின் கொண்டாட்டம்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு, CBSE (2016) தேர்வு முடிவுகளில் மாணவர்களை ஒப்பிடுகையில் சிறப்பாக செயல்திறனை வெளிப்படுத்திய மாணவிகளின் கொண்டாட்டம்.

சமூக நலன் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனமான, 'வளரும் சமூகங்களின் ஆய்வு மையத்தின்' முன்னாள் இயக்குநரான சஞ்சய் குமாரும் இந்த ஆய்வு முடிவுகளால் ஆச்சரியம் அடைந்துள்ளார். ஆயினும் ஆய்வு நடைமுறை குறித்து உறுதியாக இருக்கிறார்.

"மாதிரி கணக்கெடுப்பு ஒரு நிர்ணயிக்கப்பட்ட வழியில் செய்யப்படுகிறது. மாதிரியை கவனமாக தேர்வு செய்தால், அது சிறியதாக இருந்தாலும் சரியான முடிவுகளை அது கொடுக்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.

1020:1000 என்ற திடுக்கிடும் எண்ணிக்கையைப் புரிந்து கொள்ள, பல்வேறு மாநிலங்கள் மற்றும் கிராமப்புற-நகர்ப்புற முடிவுகளை ஆய்வு செய்யவேண்டியது அவசியம் என்றார் அவர்.

கணக்கெடுப்பில் ஆண்களை விட பெண்களின் விகிதம் ஏன் அதிகமாக உள்ளது?

பெண்களின் சராசரி ஆயுட்காலம் (life expectancy at birth) ஆண்களைக்காட்டிலும் அதிகமாக இருப்பது இதற்கு ஒரு காரணம் என்கிறார் சங்கீதா ரேகே.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் 2013-17 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின்படி, இந்தியாவில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 70.4 ஆண்டுகள் மற்றும் ஆண்களின் ஆயுட்காலம் 67.8 ஆண்டுகள் ஆகும்.

இதனுடன், கர்ப்பமாகி பிரசவித்தவுடன் ஏற்படும் இறப்பு விகிதம் அதாவது 'தாய் இறப்பு விகிதம்' குறைந்துள்ளது.

மிக மோசமான குழந்தை பாலின விகிதம் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவின் ஆரம்பப் பள்ளி

பட மூலாதாரம், MINT

படக்குறிப்பு, மிக மோசமான குழந்தை பாலின விகிதம் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஹரியானாவின் ஆரம்பப் பள்ளி

இந்த இறப்பு விகிதம் 2014-16-ல் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 130 தாய்மார்கள் என்ற நிலையில் இருந்து 2016-18-ல், 113 ஆகக் குறைந்துள்ளது என்று மக்களவையில் சுகாதார அமைச்சகம் அளித்த தகவல் தெரிவிக்கிறது.

ஆய்வுகளின் போது, பெண்களைப் பற்றிய அதிக தகவல்கள் கொடுக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பேராசிரியர் பகத் சுட்டிக்காட்டுகிறார்.

"முன்பு, குடும்பங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை, ஆனால் கடந்த தசாப்தங்களில் பெண்களை மையமாகக் கொண்ட பல அரசு திட்டங்கள் நடைமுறைக்கு வந்திருப்பதால் அவர்களின் பெயர்களை முறையாகப் பதிவு செய்யும் நடைமுறை அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் கணக்கில் வராமல் இருப்பது குறையும். இப்போது அவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படுகின்றனர்," என்று அவர் கூறினார்.

இதன் பொருள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களின் பாலின பரிசோதனை மற்றும் கருக்கொலை குறைந்துள்ளதா?

தேசிய குடும்ப நல ஆய்வு (5), மொத்த பாலின விகிதம் 1020:1000 என்று கூறியுள்ளதோடுகூடவே, பிறப்பு பாலின விகிதம் அதாவது ' செக்ஸ் ரேஷியோ அட் பர்த் (SRB), ஐயும் வெளியிடப்பட்டுள்ளது. இது 929:1000 என்ற விகிதத்தில் உள்ளது.

பிறப்பு பாலின விகிதம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பாலின விகிதத்தை அளவிடுகிறது.

"பாலின பரிசோதனை மற்றும் கருக்கொலையின் விளைவைப் புரிந்து கொள்வதற்கு, மொத்த பாலின விகிதத்தை விட 'SRB' ஒரு சிறந்த அளவுருவாகும். அது இப்போதும் குறைவாகவே இருப்பதால், இந்த திசையில் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது என்பதை இது காட்டுகிறது," என்று பேராசிரியர் பகத் தெரிவித்தார்.

மோசமான குழந்தை பாலின விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபின் அமிர்த்ஸரில் பெண் சிசுக்கொலை குறித்த கண்காட்சி

பட மூலாதாரம், NARINDER NANU

படக்குறிப்பு, மோசமான குழந்தை பாலின விகிதத்தைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபின் அமிர்த்ஸரில் பெண் சிசுக்கொலை குறித்த கண்காட்சி

பிறப்பின்போது பெண் குழந்தைகள் ஆண்குழந்தைகளைவிட குறைவாக இருப்பதற்கான இன்னும் சில அறிவியல் காரணங்களையும் சங்கீதா ரேகே, சுட்டிக்காட்டுகிறார்.

"வரலாற்று ரீதியாக முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும். கூடவே ஆண் குழந்தை பிறக்கும் போது கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. தொழில்நுட்பம் மேம்பட்டதால், சிறிய குடும்பங்கள் அதிகமாகிவிட்டன. கருத்தடை சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளின் விகிதம் அதிகரித்து வருகிறது," என்று அவர் கூறுகிறார்.

2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஆறு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பாலின விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக அதாவது 919 ஆக இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தேசிய குடும்ப நல ஆய்வின் மொத்த பாலின விகிதத்தின் புள்ளிவிவரங்களால் எல்லா நிபுணர்களும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால் வரவிருக்கும் காலத்தின் மீது அவர்கள் நம்பிக்கையையும் கொண்டுள்ளனர்.

சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை குறித்துப் பணியாற்றும் அரசு சாரா நிறுவனமான 'பாப்புலேஷன் ஃபர்ஸ்ட்' இயக்குனர் ஏ.எல்.சாரதா, இது உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்கிறார். இருப்பினும் சமூக சிந்தனையிலும் மாற்றம் தெரிகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.

"2031 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இப்போது பள்ளியில் படிக்கும் தலைமுறையினர் திருமணம் செய்துகொண்டு, பெற்றோராகிவிடுவார்கள். மேலும் ஆண்- பெண் சமத்துவ சிந்தனைத் திட்டங்கள் மற்றும் பிரசாரங்களில் மீண்டும் மீண்டும் கூறப்படுவதை அவர்கள் முன்னெடுத்துச்செல்வார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :