கொரோனா ஊரடங்கு தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

ஊரடங்கு மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜூன் 7ஆம் தேதிவரை ஊரடங்கு அமலில் இருக்குமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மே 24ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இந்த ஊரடங்கு மே 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கை ஜூன் ஏழாம் தேதிவரை நீட்டிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்குத் தேவையான காய்கறி விற்பனை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைப் பொருட்களையும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் தள்ளுவண்டி மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யலாம் என்றும் தொலைபேசி மூலம் ஆர்டர்களைப் பெற்று விநியோகம் செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை நியாயவிலைக் கடைகளில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஜூன் மாதம் முதல் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு தேவையில்லாமல் வர வேண்டாமென அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தாலும், தினமும் 33 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில்தான் ஊரடங்கை நீட்டிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :