போக்சோ சட்டம்: சிறாருக்கு எதிரான பாலியல் புகார்கள் எப்படி விசாரிக்கப்படும்? - சிறுவர்களுக்கு என்ன உரிமை?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம்.ஏ. பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வகை செய்யும் போக்சோ சட்டம், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அந்த நடவடிக்கை புகார்தாரர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய தீர்வைத் தருகிறதா என்ற கேள்வி பரவலாக எழுகிறது.

ஒவ்வொரு முறை சிறார் பாலியல் புகார்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்து தலைப்புச் செய்திகளானாலும், பின்வரும் நாட்களில் அந்த வழக்குப் பதிவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள், பொதுவெளியில் தொடர் கவனிப்பைப் பெறத் தவறிவிடுகின்றன.

அதற்கு காரணம், அந்த பாலியல் சட்டம் அல்லது புகார்கள் மீதான நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருப்பதில்லை. அதை அடிப்படையாகக் கொண்டும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் அதில் உள்ள பலவீனம் பற்றி வாசகர்கள் முழுமையாக அறியும் நோக்கத்துடனும் இந்த தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, உள்துறை, தேசிய குற்ற ஆவண காப்பகம், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் தகவல்கள் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்

இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத் துறை 2020இல் வெளியிட்ட 2019ஆம் ஆண்டுக்கான தரவுகளில், இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான குற்றங்களின் சதவீதம் 35.3.

அதில் உத்தர பிரதேசத்தில் 30, மத்திய பிரதேசத்தில் 18, ஹரியானா, கர்நாடகாவில் தலா 11, தமிழ்நாட்டில் 8, மகாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 சிறார் பாலியல் வல்லுறவு கொலை வழக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

இது தவிர சிறார் கடத்தல், தற்கொலைக்கு தூண்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி, சிசுக்கொலை என வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வாரு மாநிலத்திலும் நீளுகின்றன.

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் 2012இல்தான் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் 2012 நவம்பர் 12ம் தேதி அமலுக்கு வந்தது.

பாதிக்கப்பட்டவருக்கு சட்டப்பாதுகாப்பு

பாலியல் சிறார்

பட மூலாதாரம், Getty Images

பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வது, ஆபாசப் படம் எடுப்பது போன்றவை இந்த குற்றங்களின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனோ, சிறுமியோ இத்தகைய பாலியல் தொடர்புடைய பிரச்னைகளை மற்றவர்களிடம் இருந்து எதிர்கொண்டாலோ அதனால் மன ரீதியாக, உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டாலோ இந்த சட்டம் பாதுகாப்பு அளிக்கும். பாலியல் செயல்களுக்காக சிறார்களை கடத்தும் நபர்கள் மீதும் இந்த சட்டம் பாயும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை வரை வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நடப்பது தெரிந்தும் அது பற்றி புகார் தெரிவிக்காமல் மறைத்தால்கூட அந்த செயலுக்கு ஆறு மாத சிறை தண்டனை அல்லது சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படலாம்.

காவல்துறையிடம் பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வல்லுறவு புகார் அளிக்கப்பட்டவுடனே, சம்பந்தப்பட்ட சிறாரின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அந்த புகாரை விசாரிக்கும் அதிகாரியுடையதாகிறது. புகார் கிடைத்தவுடன் சிறாருக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதையும் அந்த அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட சிறுவருக்கு உடல் ரீதியாக பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதை அந்த காவல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். அவசியம் எழுந்தால் அந்த சிறுவரை காப்பகத்தில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகார் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக, அது குறித்து குழந்தைகள் நலக்குழுவின் கவனத்துக்கு காவல்துறை கொண்டு செல்ல வேண்டும். அதன் பிறகு அவர்கள் மூலம் சிறாருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

புகாரை யார், எப்போது, எங்கு கொடுக்கலாம்?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், Getty Images

பாலியல் தொந்தரவு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் சிறார் தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட அந்த நபரோ அவரது பெற்றோரோ, மருத்துவரோ, உறவினரோ, நண்பரோ, அவர் படிக்கும் பள்ளியோ, அதன் ஊழியர்களோ தெரிவிக்கலாம்.

போக்சோ சட்டத்தின்கீழ் புகார் தரும் நபர் அவருக்கு பாதிப்பு நேர்ந்த உடனேதான் புகார் அளிக்க வேண்டும் என்பது எல்லாம் கிடையாது. அவர் எந்த வயதிலும் தனக்கு 18 வயதுக்கு கீழ் நேர்ந்த பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வல்லுறவு குறித்து புகார் தெரிவிக்கலாம்.

"பெரும்பாலும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் அந்த சிறாரின் குடும்ப உறுப்பினராகவோ அவரது உறவினராகவோ அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவராகவோ இருக்கலாம். சிறு வயதில் நிகழ்ந்த கொடுமை, அந்த சிறுவரின் வாழ்வில் பின்னாளிலும் கூட மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடும்," என்று ஆய்வுகள் கூறுவதாக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தகைய பாதிப்பில் இருந்து வெளிவரவே இந்த புகார் வசதியை அரசு உருவாக்கியிருக்கிறது.

இந்த புகாரை நேரடியாக காவல் நிலையத்திலோ, போக்சோ இ-பாக்ஸ் என்ற இணையபக்கம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜனவரி 31 வரை இந்த இ-பாக்ஸ் புகார் பெட்டி மூலம் 354 புகார்களை தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றிருக்கிறது. இந்த இணையப் பக்கத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை இந்த தேசிய ஆணையமும் புகார் பதிவாகும் மாநிலத்தின் சிறார் பாதுகாப்பு ஆணையமும் இணைந்து கண்காணிக்க போக்சோ சட்டத்தின் 44(1) பிரிவு வகை செய்கிறது.

புகார் தெரிவித்த பிறகு என்ன நடக்கும்?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், NCRB

சிறார் பாதுகாப்பு தொடர்புடைய புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் சிறப்பு சிறார் காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த பிரிவு அல்லது உள்ளூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர், பாலியல் தொந்தரவு அல்லது பாலியல் வல்லுறவு அல்லது தான் ஆபாசமாக படம் எடுக்கப்பட்டதாக புகார் தெரிவித்தால் உடனடியாக அந்த தகவலை அந்த அதிகாரி பதிவு செய்ய வேண்டும்.

பாலியல் சிறார்

பட மூலாதாரம், CCPCR

சிறார் இலவச தொலைபேசி உதவி எண் `1098' மூலமாகவும் பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவிக்கலாம். அதன் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலர் உள்ளூர் காவல் நிலையத்திடம் புகாரைத் தெரிவிப்பார். பிறகு சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் சாதாரண சீருடையில் சென்று புகாரை பெற வேண்டும். அந்த விசாரணை அதிகாரி தனது பெயர், பதவி, தொடர்பு எண் போன்ற விவரத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அந்த விசாரணை சூழல், காவல் நிலைய அணுகுமுறை போல இல்லாமல் நட்புடன் பழகி தகவல் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது சார்பிலான தகவல்களை பெற்றுக் கொண்ட பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறாருக்கு மருத்துவ அவசரகால உதவி தேவை எனில் அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலர்கள் உதவியுடன் எடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவிகள்

பாலியல் சிறார்

பட மூலாதாரம், Getty Images

சிறார் உடல் ரீதியிலான பாலியல் வல்லுறவை எதிர்கொண்டிருந்தால் அவரது பெற்றோரை அழைத்து விவரத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டும். சிறாரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும்போது அவரது பெற்றோரோ அவரது நம்பிக்கையை பெற்ற நபரோ உடனிருந்து சிறார் அச்சப்படுவதையோ பதற்றத்துடன் இருப்பதையோ தவிர்க்க காவல் அதிகாரி உதவிட வேண்டும். போக்சோ சட்டத்தின் 40ஆவது பிரிவு, பாதிக்கப்பட்ட நபருக்கு சட்ட உதவி கிடைக்க ஒரு வழக்குரைஞரை வைத்துக்கொள்ளும் உரிமையைத் தருகிறது.

ஒருவேளை பாதிக்கப்பட்ட நபருக்கு அவரது வீட்டுக்குள்ளேயே இருக்கும் நபரால் பாதிப்பு நேர்ந்தது தெரியவந்தால், அவரை மாவட்ட நலக்குழு உதவியுடன் காப்பகத்திலோ அல்லது அந்த நபர் பாதுகாப்பாக எங்கு இருப்பார் என்பதை மதிப்பிட்டு அங்கு அவரை வைத்திருக்கும் வாய்ப்புகளோ ஆராயப்பட வேண்டும். இதில் சிறாரின் வயது, முதிர்ச்சி அளவு, பாலினம், பொருளாதார சூழ்நிலை, சிறாரின் உடல் தகுதி நிலைமை, மருத்துவ நிலைமை போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய விசாரணைக்கு பிறகே அவரை குடும்பத்திடம் இருந்து பிரித்து வைக்கும் முடிவை எடுக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவருக்கு உதவியாக ஒரு சிறப்பு ஆசிரியர், மொழி பெயர்ப்பாளரை அவருக்கு வழங்கவும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் அவருக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணரும் இடத்திலேயே காவல்துறையிடமோ மாஜிஸ்திரேட்டிடமோ வாக்குமூலத்தை பதிவு செய்யலாம். அந்த உரிமையை அவருக்கு போக்சோ சட்டம் தருகிறது.

பாதிக்கப்பட்ட நபர் கர்ப்பம் அடைந்திருந்தாலோ ஹெச்ஐவி தொற்றுக்கு ஆளாகியிருந்தாலோ, உடல் ரீதியாக எவ்வித பாதிப்பை எதிர்கொண்டிருந்தாலோ அது தொடர்பான தமது முடிவை அவரை பரிசோதிக்கும் மருத்துவர் 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.

வயது, உடல்நிலைக்கு பொருந்தாத வகையில் அவருக்கு கரு உருவாகியிருந்தால் அதை சட்டபூர்வமாக கலைப்பதற்கான வாய்ப்பு பற்றி பாதிக்கப்பட்ட நபருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கலாம்.

பாலியல் சிறார்

பட மூலாதாரம், CCPCR

சில வழக்குகளில் ஆதரவற்ற நிலையில் பாதிக்கப்பட்ட சிறார் இருந்தால், அவருக்கு தேவையான உணவு, உடை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கான தொகையை வழங்க மாவட்ட குழந்தைகள் நலக்குழு நீதிமன்றத்திடம் பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில் ஒரு வாரத்துக்குள்ளாக பாதிக்கப்பட்டவருக்கு தேவையான தொகையை சிறார் நீதி சட்டத்தின்கீழ் பராமரிக்கப்படும் நிதியத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தொகை, வழக்கின் தீர்ப்பு வழங்கும் நாளில் கணக்கிடப்படும் மொத்த இழப்பீட்டுத் தொகையில் கழித்துக் கொள்ளப்படும்.

சிறார் தொடர்புடைய ஆபாச காட்சிகள், படங்களை வைத்திருப்பது, பகிர்வது போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவது தெரிந்தாலும் அது குறித்து சிறப்பு சிறார் காவல் அலுவலர் அல்லது உள்ளூர் காவல் நிலையம் அல்லது சைபர் குற்ற இணையதளத்தில் (cybercrime.gov.in) பாதிக்கப்பட்ட நபரோ, அவரது சார்பில் வேறு யாரோ புகார் தெரிவிக்கலாம்.

என்ன வசதிகள் கிடைக்கும்?

புகார்தாரருக்கு அவரது முதல் தகவல் அறிக்கை நகல், போதுமான போலீஸ் பாதுகாப்பு, உடனடி மருத்துவ பரிசோதனை வசதி, கவுன்சலிங் மற்றும் மனவள ஆலோசனை வசதி, பாதிக்கப்பட்டவரின் வீட்டிலோ வேறு பாதுகாப்பாக அந்த நபர் உணரும் சூழலிலோ பெண் காவல் அதிகாரி வாக்குமூலத்தை பதிவு செய்யும் வசதி, வீட்டில் பாதுகாப்பு இல்லையென்றால் காப்பகத்தில் வைத்திருக்க வசதி கிடைக்கும்.

இது தவிர, மாவட்ட குழந்தைகள் நலக்குழு மூலம் நிதி உதவி, குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் இருந்து எல்லா நேரத்திலும் பாதுகாப்பு, மொழி பெயர்ப்புக்கு தேவைப்பட்டால் அதற்கான அலுவலரை நியமிக்கலாம், மாற்றுத்திறனாளி என்றால் சிறப்பு ஆசிரியரை வைத்துக் கொள்ளலாம், இலவச சட்ட உதவி, குழந்தைகள் நலக்குழுவால் ஆதரவு நபர் நியமனம், கல்வியைத் தொடர வசதி, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் அடையாளம் காப்பு, மாவட்ட நீதிபதி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் நேரடி தொடர்பு எண்கள் போன்றவை வழங்கப்படும்.

தவறாக புகார் அளித்தால் என்னவாகும்...?

நல்ல நோக்கத்துக்காகவே போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தின் பிரிவுகளை உள்நோக்கத்துடன் பயன்படுத்தி தவறாக பிறர் மீது புகார் அளிப்பது விசாரணையில் உறுதியானால், சம்பந்தப்பட்ட நபருக்கு ஆறு மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதுவே சிறாருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த நபருக்கு ஓராண்டுவரை சிறை தண்டனை கிடைக்கும்.

அடையாளத்தை வெளிப்படுத்தினால் என்ன தண்டனை?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், TWITTER

போக்சோ சட்டப்பிரிவுகளின்கீழ் தெரிவிக்கப்படும் புகார்கள் அல்லது அது தொடர்புடைய ஊடக செய்திகளில், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், முகவரி, பள்ளி, புகைப்படம் மற்றும் அருகே உள்ளவர்களின் விவரம் போன்றவற்றை வெளியிடக் கூடாது. அவ்வாறு விவரங்களை தெரிவித்தால் 6 மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

போக்சோ முக்கிய சட்டப்பிரிவுகள் என்ன?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், TWITTER

போக்சோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் தொந்தரவு அல்லது வல்லுறவுக்கு உட்படுத்துவது குற்றம்: இதற்கு குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை. அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டப்பிரிவு 5,6-ன்படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர் (கார்டியன்), காப்பக அலுவலர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரி, சிறை ஊழியர், வார்டன் ஆக இருந்தால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது, அவர்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வது. குற்றம். குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும். அபராதமும் உண்டு.

போக்சோ சட்டம் 9,10 பிரிவுகளின்படி குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்கள் குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர் (கார்டியன்), காப்பக அலுவலர், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரி, சிறை ஊழியர், வார்டன் ஆக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் 11 மற்றும் 12 பிரிவுகளின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது குற்றம். குற்றவாளிக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

போக்சோ சட்டம் 13 மற்றும் 14 பிரிவுகளின்படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது குற்றம். இது இணைய தளம், கணிணி என எந்த தொழில்நுட்ப வடிவில் இருந்தாலும் குற்றமாக கருதப்படும். இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் , அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் 18ஆம் பிரிவின்படி குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட முயன்றால் 1 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே. அவருக்கும் குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளின்படியே தண்டனை வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் போக்சோ சட்டம் 21ஆம் பிரிவின்படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

ஆறு வயதில் நடந்த சம்பவத்துக்கு 30 வயதில் புகார் தரலாமா?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், Twitter

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 468ஆம் பிரிவின்படி, சிறார் துஷ்பிரயோகம் உள்பட மூன்று ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் எந்தவொரு குற்றம் குறித்தும் சம்பவ நாளில் இருந்து மூன்று வருடங்களுக்குள் புகார் பதிவாகியிருக்க வேண்டும்.

ஆனால் போக்சோ சட்டத்தில், சிறார் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகாரை தெரிவிக்க எந்தவொரு கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரும், எந்தவொரு வயதிலும் தான் சிறார் ஆக இருந்த காலத்தில் அனுபவித்த அல்லது எதிர்கொண்ட பாலியல் துஷ்பிரயோக சம்பவம் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் 2018ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே தெளிவுபடுத்தியிருக்கிறது.

2012க்கு பிறகு போக்சோ சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதா?

போக்சோ சட்டம் 2012இல் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதில் மேலும் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு போக்சோ விதிகள் 2020 என்ற பெயரில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாடம் தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் பின்னணி குறித்து போலீஸ் மூலம் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோருக்கு தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்காக, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பெற்ற நபர்கள் அல்லது அத்தகைய படங்கள் பரப்பப்படுவது குறித்து தகவல் அறிந்த நபர்கள் அதுபற்றி சிறப்பு சிறார் போலீஸ் பிரிவிடமோ அல்லது இணைய குற்றப்பிரிவிடமோ புகார் அளிக்க வேண்டும்.

அப்படி புகார் அளிக்கும்போது, எந்த சாதனத்தில் அத்தகைய படங்கள் பெறப்பட்டன என்றும், எந்த தளத்தில் அவை பரப்பப்படுகின்றன என்றும் தெரிவிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு கொள்கை ஒன்றை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரடி தொடர்புடைய எல்லா நிறுவனங்களும் அந்த கொள்கையை பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை கையாளும் பணியில் இருக்கும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், 'போக்சோ' சட்டப்படி அவர்களது பொறுப்பு பற்றியும் உணர்த்த பயிற்சி வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் நடத்த வேண்டும்.

மேலும், குழந்தைகளுக்கு தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு பற்றியும், பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது பற்றியும், அத்தகைய குற்றங்களை தெரிவிப்பதற்கான குழந்தைகள் உதவி மைய கட்டணம் இல்லா தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அவரவர் வயதுக்கேற்ற பாடத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

சட்டத்தில் நிலவும் நடைமுறை பிரச்னை என்ன?

பாலியல் சிறார்

பட மூலாதாரம், TWITTER

போக்சோ சட்டத்தின் ஏனைய பிரிவுகள் பாதிக்கப்பட்ட நபருக்கு பாதுகாப்பு தரும் வகையில் இருந்தாலும், வரலாற்றுக் குற்றங்கள் என அழைக்கப்படும் சிறிய வயதில் நேர்ந்த சம்பவத்துக்கு பின்னாளில் தரும் புகார்களை விசாரிப்பதில் புலனாய்வு அமைப்புகளுக்கும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கருத்து உள்ளது.

போக்சோ சட்டம் அமலுக்கு வரும் முன்பு சிறார் உரிமைகள் பாதுகாப்புக்காக கோவா சிறார் சட்டம் 2003 தான் சிறார் துஷ்பிரயோகத்தை கையாளக்கூடிய சட்டமாக கருதப்பட்டது. இந்த நிலையில், 2012இல் நிறைவேற்றப்பட்ட போக்சோ சட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டு 2019இல் மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அதன் மூலம் கொலை, சிறார் பாலியல் வல்லுறவு போன்ற மிகக் கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் இடம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால், ஆறு வயதில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்துக்கு 30 வயதில் ஒருவர் புகார் தெரிவிக்க முன்வருகிறார் என்றால், அந்த புகார் மீதான முகாந்திரத்தை உறுதிப்படுத்துவது புலனாய்வாளர்களுக்கு முக்கியமான பணியாக அமையும்.

சிறார் கால பாலியல் வல்லுறவு பிரச்னைகளை பெரும்பாலானோர் குடும்பங்களுக்கு உள்ளேயே வாழ்பவர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள், பள்ளி, அண்டை வீட்டார் போன்ற வட்டாரங்களிலேயே எதிர்கொள்வர். சில வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறார், தனக்கு நேர்ந்த கொடுமையை உணரவே வயது முதிர்ச்சி தேவைப்படும்.

எந்தவொரு குற்றம் குறித்தும் எவ்வளவு விரைவாக புகார் தெரிவிக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக குற்றவாளியை பிடித்து அவருக்கு விரைவாக தண்டனையை பெற்றுத்தருவதுதான் இந்திய சட்ட அமலாக்க அமைப்புகளின் நோக்கம். ஆனால், காலம் தாழ்த்தி தெரிவிக்கப்படும் புகாரில் சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், தான் புகார் தெரிவித்து விட்டதாக மன நிறைவைப் பெறுவதைக் கடந்து, அந்த குற்றத்தை குற்றம்சாட்டப்பட்ட நபர் செய்தார் என்பதை நிரூபிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்.

அறியாத வயதில் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு தற்காலத்தில் அவர் வசம் ஆதரங்கள் இல்லாமல் போகலாம். அல்லது தடயங்கள் அழிந்திருக்கலாம். அத்தகைய சூழ்நிலைகளை அணுகக் கூடிய தெளிவான வழிகாட்டுதல் நெறிகள் இந்திய சட்டத்தில் தற்போது இல்லாதது குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு சாதகமாகலாம் என்ற கருத்தை சட்ட வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :