தமிழ்நாடு மழை: சடங்காகிறதா மத்திய குழு ஆய்வு? கேட்பது 100 கிடைப்பது 10 - விரிவான அலசல்

பட மூலாதாரம், MK STALIN
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர்களுக்கு மாநில அரசு கோரும் நிவாரணத் தொகையில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி வருகிறது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து மாறுபட்ட கருத்துகளை பொருளாதார நிபுணர்களும் முன் வைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த குழுவினர் கள ஆய்வை முடித்து விட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த அறிக்கை மத்திய பேரிடர் மேலாண்மைத்துறையிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஏற்கெனவே ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழகத்துக்கு நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.
பருவம் தவறிய பெரு மழை, புயல், வறட்சி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் போது, மத்திய குழுக்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆய்வு செய்வது வழக்கமானது.
இந்த நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டு மூலம் நிதியுதவி வழங்கப்படும். ஆனால், பாதிக்கப்பட்ட மாநிலம் கேட்கும் நிவாரண நிதி எந்த காலத்திலும் அது கேட்ட அளவில் பாதியளவு கூட கொடுக்கப்படுவதில்லை என்பதை கள யதார்த்தம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
10 ஆண்டுகளில் என்ன நடந்தது?
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்கு மாநில அரசு கேட்ட நிதி, மத்திய அரசு ஒதுக்கிய நிதிக்கும் இடையே உள்ள வேறுபாடு இந்த கேள்வியை எழுப்புகிறது.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பிற்கு தமிழ்நாடு அரசு கேட்ட நிவாரண நிதி ரூ. 14, 910 கோடி. ஆனால், மத்திய அரசு முதலில் இடைக்கால நிதியாக ரூ. 353 கோடி ஒதுக்கியது. பிறகு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1, 146 கோடி ஒதுக்கியது. இடைக்கால நிவாரணமாக ரூ. 1,500 கோடி கேட்ட நிலையில் மொத்த நிவாரண நிதியே ரூ. 1, 500 கோடி தானா? என்று அப்போது அதிருப்தி ஏற்பட்டது.

இதற்கு முந்தைய ஒக்கி புயலின்போது சேதங்களை சீர்படுத்த மாநில அரசு ரூ. 9, 302 கோடி கேட்டது, அப்போது மத்திய அரசு முதலில் ரூ. 133 கோடியும் தொடர்ந்து ரூ. 561 கோடியும் ஒதுக்கியது.
வர்தா புயலின் போது ரூ 22, 573 கோடி கேட்கப்பட, கிடைத்ததோ ரூ. 266 கோடி.
2016 -17 ஆண்டில் கடும் வறட்சி நிலவியதால் ரூ. 39, 565 இழப்பீடு கேட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், ரூ. 1, 748 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
2011ஆம் ஆண்டு கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களை சிதைத்த தானே புயல் பாதிப்பிற்கு ரூ. 5, 249 கோடி நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால், ரூ. 500 கோடி தான் ஒதுக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
தானே முதல் நிவர், புரேவி புயல்கள் வரை மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது என்று விவசாயிகள் சங்க தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பேரிடர் பாதிப்புகளின் போது மாநில அரசு கேட்கும் நிவாரண நிதியை மத்திய அரசு எப்போதுமே கொடுப்பதில்லை," என்றார்.
தனி கொள்கை அவசியம்

மேலும் அவர், "இந்தியா முழுவதும் ராபி, காரீப் என்கிற இருபருவகால வேளாண் கொள்கையின் படி மத்திய அரசு முடிவு செய்கிறது. இது தமிழ்நாட்டுக்கு ஏற்றதல்ல. தமிழ்நாட்டில் ஜூன்மாதம் தொடங்கி டிசம்பர் வரை இரண்டு பருவ மழைகளை எதிர்கொள்கிறோம். எனவே அக்டோபர் 1ம் தேதி முதல் கோடைக்கான காரீப் பருவ முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவது முரணாக உள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு தனி பருவ கால வேளாண் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தொடர்ந்து பருவமழை, புயல் பேரிடர்களால் பாதிக்கப்படுவதால், தமிழ்நாட்டை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவிக்க வேண்டும். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்யும் பெரு மழையினாலும் தமிழ்நாடு பாதிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட மாநிலங்களின் பங்களிப்போடு சிறப்பு நிதியை ஏற்படுத்த வேண்டும்," என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பொருளாதார நிபுணரும் தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக்குழு உறுப்பினருமான பேராசிரியர் R.ராஜேந்திரன், "வறட்சி, வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது மாநில அரசு கேட்கும் நிவாரண நிதிக்கும் மத்திய அரசு ஒதுக்கும் நிதிக்கும் பெரிய அளவு வேறுபாடு உள்ளது. மாநில அரசு கேட்கும் நிதியில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே ஒதுக்கும் அறிவிக்கப்படாத நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். இது சரியான அணுகுமுறையாக இல்லை. மேலும், பாதிப்புகள் ஏற்படும் போதே மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் பார்வையிடும் போது, மத்திய குழுவும் பார்வையிட்டால், சரியான கணக்கீடும், உரிய நிவாரணமும் கிடைக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் வேண்டும்," என்று கூறினார்.
அதிகமாக கோரும் மாநில அரசு
மாநில அரசு தேவையை விட அதிக அளவு நிவாரண நிதியைக் கேட்கிறார்கள் என்கிறார் பா.ஜ.க பிரமுகரும் பொருளாதார நிபுணருமான ராஜலட்சுமி.
மேலும் அவர் கூறுகையில், "உரிய நீர் மேலாண்மை இல்லாமை. பாலம் கட்டுமானம், தூர் வாரும் பணிகளில் உள்ள முறைகேடு இவற்றால் பெருமழையில் ஏற்படும் இழப்புகளுக்கும் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கிறார்கள். ஆனால், உண்மை சேதத்தை சரியாக மதிப்பிட்டு மத்திய குழு அரசுக்கு பரிந்துரை செய்கிறது. இதையடுத்து உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்குகிறது. இதில் பாரபட்சம் எதுவும் இல்லை," என்கிறார்.
இயற்கைப் பேரிடர் பாதிப்புகளின் போது மத்திய குழுவின் ஆய்வு கண்துடைப்பாகத்தான் நடக்கிறது என ஒரு தரப்பு கவலை கொண்டுள்ளது.
பொதுவாகவே வெள்ள சேதங்களின்போது ஏற்படும் இழப்பிற்கு தகுந்தாற்போல நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்கிறார் தமிழக விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) மா.ப.சின்னதுரை.
இது குறித்து அவரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "பருவநிலை மாற்றத்தால் பொழியும் பெருமழையால் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம், தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பினருமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே வரி செலுத்துவதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் இழப்பீட்டுத் தொகை மட்டும் மிகக் குறைவாகவே கொடுக்கப்படுகிறது," என்றார்.
கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் அமித் ஷாவை திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு சந்தித்தார்.

பட மூலாதாரம், T.R.BAALU
அப்போது , பெருமழைப் பாதிப்புகளுக்கு ரூ. 2, 079 கோடி வேண்டும். முதல்கட்டமாக ரூ. 550 கோடியை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் மத்திய குழு ஆய்வுக்கு பிறகே தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தொடர் கன மழையால், சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்றொரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












