இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சம் தொட்டு விட்டதா?

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் உலகின் புதிய மையப்பகுதியாக விளங்கும் இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.6 கோடியை தாண்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே இந்தியாதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு.
குறிப்பாக, கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக சமீபத்திய வாரங்களில் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் போதிய மருந்துகள், ஆக்சிஜன் விநியோகம் உள்ளிட்டவை இன்றி திணறிவிட்டன.
ஆனால், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை போன்றுள்ளது. குறிப்பாக, திங்கட்கிழமை அன்று கடந்த ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கு கீழ் பதிவானது.
இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை முடிவுக்கு வருவதாக கருதலாமா?
தேசிய அளவில் பார்க்கும்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாகவே வல்லுநர்களும் கருதுகின்றனர்.


ஒரு வாரத்திலுள்ள தனிப்பட்ட நாட்களின் சராசரி கொரோனா பாதிப்பு 3,92,000 என்ற உச்சத்தை அடைந்த பிறகு, நாடுதழுவிய அளவில் நோய்த்தொற்று பரவல் கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வருவதாக சுகாதார பொருளாதார வல்லுநரான டாக்டர் ரிஜோ எம் ஜான் கூறுகிறார்.
ஆனால், அதில் ஒரு விதிவிலக்கு உள்ளது.
இந்திய அளவில் பார்க்கும்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதாக தோன்றினாலும், அது நாட்டின் அனைத்து மாநிலங்களின் கள நிலவரமாக இருக்கவில்லை.

ஒருகட்டத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் சிக்கி போராடி வந்த டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை தற்போது பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அது ஏறுமுகத்தில் இருக்கிறது. அதேபோன்று, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் நிலைமையை சரிவர கணிக்க முடியவில்லை.
எனவே, இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை சீராக குறையவில்லை என்றும், சில மாநிலங்கள் இனிதான் உச்சத்தை காண உள்ளதாகவும் மருத்துவர் ஜான் கூறுகிறார்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் கோவிட்-19 நோய்த்தொற்றின் வீரியம் குறைந்து வருவதாக உறுதிபட கூறினாலும், "கிராமப்புறங்களில் உள்ள பலவீனமான மருத்துவ மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு நிலைமையை சிக்கலாக்குகிறது" என்று பிரிட்டனை சேர்ந்த கணிதவியலாளரான முனைவர் பனாஜி கூறுகிறார்.
"இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உச்சமடையாமலும் இருக்கலாம். ஏனெனில், நாட்டின் கிராமப்புறங்களில் இருந்துதான் தற்போது பெரும்பாலான நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன" என்று அவர் கூறுகிறார்.
சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் சீதாப்ரா சின்ஹா, "நாட்டின் கிராமப்புற பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தற்போது நாடுமுழுவதும் தினசரி பாதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலையானதா என்று கணிப்பது கடினம்" என்று கூறுகிறார்.
தொற்றுநோயை உன்னிப்பாகக் கண்காணித்து வரும் மிச்சிகன் பல்கலைக்கழக உயிரியலாளரான பிரமர் முகர்ஜி இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறார்.

"உச்சநிலை கடந்துவிட்டது என்ற கருத்து மாநிலங்கள் உண்மையில் நெருக்கடியான நிலைக்குள் நுழையும் போது தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும். இதுவரை எந்த மாநிலமும் பாதுகாப்பான நிலைக்கு செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்."
இரண்டாம் அலை எப்போது முடிவுக்கு வர வாய்ப்புள்ளது?
கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் முதலாம் அலையின்போது தினசரி நோய்த்தொற்று பாதிப்பு மிகவும் மெதுவாகவே குறையத் தொடங்கியது. அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறையத்தொடங்கிய நோய்த்தொற்று பாதிப்பு இந்தாண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன்புவரை சீரிய வீழ்ச்சியை கண்டு வந்தது.
ஆனால், தற்போது இரண்டாம் அலை தாக்கத்தின்போது தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை அதிவேகமாக குறைந்து வருவதற்கான காரணம் தெளிவுற தெரியவில்லை.
இந்த முறை வைரஸ் வேகமாக முன்பை விட அதிகளவிலான மக்களை பாதித்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தனது கணக்கீட்டின்படி, இந்தியாவில் மே மாத இறுதிக்குள் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 1,50,000 முதல் 2,00,000-க்கு இடைப்பட்ட அளவுக்கு வருமென்றும், கடந்த பிப்ரவரி மாதம் நிலவிய அளவை அது வரும் ஜூலை மாதம் அடையுமென்றும் முகர்ஜி கூறுகிறார்.
எனினும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலிலுள்ள ஊரடங்கு எந்த படிநிலையின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்பதை பொறுத்தே இது அமையுமென்றும் அவர் கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படும் விகிதம், 5% அல்லது அதற்கு குறைவாக, குறைந்தது 14 நாட்களுக்கு இருந்தால் மட்டுமே அங்கு நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அர்த்தம்.

அதன்படி, இந்தியா ஒரு நாளுக்கு 18 லட்சம் பேருக்கு தொடர்ந்து நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பட்சத்தில் அதில் 5% என்பது தினசரி 90,000 புதிய நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு சமம் என்று மருத்துவர் ஜான் கூறுகிறார்.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் உயர்ந்து வருவது ஏன்?
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மூன்று லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்தவர்களின் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு பிறகு மூன்றாவது மற்றும் கடைசி நாடாக இந்தியா உள்ளது.
பல இறப்புகள் அதிகாரபூர்வமாக பதிவுசெய்யப்படாததால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென்று கருதப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்னும் உச்சத்தை அடையவில்லை என்று கணிதவியலாளரான முனைவர் பனாஜி கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்புகளை போன்று அதனால் ஏற்படும் இறப்புகளை கண்காணிப்பதிலும், தரவை நிர்வகிப்பதிலும் இந்தியாவின் மாநிலங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இடையே மிகப் பெரிய வேறுபாடு நிலவுகிறது.
"நாடுமுழுவதும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கினாலும், உண்மையில் அதன் பிரதிபலிப்பு ஊரகப் பகுதிகளில் ஏற்படும் வரை அதை உறுதிபட கூறமுடியாது" என்று பனாஜி கூறுகிறார்.
மே மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து ஜூன் மாதம் வரை அதிகளவிலான கொரோனா இறப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழக்கலாம் என்றும் முகர்ஜி கூறுகிறார்.
கொரோனா இரண்டாம் அலை: இந்தியாவும் உலக நாடுகளும்

பட மூலாதாரம், EPA
கொரோனா இரண்டாம் அலையின்போது பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் திடீரென உயர்ந்த தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதேபோன்று அதிவேகமாக குறைந்தன.
ஆனால், கொரோனா இரண்டாம் அலை தொற்றுகளின் வீழ்ச்சியை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுவதில் சிக்கலொன்று உள்ளதாக சின்ஹா கூறுகிறார்.
ஐரோப்பிய நாடுகளில் பொதுவாக தொற்றுகள் பரவும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையே கொரோனாவின் இரண்டாம் அலை நிலவியதாக அவர் கூறுகிறார்.
அதாவது, கொரோனா வைரஸுக்கு முந்தைய காலங்களில் கூட, இந்த காலகட்டத்தில் அதிகளவிலான மக்கள் சுவாசம் சார்ந்த பிரச்னைகளினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நாடுகளில், "திடீரென நோய்த்தொற்று பரவல் அதிகரித்தது எதிர்பார்க்காத ஒன்றல்ல."
எனினும், கொரோனா இரண்டாம் அலையின்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையின் வீழ்ச்சி என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு விகிதங்களில் இருந்தன.
உதாரணமாக, ஜெர்மனியில் கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாம் அலையில் நோய்த்தொற்று பரவலின் வீழ்ச்சி என்பது தாமதமாகவே நிகழ்ந்ததாக மருத்துவர் சின்ஹா கூறுகிறார்.
"மற்ற நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்து வீழ்ச்சியடைய தொடங்கிய காலகட்டத்தை இந்தியாவுடன் பொருத்தி பார்க்க முடியாது என்று நான் கருதுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.
அடுத்தது என்ன?
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து யோசிக்க தொடங்கியுள்ள நிலையில், அதை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது அவசியம்.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவது, மதுபான விடுதிகள், தேநீர் - காபி கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட "நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகமுள்ள" பகுதிகளை திறப்பதை தாமதிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Reuters
நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியாக இருந்தாலும், அங்கு 10க்கும் குறைவானவர்களே கூட அனுமதிக்கப்பட வேண்டும். குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகளில் அதிக அளவில் மக்களை கூட்டி நிகழ்ச்சிகளை நடத்துவது வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மிக முக்கியமாக, தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தி, அதற்கான அணுகலையும் மேம்படுத்த வேண்டும்.
பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதை வேகப்படுத்துவதுடன், பகுதிவாரியாக கழிவுநீரை பரிசோதித்து அதில் வைரஸ்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
"நோய் எதிர்ப்பு சக்தி என்பது மட்டுமே எல்லாமுமாக இருப்பதில்லை. வைரஸின் முந்தைய திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் வேறொரு திரிபால் பாதிக்கப்படக்கூடும். அவர்கள் மேலும் நோயையும் பரப்பலாம்."
ஆனால், இந்தியாவில் வெறும் 10 சதவீதத்தினருக்கே ஒன்று அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன.
"குறைந்தது 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வரை நாட்டை இயல்புநிலைக்கு கொண்டுசெல்வது குறித்து யோசிக்கக் கூடாது" என்று மருத்துவர் ஜான் கூறுகிறார்.
அதுவரை, கோவிட் தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சுகாதாரத்தை பேணுதல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
"கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்கூட்டியே வெற்றிபெற்றதாக அறிவித்தது பேரழிவை ஏற்படுத்தியது. அதை மீண்டும் செய்துவிடக் கூடாது."
விளக்கப்படங்கள்: விஜ்தான் முகமது கவூசா/ பிபிசி மானிட்டரிங்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












