பாலியல் குற்றவாளிக்கு தண்டனை குறைத்த நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்திகள்
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் "தோலுடன் தோல் தொடர்பு ஏற்படவில்லை" என்று கூறி விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்ப்பை சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்த சில நாட்களில், போக்சோ வழக்கில் குற்றவாளியின் சிறை தண்டனையை குறைத்த மற்றொரு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மீண்டும் பொது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
10 வயது சிறுவனை வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில் அந்த நபருக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை ஏழு ஆண்டுகளாக அலகாபாத் உயர் நீதிமன்றம் குறைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புக்கு ஒரு நாள் முன்னதாக இந்த தீர்ப்பு வெளிவந்திருந்தாலும் இப்போதுதான் அதன் விவரம் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.
இந்த சர்ச்சையில் தொடர்புடைய வழக்கு 2016ஆம் ஆண்டுக்கு முந்தையது, குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறாரின் வீட்டிற்குச் சென்று அவரை உள்ளூர் கோயிலுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டது.
தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து அமைதியாக இருக்க குழந்தைக்கு 20 ரூபாய் கொடுத்த குற்றம்சாட்டப்பட்ட நபர், அதை வெளியே தெரிவித்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியதாக கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது. அதில், கடுமையான போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டப்பரிவுகளின் கீழ் "மோசமான ஊடுருவல் பாலியல் வன்கொடுமை" செய்ததாகக் கண்டறிந்து குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
அந்த நபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், கடந்த வாரம், அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தண்டனை காலத்தை ஏழு ஆண்டுகளாகக் குறைத்தார்,
போக்சோ சட்டத்தின் கீழ், சிறாருக்கு நடந்த சம்பவம் "மோசமானதாக" இல்லை. விசாரணை நீதிமன்றம் கண்டறிந்ததை விட சிறாருக்கு நடந்த குற்றம் குறைவான தீவிரத்தைக் கொண்டது என்று நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.
கேள்வி எழுப்பும் நிபுணர்கள்
இந்த தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்,

பட மூலாதாரம், Getty Images
போக்சோ சட்டத்தில் வன்கொடுமையை "மோசமானதாக" மாற்ற பல காரணிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர் 12 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அவருக்கு நேர்ந்த கொடுமையை மோசமானதாக கருதலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய அளவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வலுத்துள்ளன.
"கடந்த வாரம்தான் உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தின் "தோலுடன் தோலுடன் தொடர்பு கொள்ளாதது குற்றமாகாது" என்ற அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. அந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் "பாலியல் குற்ற வழக்குகளில், குற்றத்தின் நோக்கத்தை" கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர சட்டத்தின் விவரங்களைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்று கூறியதை பலர் சுட்டிக்காட்டினர்.
ஒரு ட்விட்டர் பயனர் இந்த உத்தரவை "அதிகமான மற்றும் விநோதமானது" என்று விவரித்தார். மற்றொருவர் "எவ்வளவு தண்டனை கொடுத்தாலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் அதிர்ச்சியை அழிக்க முடியாது" என்று குறிப்பிட்டிருந்தார். வேறு சிலர், "நீதிபதிக்கு என்ன ஆனது?" என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி ட்வீட் செய்தவர்களில் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவும் ஒருவர்.
"உயர்நீதிமன்றங்களே விழித்தெழுங்கள் - போக்சோ சட்டம் என்பது குழந்தைகளை மோசமான குற்றங்களில் இருந்து காப்பாற்றுவதாகும். அதை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதிகரிக்கும் குற்றங்கள்

பட மூலாதாரம், iStock
உலகிலேயே ஒவ்வொரு ஆண்டும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் அது தொடர்பாக அதிக அளவில் பதிவாகும் வழக்குகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆவணத்தில், கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 43,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சராசரியாக ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு வழக்கு பதிவாவதைக் குறிக்கிறது.
2007ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் நடத்திய ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட 12,300 குழந்தைகளில் 53%க்கும் அதிகமானோர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தங்களுக்கு நேர்ந்ததாகப் புகார் அளித்துள்ளனர்.
சிறுமிகள் மட்டுமே துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, சிறுவர்களும் அவர்களுக்கு சமமாக ஆபத்தில் உள்ளனர் - ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியவர்களில் 53% பேர் சிறுவர்களாகக் கூட இருக்கலாம் என்கிறது அந்த ஆவணம்.
90%க்கும் அதிகமான வழக்குகளில், துஷ்பிரயோகம் செய்பவர்கள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்களாக உள்ளனர் என்கிறது காவல்துறை. அலகாபாத் உயர் நீதிமன்றம் கையாண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 10 வயது சிறுவனுக்குக் கூட தொல்லை கொடுத்த நபர் முன்பே அறிமுகமானவராகவே இருந்திருக்கிறார் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
குழந்தை பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அனுஜா குப்தா, பெரும்பாலான வழக்குகள் பதிவாவதே இல்லை என்பதால் அதிகாரபூர்வ எண்ணிக்கை முழு கதையையும் சொல்வதில்லை என்று கூறுகிறார்.
"குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் ஒரு அமைதியான தொற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது எல்லா இடங்களிலும் உள்ளது. இது ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் மற்றும் தலைமுறைகளிலும் நடக்கிறது. ஆனால் துஷ்பிரயோகம் செய்பவர்களில் பலர் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாக இருப்பதால் இந்த தலைப்பைப் பற்றி பேசுவதற்கு மனத்தடையும் பொதுவான தயக்கமும் உள்ளது. தப்பிப்பிழைத்தவர்கள், நீதிமன்றத்தை அடைகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் அதை குடும்பத்திற்குள் தீர்த்துக் கொள்கிறோம் என்று கூறுகின்றனர்," என்கிறார் அனுஜா.
அனுஜா குப்தா அடிப்படையில் தானும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டு மீண்டவர். இந்த பிரச்னை தனது வாழ்நாளில் முடிவடையாது என தோன்றுவதாகக் கூறுகிறார்.
"எனது பணியின் போது, எனக்கு நேர்ந்த அதே விஷயம் 18 மற்றும் 19 வயது இளைஞர்களுக்கும் நடந்ததை நான் காண்கிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
சட்டம் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பு என்பது இதில் ஒரு தலையீடு மட்டுமே என்றும் பெரியதாக இருப்பது சமூக பிரச்னை என்றும் அதைத்தான் நாம் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
"இது ஒரு தொற்றுநோய் என்று விவரிக்கப்படுவதால், எந்தவொரு தொற்றுநோயையும் எப்படி நாம் கையாளுகிறோமோ அதைப் போலவே இதிலும் செயல்பட வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
"இந்த போராட்டத்தில் அரசாங்கம், குடும்பம், சமூகம் என அனைவரும் பங்கெடுக்க வேண்டும் - அரசாங்கம் தகவல்களை வழங்க வேண்டும், கட்டுக்கதைகளை தகர்க்க வேண்டும், மக்களின் தவறான எண்ணத்தை போக்கி தீர்வுக்கு வழி காண வேண்டும்."
எவ்வாறாயினும், சிக்கலையும் அதன் அளவையும் ஒப்புக்கொள்வது முதல் படியாகும் என்று அனுஜா குப்தா நம்புகிறார்.
"நம் சமூகத்தில் இந்த எண்ணத்தை மறுப்பு பரவலாக உள்ளது. நாம் அதை தனித்தனியாகவும் கூட்டாகவும் மறுக்கிறோம். அது பற்றி நாம் விரிவாக பேச வேண்டும். மேலும் தப்பியவர்களின் நலனையே நாம் மையமாகக் கொண்டு சிந்திக்க வேண்டும்," என்கிறார் அனுஜா குப்தா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












