பருவநிலை மாற்றம்: பறவைகளிடம் மணமுறிவு? அண்டரண்டப் பறவைகளின் காதல் உலகத்தில் புதிய சிக்கல்

பட மூலாதாரம், Francesco Ventura
- எழுதியவர், மணீஷ் பாண்டே
- பதவி, நியூஸ்பீட் செய்தியாளர்
காதலர்களோ, இணையர்களோ பிரிகிறார்கள் என்றால் ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த ஈர்ப்பு குறைந்துவிட்டது என்பதோ, ஒருவர் மற்றவருக்கு உரிய நேரம் ஒதுக்கவில்லை என்பதோ காரணமாக இருக்கக்கூடும்.
ஆனால், பருவநிலை மாற்றத்தால், இணைகள் பிரிவது நடக்குமா?
நடக்கும் என்கிறது புதிய ஆய்வு.
ஓர் இணையோடு மட்டும் வாழ்கிற, காதலில் மிகவும் உண்மையாக இருக்கிற வெகு சில உயிரினங்களில் அண்டரண்டப் பறவையும் ஒன்று. ஆங்கிலத்தில் ஆல்பெட்ராஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பறவைகள் கடலில் நெடுந்தூரம் ஒரே மூச்சாகப் பறக்க வல்லவை.
இந்தப் பறவைகளிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சியில் இவற்றின் காதல் வாழ்வில் புதிய நெருக்கடிகள் தோன்றியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் பறவைகளிடையே 'மணமுறிவு' அதிகரிக்கிறது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் காட்டின.
ராயல் சொசைட்டி சஞ்சிகையில் இந்த ஆய்வு கட்டுரையாக வந்துள்ளது. ஃபால்க்லேன்ட் தீவில் 15,500 இனப்பெருக்க இணைகளிடம் 15 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அண்டரண்டப் பறவை இணைகள் பொதுவாக பிரியாதவை. இந்த இணைகளில் ஒன்று வேறொரு பறவையோடு உறவு கொள்ளுமானால், அது ஏமாற்றுவது என்றே பொருள் கொள்ளப்படும். இதைத்தான் விஞ்ஞானிகள் மணமுறிவு என்று அழைக்கிறார்கள்.
மனிதர்களைப் போலவே, அண்டரண்டப் பறவைகளும் கிறுக்குத்தனமான வளர்ச்சிப் பருவத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த காலகட்டத்தில் அவை எப்படி தன் இணையைக் கண்டறிவது என்று பல முயற்சிகளை செய்யும். சில நேரங்களில் அந்த முயற்சியில் தோற்கும்.
ஆனால், இணையைக் கண்டறிந்தபிறகு பெரும்பாலும் அவை வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்கும். தன்னுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்த பிறகு 1 சதவீத அண்டரண்டப் பறவைகள் மட்டுமே தனது துணையிடம் இருந்து பிரிகின்றன. பிரிட்டனில் மனிதர்களிடையே நிலவுகிற மணமுறிவு விகிதத்தைவிட அண்டரண்டப் பறவைகளின் மணமுறிவு விகிதம் சாதாரணமாக குறைவு.


"ஒரு தார மணமும், நீண்ட கால பந்தமும் இந்தப் பறவைகளிடம் பொதுவான பண்பு," என்கிறார் இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், லிஸ்பன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருமான ஃப்ரான்செஸ்கோ வென்சுரா.
ஆனால், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் கடல் நீர் வெப்பநிலை அதிகரித்த ஆண்டுகளில், அண்டரண்டப் பறவைகளிடையே 8 சதவீதம் வரை மணமுறிவு நிகழ்ந்துள்ளது.
சுற்றுச்சூழலால் நிகழும் மணமுறிவு
சுற்றுச்சூழல் காரணமாக நிகழும் மணமுறிவுகள், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளில் இதுவரை கவனிக்கத்தவறிய அம்சம் ஆகும் என்கிறது இந்த ஆராய்ச்சி.
பொதுவாக குஞ்சுபொறிக்காத சூழ்நிலை ஏற்படும்போது அடுத்த பருவத்தில் வேறு இணையைத் தேடுவது என்பதுதான் அண்டரண்டப் பறவைகளிடையே நடக்கும் மணமுறிவுக்கான பொதுவான காரணம் ஆகும். ஆனால், வெற்றிகரமாக குஞ்சுபொறித்த பிறகும்கூட இணைகள் பிரிவது நடந்திருப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார் ஃப்ரான்செஸ்கோ. தொலைதூரம் சென்ற இணையோடு உறவைத் தொடர்வதில் உள்ள போராட்டம் இதில் ஒன்று. நீர்ப்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பதால் அவை இரைதேட அதிகதூரம் பறக்க நேர்கிறது. நீண்ட காலம் இரைதேட நேர்கிறது. இதனால், ஒரு பறவை உரிய காலத்தில் இனப் பெருக்கத்துக்கு வந்து சேராதபோது அடுத்த பறவை வேறொரு இணையைத் தேடுகிறது.
நீர்ப்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பது போன்ற கடுமையான சுற்றுச்சூழல் நிலவும்போது அண்டரண்டப் பறவைகளின் மன அழுத்தத்தைக் கூட்டும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. உணவுப்பற்றாக்குறை, கடுமையான இனப்பெருக்க சூழ்நிலைகள் ஆகியவை ஏற்படும்போது இணையில் ஒன்று மற்றொன்றின் 'செயல்பாடு' திருப்தியாக இல்லை என்று கருதலாம். இதனால் மணமுறிவு ஏற்படலாம் என்பது இன்னொரு சாத்தியமான காரணம் என்கிறார் ஃப்ரான்செஸ்கோ.

பட மூலாதாரம், Getty Images
உலகில் பல இடங்களில் அண்டரண்டப் பறவைகள் எண்ணிக்கை கடும் சிக்கலில் உள்ள நிலையில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.
அண்டரண்டப் பறவை இனத்தில் தற்போது உள்ள இனப்பெருக்கம் செய்யும் இணைகளின் எண்ணிக்கை 1980களில் இருந்த எண்ணிக்கையை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட பாதி என்கிறது 2017ம் ஆண்டு புள்ளிவிவரம் ஒன்று.
இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்ட ஃபால்க்லேன்ட் தீவில் இந்த மணமுறிவு பிரச்னை, உடனடியாக அண்டரண்டப் பறவைகளின் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது; ஆனால், குறைவான எண்ணிக்கையில் இந்தப் பறவைகள் உள்ள இடங்களில் இந்த மணமுறிவு என்பது ஒரு கவலைக்குரிய விஷயம்தான் என்கிறார் ஃப்ரான்செஸ்கோ.
"வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், மேலும் சிக்கல்கள் தோன்றும்," என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













