கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்பிணிப் பெண்களுக்கு ஏன் கருக்கலைப்பை பரிந்துரைக்கிறார்கள்?

கர்பிணிப் பெண், மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அனகா பதக்
    • பதவி, பிபிசி மராத்தி

காஜல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த ஏழு ஆண்டு காலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அவர் கருத்தரித்தபோது அவரும், அவரது கணவரும் மிகவும் மகிழ்ந்தனர்.

அவர்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, தனக்கு கொரோனா தொற்று இருந்ததாக மருத்துவரிடம் தெரிவித்தார் காஜல்.

"மேடம், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் இப்போது நான் நலமாக இருக்கிறேன். நான் எல்லா மருந்துகளையும் எடுத்துக் கொண்டேன், இப்போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை" என கூறினார்.

காஜல் எடுத்துக் கொண்ட மருந்துகள் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார் அந்த மகப்பேறு மருத்துவர். கருத்தரித்த காலத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாத பல மருந்துகளை, காஜல் எடுத்துக் கொண்டிருந்தார் என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். எனவே கருவைக் கலைத்துவிடுமாறு காஜலுக்கு பரிந்துரை செய்தார் மருத்துவர்.

நிவேதிதா பவார் என்கிற நாசிக் நகரத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்தான் மேலே குறிப்பிட்ட சம்பவத்தை பிபிசி மராத்தியிடம் பகிர்ந்து கொண்டார். "கருவைக் கலைத்துவிடுமாறு கூறினேன். அவர் கண்ணீர்விட்டு அழத்தொடங்கிவிட்டார். நீண்ட நேரம் பேசி சமாதானப்படுத்திய பிறகு, அவரது கணவரும் பேசி ஒப்புக்கொள்ள வைத்தபிறகு, அவர் சம்மதித்தார்" என கூறினார் மருத்துவர் நிவேதிதா.

இதே போல மற்றொரு பெண் நோயாளியை கர்பத்தை கலைக்க சம்மதிக்க வைத்ததாகக் கூறுகிறார் நிவேதிதா. தான் பிரச்சனையை புரிந்து கொண்டதாகவும், கருவை கலைத்துக் கொள்வதாகவும் அந்நோயாளி கூறினார். ஆனால் அதற்குப் பின் தன்னிடம் அவர் வரவில்லை என கூறுகிறார் மருத்துவர் நிவேதிதா.

மாத்திரை,மருந்துகள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைவிட மிக மோசமாக இருக்கிறது. இந்த இரண்டாம் அலையில் பலரும் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருக்கிறார்கள். சில தாய்மார்கள், தங்களின் பிறக்காத குழந்தைகளை இழந்திருக்கிறார்கள். ஏன்?

இதற்கு முக்கிய காரணமாக பல மகப்பேறு மருத்துவர்கள் கூறுவது, கொரோனா தொற்று ஏற்படும் காலத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.இந்த மருந்துகள் குழந்தைக்கு குறைபாட்டை ஏற்படுத்தலாம். எனவே கருத்தரித்துள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றால், அது பல்வேறு மருத்துவ சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

"பக்க விளைவுகளைக் குறித்து எந்த வித சிந்தனையும் இல்லாமல், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட, கருத்தரித்த தாய்மார்கள் பலர் தங்கள் மகப்பேறு மருத்துவர்களிடம், தாங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாகக் தெரிவிப்பதில்லை.

கொரோனாவுக்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் விவரத்தையும் குறிப்பிடுவதில்லை. கொரோனாவுக்காக தங்களுக்கு பரிந்துரைத்த மருந்துகளை, பரிந்துரை செய்த காலம் வரை முழுமையாக உட்கொண்டுவிடுகிறார்கள். எனவே கருவை கலைக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். என்னுடைய சில நோயாளிகள் கருவைக் கலைக்க நான் உதவி இருக்கிறேன். கருத்தரித்த காலத்தின் தொடக்க காலகட்டங்களில் இது சாத்தியம் தான், இருப்பினும் இது சிக்கலானது" என்கிறார் மருத்துவர் நிவேதிதா.

கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் ஆர்கனோஜெனிசிஸ் (Organogenesis) என அழைக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தான் சிசுவின் கை கால்கள் எல்லாம் வளரும். இந்த காலகட்டத்தில் ஏதாவது மருந்துகளை எடுத்துக் கொண்டால், அது சிசுவின் கை கால்கள் வளர்ச்சியை பாதிக்கும். சில சமயங்களில் குழந்தையின் இருதயம் பாதிக்கப்படும், சில நேரங்களில் கை மற்றும் கால்கள் முழுமையாக வளர்ச்சி காணாமல் பாதிக்கப்படும்.

"எல்லோரும் முதல் முறையாக கொரோனாவை எதிர்கொள்கிறோம். எனவே அறிவியல்பூர்வமாக தரவுகள் கிடைக்க ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். அதுவரை எந்த ஒரு மகப்பேறு மருத்துவராலும், உட்கொள்ளும் மருந்து குழந்தையை எப்படி பாதிக்கும், சிசுவின் மீது, அது என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கணிக்க முடியாது" என்கிறார் நிவேதிதா.

"கொரோனா காலகட்டத்தில் பரிந்துரைக்கப்படும் ஃபேபிஃப்ளூ (Fabiflu) போன்ற மருந்துகள், கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மட்டும் உறுதியாக கூற முடியும். எனவே இது போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டவர்கள் கருவைத் தொடர வேண்டாம் என பரிந்துரைக்கிறோம்."

"ஒருவேளை, ஒருவர் கருவுற்ற காலத்தின் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறார் என்றால், அவருக்கு கருவை கலைக்கும் வாய்ப்பு கூட இல்லை. அப்படிப்பவர்கள் இருக்கும் அபாயத்தை மீறி கர்பத்தை தொடர வேண்டி இருக்கும். அவர் எடுத்துக்கொண்ட மருந்தால் குழந்தை மீது என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு காலம் மட்டுமே விடையளிக்க முடியும்."

சரி, யாருக்கு எல்லாம் கருக் கலைப்பை பரிந்துரைக்க முடியும்? 20-களில் இருக்கும் பெண்கள் கருவைக் கலைக்கலாம். ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள், குழந்தை பெற்றுக் கொள்ளும் சரியான வயதை கடப்பவர்கள், பல ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு கருத்தரித்தவர்கள் இதற்குப் பிறகு காத்திருக்க முடியாது. அவர்கள் கருக் கலைப்பை தேர்வு செய்ய முடியாது.

சோதனையான ஒன்பது மாத காலம்

கர்பிணிப் பெண், மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

"நான் ஏழு மாத கர்பிணியாக இருந்த போது என் தாயார் கொரோனாவால் இறந்துவிட்டார். பிறக்காத என் குழந்தையின் எடை வெறும் 1.5 கிலோவாக இருந்தது. நான் கருத்தரித்த நாள் முதல் பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தன.

என்னால் முறையாக நல்ல ஊட்டச்சத்தான உணவை எடுத்துக் கொள்ள முடியவில்லை. நான் மன ரீதியாக பெரும் அழுத்தத்திலும், வருத்தமாகவும் இருந்தேன். எட்டாம் மாதத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.

சில பெண்கள் மாதவிடாயின் போது இறந்துவிட்டதாகவும், சிலரால் மருத்துவமனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் பல செய்திகளை கேள்விப்பட்டோம். எனக்கும் இதே கதி நேருமோ என நாம் மிகவும் பயந்தேன். நானும் என் கணவரும் ஒரு குழந்தைக்காக பல ஆண்டு காலம் காத்திருந்தோம். அப்போது என்ன செய்வது என அறியாமல் மிகுந்த மன அழுத்தத்திலும், பயத்திலும் இருந்தோம்" என்கிறார் ரேஷ்மா ரன்சுபே.

இந்த கொரோனா கால கட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார் இவர். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தாய்மார்கள், தொடர்ந்து இந்த பயத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதியினரும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மகப்பேறு மருத்துவர்களும் தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கிறார்கள்.

"இந்த காலகட்டத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள திட்டமிட வேண்டாம் என பலரையும் கேட்டுக்கொண்டோம். இதைத்தான் கடந்த ஆண்டும் கூறினோம். ஆனால் எப்போது கொரோனா ஒரு முடிவுக்கு வரும் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரியவில்லை. ஐவிஎஃப் சிகிச்சை நிறுத்தப்பட்டுவிட்டது. 35 - 37 வயதான பெண்கள் இதற்கு மேலும் காத்திருக்க முடியாது.

அவர்களைக் காத்திருக்குமாறு எப்படி கூறுவது? எங்களால் எந்த அளவுக்கு அவர்களை கவனித்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பராமரிப்புகளை வழங்குகிறோம். ஒவ்வொருவரின் நிலையைப் பொறுத்து நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆனால் இந்த காலகட்டத்தில் கர்பம் தரிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம்" என குறிப்பிடுகிறார் மருத்துவர் நிவேதிதா.

"நாங்கள் சிகிச்சையளிக்கிறோம், ஆனால் அதில் தாய்மார்களின் உயிருக்கு எவ்வளவு அபாயம் இருக்கிறது என எங்களுக்குத் தெரியவில்லை. குழந்தைக்கு ஏதாவது குறைபாடு இருக்குமா என எங்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது எங்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் நிலவுகிறது. கொரோனா காலகட்டத்தில், கர்பிணிப் பெண்கள் இந்த ஒன்பது மாத காலத்தை கடப்பது என்பது அப்பெண்ணின் குடும்பத்தினர், அவரது மருத்துவர்கள் என அனைவருக்கும் மிகவும் சோதனையான காலகட்டம்" என்கிறார் மருத்துவர் நிவேதிதா பவார்.

என்னிடமிருந்து குழந்தையை எப்படி தொலைவில் வைத்துக் கொள்வது?

கர்பிணிப் பெண், மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

நாசிக் நகரத்தைச் சேர்ந்த சுபியா ஷேக் சில மாதங்களுக்கு முன் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அப்போதுவரை அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. பிரசவத்துக்குப் பிறகு, குழந்தைக்கு மசாஜ் செய்துவிட வந்தவர் மூலம், சுபியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பரிசோதனைக்குப் பிறகு, குழந்தைக்கு எப்படி தாய்பால் கொடுப்பது என்கிற கேள்விதான் சுபியாவின் மனதில் எழுந்தது.

"குழந்தையை என்னிடமிருந்து தொலைவில் வைக்குமாறும், புட்டிப் பாலை கொடுக்குமாறும் மருத்துவர் கூறினார். ஆனால், எதார்த்தத்தில் குழந்தையை எப்படி தொலைவில் வைக்க முடியும்? எப்படியோ இரண்டு முகக்கவசங்களை அணிந்து கொண்டு தாய்ப்பால் கொடுத்தேன். அதன் பிறகு குழந்தையை குடும்பத்தினரிடம் கொடுத்தேன். அதிர்ஷ்டவசமாக நான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படவில்லை. சில நாட்களிலேயே நான் கொரோனாவில் இருந்து தேறி வந்துவிட்டேன்.

அந்த சில நாட்களில் குழந்தையிடமிருந்து தள்ளி இருப்பது மிகவும் கடினமாக இருந்தது. என்னால் குழந்தைக்கு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என தொடர்ந்து பயத்திலேயே இருந்தேன்" என்கிறார் சுபியா.

ரத்து செய்யப்பட்ட ஐவிஎஃப் சிகிச்சைகள்

மருத்துவம்

பட மூலாதாரம், Getty Images

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு, இயற்கையான முறையில் கருத் தரிக்கவில்லை எனில், ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலைக்கு மத்தியில், இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. பல தம்பதிகளும் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

ரச்சனாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த பிரச்சனையை எதிர்கொண்டார். "எங்களுக்கு ஐவிஎஃப் கடைசி வாய்ப்பாக இருந்தது. அதையும் நாங்கள் இப்போது இழந்துவிட்டோம்" என குரல் கம்மலோடு கூறினார்.

மருத்துவர் நந்தினி பால்ஷேட்கர் இந்திய மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவ சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர். அவர் மும்பையின் பிரபலமான லீலாவதி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஐவிஎஃப் நிபுணரும் கூட.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஐவிஎஃப் சிகிச்சைகளின் எண்ணிக்கை முற்றிலும் பூஜ்ஜியத்தைத் தொட்டது. ஆனால் தற்போது மெல்ல ஐவிஎஃப் சிகிச்சையின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

"தாமதமாக திருமணம் செய்து கொண்ட பெண்கள் அல்லது ஐவிஎஃப் மட்டுமே ஒரே வழி என இருப்பவர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க முடியாது. கொரோனா காலத்தில் அடிக்கடி வெளியே சென்று வர முடியாது, வருமானம் குறைந்தது போன்ற காரணங்களால் ஐவிஎஃப் சிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கிறது, பலர் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள். எனவே பலராலும் இந்த சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாது. இதுவும் ஐவிஎஃப் சிகிச்சை எண்ணிக்கையை பாதித்திருக்கிறது" என்கிறார் நந்தினி.

நம்பிக்கையை இழக்காதீர்கள்

கர்பிணிப் பெண், மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

சூழல் மோசமாக இருந்தாலும், நாம் நம்பிக்கையை இழக்கத் தேவை இல்லை என உறுதியாக கூறுகிறார் மருத்துவர் நந்தினி. "இதனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பெண்கள் நேர்மறை எண்ணத்தோடு இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்கிறார்.

சிகா வைரஸ் (Zika Virus) வந்த போது கூட, அவ்வைரஸ் பிறக்காத குழந்தைகளிடம் குறைபாடுகளை ஏற்படுத்தலாம் என, கர்பிணிப் பெண்கள் கருவைக் கலைத்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டார்கள். ஆனால் இதுவரை கொரோனா வைரஸுக்கு அப்படி ஒரு வழிகாட்டுதல் கொடுக்கப்படவில்லை என்கிறார் மருத்துவர் நந்தினி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்வது போல பல மருந்துகள் இருக்கின்றன என்கிறார்.

"அம்மருந்துகளை என் நோயாளிகளுக்கு நான் பரிந்துரைத்து இருக்கிறேன், இறைவன் அருளால் இதுவரை அவர்களில் யாருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. என் நோயாளிகள் யாருக்கும் நான் கருவைக் கலைக்குமாறு பரிந்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தற்போது உணர்ந்துவிட்டதாக நினைக்கிறேன்"

முதல் ஐந்து வார கர்ப காலத்தில் கொரோனாவுக்கு பல மருந்துகளைக் கொடுக்கலாம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கர்பிணிப் பெண்கள் விஷயத்தில் கொரோனா மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதையும் ஆமோதிக்கிறார்.

"எனவே கர்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த வித பாதிப்பும் இல்லை என ஆராய்ச்சிகளில் நிரூபணமாகி இருக்கிறது"

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவும் போது, கர்பிணிப் பெண்களுக்கு மட்டும் எப்படி தடுப்பூசி கிடைக்கும்?

காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருத்தரிப்பு காலம் முடிவதற்கு முன்பே பிரசவம் (Premature Delivery) நடைபெறுகின்றன என மருத்துவர்கள் கவனித்துக் கூறுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் , கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், குழந்தை இறந்து பிறக்கவோ, கர்ப காலம் நிறைவடைவதற்கு முன்பே பிறக்கவோ வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"முழுமையாக வளர்ச்சி அடைந்த சிசு என்பது 38 வாரமாக இருக்கும். ஒருவேளை குழந்தை 38 வாரங்களுக்கு முன் பிறக்கிறது என்றால் அதை, கர்ப காலம் நிறைவடைவதற்குள் பிறக்கும் குழந்தை (Premature Delivery) என்கிறார்கள். காய்ச்சல் தான் இந்த கர்ப காலம் நிறைவடைவதற்கு முன்பே குழந்தை பிறப்பதற்கு காரணமாக இருக்கிறது. சில சமயங்களில் இது கருசிதைவுக்கு வழிவகுக்கிறது. ஒருவேளை கர்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட, அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன். காய்ச்சல் அதிகரித்தால் சிக்கல் அதிகரிக்கும்" என்கிறார் நந்தினி.

பெண்கள் பயப்படக் கூடாது எனவும், முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் உறுதியாக கூறுகிறார் மருத்துவர் நந்தினி. காஜல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த ஏழு ஆண்டு காலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். கடைசியில் கருத்தரித்த போது அவரும், அவரது கணவரும் மிகவும் மகிழ்வடைந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :