பாலியல் தொல்லை: அதிகரிக்கும் மாணவ சமூக தற்கொலை - தீர்வு என்ன?

பாலியல் தொந்தரவு பிரச்னைக்கு தீர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் கரூரில் தனியார் பள்ளி மாணவியொருவர் பாலியல் தொல்லைக்கு தாம் ஆளானதாதக் கடிதம் எழுதி வைத்து விட்டு இம்மாதம் 19ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் படித்த பள்ளியின் ஆசிரியர் மாணவியின் மரணத்துடன் தன்னை சிலர் தொடர்புபடுத்துவதை ஏற்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்து விட்டு நேற்று (நவம்பர் 24) தற்கொலை கொண்டிருக்கிறார்.

எதிர்கால கனவுகளுடன் பிளஸ் டூ படிக்கு மாணவி, மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர் போன்றோர், தங்களுடைய வாழ்வில் எடுக்கும் இதுபோன்ற அவசர முடிவுகளை தடுக்க என்ன வழி? என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.

கரூரில் என்ன நடந்தது?

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த 17 வயது மாணவி கடந்த 19ஆம் தேதி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதில், பாலியல் தொல்லைக்கு பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். எனக்கு வாழ்வதற்கு மிகவும் ஆசை, ஆனால் என்னால் முடியவில்லை. பெரியாளாகி நிறைய பேருக்கு உதவி செய்யவும் ஆசை.

ஆனால் உங்கள் எல்லாரையும் விட்டு நான் போகிறேன். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் நான் இந்த உலகை விட்டு போகிறேன். எனக்கு தொல்லை கொடுத்தவனை பற்றி கூறுவதற்கு கூட பயமாக இருக்கிறது என அவர் கடிதத்தில் கூறியிருந்தார்.

பாலியல் தொந்தரவு பிரச்னைக்கு தீர்வு

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் தாய் இரு தினங்களுக்கு முன்பு போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, "எனது மகளின் சாவுக்கு அவர் படித்த பள்ளியின் வேதியியல் ஆசிரியரே காரணம். அவள் நன்றாக படிக்கக் கூடியவள். ஆனால், வேதியியல் பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் எடுத்து வந்ததால் மிகவும் பாதிக்கப்பட்டார். இறப்பதற்கு முன்பு கூட எனது மகள் வேதியியல் திருத்தப்பட்ட தேர்வுத்தாளில் சோகமான எமோஜி வரைந்திருந்தாள். அந்த தாளையே கசக்கி எறிந்திருந்தாள். எனக்கு வேதியியல் ஆசிரியர் மீதுதான் சந்தேகமாக உள்ளது," என்று கூறினார்.

ஆசிரியரின் திடீர் மரணம்

இந்த நிலையில், மாணவி படித்த அதே பள்ளியில் கணக்கு ஆசிரியர் ஆக இருந்த சரவணன் (42), நேற்று (நவம்பர் 24) பள்ளிக்கு வந்து விட்டு தனது தந்தைக்கு உடல்நலமில்லை என்று விடுப்பு போட்டு விட்டு தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார்.

கரூர் வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் நேற்றைய தினம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜனின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சாகும் முன்பு அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், "ஜெயந்தி (மனைவி) என்னை மன்னித்துவிடு. அனைவரும் என்னை தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசைப்படவில்லை. இன்று காலை (நேற்று) வந்தவுடன் மாணவர் ஒருவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறையும் செய்யவில்லை. என்னை எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள். ஏன் இப்படி கூறுகிறார்கள் என தெரியவில்லை. நான் கோபத்தில் மாணவர்களை திட்டியுள்ளேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என எழுதப்பட்டுள்ளது.

மாணவி இறந்த விவகாரத்தில் பள்ளி ஆசியர்கள், ஊழியர்கள், மாணவியின் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கைதுக்கு அஞ்சி ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்திருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை

பாலியல் தொந்தரவு
படக்குறிப்பு, சபரிமாலா, சமூக செயல்பாட்டாளர்

இந்த நிலையில், உயிரிழந்த மாணவி பத்தாம் வகுப்புவரை ஒரு பள்ளியில் படித்ததாகவும் டாக்டர் ஆகும் கணவுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக தனியார் பள்ளியில் படிக்க விரும்பி பின்னர் அதில் சேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மாணவியின் குடும்பத்தினரை சமூக செயல்பாட்டாளரும் முன்னாள் ஆசிரியையுமான சபரிமாலா இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவரிடம் மாணவியின் தாய், தனது மகளின் பருவத்தேர்வு விடைத்தாள்களை காண்பித்துள்ளார்.

இது குறித்து பின்னர் பேசிய சபரிமாலா, "பத்தாம் வகுப்பில் 490 மதிப்பெண் பெற்ற மாணவி பிளஸ் 1, பிளஸ் டூ வகுப்பில் வேதியியல் பாடம் நீங்கலாக மற்ற அனைத்திலும் அதிக மதிப்பெண்களை எடுத்திருக்கிறார். அவரது திறமைகளை நசுக்க ஒரு முயற்சி நடந்துள்ளது. நீட் தேர்வு கனவு சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவியின் வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக முதல்வரும் அரசும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

அரியலூரில் மாணவி அனிதா 'நீட்' தேர்வுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தோற்ற பிறகு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறைக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்றன. அப்போது அனைவருக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத பொதுவான கல்விமுறையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தவர் இந்த சபரிமாலா. இந்த போராட்டத்துக்கு துறை ரீதியாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தனது அரசுப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜிநாமா செய்து விட்டு சமூக செயல்பாட்டாளராக மாறியவர் இவர்.

தற்கொலை முடிவு சரியா?

சமீப காலமாக பதின்ம வயதில் உள்ளவர்கள் வாழ்வின் விரக்தி நிலைக்கு விரைவாகச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள். பலர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.

பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீப காலமாக பதின்ம வயதில் உள்ளவர்கள் வாழ்வின் விரக்தி நிலைக்கு விரைவாகச் சென்று உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறார்கள்.

கரூர் மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு காரணம் யார் என்பதை தெளிவுபடுத்தாததால் இந்த விவகாரத்தில் அவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெளிவற்று உள்ளது.

கோவையில் சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ வகுப்பில் சேரும் முன்பு பிளஸ் 1 வகுப்பை தனியார் பள்ளியில் படித்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஆசிரியர் ஒருவர் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மாணவி வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் சென்ற பிறகும் அவரது தொல்லை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வழக்கில் ஆசிரியர் கைதாகி நீதிமன்ற காவலில் இருக்கிறார்.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், திருப்பூரில் 10ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளி விடுதியறையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு 2017இல் சேலத்தில் ஒரு உணவக மாடியில் இருந்து 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதில் ஒரு மாணவி மட்டும் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் தப்பினார்.

பெற்றோர் பொறுப்பு அவசியம்

இப்போதுள்ள காலத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளுடனான பெற்றோருடைய கலந்துரையாடல் குறைந்து வருவதால், அந்த பிள்ளைகள் நம்பிக்கையுடன் தங்களுடைய பள்ளி அனுபவங்களை வீட்டில் பகிர்வதை தவிர்க்கிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர் சபரிமாலா கூறும்போது, "பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுடன் பெற்றோர் நம்பிக்கையுடன் பேச வேண்டும். அவர்களின் தாய் ஒரு தோழியாக பழக வேண்டும். அந்த இடைவெளி குறைவதால்தான் பல இடங்களில் குழந்தைகள் தவறான முடிவை எடுக்கிறார்கள். அனிதா தொடங்கி இப்போது கரூர் மாணவி வரை இது தொடர்கிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் வெவ்வேறு பிரச்னைகள். இவை களையப்படுவதில் பெற்றோருக்கும் சிறந்த பங்குண்டு," என்கிறார் அவர்.

தீர்வு என்ன?

பள்ளிப்பருவத்திலும் பதின்ம பருவத்திலும் உள்ளவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கு காரணம், அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்களே என்று கல்வியாளர்கள், உளவியலாளர்கள், குழந்தை உரிமைக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

குழந்தைகள் மன வளக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர் சென்னையைச் சேர்ந்த டி.ரமா. பிரபல தனியார் பள்ளியில் உளவியல் ஆலோசகராக இருந்த இவர் பின்னர் மாநகராட்சி பள்ளிகளில் தமது பணியைத் தொடர்ந்தவர்.

பாலியல் தொந்தரவு பிரச்னைக்கு தீர்வு

பட மூலாதாரம், D.RAMA

படக்குறிப்பு, டி. ரமா, கல்வி சார்ந்த மன வளக்கலை நிபுணர்

இவரது அனுபவத்தின்படி பல பள்ளிகளில் தொழில்முறை சார்ந்த அனுபவம் பெற்ற கவுன்சிலர்கள் பணியமர்த்தப்படவில்லை என்கிறார்.

இது குறித்து விரிவாக பேசிய ரமா, "தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் பெயரளவுக்கே கவுன்சிலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆசிரியர் பணியை நடத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியர் பணி வேறு, கவுன்சிலர் பணி வேறு என்பதை நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்கிறார்.

"சைக்காலஜி படித்தவுடன் டிகிரி வைத்திருக்கிறார்கள் என்பதற்காக அனுபவம் இல்லாதவர்களை குறைந்த சம்பளத்தில் கவுன்சிலர்களாக பள்ளி நிர்வாகங்கள் நியமிக்கும் போக்கு அதிகமாக காணப்படுகிறது. தொழில்முறையற்ற கவுன்சிலர்களை நியமிக்கும்போது அவர்கள் நிர்வாகத்தை திருப்திப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவார்கள். மாணவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களால் தீர்வு வழங்க முடியாது," என்கிறார் ரமா.

"தொழில்முறை கவுன்சிலர்களை அவர்கள் சுதந்திரமாக பணி செய்ய அனுமதிக்க வேண்டும். மாணவர்களின் அந்தரங்கம், தனி உரிமையை அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை கிடைக்கக் கூடிய சூழலை உருவாக்கித்தர வேண்டும். கவுன்சிலர் அறிவுரைகளின் மீது நிர்வாக தலையீடு இருக்கக் கூடாது," என்று கூறுகிறார் ரமா.

இது சாத்தியமாவது எப்படி என அவரிடம் கேட்டபோது, "கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் பல மாணவர்கள் மன நல ரீதியாக பின்தங்கினர். அதை சரி செய்ய பள்ளிகள் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். பள்ளிகள் திறக்கப்படாததால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு பலர் இருப்பதை நான் அறிவேன்," என்றார் அவர்.

பாலியல் தொந்தரவு பிரச்னைக்கு தீர்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொழில்முறையற்ற கவுன்சிலர்களை நியமிக்கும்போது அவர்கள் நிர்வாகத்தை திருப்திப்படுத்துவதிலேயே கவனம் செலுத்துவார்கள் என்கிறார் குழந்தைகள் மன வளக்கலை நிபுணர் டி.ரமா.

பல குடும்பங்களில் பெற்றோர் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். அதில் சிலர் வீட்டிலேயே இருந்தபடி வேலை செய்தாலும் பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

சில இடங்களில் குழந்தை வளர்ப்புக்காக ஊழியரை நியமித்து விடுகிறார்கள். அவரது பொறுப்பில் குழந்தையை குளிக்க வைப்பது, உடை மாற்றுவது போன்ற பணி தரப்படுகிறது. ஒன்று, இரண்டு, மூன்று வயதுடைய குழந்தைகளை அந்த ஊழியர்கள் தவறாக பயன்படுத்தினால் அவர்களால் தங்களுக்கு நேரும் கொடுமையை வெளியே தெரிவிக்க முடியுமா? என்று கேட்கிறார் ரமா.

எல்லா விஷயங்களையும் பெற்றோரிடம் சொல்லி விடக்கூடிய நிலையில் இன்றைய மாணவ சமூகம் இல்லை என்றும் அவர் கூறுகிறார். பெற்றோர், பிள்ளைகள் பிணைப்பு குறைவாகி வருவதும் இதற்கு காரணம் என்று அவர் தெரிவித்தார். இத்தகைய சூழலில் மாணவ பருவத்தில் உள்ளவர்கள் மனம் விட்டு பேச நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடிய பொறுப்புடைமை மிக்கவர்களாகவும் கவுன்சிலர்கள் உள்ளனர். எனவே அவர்களின் தேர்வில் கூடுதல் விழிப்புடன் பள்ளி நிர்வாகங்களும் அரசும் இருக்க வேண்டும் என்கிறார் ரமா.

மாற்றுத்தீர்வு என்ன?

பாலியல் தொந்தரவு பிரச்னைக்கு தீர்வு

பட மூலாதாரம், GAJENDRA BABU

படக்குறிப்பு, ப்ரின்ஸ் கஜேந்திரபாபு

ஆனால், இதுபோன்ற பிரச்னைகளில் கவுன்சிலர்களின் பங்களிப்பு மட்டுமின்றி பலதரப்பின் ஆதரவும் ஊக்கமும் மாணவர் சமூகத்துக்கு தேவை என்கிறார் கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு.

பிபிசி தமிழிடம் இது குறித்து பேசிய அவர், "வெளியே சொல்ல முடியாத விஷயங்களை பிறர் மீது நம்பிக்கை இல்லாத நிலை காரணமாகவே மாணவர்கள் தங்களுக்குள்ளாக புழுங்கி வாழ்ந்து கடைசியில் தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள்," என்கிறார் அவர்.

"பள்ளியில் நியமிக்கப்படும் கவுன்சிலர், அவருக்கான அறையிலேயே இருப்பார். அவரை ஒரு மாணவரோ, மாணவியோ சந்தித்துப் பேசுவதாக இருந்தால், அவர் அந்த அறைக்கோ கவுன்சிலரை பார்க்கவோ சென்று வருகிறார் என்பது சக மாணவ, மாணவிகளுக்கோ ஆசிரியருக்கோ தெரிய வரலாம். அதனால் தனது தனியுரிமை பாதிக்கப்படலாம் என்று சம்பந்தப்பட்ட மாணவி கருதலாம். எனவே, குழந்தையின் நம்பிக்கைக்குரிய நபராக கவுன்சிலர் அல்லது ஒரு குழு இருக்க வேண்டும். அந்த சந்திப்பின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்," என்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு.

இதற்கான யோசனைகளையும் அவர் தருகிறார்.

பாலியல் தொந்தரவு

பட மூலாதாரம், Getty Images

"பள்ளிக்கான கட்டமைப்பு என எடுத்துக் கொண்டால், அதில் வெறும் கவுன்சிலர் மட்டுமின்றி அந்த நோக்கத்துக்காக ஒரு குழுவை நியமிக்கலாம். அதில் உளவியலாளர் இருக்கலாம், குழந்தைகள் நல மருத்துவர் இருக்கலாம், மாணவர்கள் கூட இருக்கலாம். இந்த குழு மாணவர்களுடன் அடிக்கடி கலந்துரையாட வேண்டும். பாட தொடர்புகள் இல்லாத பிற பிரச்னைகளை மாணவர்கள் எதிர்கொள்கிறார்களா என கேட்டறிய வேண்டும்"

"பள்ளி அளவில் இல்லாமல் ஆசிரியர் அளவில் இல்லாமல் தனி வாழ்வில் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்யலாம்? என கேட்டு அவர்களுக்கான சூழலை உருவாக்கித் தந்தாலே அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள்," என்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு.

மாணவர்களிடையே கலசாார பட்டறை, இசை பட்டறைகள், நாடக பட்டறைகளை நடத்துவதும் தீர்வு தரலாம். அதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழல்களை காட்சிப்படுத்தும் நாடகத்தை இயற்றும் பொறுப்பை வழங்கினால், அவர்களே அதை வெளிப்படுத்துவார்கள்.

இப்போது மாணவர்கள் கூறும் பிரச்னையை அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் நம்பிக்கையை கொடுத்து அவர்களின் பிரச்னையை தீர்க்க உதவ வேண்டும்.

அடுத்தது, பொதுவாகவே நாம் குழந்தைகளை நம்பத் தயாராக வேண்டும். ஒரு குழந்தை புகார் தர முன்வந்தால் அதை நம்பாமல் அதன் மீதே சந்தேகம் ஏற்படுத்தும் வகையிலான கேள்விகளை கேட்கக் கூடாது. இந்த விஷயத்தில் நமது அணுகுமுறை மாற வேண்டும். அவர்கள் பிரச்னையில் இருப்பது தெரிய வந்தால் அவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தை குற்றம்சாட்டிய நபரை கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். பெற்றோரை அழைத்து ஆக்கபூர்வ முறையில் பேச வேண்டும். பிரச்னைகள் இப்படித்தான் தீர்க்கப்பட வேண்டும்.

இதை எல்லாம் விட மாணவ சமூகத்திடையே பாலின சமநிலை உணர்வு பற்றிய விழிப்பை ஏற்படுத்த வேண்டும், பாலின அடிப்படையிலான பேதைமையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து எல்லாம் நாம் அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இவை எல்லாம் செய்தாலே போதும், மாணவர்கள், மனதுக்குள்ளேயே புழுங்கி, புழுங்கி இறுதி முடிவை எடுக்காமல் தவிர்க்கலாம். இது ஒரு சமூக பொறுப்பு, அனைவரும் சேர்ந்தே இதில் களப்பணியாற்ற வேண்டும் என்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :