பள்ளியில் பாலியல் தொல்லை: புகார் தெரிவிக்க மாணவிகள் தயங்குவது ஏன்? – என்ன தீர்வு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கைதாகியுள்ள நிலையில், மேலும் பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், முன்னாள் மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பேச தொடங்கியுள்ளனர்.
பள்ளிகளில் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியே தெரிவதில்லை, புகார் கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த புகார்களை முறையாக விசாரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நீடிக்கிறது. தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பு வருவதற்கு ஆகும் கால தாமதம் காரணமாகவும் பலர் புகாரளிக்க முன்வருவதில்லை என வழக்கு நடத்திய சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
2011ல் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மதுரை அரசு பள்ளி ஒன்றில் நடந்த பாலியல் துன்புறுத்தலில் 98 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் வழக்கு நடந்து தீர்ப்பு வருவதற்கு ஏழு ஆண்டுகள் ஆனதால், பல மாணவிகள் வழக்கை திரும்ப பெற்றனர். வழக்கு முடிவதற்குள் சில மாணவிகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால், அந்த வழக்கில் வழங்கப்பட்ட நிவாரண தொகையை பெறுவதற்கு அவர்கள் வரவில்லை.
பத்து ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை தனியார் பள்ளியில் தற்போது வெளியாகியுள்ள புகாரும், பொதும்பு பள்ளி புகார் போல ஆகிவிடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தனியார் பள்ளியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
சென்னை தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜகோபாலன் கொரோனா காலத்தில் நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டதாகவும் சமூகவலைத்தளங்களில் பாடகி சின்மயி உள்ளிட்டோர் மாணவிகளின் புகார்களைப் பகிர்ந்தனர்.
இதனை அடுத்து, முன்னாள் மாணவிகள் பலரும் தாங்களும் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், புகார் கொடுத்தும் கூட பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பதிவிட தொடங்கினர். புகாரை நேரடியாக காவல்துறை மற்றும் பிற அரசு அமைப்புகளிடம் தருவதற்கு தயக்கம் மற்றும் அச்சம் இருந்ததை அவர்களின் பதிவுகள் உணர்த்தின. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த குற்றசாட்டு உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என பதிவிட்டனர்.
அடுக்கடுக்கான விமர்சனங்களை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மாணவிகளின் புகார் நிர்வாகத்தின் கவனத்திற்கு வரவில்லை என்றும் பள்ளி தற்போது எழுந்துள்ள புகாரை விசாரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையம் மாணவிகளின் புகாரை தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கியது. சென்னை காவல்துறையும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்து விசாரித்து வருகிறது.
பொதும்பு பள்ளியில் நடந்த வன்முறை
பல பள்ளிகளில் முந்தைய காலங்களில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்பட்ட போதும், தீர்ப்பு கிடைக்க பல காலம் காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவர் 98 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 2011ல் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு 2017ல் அளிக்கப்பட்டது. ஏழு ஆண்டு காலத்தில் பல மாணவிகள் தங்களின் பாதுகாப்பு கருதி புகாரை திரும்ப பெற்றனர். ஒரு சிலருக்கு திருமணம் ஆகிவிட்டதால் வழக்கை தொடர அவர்கள் விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பாக வழக்கை நடத்திய அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொது செயலாளரான சுகந்தி கூறுகிறார்.
''பொதும்பு பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி பல ஆண்டுகளாக மாணவிகளை தகாத முறையில் தொட்டும், படங்கள் எடுத்தும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பல மாணவிகள் பிற ஆசிரியர்களிடம் புகார் சொல்லிய போதும், யாரும் தலைமை ஆசிரியர் பற்றி புகார் செய்யவில்லை. ஒருவழியாக, ஒரு குழந்தை தனது பாட்டியிடம் ஆசிரியர் மோசமாக நடந்துகொள்வதாக கூறியபின்னர், அது சர்ச்சையானது. பிற மாணவிகளும் ஒன்று சேர்ந்து புகார் கொடுத்தனர். ஆனால் புகார் கொடுத்த மாணவிகளுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. பலமுறை அவர்களுக்கு நாங்கள் மனநல ஆலோசனை வழங்கினோம். பாதிக்கப்பட்ட மாணவிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துசெல்வதற்கும் பெரிய சிக்கல்களை சந்தித்தோம்'' என்கிறார் சுகந்தி.
பொதும்பு பள்ளி மாணவிகளை போல தற்போது புகார் கொடுத்துள்ள தனியார் பள்ளி மாணவிகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும் என்கிறார் சுகந்தி. ''பாலியல் துன்புறுத்தலுக்கு விரைவாக நீதி வழங்குவது ஒன்றுதான் பாதிக்கப்பட்டவர்கள் சஞ்சலம் இல்லாமல் புகார் கொடுக்க உதவும். பொதும்பு பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமியுடன் பணியாற்றிய 15 ஆசிரியர்களையும் பணியிட மாறுதல் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தன்னை போல தவறிழைத்த பிற ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், விரைந்து சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக விசாரிக்கவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் பொதும்பு பள்ளி, இப்போது இந்த தனியார் பள்ளி என்ற நிலை உருவாகக்கூடாது,'' என்கிறார் சுகந்தி.

பட மூலாதாரம், Getty Images
போக்ஸோ சட்டத்தின் செயல்பாடு
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்காக பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றம் விசாரணை செய்யும். குற்றம் நடந்த காலத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவேண்டும் என சட்ட விதிகள் உள்ளன. ஆனால் எதார்த்தத்தில், பொதும்பு பள்ளி வழக்கில் நடந்ததை போல பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல ஆண்டுகள் காத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
தேசிய குற்றப்பதிவு ஆவணத்தில் இந்தியா முழுவதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள புகார்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டு கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில் 2017-2019 வரை பதிவான போக்ஸோ புகார்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கின்றன என தெரியவந்துள்ளது. அதோடு, இந்தியா முழுவதும் புகார் பெறப்பட்டாலும், காவல்துறையின் விசாரணையுடன் அந்த புகார்கள் முடிவுக்கு வந்துவிடுகின்றன. அந்த புகார்கள் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்படுவதில்லை என தெரியவந்துள்ளது. அதோடு, இந்தியாவில் தினமும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது.
போக்ஸோ வழக்குகள் குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த நாடாளுமன்ற நிலைக்குழு, இந்தியாவில் 2017ல் 31,766 போக்ஸோ வழக்குகள் பதிவாகின என்றும் 2019ல் அந்த எண்ணிக்கை 46,005ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், தேசிய அளவில் 325 போக்ஸோ நீதிமன்றங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், மேலும் 389 நீதிமன்றங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
ஜூன்4ம்தேதி முதல்கட்ட விசாரணை
தனியார் பள்ளி ஆசிரியர் மீதான புகார் குறித்த விசாரணை ஜூன் 4ம் தேதி தொடங்குகிறது.
தமிழக குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம். பள்ளி நிர்வாகத்தினருக்கு இந்த ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழிடம் பேசிய தமிழக குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ராம்ராஜ், குழந்தைகள் மீதான வன்முறையை குறைப்பதற்கு கிராம அளவிலான குழந்தைகள் நலக்குழு அமைக்கப்படவேண்டும் என்கிறார்.
''2013ல் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நகரம் மற்றும் கிராம அளவில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க நலக்குழுக்களை அமைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியிலான வன்முறை பற்றிய விவரங்களை குழந்தைகள் உடனே வெளிப்படையாக சொல்வதற்கு அஞ்சுவார்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் அமைப்புகள் தேவை. கிராம அளவில், நகர அளவில் குழந்தைகள் நலகுழுக்கள் செயல்பட்டால், அந்த சட்ட ரீதியான அதிகாரம் கொண்ட உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டால், குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்யலாம். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு முடிவதற்கு கால தாமதம் ஆகிறது என்பது உண்மை. ஆனால் ஒரு சில புகார்கள் வந்தவுடன், உடனடியாக அதை கண்டறிய இந்த நலக்குழுக்கள் உதவும். அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்படுவதை ஆரம்ப கட்டத்தில் கண்டறியலாம்,'' என்கிறார்.
''தனியார் பள்ளி ஆசிரியர் பற்றிய புகார் தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. இதுபோன்ற புகார்கள் நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. குழந்தைகள் புகார்களை தயக்கமின்றி சொல்வதற்கு ஒரு வழிமுறை இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக ஆணையம் செயல்பட்டாலும், இந்த ஆணையத்திற்கு முழுநேர உறுப்பினர்கள் இல்லை. அடிப்படை வசதிகள் கிடையாது. இதுபோன்ற சிக்கல்களால் ஆணையத்தால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது கடினமாக உள்ளது. ஆணையத்தின் வசதிகளை உறுதிப்படுத்தினால், இதுபோன்ற புகார்களை உடனடியாக கண்டறிய உதவும்,'' என்கிறார் ராமராஜ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












