விவசாயிகள் போராட்டம்: ஒவைசியை தாக்கும் திகைத், தேர்தலை முன்னிட்டு இயக்கத்தில் பிளவா?

ராகேஷ் திகைத், யோகேந்திர யாதவ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராகேஷ் திகைத், யோகேந்திர யாதவ்
    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கடந்த ஓரிரு நாள்களில் வெளியான விவசாயிகள் தலைவர்களின் இரண்டு அறிக்கைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவடைந்திருப்பது விவாதத்திற்கு ஒரு காரணம். இரண்டாவது காரணம் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.

இந்த அறிக்கைகளில் ஒன்று, வியாழக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகைத்திடமிருந்து வந்தது. அங்கு அவர் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவரைத் தாக்கினார்.

"பெல்காம் காளை ஒன்று இங்கு அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அது பாஜகவுக்கு உதவிக்கொண்டு சுற்றித் திரிகிறது. அதை இங்கேயே கட்டி வையுங்கள். நாட்டில் பாஜகவுக்கு அது அதிகமாக உதவி வருகிறது. அதை இங்கிருந்து வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள். அது பேசுவது அனைத்தும் உள்ளர்த்தம் கொண்டது. அதை விசாரியுங்கள். அதை இங்கேயே கட்டி வையுங்கள். ஹைதராபாத்தையோ தெலங்கானாவையோ தாண்ட விடாதீர்கள்" என்றார்.

இதுவரை, தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருப்பதே விவசாயிகள் இயக்கத்தின் சக்தியாகக் கருதப்பட்டது.

விவசாயத் தலைவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராகக் குரலெழுப்பினாலும், அவர்களின் உத்தி இதுவரை மற்ற கட்சிகளை வெளிப்படையாக எதிர்ப்பதோ அல்லது ஆதரிப்பதோ இல்லை. குறிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள்.

இதனால், ராகேஷ் திகைத்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்றொரு கருத்து

இரண்டாவது அறிக்கை விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சதூனியின் அறிக்கை. அவர் ஹரியானா பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஆவார்.

அம்பாலாவில் செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அவர் அளித்துள்ள அறிக்கையில், "நாங்கள் மிஷன் பஞ்சாப்' நடத்தி வருகிறோம். வாக்களிப்பவர்கள் ஆள வேண்டும், பணம் படைத்தவர்கள் ஆட்சி செய்யக்கூடாது. வாக்காளர்கள் ஆட்சி செய்தால் சட்டம் வாக்காளருக்கு சாதகமாக இருக்கும். பணம் படைத்தவர்கள் ஆட்சி செய்தால், பணக்காரர்களுக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றப்படும். நான் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் போட்டியிட்டு முன்மாதிரியான நிர்வாகத்தை முன்னெடுப்பவர்களைத் திரட்டி வருகிறேன். தேர்தலுக்கு நாங்கள் சொந்தக் கட்சி அமைப்போம். பஞ்சாபில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னர் அனைவரும் எங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள்." என்றார் அவர்.

குருநாம்சிங் சதூனி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, குர்னாம் சிங்

தேர்தல் அரசியலில் நுழைவதற்கான தனது விருப்பத்தை சதூனி ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் ஐக்கிய கிசான் மோர்ச்சாவால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சர்ச்சைக்குக் காரணம்

ஆனால் இந்த முறை அவர் அறிக்கை வெளியிடும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயிகள் இயக்கம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி டெல்லியின் பல்வேறு எல்லைகளில் விவசாயிகள் இன்று திரண்டனர்.

இந்த இரண்டு அறிக்கைகளால் விவசாயச் சட்டம் திரும்பப் பெற்ற பிறகு ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் எதிர்கால வடிவம் என்னவாக இருக்கும் என்று விவாதம் நடந்து வருகிறது.

இந்த இயக்கம் இப்போது தேர்தல் அரசியலில் இறங்கத் தயாராகிறதா? அல்லது இந்தப் பிரச்சினையில் அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லையா?

இயக்கம் தொடர்பான அடுத்த உத்தி என்ன என்பது குறித்து ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் கூட்டமும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிசான் மோர்ச்சா மேலும் தேர்தல் அரசியலில் இறங்குவதா அல்லது பழையபடி இடைவெளியை கடைப்பிடிப்பதா என்பது சனிக்கிழமை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஆனால் வரும் நாட்களில் விவசாயிகள் இயக்கத்தின் எந்த வடிவத்தையும் விவாதிப்பதற்கு முன், அந்த இயக்கத்தின் வரலாற்றையும், எதிர்காலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களின் முக்கியமான தேர்தல்களையும் கருத்தில் கொண்டே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. குறிப்பாக - உ.பி மற்றும் பஞ்சாப் தேர்தல்கள்.

போராட்டத்தின் ஓராண்டு

கடந்த ஓராண்டாக விவசாயிகள் இயக்கத் தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்தனர்.

ராகேஷ் திகைத்

பட மூலாதாரம், Twitter/SKM

படக்குறிப்பு, ராகேஷ் திகைத்

காங்கிரஸின் லூதியானா எம்.பி., ரவ்னீத் சிங் பிட்டு, சிங்கு எல்லையை அடைந்தபோது, 'திரும்பிப் போ' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மறுபுறம், அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல், லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, எம்பி தீபேந்தர் ஹூடா ஆகியோர் காஜிபூர் எல்லையை அடைந்தபோது, ராகேஷ் திகையத் அவர்களை அன்புடன் சந்தித்தார்.

பல்வேறு தேர்தல்களில், விவசாயிகள் தலைவர்கள் ஒவ்வொரு இடத்திலும் மகாபஞ்சாயத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கும் விவசாயிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஐக்கிய கிசான் மோர்ச்சா கூறுகிறது. அங்கு சென்று பா.ஜ.,வுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தில் இவர்கள் ஈடுபட்டதால் பாஜகவின் வாக்குகள் பாதிக்கப்பட்டன,

உத்திரபிரதேச தேர்தலில் தோல்வி பயம் காரணமாக விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இறுதியில் இயக்கம் வெற்றி பெற்றது. விவசாய சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டம் தொடர்பான விஷயம் சிக்கலில் உள்ளது.

பஞ்சாப் அரசியல் விவசாயிகள்

பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், குறைந்த பட்ச ஆதரவு விலை(எம் எஸ் பி) கிடைக்கும் பயிர்கள் தான் பெரும்பாலும் பயிரிடப்படுகின்றன.

இந்த இயக்கத்தை பஞ்சாப் ஹரியானா இயக்கம் என்று அழைப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

விவசாயிகள் போராட்டம்.

பட மூலாதாரம், MONEY SHARMA/GETTYIMAGES

எனவே புதிய விவசாயச் சட்டத்தைத் திரும்பப் பெறவைத்து குறைந்தபட்ச ஆதார விலை மீதான சட்டத்தை உருவாக்கச் செய்து, விவசாயிகள் தேர்தல் அரசியலில் நுழைந்து வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பிரமோத் குமார், இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலை உதாரணமாகக் கூறுகிறார்.

அவர், "அரசியல் வேறு, தேர்தல் அரசியல் வேறு. சர்ச்சில் கூட போரில் வென்றார், ஆனால் அதைத் தொடர்ந்த தேர்தலில் தோல்வியுற்றார்" என்றார்.

"விவசாயிகள் இயக்கம் அரசியல் தான். அவர்களுக்குத் தனியாகச் சித்தாந்தம் இருந்தது. அவர் விவசாயத்தை சந்தையில் ஒப்படைக்க விரும்பவில்லை. ஆனால் விவசாய இயக்கம் தேர்தல் அரசியலில் இருந்து இது வரை ஒதுங்கியே இருந்தது. இப்போது கிசான் மோர்ச்சாவிற்கு ஒரு வழி கிடத்துள்ளது. இந்த முன்னணியின் எந்தப் பிரிவினரும் சுயமாக தேர்தல் அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர்கள் அனைத்துப் பிரிவுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு (இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், தொழில்துறை, போதைப்பொருள், வேலைவாய்ப்பு) ஒரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பஞ்சாப் தேர்தல் அரசியலை விவசாயிகள் பிரச்சினையை மட்டும் கொண்டு செய்ய முடியாது." என்கிறார் அவர்.

டாக்டர் பிரமோத் குமார் தனது கருத்துக்கு பின்னால் உள்ள காரணங்களை விவரித்து, "பஞ்சாபின் அரசியல் மற்ற மாநிலங்களில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இங்கு 'பிரத்தியேக' அரசியல் செய்ய முடியாது, 'உள்ளடக்கிய' அரசியலே இங்கு இயங்க முடியும். இங்குள்ள அரசியல் கட்சிகள் விவசாயிகள், வணிகர்கள், தலித்துகள்,, கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் என அனைவரையும் அரவணைத்துச் செல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.இங்கு சாதி, மத அரசியல் ஆதிக்கம் செலுத்துவதில்லை." என்று கூறுகிறார்.

உத்தரப்பிரதேச அரசியலில் விவசாயிகள்

பஞ்சாப் போலல்லாமல், உத்தரப்பிரதேச அரசியலில் 'சாதி' மற்ற எல்லாவற்றைப் போலவும் ஒரு பெரிய பிரச்சினை.

ஜாட் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறப்படும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் இயக்கத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

ஆனால் இப்பகுதியில் பிற சாதி விவசாயிகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை.

விவசாயிகள் இயக்கத்தின் தாக்கம் மேற்கு உத்தரபிரதேசத்திற்கு வெளியேயும் உள்ளதா என்பது குறித்து அரசியல் ஆய்வாளர்களின் கருத்துக்கள் இரு வேறாகப் பிரிந்துள்ளன.

இதற்குப் பின்னால் உள்ள ஒரு காரணம் என்னவென்றால், மேற்கு உத்தரபிரதேசத்திற்கு வெளியே, ஏராளமான சிறு விவசாயிகள் அன்றாட உணவுக்கும் நீருக்கும் போராடுகிறார்கள். அவர்கள் விரும்பினாலும் இயக்கத்தில் சேர முடியாது.

லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்குப் பிறகு, உத்திரப்பிரதேசத்தின் மற்ற விவசாயிகளின் இயக்கம் விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது.

மேற்கு உத்தரபிரதேசத்துடன் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் அனில் சௌத்ரி கூறுகையில், "விவசாயிகள் இயக்கம் இதுவரை அரசியல் சாராதது. அதாவது, வெவ்வேறு இயக்கங்களின் விவசாயத் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்று சேர்ப்பதை நான் குறிக்கிறேன். அனைத்து சாதி, மதம், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் இவர்களிடையே உள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்.

பட மூலாதாரம், Getty Images

"விவசாய தலைவர்கள் தங்கள் மேடையில் எந்த கட்சியையும் அல்லது கூட்டணியையும் எதிர்ப்பது பற்றி பேசினால், அது அரசியல் அல்ல, ஏனென்றால் மீதமுள்ள கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கக் கோரினால், அப்போது அது அரசியலாகிறது."

ராகேஷ் திகாயத்தின் அறிக்கை குறித்து அவர் நேரடியாக எதுவும் கூறவில்லை, ஆனால் போராட்டம் முடியும் வரை இந்த முன்னணி 'தேர்தல் அரசியலுக்கு' செல்லாது என்றும் கூறினார். அதற்கு முன் அது தேர்தல் அரசியலுக்கு வந்தால் அது தற்கொலைக்குச் சமமானது தான்." என்று குறிப்பிட்டார்.

அரசியலுக்கு விரோதமில்லை

ஐக்கிய கிசான் மோர்ச்சாவில் 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் குழுக்கள் உள்ளன.

தற்போது, கிசான் மோர்ச்சாவில் அங்கம் வகிக்கும் பஞ்சாபின் பாரதிய கிசான் யூனியன் (உக்ராஹான்) பிரிவு, கிசான் மோர்ச்சா தேர்தல் அரசியலில் நுழைவதை விரும்பவில்லை. உக்ராஹான் பிரிவு பஞ்சாபில் விவசாயிகளின் மிகப்பெரிய முன்னணியாகக் கருதப்படுகிறது.

மறுபுறம், வரும் பஞ்சாப் தேர்தலில் விவசாயிகள் ஒரு மாற்று சக்தியாக உருவாக வேண்டும் என்று ஹரியானாவின் சதூனி பிரிவு விரும்புகிறது.

மேலும் சில விவசாயிகள் தலைவர்கள் வாக்கு அரசியலுக்கு ஆதரவாக உள்ளனர்.

இங்கு இன்னுமொரு விஷயம் குறிப்பிடத் தக்கது. ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் பல உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள்.

யோகேந்திர யாதவ் முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்ததைப் போலவே, ராகேஷ் திகாயித் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஒருமுறை காங்கிரஸ் ஆதரவுடனும், ஒருமுறை ராஷ்டிரிய லோக்தளத்துடனும் போட்டியிட்டார். மத்தியப் பிரதேச தலைவர் ஷிவ் குமார் கக்காஜி, ஆர்.எஸ்.எஸ்-ஐச் சார்ந்த பாரதிய கிசான் சங்கத்தில் இருந்து வருகிறார்.

மேற்கு உத்திரபிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஹர்வீர் சிங் கூறுகையில், "இந்த முறை உத்தரபிரதேசத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாஜக தலைவர் சஞ்சீவ் பல்யானின் சகோதரர் பாரதிய கிசான் யூனியன் ஆதரவுடன் எதிர்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை ராகேஷ் திகாயத்தின் சகோதரர் நரேஷ் திகாயத் தான் வேட்பாளராக அறிவித்தார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார். பி.கே.யு.வின் பிஜ்னோர் உறுப்பினரின் மனைவியும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவருக்கு யூனியனின் ஆதரவும் இருந்தது."என்று விவரித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :