வீரப்பன் அண்ணன் மாதையனை விடுதலை செய்ய 34 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் சிக்கல்

- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளில் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. `கைதிகளை முன்விடுதலை செய்வதில் கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. அதிகாரிகளின் செயலால் நீண்டகால சிறைவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். என்ன நடக்கிறது?
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது. நீண்டகால சிறைவாசம், நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் சிறைவாசிகளை அரசு விடுதலை செய்ய உள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள சிறை விதிகளின்படி முன்விடுதலை பெறுவதற்குத் தகுதியானர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. இதனை முன்விடுதலைக்கான கமிட்டி ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில் ஆயுள் சிறைவாசிகள் 700 பேர் முன்விடுதலை செய்யப்பட உள்ளனர்.
வீரப்பன் அண்ணனின் துயரம்
அதேநேரம், கைதிகள் முன்விடுதலையில் அரசின் நடவடிக்கை பாரபட்சமாக உள்ளதாக மனித ஆர்வலர்கள் கொதிப்பை வெளிப்படுத்துகின்றனர். இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் குடிமை உரிமைக் கழகத்தின் (PUCL) தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், `` நீண்டகாலம் சிறையில் உள்ளவர்களை விடுவிப்பது தொடர்பாக ஆட்சியாளர்கள் முடிவெடுப்பதைவிட அதிகாரிகள்தான் முடிவெடுக்கின்றனர். சிறைவாசிகளில் குறிப்பிட்ட சிலரின் விடுதலையை தாமதப்படுத்தும் வகையில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. கைதிகள் முன்விடுதலை தொடர்பாக 1989 ஆம் ஆண்டு வெளியான அரசாணையில், தீவிர குற்றம் செய்தவர்களை வரிசைப்படுத்துகின்றனர். அதே அரசாணைதான் கடந்த 15.11.2021 ஆம் ஆண்டு வெளிவந்த அரசாணையிலும் பிரதிபலிக்கிறது" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` அரசாணையில் 15 குற்றங்களை வகைப்படுத்துகின்றனர். இந்த பதினைந்து பிரிவுக்கும்கீழ் தனித்தனியாக குற்றங்களைப் பிரித்துள்ளனர். ஆதாயக் கொலைகள், தீவிரவாத செயல் என சிலவற்றைப் பட்டியலிட்டு, இதில் கைதானவர்கள் எவ்வளவு நாள் சிறையில் இருந்தாலும் அவர்களை விடுதலை செய்யப் போவதில்லை என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாக, முன்விடுதலைக் கமிட்டியின் முன்னால் இந்த சிறைவாசிகளை ஆஜர்படுத்துவதில்லை" என்கிறார்.
உதாரணமாக, வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை சிறையில் உள்ளதை விவரித்த பாலமுருகன், `` 1989-ல் கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் மாதையன், ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய மூவர் கைது செய்யப்படுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அந்த வழக்கில் நான்காண்டுகள் கர்நாடக சிறையில் அவர்கள் தண்டனையை அனுபவித்தனர். அந்த வழக்கு நிறைவடைவதற்கு முதல் நாள், தமிழ்நாட்டில் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் அவரை சேர்த்து விடுகின்றனர்.
இதனால் 1994ஆம் ஆண்டு முதல் அவர் தமிழ்நாடு சிறையில் இருக்கிறார். அப்படிப் பார்த்தால் 89 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அவர் சிறையில்தான் இருக்கிறார். உடல்நலக் குறைவாலும் வயது காரணமாகவும் மாதய்யன் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். அவரது எஞ்சிய காலத்தையாவது குடும்பத்தினருடன் கழிப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என்கிறார்.
வீரபாரதி vs தமிழ்நாடு வழக்கு
தொடர்ந்து முன்விடுதலையில் உள்ள சிக்கல்கள் குறித்து விவரித்தவர், ``சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரபாரதி vsதமிழ்நாடு என்ற வழக்கு 2015-16 ஆம் ஆண்டுகளில் வந்தது. நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் வந்த இந்த வழக்கில், `வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் வீரபாரதி தண்டிக்கப்பட்டதால் அவரது விடுதலையை பரிசீலிக்க மாட்டோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், 16 ஆண்டுகளுக்கும் மேலாக வீரபாரதி சிறையில் இருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நாகமுத்து, `வன்புணர்வுக்கான தண்டனை என்பது ஏழு ஆண்டுகள். அவர் ஏற்கெனவே 15ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். பாலியல் குற்றத்துக்கான தண்டனையை கழித்துவிட்டு, அவரது விடுதலையை பரிசீலனை செய்யுங்கள்' என்றார்.

மேலும், `இதேபோல் பலரையும் சிறையில் வைத்துள்ளதால் அவர்களை அடையாளம் கண்டு விடுதலை செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், `வீரபாரதி வழக்கில் உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் சரி. ஆனால் வீரபாரதி மட்டுமே தனது விடுதலைக்காக நீதிமன்றம் வந்திருக்கிறார். எனவே இந்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும்' எனத் தீர்ப்பளித்தனர்" என்கிறார்.
``கடந்த ஆறு மாதத்துக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்றில், `14 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவடைந்த அனைவரையுமே மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யலாம். ஆளுநர் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை' எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 443 ஏ என்றொரு பிரிவு உள்ளது. அதில் ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் என வகைப்படுத்தியுள்ளனர். நீதியரசர் நாகமுத்து கொடுத்த உத்தரவிலும், `தகுதியுள்ள சிறைவாசிகளை பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் தகுதிக்குள் வராத சிறைவாசிகளை 14 ஆண்டுகள் கழித்து பரிசீலனை செய்யுங்கள்' எனக் கூறியிருந்தார்.
அதிகாரிகள் லாபியா?
சிறையில் 14 ஆண்டுகளைக் கடந்தவர்கள், வெளியே சென்ற பிறகு குற்றம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதா என்றுதான் அரசு பார்க்க வேண்டும். கடந்த ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதிகாரிகளின் லாபிதான் மேலோங்கியுள்ளது. குற்றம் செய்தவர்களை சமூகத்தோடு இணைந்து வாழச் செய்ய வேண்டும். தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாதையன் வழக்கில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில், `அவரை விடுதலை செய்வதை மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் கூறியது. இன்று வரையில் அதனை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் மாதையனுக்கு இரண்டு முறை இதயநோய் வந்துவிட்டது. தற்போது 75 வயதைக் கடந்தவராக இருக்கிறார்" என்கிறார் பாலமுருகன்.
மேலும், `` தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் கைதானவர்கள் முன்விடுதலையில் என்ன பிரிவில் வருகிறார்களோ, அதே பிரிவில்தான் மாதையனும் வருகிறார். ஆனால், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துவிட்டு வீட்டுக்கும் அனுப்பிவிட்டனர். அவர்களுக்கு பொருந்துகின்ற உத்தரவு, மாதைய்யனுக்கு பொருந்தாதா? மேலவளவு கொலை வழக்கில் கைதானவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், அதில் கைதானவர்களின் சமூகத்தினர் போராடி அரசாணையை வெளியிட வைத்து விடுதலை செய்தனர். சிறை சீர்திருத்தம் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்துத்தான் சிவில் சமூகத்தைப் பார்க்க முடியும். மாதையன் விடுதலையை அரசு பரிசீலிக்க வேண்டும்" என்கிறார்.
ஆயுதமும் கொள்ளையும்தான் சிக்கலா?

மாதையன் மீதான வழக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியன், ``வீரப்பனால் கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அய்யணன், அய்யன்துரை, முத்துக்குமார், குணசேகரன் ஆகிய ஐந்து பேர் இருந்தனர். இவர்களைக் கொல்வதற்கு மாதையன் துணையாக இருந்ததாக கர்நாடக போலீஸார் அவரைக் கைது செய்தனர். அந்த வழக்கில் சிறையில் இருந்து சில் ஆண்டுகளில் அவர் வெளியில் வந்ததும் வனச் சரகர் சிதம்பரம் கொலை வழக்கில் மாதய்யன் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அடுத்தடுத்த வழக்குகளும் அவர் மீது போடப்பட்டன. ஏறக்குறைய 34 ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார். அவர் சிறையில் இருந்து வெளியில் வருவதே சரியாக இருக்கும்" என்கிறார்.
``முன் விடுதலையில் ஒருவர் மீது ஒரு வழக்கு இருந்தால் மட்டும் விடுதலை செய்கின்றனர். அதிலும், ஒரு வழக்கில் ஐந்து பிரிவுகளை அதிகாரிகள் கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, வரதட்சணை, கொள்ளை, போதை மருந்து, ஆயுதம் ஆகியவற்றை இணைத்துள்ளனர். இந்தப் பிரிவுகளில் எதாவது ஒன்றில் தொடர்பிருந்தால்கூட அவர்களை விடுதலை செய்வதில்லை. இதில் ஆயுதம், கொள்ளை ஆகிய பிரிவுகள் மாதையன் வழக்கில் வருகிறது.
வீரப்பன் வழக்குகளில் ஐந்தே பேர்

ஃபாரஸ்ட் ரேஞ்சர் சிதம்பரத்தை ஆயுதம் மூலம் இவர்கள் கொன்றதாகவும் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியையும் அவர் பாக்கெட்டில் இருந்த பணம் மற்றும் சிதம்பரத்துடன் சென்ற ரேஞ்சர் மெகபூப் பாஷா, உதயராஜ் ஆகியோரது பாக்கெட்டில் இருந்த சில நூறு ரூபாய்களை எடுத்துச் சென்றதாகவும் அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் தண்டனைக் குறைப்பு செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒரு வழக்கில் அரசு தளர்வுகளை அறிவித்தால் இதனைப் பயன்படுத்தி மற்றவர்களும் வெளிவந்துவிடுவார்கள் என்பதையும் ஒரு காரணமாக சொல்கின்றனர்" என்கிறார் சிவசுப்ரமணியன்.
மேலும், ``வீரப்பன் தொடர்பான வழக்குகளில் தற்போது கர்நாடகாவில் ஞானப் பிரகாசம், மீசை மாதையன் ஆகியோரும் தமிழ்நாட்டில் மாதையன், பெருமாள், ஆண்டியப்பன் ஆகிய மூன்று பேரும் உள்ளனர். இவர்களை முன்விடுதலை செய்வது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்துவிட்டனர். அதில், பலரும் 70 வயதைக் கடந்துவிட்டனர். சிறைத் துறையின் விதிகளை பாதிக்காத வகையில் தனி அரசாணையை வெளியிட்டு இவர்களை வெளியில் விடுவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். அது முதல்வரின் கைகளில் மட்டுமே உள்ளது" என்கிறார்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும்
மனித உரிமை ஆர்வலர்களின் ஆதங்கம் குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் விளக்கம் கேட்பதற்காக தொடர்பு கொண்டோம். விவரம் அனைத்தையும் கேட்டறிந்த அவரின் உதவியாளர், ``விரைவில் அமைச்சர் உங்களுடன் பேசுவார்" என்று மட்டும் பதில் அளித்தார்.
இதையடுத்து, தி.மு.க அமைப்புச் செயலாளரும் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``சிறையில் உள்ள அனைவரையும் நாங்கள் விடுதலை செய்யவில்லை. அண்ணா பிறந்தநாளில் அதிக காலம் சிறையில் தண்டனை அனுபவித்த சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்கின்றனர். இதில் அரசியல் அழுத்தம் என்று எதுவும் இருப்பதில்லை" என்கிறார்.
சிறைக் கைதிகளின் நன்னடத்தை சான்றை பொறுத்தே விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, `` சிறை அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவது உண்மையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதில், முன்விடுதலை செய்வதற்கான கமிட்டியின் முடிவுகளையும் எதிர்க்கலாம். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. அதன்மூலம் நிவாரணமும் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக, அதிகாரிகளின் மனநிலையை மாற்றுவதற்கு சட்டரீதியாகவே போராடலாம்" என்கிறார்.
பிற செய்திகள்:
- பறக்கும் மர்மப் பொருள்கள் வேற்றுக்கிரக வேலையா? ஆராய குழு அமைத்த அமெரிக்க ராணுவம்
- தமிழக மழை: சடங்காகிறதா மத்திய குழு ஆய்வு? கேட்பது 100 கிடைப்பது 10 - விரிவான அலசல்
- பாலியல் தொல்லை: அதிகரிக்கும் மாணவ சமூக தற்கொலை - தீர்வு என்ன?
- சிறார் பாலியல் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: நிபுணர்கள் எதிர்வினை
- மாநாடு - சினிமா விமர்சனம்
- கேரளாவில் தொலைத்த குழந்தையை மீட்ட தாயின் நீண்ட போராட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












