வீரப்பன் வழக்கு முழுமையான பின்னணி: கைதிகளை விடுவிக்க வலுக்கும் குரல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
வீரப்பன் தொடர்பான இரு வேறு வழக்குகளில் கைது செய்யபட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை மனித நேய அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோவை மத்திய சிறையில் மூவரும், மைசூர் சிறையில் நான்கு பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மற்றவர்களுக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலக் கோளாறுகள் இருப்பதால், எஞ்சியிருக்கும் காலத்தை அவர்களது குடும்பத்தினரோடு கழிக்க, மனித நேய அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.
தனது ஆறாவது வயதில் தந்தை ஞானப்பிரகாசத்தை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றதை நினைவுகூறும் ராஜா, 34 வயதான பின்பும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கிறார்.
“நான் அப்போது ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்த தேவாலயத்தின் பாதிரியாருக்கு சொந்தமான தோட்டத்தில் எனது தந்தை வேலை செய்து வந்தார். பாலாறு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யவேண்டும் எனக் கூறி அவரை காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர். விசாரணை முடிந்து வீட்டுக்கு வந்துவிடுவார் என நம்பியிருந்த நிலையில் மைசூர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், விடுவிக்கப்படவில்லை”
“எனது தந்தையின் கைதுக்கு பிறகு நாங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தோம். நான் உட்பட ஞானப்பிரகாசத்திற்கு நான்கு பிள்ளைகள். அதில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள மூவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. எனது திருமணம் உட்பட முக்கிய குடும்ப நிகழ்வுகளில் அவர் பங்கேற்றதில்லை. ஆனால், எல்லா நிகழ்வுகளிலும் அவரை நினைத்துக் கொள்வோம். சமீபத்தில், அவருக்கு காலில் காயம் ஏறப்பட்டிருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை நேரில் சந்தித்தோம்.

பட மூலாதாரம், Getty Images
மகன், மகள், பேரன், பேத்திகளை பார்த்ததில் அவருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆனால், விடுதலை ஆவோமா என்ற சோகமும் அவருக்கு இருந்தது. அம்மா, நான், சகோதரிகள் என அனைவரும் கூலி வேலை தான் செய்கிறோம். எங்களை படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவர் சிறைக்கு சென்ற பின்பு பல்வேறு நெருக்கடிகள் காரணமாக எங்களால் பள்ளி படிப்பையே தொடர முடியவில்லை. ‘சத்தியம் வெல்லும், ஒருநாள் நான் விடுதலை ஆகி வருவேன்’ என அவர் கூறுவார். அந்த நம்பிக்கையில் தான் நாங்களும் இருக்கிறோம்” என கலக்கத்தோடு பேசினார் ராஜா.
வழக்கின் பின்னணி
1993ஆம் ஆண்டு தமிழக கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாதேஸ்வரன் மலையில் உள்ள பாலாறு பாலத்தை சந்தன கடத்தல் வீரப்பன் குண்டு வைத்து தகர்த்த சம்பவத்தில் காவல்துறையினர் 22 பேர் கொல்லபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகிய நால்வருக்கும் மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2௦௦4 ஆம் ஆண்டு தண்டனை குறைப்புக்காக உச்சநீதிமன்றத்தில் நால்வரும் மேல்முறையீடு செய்தபோது ஆயுள் தண்டனை, மரண தண்டனையாக மாற்றப்பட்டது. பின்னர், மீண்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதேபோல், 1987ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாப்புதூர் பகுதியில் வனத்துறை காவலர்கள் மீது வீரப்பன் துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக மாதையன், ஆண்டியப்பன் மற்றும் பெருமாள் ஆகிய மூவரும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர். இவர்களின் விடுதலை குறித்த மேல்முறையீட்டு மனுக்களையும் தமிழக அரசு பரிசீலிக்க மறுப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கன்றனர்.
மாநில அரசே விடுதலை செய்யலாம்
வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ள மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த வழக்குரஞர் பாலமுருகன், வீரப்பனோடு நேரடி தொடர்பில்லாமல் குற்றம்சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவிக்கும் மூவரையும் விடுதலை செய்வதில் சட்டசிக்கல்கள் எதுவுமில்லை என்கிறார்.

“மைசூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சைமன் மற்றும் பிலவேந்திரன் சிறையிலேயே உயிரிழந்து விட்டனர். அங்குள்ள மற்ற இருவரையும், கோவை மத்திய சிறையில் உள்ள மூவரையும் உடனடியாக விடுதலை செய்தாக வேண்டும். காரணம், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறையில் இருப்பது என சொல்லப்பட்டாலும் கூட, அரசாங்கம் பார்த்து அவர்களை விடுதலை செய்யலாம் என மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, அரசியலமைப்பு சட்டம் 161ன் கீழ் மாநிலங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி மாநில அரசே விடுதலை செய்யலாம் என கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் இவர்களின் விடுதலை குறித்து பரிசீலிப்பதில்லை. இதேபோல் தான் வீரப்பன் வழக்கு கைதிகளின் நிலையும் உள்ளது”
“மைசூர் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கான மேல்முறையீட்டில் தடா வழக்கு மற்றும் பயங்கரவாத குற்றம் என்ற அடிப்படையில் விடுதலை மறுக்கப்படுகிறது. ஆனால், தண்டனை அனுபவித்தவர் மீண்டும் குற்றம் செய்வாரா என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விடுதலை பரிசீலிக்கப்பட வேண்டும் என பல வழக்குகளில் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. எனவே, வயது முதிர்வின் அடிப்பைடையிலும், நன்னடத்தை காரணமாகவும் இவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். பொதுவெளியில் இந்த பிரச்சனை குறித்து பேசப்படாததாலும், அரசியல் காரணங்களாலும் இவர்களுக்கு நீதி கிடைக்காமல் உள்ளது. குறிப்பாக, கோவை மத்திய சிறையில் உள்ள மூவரும் வீரப்பனோடு நேரடி தொடர்பில்லாதவர்கள். மேலும், இவர்கள் மீது தடா வழக்கும் இல்லை. இந்திய தண்டனை சட்டத்தில் தான் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மாநில அரசின் உரிமையை பயன்படுத்தி இவர்களை விடுவிப்பதில் எந்த சட்டசிக்கலும் இருக்காது” என்கிறார் வழக்குறைஞர் பாலமுருகன்.
கோவை சிறையில் உள்ள மாதையன், தனது விடுதலைக்காக 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் அவரின் விடுதலைகுறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தடை
வீரப்பன் வழக்கு தொடர்புடைய சிறைவாசிகளை விடுவிப்பதில் சட்ட ரீதியிலான தடை இல்லை என்ற போதும் அரசியல் தடை உள்ளதாக கூறுகிறார் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார்.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலைக்காக அதிகம் பேசியுள்ளோம். ஆனால், வீரப்பன் தேடுதல் சமையத்தில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழர்கள் பற்றி பெரிதாக பேசியதில்லை. தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் பிரச்சனை வந்தால் மட்டுமே இது பற்றி பேசப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை.”
“கோவை சிறையில் உள்ள பெருமாள், 20 வயதில் கைது செய்யப்பட்டவர். இவர் தற்போது 50 வயதை தாண்டிவிட்டார். ஆண்டியப்பனுக்கு 60 வயதாகிவிட்டது. இவர்களை விடுவிப்பதில் சட்ட ரீதியிலான தடை இல்லை என்றாலும் அரசியல் தடை உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்கள். அதேசமையம், அவர்களுக்கு பரோல் கொடுப்பதற்கு கூட தடை விதிக்கிறார்கள். ஆளுநர் மேல் பொறுப்பு சுமத்திவிட்டு நழுவிக்கொள்கிறார்கள். வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய அரசியல் தடை ஏதுமில்லை என்றபோதும் அரசியல் லாபத்திற்கான நிலைப்பாட்டோடு தான் ஆளும் அரசுகள் இவர்களின் விடுதலையை முன்னெடுக்கின்றனர். அரசியலமைப்பின் 161 விதியைப் பயன்படுத்தி மேலவளவு கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளை விடுவிப்பதைவிட பயங்கரமான விஷயம் எதுவுமில்லை. ஆனால், வீரப்பன் வழக்கில் கைது செய்யபட்டவர்கள் அப்பாவிகள் என்பது அனைவருக்கும் தெரியும், இருந்தும் அவர்களின் விடுதலையை தமிழக அரசு இழுத்தடித்து கொண்டிருக்கிறது. எனவே, முதற்கட்டமாக இவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிற கருத்தை முன்வைக்கிறார் ரவிக்குமார்.
நம்பிக்கை இழந்துவிட்டனர்
மைசூர் சிறையில் உள்ள சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன் மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோரோடு 20 ஆண்டுகளாக சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள அன்புராஜ், வீரப்பன் வழக்கு சிறைவாசிகளின் நிலைபற்றி பிபிசியிடம் விளக்கினார்.

“இந்திய சிறை வரலாற்றில் மிக நீண்ட சிறைவாசமாக வீரப்பன் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருந்து வருகின்றனர். தங்களது இளமை காலம் முழுவதும் சிறையில் கழித்துவிட்டு, கடைசி காலத்திலாவது குடும்பத்தினரோடு இருக்க வேண்டும் என அவர்கள் ஆசைப்படுகின்றனர். நான் மைசூர் சிறையில் இருந்தபோது அவர்களோடு தினமும் பேசுவேன். எப்படியாவது நம்மை விடுதலை செய்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள், ஒரு கட்டத்தில் நம்பிக்கை இழக்கத்துவங்கிவிட்டனர். விடுதலை செய்யப்படமாட்டோம் என்ற மனவேதனையில் தான் அவர்கள் சைமனும், பிலவேந்திரனும் நோய்வாய்பட்டனர்”
“இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு சைமன் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். இறந்தபிறகு, தனது உடலை எப்படியாவது மைசூரிலிருந்து எடுத்துச் சென்று தனது சொந்த ஊரில் உள்ள அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். பிலவேந்திரனும், விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையை இழந்து உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார்.”
“75 வயதைக் கடந்துள்ள ஞானப்பிரகாசமும், மீசை மாதையனும் இதே நிலையில் தான் தற்போது சிறையில் உள்ளனர்.
ஞானப்பிரகாசம் காலை முதல் மாலை வரை சிறைக்குள் உள்ள தேவாலயத்தில் தான் அமர்ந்திருப்பார். மீசை மாதையனும் சுயநினைவை இழக்கும் நிலையில் உள்ளார். கோவை சிறையில் உள்ள கைதிகள் குறித்து கேட்டறிந்தபோது, 50 வயதை கடந்துள்ள அவர்கள் மூவரும் கடும் மன உளைச்சலிலும், நலிவடைந்த உடல்நிலையிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, இந்த நிலையிலாவது, உயிரோடு இருக்கும் நான்கு பேரை விடுதலை செய்ய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார் அன்புராஜ்.
ஆயுள் தண்டனை என்றால் ஆயுட்காலம் முழுவதும் சிறையில் இருந்தாக வேண்டும் என்ற நிலைமாறி பத்து ஆண்டுகளிலும், பதினைந்து ஆண்டுகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில், நீதித்துறை அனுமதித்தாலும், அரசியல் லாபங்களுக்காக வீரப்பன் வழக்கு தொடர்புடைய கைதிகள் சிறையிலேயே அடைபட்டுகிடப்பது மனிதகுலத்தின் மான்பை சீர்குலைப்பதாக தெரிவிக்கின்றனர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்.
பிற செய்திகள்:
- பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர
- பிரணாப் முகர்ஜி காலமானார் - 7 நாட்கள் துக்கம் அறிவிப்பு
- கொரோனாவில் இருந்து மீண்ட 906 இலங்கை கடற்படையினர்
- இலங்கை போரில் மக்களை கொன்றதா ராணுவம்? எரிக் சொல்ஹெய்ம் கருத்தை நிராகரித்தது இலங்கை அரசு
- பிரசாந்த் பூஷண்: "ஒரு ரூபாய் அபராதம்" - இந்திய உச்ச நீதிமன்றம்
- இந்தியா - சீனா எல்லை பதற்றம்: ’லடாக் எல்லையில் மீண்டும் அத்துமீறிய சீன ராணுவம்’
- இந்திய பொருளாதாரத்தின் எதிர்மறை வளர்ச்சி உங்களை எப்படி பாதிக்கும்?
- யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












